Showing posts with label ரியா. Show all posts
Showing posts with label ரியா. Show all posts

Wednesday, August 4, 2010

ரியா !மறைவான இணைவைப்பு? விமர்சனத்திற்கு அஞ்சுதல்.தொடர்19

 விமர்சனத்திற்கு அஞ்சுதல்

தனது செயல்களில் உள்ள குறைகள் விமர்சனம் செய்யப்படுவதை யாரும் விரும்புவதில்லை. மார்க்க விஷயங்களில் விமர்சனம் செய்வதை விரும்பாதவர்களை இரண்டு வகையாகப் பிாிக்கலாம்.

    (அ) தன்னுடன் இருப்பவர்களின் விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக அல்லாஹ்வின் ஆணையை நிராகாிக்கும் மனிதர்கள் முதல் வகையினர். மனிதர்களிடையே புகழை இழப்பதை விட அல்லாஹ்வின் ஆணைகளைப் புறக்கணிப்பது மேல் என்று கருதுபவர்கள் இவர்கள். உதாரணமாக:- சில ஆண்கள் தாடி வைக்க விரும்புவதில்லை. இதே போல் தங்கள் தோழியர் விமர்சிப்பார்கள் என்று அஞ்சி சில பெண்கள் உாிய முறையில் பர்தா அணிவதில்லை. இவையெல்லாம் ஹராம் (தடுக்கப்பட்டது) தான். இவை 'ரியா"வின் கீழ் வராது. இறை நம்பிக்கையாளர்கள் குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

    நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோாிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போாிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போாின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். நாடியோர்க்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாரளமானவன். அறிந்தவன். (திருக்குர்ஆன் 5:54)

    படைப்பினங்களின் விமர்சனம், படைப்பாளனாக அல்லாஹ்வின் விமர்சனத்துடன் ஒப்பிடும் போது ஒன்றுமில்லை என்பதை உண்மையான நம்பிக்கையாளர்கள் நன்கு உணர்வார்கள்.

    (ஆ) அல்லாஹ்விற்காக அல்லாமல், மனிதர்கள் தன்னை ஏளனமாகப் பார்ப்பார்கள், தன்னைக் குறை சொல்வார்கள் என்பதற்காக இஸ்லாத்தின் சில கட்டளைகளைப் பின்பற்றுபவர்கள் இரண்டாம் வகையினர் ஆவர். உதாரணமாக வீட்டிலே தொழுது கொள்கிறார் என்று மற்றவர்கள் குறை சொல்வார்கள் என்பதற்காக அல்லது அவர் தொழுவதே இல்லை என்று மக்கள் எண்ணக் கூடாது என்பதற்காக ஒருமனிதர் பள்ளிவாசலில் தொழலாம். அல்லது மார்க்கக் கூட்டங்களின் போது அங்கு வரும் தனது மார்க்கச் சகோதாிகள் அல்லது உரையாற்றுபவர் தன்னைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக ஒரு முஸ்லிம் பெண்மணி பர்தா அணியலாம்.



  மற்ற மக்களிடம் உள்ள செல்வங்களுக்காக பேராசைப்படுதல்
  

  மற்ற மக்களிடம் உள்ள பணம், அதிகாரம் அல்லது செல்வாக்கு மீது ஒருவருக்குப் பேராசை ஏற்பட்டால், பிறகு தன்னைப் போன்று மற்றவர்களும் தன் மீது பொறாமை கொள்ள வேண்டும் என்று அவன் விரும்புகிறான். உதாரணமாக சமுதாயத்தில் குறிப்பிட்ட அந்தஸ்தில் உள்ள மனிதர் மீது ஒருவருக்கு பொறாமை ஏற்பட்டால், அதே அந்தஸ்தை தானும் அடைய எல்லா வகையிலும் அவன் முயலுகிறான். இந்த எண்ணத்தின் விளைவாகத் தனது வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக் கொள்கிறான். அவனது பணம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவை மற்றவர்களுக்குப் பகட்டாகக் காண்பிக்கப் படுகின்றது. மார்க்க விஷயங்களும் கூட பகட்டாக காட்டப்படுகிறது. இறுதியில் 'ரியா" என்னும் பெரும் பாவத்திற்கு இவை இழுத்துச் செல்கின்றன.

    அண்ணல் நபி அவர்களின் பின்வரும் அமுத மொழி இந்த மூன்று வகையினரையும் சுட்டிக் காட்டுகின்றது.
    அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமனிதர் நபிகள் நாயகம் அவர்களிடம் வந்து, 'ஒரு மனிதன் (பிறர் தன்னைக் குறை சொல்வதைத் தவிர்ப்பதற்காக) தனது கண்ணியத்தைத் தற்காத்துக் கொள்வதற்காகப் போாிடுகிறார். இன்னொருவர் தனது துணிச்சலை (அதற்காக பாராட்டப்பட வேண்டுமென்பதற்காக) நிரூபிப்பதற்காகப் போாிடுகிறார். மூன்றாமவர் (தனது அந்தஸ்தைப் பிறர் அறிய வேண்டுமென்பதற்காக) பகட்டிற்காகப் போாிடுகிறார். இந்த மூவாில் அல்லாஹ்வின் பாதையில் போாிடுபவர் யார்? என்று கேட்டார்.

நாயகம் அவர்கள் (பின் வருமாறு) பதில் சொன்னார்கள்.

    எவர் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்க வைக்க (அதாவது, இஸ்லாத்திற்கு கண்ணியம் சேர்ப்பதற்காகவும், இஸ்லாத்தை இந்த பூமியில் நிலை நாட்டவும்) போாிடுகிறாரோ அவர் தான் அல்லாஹ்வின் பாதையில் போாிடுபவர் ஆவார்." ஆதாரம்: புகாாி 123, 2810, 3126, 7458, முஸ்லிம், அபூதாவூத்

Wednesday, June 30, 2010

ரியா !மறைவான இணைவைப்பு? பெருமை அல்லாஹ்வுக்குள்ளது..தொடர் 18

'ரியா" ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் இறை நம்பிக்கையில் (ஈமானில்) ஏற்படும் பலவீனம் ஆகும். அல்லாஹ்வின் மீது ஒரு மனிதனுக்கு உறுதியான நம்பிக்கையில்லா விட்டால், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதை விட மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவனுக்குப் பெரிதாகத் தோன்றும். ஈமானில் ஏற்படும் இந்த பலவீனத்தின் விளைவாக மறுமையில் கிடைக்கும் வெகுமதிகளையும், அருள் வளங்களையும் அவன் புறக்கணிக்கின்றான். இதே நேரத்தில், இந்த உலகில் கிடைக்கும் பெயருக்காகவும், புகழுக்காகவும் அவனது எண்ணம் அலை பாய்கின்றது. இத்தகைய எண்ணமே 'ரியா"வில் அவனை வீழ்த்துகின்றது.

'ரியா"விற்கு மூன்று அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் இறை நம்பிக்கையாளர்கள்
எச்சரிக்கையாகி , கவனமாக செயல்பட வேண்டும்.

    1. புகழை விரும்புவது:-
    நரகில் வீசப்படும், அறிஞர், வீரமரணமடைந்த தியாகி மற்றும் கொடையாளி தொடர்பாக நாம் முன்பு கண்ட நபிமொழியில் இந்த அறிகுறியைக் கவனிக்க முடிகின்றது. இந்த மூவரும், மக்களிடம் புகழ் பெற விரும்பினார்கள். அல்லாஹ்வின் திருப்தியை விட இந்தப் புகழை அவர்கள்
பெரிதாக கருதினார்கள். மக்களிடம் புகழை எதிர்பார்க்கும் மனிதன் தன்னுள் பெருமைப்பட்டுக் கொள்கிறான். தான் புகழப்படத் தகுதியுடையவன் என்றும் அவன் கருதிக் கொள்கிறான். எனவே அவன் வீம்பும், தற்புகழ்ச்சியும் உடைய மனிதனாக உருவாகும் அபாயம் ஏற்படுகின்றது.

    அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    அல்லாஹ் சொல்கிறான் 'பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை என்னுடைய அங்கியாகவும் உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுகிறானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்" நூல்கள்: அபுதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

    தற்பெருமை கொண்ட ஒரு மனிதரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர்; பின்வருமாறு
எச்சரித்ததாக இன்னொரு நபிமொழியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
    

 அழிவை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் மூன்று உள்ளன. மன இச்சையைப் பின்பற்றுதல், பேராசைக்கு அடிபணிதல் மற்றும் தற்பெருமையும், இறுமாப்பும். இது (கடைசியாகச் சொன்னது) தான் மூன்றிலும் மிக மோசமானதாகும். நூல்: மிஷ்காத் அல் மசாபிஹ்

கிறிஸ்தவர்கள்,
யூதர்களைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கிறது.
    தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் தண்டனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று (முஹம்மதே!) நீர் நினைக்காதே! அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை உள்ளது. (திருக்குர்ஆன் 3:188)
    இதனால் தான், நபித்தோழர்கள், புகழப்படக்கூடிய சூழலில் கூட சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில்
எச்சரிக்கையாக   இருந்தார்கள்.

    அப்துர்ரஹ்மான் லைலீ (இவர் இரண்டாம் கலீபா உமர் (ரலி) காலத்தில் பிறந்தவர். அலீ (ரலி), உபைபின் கஅப் மற்றும் பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டு அறிவித்தவர்) அறிவிக்கிறார்கள்.

    'அன்சார்களாக இருந்த நூற்றி இருபத்திற்கும் மேற்பட்ட நபித்தோழர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்களிடம் யாராவது வந்து மார்க்கத் தீர்ப்பு கேட்டால், வேறு யாராவது தனக்காக இந்தத் தீர்பை வழங்க மாட்டாரா? என்று விரும்புகிறவர்களாக அவர்கள் இருந்தனர்"
ஆதார நூல்: அத்தா
ரிமி
மார்க்கத்தைப் பற்றி தவறுதலாக சொல்லி விடக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் தயக்கம் காட்டுபவர்களாக இருந்தனர்.






Saturday, January 23, 2010

ரியா !மறைவான இணைவைப்பு?உங்களை வெல்வோர் எவருமில்லை!!தொடர் 17

ரியாவின் பல்வேறு வகையான ஆபத்துகளில் ஒன்று, அதன் தீமைகள் அதில் ஈடுபட்டவர்களை மட்டுமின்றி, முழு சமுதாயத்தையும் அது பாதிக்கும். அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்.
'பலவீனமான, எளிமையான அதன் உறுப்பினர்களினால் இந்த சமுதாயத்திற்கு (அல்லாஹ்விடமிருந்து) உதவி கிடைக்கின்றது. அவர்கள் பிரார்த்தனைகள், அவர்களது தொழுகைகள் மற்றும் அவர்களது உள்ளத் தூய்மையே இதற்குக் காரணம்." நூல்: சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீப் சஹீஹ் சுனன் அத் திர்மிதீ

இந்த நபிமொழி மூலம், தனது சமுதாயத்தினர்களுக்கு அண்ணல் நபி அவர்கள், தூய்மையான முஸ்லிம்களால்தான் சமுதாயம் காப்பாற்றப்படுகிறது என்ற செய்தியை அளித்துள்ளார்கள். எனவே, இச்சமுதாயம் தனது தூய்மையான உறுப்பினர்களை இழந்து விட்டால், அல்லாஹ் தனது உதவிகளைத் துண்டித்துவிடுவான். திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (திருக்குர்ஆன் 3:160)


தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தோரைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன். (திருக்குர்ஆன் 8:47)

Thursday, January 14, 2010

ரியா !மறைவான இணைவைப்பு? சாபம்தான்! தொடர் 16

நமது செயல்கள் தூய்மையான எண்ணத்துடன் செய்யப்படும் போது, அல்லாஹ்வின் அருள் நமக்குக் கிடைக்கும். ஆனால், புகழுக்காகவும், பெருமைக்காகவும் நாம் செயற்களைச் செய்யும்போது நமக்கு சாபம் தான் கிடைக்கும்.
அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்களை மேற்கோள்காட்டி அப்துல்லாஹ் இப்னு ளம்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'முழு உலகமும் சாபத்திற்குரியது: அல்லாஹ்விற்காக என்று செய்யப்பட்ட செயல்களைத் தவிர மற்றவை அனைத்தும் சாபத்திற்குரியது".
நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்

Saturday, December 12, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?சுவனம் செல்லத் தடை! தொடர் 15

மனிதர்களிடையே புகழடைவதற்காக நற்செயல்களைப் புரிவது, சுவனத்திற்குள் நுழைவதையும் தடை செய்யும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்...

'அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்." நூல்: அபூதாவூத், இப்னு மாஜா

இங்கு குறிப்பிட்டுள்ள அறிவு இஸ்லாத்தைப் பற்றியது ஆகும். இந்த அறிவை அல்லாஹ்விற்காக மட்டுமே ஒருவர் பெற வேண்டும் நமது மார்க்கத்தைப் பற்றி நாம் கற்க வேண்டுமென்பது அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு விடுத்துள்ள கட்டளையாகும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...

'அறிஞர்களுடன் போட்டி போட வேண்டும் என்பதற்காக அறிவைப் பெறாதீர்கள். இதே போல் சாதாரண பாமரனுடன் விவாதம் செய்வதற்காகவும், கூட்டங்களைக் கவருவதற்காகவும், கவர்ச்சியாக்குவதற்காகவும் அறிவைப் பெறாதீர்கள். எவரொருவர் இதனைச் செய்கிறாரோ அவர் நெருப்பிற்காக காத்திருக்கட்டும்." நூல்: சஹீஹ் சுனன் இப்னு மாஜா

நம் அனைவருக்கும் இது ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். மக்களைக கவர்வதற்காக நாம் மார்க்கத்தைப் பற்றிய அறிவை தேடக் கூடியவர்களாக ஆகிவிடக் கூடாது. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் ஒரே நோக்கத்திற்காக மட்டும் நாம் அறிவைத் தேட வேண்டும்.

ரியாவைக் கடைப்பிடிக்கும் ஒருவர் நிரந்தரமாக நரக நெருப்பில் கிடத்தப்பட மாட்டார் என்பதில் இஸ்லாமிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஏனெனில் ரியா ஒரு மனிதரை இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றுவதில்லை. ஒரு மனிதனின் உள்ளத்தில் சிறிதளவு தவ்ஹீது இருப்பினும், அவர் நரக நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். அல்லாஹ் நாடினால், 'ரியா'"விற்காக ஒருவரை மன்னித்து, எவ்விதத் தண்டனையும் அவருக்கு அளிக்காமல் இருக்கலாம்.

Saturday, October 24, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?அல்லாஹ்வுக்கு சிரம் பணிய இயலாமை! தொடர் 14

மக்கள் தரும் புகழாரங்களை வணங்கியவர்களுக்கு மேலும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் தனக்கு சிரம் பணிய (சுஜூது ) செய்ய முயன்ற போதிலும், அதனை அல்லாஹ் இயலாமல் ஆக்கிவிடுவான். அபூ சையீத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு நீண்ட நபிமொழியில், இறுதித் தீர்ப்பு நாளில் இறைநம்பிக்கையாளர்கள் எவ்வாறு அல்லாஹ்வைக் காண்பார்கள் என்பதை அண்ணல் நபி அவர்கள் விளக்கினார்கள். இதன் பிறகு அவர்கள் சொன்னார்கள்.

'பிறகு அல்லாஹ் தனது கீழ்காலின் முன்புறத்தை வெளிப்படுத்துவான். (உலக வாழ்வின் போது) தனக்கு தூய எண்ணத்துடன் சிரம் பணிய செய்த அனைவரையும் சிரம் பணிய அனுமதிப்பான். இதனால் அவர்கள் யாருமே நின்று கொண்டிருக்க மாட்டார்கள். மற்றவர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக சிரம்பணிந்தவனின் முதுகை அல்லாஹ் ஒரே துண்டுக் கட்டையாக ஆக்கிவிடுவான். (இதன் விளைவாக அவனால் குனியவே முடியாது) ஒவ்வொரு முறை அவன் சிரம் பணியும் போது, அவன் முகங்குப்புற கீழே விழுவான்...."

நூல்: சஹீஹ்அல்ஜாமி,புகாரி,முஸ்லிம்.
அபூ அம்மார் யாசிர் அல் காழி -
தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்

Thursday, September 3, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? நரக நெருப்பில் நுழைவதற்கான முதன்மையான காரணம்!தொடர் 13

அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதல் முதலில் (இறைவழியில் உயிர் துறந்து) ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒத்துக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம் 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், 'நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரை போராடினேன்" என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய்: வீரன் என்று கூறப்படுவதற்காகவே போாிட்டாய். இவ்வாறே (மக்களாலும் உலகில்) பேசப்பட்டு விட்டது" என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதர்; முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.

பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆன் ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ், தான் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம், 'நான் கொடுத்த அருட்கொடைகளை என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், 'நான் உனக்காக (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்து, குர்ஆனை உனக்காக ஓதி வந்தேன்" என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய், அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டுமென்பதற்காகவே இஸ்லாமிய அறிவைக் கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர்கள் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களாலும்) பேசப்பட்டு விட்டது" என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும் வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும் படி ஆணையிடப்படும்.

அதன் பின்னர் செல்வந்தர்; ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவருக்கு அல்லாஹ் தான் அளித்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம், 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர் 'நீ எந்த வழிகளிலெல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் நான் செலவு செய்யாமல் விட்டதில்லை." என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய். (இவர் வள்ளல் தனத்துடன்) வாாி வாாி வழங்குபவர், என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது" எனக்கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லுமாறு ஆணையிடப்படும். நூல்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ

சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீபில் இந்த அறிவிப்பின் இறுதியில் பின்வரும் வாசகமும் இடம் பெற்றுள்ளது. பிறகு அண்ணல் நபி அவர்கள் எனது முட்டிகளைத் தட்டி விட்டுச் சொன்னார்கள்:

'அபூஹுரைராவே! அல்லாஹ்வின் படைப்புகளில் இறுதித் தீர்ப்பு நாளில் நரக நெருப்பிற்கு இரையாகப்போகும் முதல் மூன்று நபர்கள் இவர்கள்தான்"

அபூ அம்மார் யாசிர் அல் காழி - தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்

Thursday, August 13, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? புகழ்,பெருமை,பகட்டு=அவமானம்,அழிவு,கைசேதம்!! தொடர் 12

புகழுக்காகவும், பெருமைக்காகவும் நற்செயகளைப் புரிவோருக்கு இந்த உலகிலேயே அவர்கள் நாடியது கிடைத்து விடும் என்ற போதிலும், இறுதித் தீர்ப்பு நாளில் அவர்கள் முழுமையாக அல்லாஹ்வினால் அவமானப்படுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னதாக முஅத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்"

நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்


அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

'தனது செயல்களைப் பற்றி மற்றவர்களிடம் எவர் பகட்டாகக் காட்டிக் கொள்கிறாரோ, அவரை அல்லாஹ் தனது படைப்பினங்கள் முன்பு சிறுமைப்படுத்தி கண்ணியத்தைக் குலைத்து அவனை இகழ்வான்."

நூல்: சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீப்

Friday, July 10, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?" அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் " தொடர் 11

அல்லாஹ்விற்காக அன்றி மற்றவர்களுக்காக செய்யப்படும் செயல்கள் இறைவன் அங்கீகாிக்க மாட்டான் என்று பல அறிவிப்புகளில் அண்ணல் நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூ உமாமா அல் பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்.

'அல்லாஹ்விற்காக என்று தூய எண்ணத்துடன், அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்" நூல்: சஹீஹ் அல்ஜாமீ, சுன்னன் நஸயீ

அல்லாஹ்விற்காக தூய நோக்கமின்றி செய்யப்படும் செயலை அல்லாஹ் எப்படி ஏற்றுக் கொள்வான்? அல்லாஹ் இது போன்ற செயல்கள் குறித்து திருக்குர்ஆனில் எச்சாிக்கிறான்:

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (திருக்குர்ஆன் 2:264)

ரியாவில் ஈடுபடுபவர் மண்ணால் மூடப்பட்ட பாறை போன்றவர் ஆவார். மக்கள் அப்பாறையைப் பார்க்கும் போது அது விளைநிலம் போல் தோற்றமளிக்கும். ஆனால் சிறிய மழை பெய்தால் கூட, அது ஒரு பாறை என்பது அம்பலமாகிவிடும். மேலும் ரியாவில் ஈடுபடுவோர் தங்கள் செயலின் பலன்களை அனுபவிக்க இயலாத சூழலும் ஏற்பட்டு விடும்.

பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது: அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன. அதில் அனைத்துக் கனிகளும், அவருக்கு உள்ளன: அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது: அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எாித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 2:266)

ரியாவினால் பாதிக்கப்பட்ட நற்செயல்களுக்கு தீயினால் எாிக்கப்படும் நல்ல பசுமையான தோட்டத்தை அல்லாஹ் உவமையாகக் கூறுகிறான். இந்த தோட்டம் எாிக்கப்படும் போது, அதன் உாிமையாளர் கையைப் பிசைந்து கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் நிற்பார். இது போன்ற நிலை தான் தனது நற்செயல்களை ரியாவினால் வீணாக்கியவருக்கு ஏற்படும். இறுதி தீர்ப்பு நாளில் ரியாவைக் கடைப்பிடித்தவர்களை அல்லாஹ் சிறுமைப்படுத்துவான். தாங்கள் யாரைக் கவருவதற்காக செயல்களைப் புரிந்தார்களோ அவர்களிடமிருந்தே வெகுமதிகளைப் பெறுமாறு அல்லாஹ் கூறுவான்.

அண்ணல் நபி அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் அறிவிக்கிறார்கள்: (இறுதித்தீர்ப்பு நாளில்) மக்களின் செயல்களைக் கணக்கிடும் போது, (ரியாவைக் கடைப்பிடித்தவர்களிடம்) கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவான், யாாிடம் உங்கள் செயல்களைக் காட்டுவதற்காக செய்தீர்களோ, அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களிடம் ஏதாவது கூலி உண்டா என்று பாருங்கள். நூல்: சஹீஹ் அல் தா;கீப் வத் தக்ரீப் - எண் : 29

அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி அவர்கள் தங்களிடம் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும் போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணை வைக்கும் விதத்தில் ஒரு செயலைச் செய்தால், (எனது உதவியின்றி) அவருடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டுவிடுகிறேன். நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா

அல்லாஹ்வின் தூதா; அவர்கள் சொன்னதாக உபை இப்னு காப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'இந்த மார்க்கத்தின் மூலமாக சிரமமின்மையும், கண்ணியமும், கவுரவமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவியும், பூமியிலிருந்து வலிமையும் உண்டு என்று இந்த சமுதாயத்திற்கு நன்மாராயம் கூறுவீராக. எனவே, இந்த உலகத்தை மனதிற்கொண்டு ஒருவர் மறுமைக்குாிய செயலைச் செய்தால், அதன் பலனின் எந்த ஒரு பாகத்தையும் அவர் மறுமையில் அடைய மாட்டார். நூல்: சஹீஹ் தா;கீப் வல் தா;ஹீஹ்

Thursday, June 18, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?" வழிகேட்டை அதிகரிக்கும் " தொடர் 10

ரியாவில் ஈடுபடும் மனிதனின் உள்ளத்தில் நோய் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த நோயை குணப்படுத்தாவிட்டால், அது மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். திருக்குர்ஆனில் வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.

அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(திருக்குர்ஆன் 2:9,10)

அண்ணல் நபி அவர்களின் தோழர்கள் காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவத்தில் நாம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் காண முடிகிறது.

ஜாபிர் இப்னு சமூரா அறிவிக்கிறார்கள்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது, கூஃபா நகரவாசிகள் சிலர் தங்களுக்கு ஆளுநராக அனுப்பப்பட்ட சஅது இப்னு அபி வக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி புகார் தொிவித்தார்கள். இந்த புகாரைப் பற்றி விசாாிக்க உமர் (ரலி) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். இருப்பினும் அவர்கள் தொடந்து உமர் (ரலி) அவர்களிடம் மென்மேலும் புகார்களைக் கூறிய வண்ணம் இருந்தார்கள். சஅத் (ரலி) அவர்களுக்கு சரியாகத் தொழக்கூடத் தொியவில்லை என்றும் கூட அவர்கள் புகார் சொன்னார்கள். இச்சூழலில் உமர் (ரலி) சஅதை அழைத்து அவர்களது தொழுகையைப் பற்றி விசாாித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் இதற்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்.

'அல்லாஹ்வின் மீது ஆணையாக, அண்ணல் நபி அவர்கள் எவ்வாறு தொழுதார்களோ அதே முறையில்தான் நான் தொழுதேன். இதில் நான் எந்த வகையிலும் குறை வைக்கவில்லை. இஷா தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளை நீட்டியும், பிந்தைய இரண்டு ரக்அத்துகளையும் சுருக்கியும் தொழுவேன்" இப்பதிலைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் 'உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்தது இதனைத் தான்" என்று பதிலளித்தார்கள்.

இதன் பிறகு மக்களிடம் நேரடியாக விசாரணை நடத்துவதற்காக பல தூதா;களை உமர் (ரலி) அவர்கள் கூபாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இத்தூதர்கள் சென்ற ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அவர்கள் மக்களிடம் சஅதைப் பற்றி விசாாித்தார்கள். அவர்கள் சென்ற ஒவ்வொரு இடத்திலும் சஅதைப் பற்றிய பாராட்டுரைகளைத் தான் மக்களிடமிருந்து கேட்க முடிந்தது. அப்ஸ் கோத்திரத்தாாின் பள்ளிவாசலுக்கு தூதர்கள் சென்ற போது உஸாமா இப்னு கத்தாதா என்றமனிதர் எழுந்து நின்று 'உங்களுக்கு உண்மை தொிய வேண்டுமெனில் நான் சொல்வதைக் கேளுங்கள். படைகளுடன் சேர்ந்து சஅத் போர்புரிவதற்குச் செல்வதில்லை. போாில் கிடைத்த பொருட்களையும், அவர் நியாயமாக பகிர்ந்தளிப்பதில்லை" என்று கூறினார். இதனைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள் 'இறைவா! நான் உன்னிடம் இரண்டு விஷயங்களைக் கேட்கிறேன். உனது இந்த அடியார் (அதாவது உஸாமா) ஒரு பொய்யராக இருந்தால், ரியாவிற்காக, பிரபலமடைவதற்காக எழுந்து நின்றிருப்பாரேயானால், அவரது வாழ்நாளை நீடிப்பாயாக, அவரது வறுமையை அதிகாிப்பாயாக மேலும் அவரது கண்ணியத்தைக் குலைப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்.

இதற்குப் பல ஆண்டுகள் கழித்து உஸாமாவிடம் அவரது நிலை எப்படியுள்ளது என்று வினவப்பட்டால்....

'வயது முதிர்ந்த கிழவனாக அலுப்பு தட்டியவனாக சஅதின் பிரார்த்தனையால் பாதிக்கப்பட்டவனாக இருக்கிறேன்" என்று பதிலளிக்கும் நிலையில் இருந்தார். இச்சம்பவத்தை விவாிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறும் போது, 'நான் அவரை (உஸாமாவை) ஒருமுறை பார்த்தேன். வயோதிகத்தின் காரணமாக அவரது புருவங்கள், கண் இமையில் படும் அளவிற்குத் தொங்கியிருந்தது. இருப்பினும் தெருக்களில் இளம் பெண்களைக் கடந்து செல்லும் போது அவர்களை தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நூல்: புகாாி, முஸ்லிம், அபூதாவூத்

Wednesday, May 27, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? " இணைவைப்பின் சிறிய வடிவம்! " தொடர் 9

அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்:
'ஒருமனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தொிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார். இதுவே மறைவான இணை வைப்பாகும்." ஆதாரம்: இப்னு மாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்.

'ரியா"வுடன் செயல்படும் ஒரு மனிதன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்குவதற்கு நாடுவதில்லை. ஆனால், 'எண்ணத்தில் இவைணைப்பை" வைக்கும் மனிதன், அல்லாஹ்வைத் தவிர வேறொன்றை வணங்க உண்மையில் நாட்டம் கொள்கிறான். உதாரணமாக, சிலையை வழிபடும் முஸ்லிமல்லாத ஒருவர், அந்தச் சிலையிடம் பிரார்த்திக்க வேண்டும், அதற்காக நேர்ச்சை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளார். இது எண்ணத்தில் வைக்கப்படும் இணைவைப்பு வகையைச் சார்ந்ததாகும். இதற்குக் காரணம், அந்தச் சிலையினால் தனக்கு நன்மையையோ, தீமையையோ செய்வதற்கு இயலும் என்று அவர் நம்புகிறார்.

ஆனால், மக்களிடம் நற்பெயர் வாங்குவதற்காகத் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்ளும் ஒரு முஸ்லிம், அம்மக்களைத் தொழுகின்றார் என்று சொல்லி விட முடியாது. மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவரது நோக்கம். அவர்களை வணங்குவது அவரது நோக்கம் அல்ல. அவரது செயல் மறைமுகமாக அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றை வணங்கும் செயலாகவே அமைந்துள்ளது. எனவே, 'ரியா"வும், 'எண்ணத்தில் இணைவைப்பும்" சமமானவை அல்ல.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நிச்சயமாக தனக்கு இணைவைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகிறவர்களுக்கு மன்னித்து விடுகிறான்.
(திருக்குர்ஆன் 4:48)

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நஷ்டமடைந்தவராவீர் என்று உமக்கும், உமக்கு முன் சென்றோர்க்கும் அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன் 39:65)

இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இணைவைப்புகள் பெரும் இணைவைப்பு வகையைச் சேர்ந்தவையாகும். ஆனால், இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளவை சிறிய வகை இணைவைப்பிற்கு பொருந்துமா? இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவிய போதும், ரியா இந்த வகையைச் சேர்ந்தது அல்ல. மாறாக, அது பெரும் பாவங்களில் (அல் கபாயிர்) ஒன்றாக விளங்குகின்றது என்று கூறுவது நலமாகும். (அல்லாஹ் நன்கு அறிந்தவன்) வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், (அல்லாஹ் அல்லாத மற்றவர்களை வணங்குவது போன்ற) பெரும் இணைவைப்பு ஒரு மனிதனை இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேற்றி விடுகின்றது: முடிவில்லாத நரகத்தை அவனுக்கு நிச்சயமாக்குகின்றது: அவனது நற்செயல்கள் அனைத்தையும் அழித்து விடுகின்றது. சிறிய வகை இணைவைப்பு, ஒரு மனிதனை இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றுவதில்லை.

ஆனால், ரியாவினால் பாதிக்கப்பட்ட நற்செயற்களுக்கானக் கூலிகளை அது ரத்து செய்து விடுகின்றது. அம் மனிதனின் நற்செயல்கள் அனைத்தும் சிறிய வகை இணைவைப்பினால் அழிவதில்லை. சிறிய வகை இணைவைப்பு செய்தவருக்கு நரகம் நிச்சயம் உண்டு என்று சொல்ல முடியாது. அல்லாஹ் நாடினால் அவரை மன்னித்து விடலாம்.

Sunday, May 17, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? " தேவையுடைய மக்களுக்கு உதவிடுவதும் வணக்கம் தான் " தொடர் 8

தொழுகை, நோன்பு போன்ற அத்தியாவசியக் கடமைகள் மட்டுமில்லாமல், தேவையுடைய மக்களுக்கு உதவிடுவதும் வணக்கம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வின் அடிப்படை வசதிகள் தங்களுக்குத் தேவைப்பட்ட போதும் கூட, அவற்றைத் தேவையுள்ளவர்களுக்கு பிரதிபலன் பாராது, வழங்க உண்மையான நம்பிக்கையாளர்கள் தயங்க மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பதாக வாக்களித்துள்ள மாபெரும் அருட்கொடைகளுடன், தங்களது உதவிகளைப் பெற்றவர்கள் காட்டும் நன்றி விசுவாசத்தை எவ்வகையிலும் ஒப்பிட முடியாது என்பதை அவர்கள் நன்குணர்ந்து இருக்கின்றார்கள்.

திருப்திப்படுத்துவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, அல்லாஹ் ஒருவனே வணங்கப்படுவதற்கும் தகுதியானவன் என்பதை உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் உணர்ந்தே செயல்படுவார்கள். இதற்கு எதிர்மறையான நயவஞ்சகர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு திருக்குர்ஆனில் விமர்சிக்கின்றான்:

தமது தொழுகையில் கவனமற்று பிறருக்குக் காட்டுவதற்காக தொழுவோர்க்குக் கேடுதான். (அவர்கள்) அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கிறார்கள். (திருக்குர்ஆன் 107:4-7)

சூரா அந்நிஸாவிலும் அல்லாஹ் நயவஞ்சகர்களைப் பின் வருமாறு வர்ணிக்கின்றான்.
நயவஞ்சகர்களய் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். அல்லாஹ்வைக் குறைவாகவோ நினைவு கூர்கின்றனர். (திருக்குர்ஆன் 4:142)

இறை நம்பிக்கை (ஈமான்) மற்றும் ஏகத்துவம் (தவ்ஹீத்) மீதான பிடிப்பை 'ரியா" எவ்வாறெல்லாம் ஆட்டம் காண வைக்கும் என்பதற்கு இந்த திருக்குர்ஆன் வசனங்கள் எச்சாிக்கையாக அமைந்துள்ளன.

Wednesday, May 13, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?ஈமானையும், தவ்ஹீதையும் பலவீனப்படுத்துகின்றது ""தொடர் 7

'ரியா" மறைவான தன்மையுடையது. எனவே, அதன் அபாயங்கள் மேலும் கடுமையானதாக அமைந்துள்ளன.

அபூமூஸா அல் அஷ்அரீ அவர்கள் அறிவிக்கின்றார்கள். அண்ணல் நபி அவர்கள் ஒரு நாள் எங்களுக்குப் பிரசங்கம் செய்தார்கள். அப்போது அவர்கள், 'மனிதர்களே! இந்த இணைவைப்பை (அதாவது ரியாவை)க் குறித்து அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு எறும்பு ஊர்ந்து செல்வதைக் காட்டிலும் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது." ஆதாரம்: ஸஹீஹ் அல் தா;கீப் வல் தா;ஹீப்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
'நிலவில்லாத ஓாிரவின் நடுவில், கருமை நிறப் பாறையில் ஊர்ந்து செல்லும் எறும்பை விடப் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது." ஆதாரம்: தஃப்ஸீர் இப்னு கதீர்
(இன்னொரு சிறிய இணைவைப்பு குறித்து இப்னு அப்பாஸ் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்த போதிலும், ரியா போன்ற சிறிய இணைவைப்பிற்கும் இது பொருந்துவதாக அமைந்துள்ளது.)

ரியாவின் தீங்கிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு இறைத்தூதர்; அவர்கள் கூட அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். இறுதி ஹஜ் பயணத்திற்கு முன்பு அவர்கள் அல்லாஹ்விடம்:-

'அல்லாஹ்வே! இந்த ஹஜ்ஜை ரியா இல்லாத அல்லது பகட்டு இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாளாக" என்று பிரார்த்தனை புரிந்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் அல் ஜாமி இனி ரியாவின் சில தீங்குகளைக் காண்போம்.
1. ஈமானையும், தவ்ஹீதையும் பலவீனப்படுத்துகின்றது.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்குகாகவே தவிர நான் படைக்கவில்லை. (திருக்குர்ஆன் 51:56)
'ரியா"வில் ஈடுபடும் ஒரு மனிதன் தான் படைக்கப்பட்டத்தின் நோக்கத்தையே அழித்து விடுகின்றான். ஏனெனில், அல்லாஹ்வை உண்மையாகவே வணங்குவதற்குப் பதிலாக, அல்லாஹ்வை வணங்குவதைப் போல் பாசாங்கு செய்து, அல்லாஹ்வுடைய படைப்புகளின் திருப்தியையும், பாராட்டுதலையும் பெறுவதற்கு அவன் விரும்புகிறான்.

உண்மையான நம்பிக்கையாளர்கள் யார் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.
உண்மையான நம்பிக்கையாளர்கள், அல்லாஹ்விற்காக மட்டுமே வணக்கத்தில் ஈடுபடுவார்கள். தங்கள் வணக்க வழிபாடுகளுக்காக மற்றவர்களிடமிருந்து அவர்கள் எவ்வித வெகுமதியையோ, நன்றியையோ எதிர்பார்க்க மாட்டார்கள். இதனை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் விளக்கியுள்ளான்:

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும் கைதிக்கும் உணவளிப்பார்கள். 'அல்லாஹ்வின் திருப்திக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து நன்றியையோ பிரதிபலனையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை" (எனக் கூறுவார்கள்) (திருக்குர்ஆன் 76:8,9)

Thursday, May 7, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? "அபாயங்கள்"தொடர் 6

'ரியா"வினால் ஏற்படும் அபாயங்கள் ஏராளமானவை. இதனால் தான் நபிகள் நாயகம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது தமக்குள்ள அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக, ஏனைய சீர்கேடுகளை விட ரியாவைக் குறித்தே அதிகம் கவலைப்பட்டுள்ளார்கள்.

மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர்; அவர்கள் சொன்னார்கள். 'நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித் தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்ட போது, அவர்கள் 'ரியா" என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

மற்றொரு நபிமொழியில் தஜ்ஜாலின் தீங்குகளை விட அதிகமாகத் தனது சமுதாயத்தினரை 'ரியா" பாதிக்குமோ என்று இறைத்தூதர் அஞ்சியிருப்பது வெளிப்படுகின்றது.

அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர்; வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தொிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்காித்துக் கொள்கிறார்." என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா

இந்த நபிமொழியை நாம் அலசிப் பார்க்கும் போது, 'ரியா"வின் உண்மையான அபாயங்களை உணர முடியும். ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட காலம் முதல், இறுதித் தீர்ப்பு நாள் வரை, மனித குலம் அனுபவிக்கும் மிகப் பெரும் சீர்கேடு தஜ்ஜாலினால் ஏற்படுவது தான். நபி நூஹ் (அலை) முதல் அனைத்து இறைத் தூதர்களும் தங்கள் சமுதாயத்தவர்களிடம் இந்தப் பேரபாயம் குறித்து எச்சாித்துள்ளார்கள். தஜ்ஜாலுடைய காலத்தில் வாழும் மக்கள் அவனை விட்டு ஓடிவிட வேண்டுமென்றும், ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப் பிறகும் அவர்கள் தஜ்ஜாலின் அபாயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டுமென்றும், அண்ணல் நபி அவர்கள் அறிவுரை வழங்கியிருக்கின்றார்கள். இருப்பினும், தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட 'ரியா" வினால் ஏற்படும் தீங்குகள் குறித்துத் தான் அதிகமாக அஞ்சுவதாக மேலே குறிப்பிட்ட தனது அமுத மொழியில் நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள்.

யாருக்கு உள்ளம் உள்ளதோ அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது. (திருக்குர்ஆன் 50:37)

Friday, May 1, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? "அல்லாஹ்வின் மீதான அச்சம்" தொடர் 5

சுப்யான் அஸ் ஸவ்ாி கூறுகின்றார்கள்:

'எனது எண்ணங்களை சீர் செய்வதை விடக் கடினமான செயல் வேறு எதுவும் இல்லை. ஏனெனில், அது மாறுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கின்றது."

ஹதீஸ் கலை வல்லுநராக விளங்கிய அப்துல்லாஹ் பின் முபாரக் சொல்கின்றார்கள்:
'செய்யப்பட்ட செயல் மிகச் சிறிதாக இருந்தாலும், எண்ணத்தின் காரணமாக அதற்குக் கிடைக்கும் நற்கூலியினால் அது மிகப் பொிதாக மாறி விடும். அதே நேரத்தில் ஒரு மிகப் பெரும் செயல் எண்ணத்தின் காரணமாக அற்பமானதாகவும் ஆகி விடும்."

முஹம்மது பின் அஜ்லான என்ற தாபியீ (நபித்தோழாின் தோழர்) சொல்கின்றார்கள்:
'அல்லாஹ்வின் மீதான அச்சம், நல்லெண்ணம், மற்றும் நபிவழியை ஒத்து இருத்தல் ஆகிய மூன்று விஷயங்களுடன் சேர்ந்திராத எந்தவொரு செயலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது."

முத்தரீப் பின் அப்தில்லாஹ் (இவர் நபிகள் காலத்தில் பிறந்தவர், ஆனால் அவர்களைப் பார்த்திராதவர்) கூறுகின்றார்கள்.
'தூய்மையான, இறையச்சமுள்ள செயல்களின் மூலமாகத் தான் உள்ளத்தைத் தூய்மையானதாகவும், இறையச்சமுடையதாகவும் மாற்றலாம். சரியான எண்ணத்தின் மூலமாகத் தான் தூய்மையான இறையச்சமுடைய செயல்களைப் புரிய முடியும்."

உங்களில் அழகிய செயலுக்குாியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தோன், மன்னிப்போன். (திருக்குர்ஆன் 67:2)
என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் அளித்த ஃபுழைல் பின் இயாழ் என்ற அறிஞர் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.

'தூய்மையான எண்ணத்துடனும், சரியான முறையிலும் செய்யப்பட்ட செயல்களைத் தான் சிறந்த செயல் என்று இந்த வசனம் குறிப்பிடுகிறது நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட செயல் முறையற்றதாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதே போல முறையாக செய்யப்பட்டாலும், நல்லெண்ணத்துடன் செய்யப்படாத செயல், நிராகாிக்கப்படும். நல்லெண்ணத்துடன், முறையாகவும் செய்யப்பட்ட செயல் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நல்லெண்ணம் என்பது அல்லாஹ்விற்காக மட்டுமே செய்யப்படும் ஒரு செயலாகும். முறையான செயல் என்பது நபிகளார் அவர்களின் வழிமுறையின் படி செய்யப்பட்ட செயலாகும்."

எனவே அல்லாஹ்வால் அங்கீகாிக்கப்பட வேண்டுமெனில் ஒரு செயல் பல நிபந்தனைகளைகளால் பூர்த்தி செய்யப்பட வேண்டும். முதல் நிபந்தனை அல்லாஹ்விற்காக மட்டுமே அச்செயல் செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக அச்செயல் நபிகளாாின் வழிமுறைப்படி அமைய வேண்டும். மூன்றாவதாக நபிகளார் அவர்களின் மறைவுக்குப் பின் உருவாக்கப்பட்ட நூதனமாக (பித்அத்) அது இருக்கக் கூடாது.

Sunday, April 26, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? இது தான் நேரான மார்க்கம்தொடர் 4

மனிதன் திட்டமிட்டுச் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் ஒரு எண்ணம் இருப்பதை இந்த நபிமொழிகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த எண்ணங்கள் பாராட்டிற்குாியவைகள் அல்லது கண்டிக்கப்பட வேண்டியவையாக இருக்கலாம்: அல்லது இந்த இரண்டு வகையையும் சேராதவையாகவும் இருக்கலாம். ஆனால், மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் அல்லது குறிக்கோள் நிச்சயமாக இருக்கும். எதனை எண்ணினானோ அதனை ஒவ்வொரு மனிதனும் அடைந்து கொள்வான் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அதாவது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் கூலி, அவனது எண்ணத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும் நற்செயல் செய்ய வேண்டும் என்ற எண்ணமுள்ள ஒரு மனிதன், தகுந்த காரணத்தினால் அதனைச் செய்ய இயலவில்லை என்றாலும், அந்த நற்செயலுக்குாிய கூலி அம்மனிதனுக்குக் கிடைத்து விடும். ஆனால், தீயச்செயலைச் செய்ய எண்ணும் ஒரு மனிதன், பின்னர் அல்லாஹ்வின் மீதான அச்சத்தின் காரணமாக தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வானேயானால், அல்லாஹ் அவனது தீய எண்ணத்தை மன்னிப்பதுடன், அவனது இறைவுணர்விற்காக நற்கூலியையும் வழங்குவான்.

இதனைப் பின் வரும் நபிமொழி உறுதிப்படுத்துகின்றது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கும்போது (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும், தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதி விட்டான். பிறகு அதனை விவாித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என எண்ணி விட்டாலே அதை செயல்படுத்தா விட்டாலும் - அவருக்காக தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால் அந்த ஒரு நன்மையை தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதை செய்யாமல் விட்டு விட்டால் அதற்காக அவருக்கு தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்கு ஒரேயொரு குற்றத்தையே எழுதுகிறான். நூல்: புகாாி (6491)

இது குறித்து ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தீய செயலைப் புரிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதன், சூழ்நிலைகளின் காரணமாக அச்செயல் செய்யாமல் விட்டு விட்டால், அவனது கணக்கில் ஒரு தீய செயல் தான் பதிவு செய்யப்படும். உதாரணமாக கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லும் திருடன் ஒருவன், வழியில் விபத்து ஒன்றில் சிக்கிக் காலை முறித்துக் கொள்கிறான். இதனால், கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவனது எண்ணம் நிறைவேறவில்லை. இத்தகையவனுக்கு கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவனது எண்ணத்தை மாற்றிக் கொண்டதற்காக நற்கூலி கிடையாது. ஆனால், கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் புறப்படும் ஒரு மனிதன், வழியில் மனம் மாறி வீடு திரும்புவானேயானால், தீமையிலிருந்து தன்னைத் தடுத்துக் கொண்டதற்காக அவனுக்கு நற்கூலி கிடைக்கும். தீயநோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு செயலினால், நன்மை விளைந்தாலும், அதனைச் செய்த மனிதனின் கணக்கில் தீய செயலே பதிவு செய்யப்படும். சரியான தூய்மையான எண்ணங்களைக் கொண்டிருப்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான். வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கே உாித்தாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இது தான் நேரான மார்க்கம். (திருக்குர்ஆன் 98:5)

அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் விரும்பியதை நாம் விரும்பியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவருக்காக நரகத்தைத் தயார்படுத்துவோம். இழிந்தவராகவும் அருளுக்கு அப்பாற்பட்டவராகவும் அதில் அவர் நுழைவார். நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி அதற்காக முயற்சிப்போாின் முயற்சிக்கு, கூலி கொடுக்கப்படும். (திருக்குர்ஆன் 17,18,19)

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்குத்தான். அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் (திருக்குர்ஆன் 2:272)

ஆரம்பக்கால முஸ்லிம்கள் தூய்மையான, நல்ல எண்ணங்களின் அவசியத்தை நன்கு உணர்ந்து இருந்தார்கள். எனவே தான், அவர்கள் இது குறித்து ஏராளமானக் கருத்துக்களைத் தொிவித்துள்ளனர். இறைத்தூதாின் தோழரும், இஸ்லாத்தை முதலிலேயே தனது வாழ்வியல் திட்டமாக ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவருமான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்.'பேச்சைத் தொடர்ந்து செயல் இல்லையெனில், அந்தப் பேச்சு பயனற்றதாகும். நல்ல எண்ணம் இல்லாப் பேச்சும், செயலும் பயனற்றதாகும். நபிவழியுடன் ஒத்துப் போகாத பேச்சும், செயலும், நல்லெண்ணமும் பயனற்றதாகும்."

Thursday, April 23, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?நற்கூலி பெற்றுத் தரும் செயல்கள் எவை??தொடர் 3

ரியாவைப் பற்றிய விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்பு 'தூய்மையான எண்ணத்தின்" முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: '"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. ஒருவரது ஹிஜ்ரத் (துறத்தல்) உலகைக் குறிக்கோளாகக் கொண்டிருத்தல் அதையே அவர் அடைவார். அல்லது ஒரு பெண்ணைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவளை மணப்பார். ஒருவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்" இதை உமர் பின் கத்தாப் (ரலி) மேடையில் இருந்து அறிவித்தார்கள். ஆதாரம்: புகாாி (1), முஸ்லிம், அபூதாவூத் .

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றாக இந்த ஹதீஸ் விளங்குகின்றது. இதனால் அநேகமாக எல்லா ஹதீஸ் நூல்களிலும், இந்த ஹதீஸ் இடம் பெற்று அனைவராலும் பரப்பப்பட்டுள்ளது. இமாம் புகாாி (ரஹ்) தமது ஸஹீஹ் புகாாியை இந்த ஹதீஸுடன் தான் தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் அல்லாஹ்விற்கன்றி வேறு எவருக்காகவும், ஏதாவது ஒரு செயல் செய்யப்படுமேயானால், இவ்வுலகிலும், மறுவுலகிலும் அதனால் எவ்வித நற்பயனும் ஏற்படாது என்பதை உணர்த்துகிறார்கள்.

இஸ்லாத்தின் அடித்தளம் மூன்று ஹதீஸ்கைைளச் சார்ந்து இருப்பதாக இமாம் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்) குறிப்பிடுகின்றார்கள். அவற்றில் ஒன்று நாம் மேலே குறிப்பிட்டுள்ள 'எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன...." என்ற உமர் (ரலி) அறிவிக்கின்ற நபிமொழியாகும்.மற்றொன்று நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்ற பின் வரும் நபிமொழியாகும். அல்லாஹ்வின் தூதார் நபி அவர்கள் கூறினார்கள்: 'அனுமதிக்கப்பட்டவையும், மிகத் தெளிவானவை. அனுமதிக்கப் படாதவையும் தெளிவானவை. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கிடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கிடமான வற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்திற்கும், தமது மானம், மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுவதிலிருந்து விலகி விடுகிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறாரோ அவர் வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சாிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லைகள் அவனால் தடை செய்யப்பட்டவைகளாகும். எச்சாிக்கை! உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள் அதுதான் உள்ளம்" இதை நூஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாாி (52), முஸ்லிம்இன்னொரு நபிமொழி ஆயிஷா (ரலி) அறிவிக்கின்ற பின்வரும் நபிமொழியாகும். 'எவரொருவர் நம்முடைய இந்த விவகாரத்தில் (அதாவது இஸ்லாத்தில்), அதனைச் சார்ந்திராத ஏதாவது ஒன்றைப் புகுத்துவாரேயானால், அது நிராகாிக்கப்படும்." ஆதாரம்: புகாாி (2697), முஸ்லிம், அபூதாவூத், இப்னு . மாஜாஅதாவது 'பித்அத்" (நூதனச் செயலை) ஒருவர் கடைப்பிடிப்பாரேயானால், அவருக்கு மறுமையில் எவ்வித நற்பேறும் கிடைக்கப்போவதில்லை.இமாம் அபூதாவூத் அவர்கள் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளார்கள். 'இறைத்தூதாின் 500000 ஹதீஸ்களை நான் தொகுத்தேன். இதில் எனது நூலுக்கு (சுனன் அபூதாவூதிற்கு) 4800 ஹதீஸ்களை மட்டுமே தேர்ந்தெடுத்தேன். இதில் ஒருமனிதர் தனது மார்க்கத்தைப் பேண நான்கு நபிமொழிகளே போதுமானதாகும்."அவற்றில்,முதலாவது:-'எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன...." என்ற இறைத்தூதாின் பொன்மொழி.இரண்டாவது:-'தனக்குத் தொடர்பில்லாத விஷயங்களை விட்டு விடுவது நல்ல முஸ்லிமாக விளங்குவதின் ஒரு பகுதியாகும்" அறிவிப்பவர்கள்: அலி (ரலி) அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத்மூன்றாவது:-'தனக்கென எதனை விரும்புகின்றானோ அதனைத் தனது சகோதரனுக்கு விரும்பாத வரை உங்களில் யாரும் உண்மையில் நம்பிக்கையாளர் இல்லை" அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதாரம்: புஹாாி (13), முஸ்லிம், இப்னு மாஜாநான்காவது:-'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவை..." என்று தொடங்கும் நுஃமான் பின் பஷீர் அறிவக்கும் நபிமொழியாகும். நாம் மேற்கோள் காட்டியுள்ளவற்றிலிருந்து எண்ணங்களைப் பற்றிய நபிமொழிகள் இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்.

Saturday, April 18, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?ரியா என்றால் என்ன?தொடர் 2

'ரியா" என்ற அரபிச் சொல், 'ரஆ" எனற வேர்ச் சொல்லிருந்து வருகின்றது. 'ரஆ" என்றால் 'பார்த்தான்", 'கவனித்தான்" என்று பொருள். 'ரியா" என்பதற்கு பகட்டுத்தனம், பாசாங்கு செய்தல், பாவனை, முகஸ்துதி, நயவஞ்சகம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.மனிதர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் அல்லது மனிதர்களின் பாராட்டுக்களைப் பெறும் நோக்கில் அல்லாஹ்வை வணங்குவது அல்லது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் செயல்களில் ஈடுபடுவது என்பதே ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் 'ரியா" எனப்படுகின்றது.

இத்தகைய செயல்களைத் தூண்டும் எண்ணம் முற்றிலும் தூய்மையற்றதாக இருக்கலாம். அதாவது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற வேண்டுமென்ற எண்ணம் சிறு துளி கூட இல்லாமல், மனிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டும் அச்செயலில் ஒரு மனிதர் ஈடுபட்டிருக்கலாம்: அல்லது அவரது எண்ணத்தின் ஒரு பகுதி மட்டும் தூய்மையானதாக இருக்கலாம். அதாவது அச்செயலில் ஈடுபடும் போது அவரது எண்ணத்தில் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பது ஒரு பகுதியாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் பாராட்டுதல்களைப் பெற வேண்டும் என்பது அவரது எண்ணத்தின் இன்னொரு பகுதியாகவும் இருக்கலாம்.

'ரியா" என்பது குறித்த இந்த விளக்கத்தை நாம் கவனிக்கும் போது, 'ரியா" உள்ளத்தில் இருந்து தோன்றுகின்றது என்பதைப் பூிந்து கொள்ளலாம். ஈமான் (நம்பிக்கை) என்பது உள்ளத்தின் செயற்பாடுகளும் (அதாவது, அச்சம், அன்பு, நம்பிக்கை, எதிர்பார்ப்பு) நாவின் வெளிப்பாடுகளும் (அதாவது, கலிமாவைச் சொல்வது) கால், கைகளின் செயற்பாடுகளும் (அதாவது தொழுகை, ஹஜ்) உள்ளடங்கியதாக உள்ளது.

'உள்ளத்தின் வெளிப்பாடுகள், அடிப்படை நம்பிக்கையின் ஒரு பகுதியாக விளங்குகின்றது. அல்லாஹ் மற்றும் அவனது தூதர் மீதான நேசம், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை, அல்லாஹ்விற்காக மார்க்க விஷயத்தில் நேர்மையாக இருத்தல், அல்லாஹ்விற்கு நன்றிக் கடன்பட்டிருப்பது, அல்லாஹ்வின் நாட்டம் குறித்து பொறுமையாக இருப்பது, அல்லாஹ்வின் பால் அச்சம்... ஆகிய இந்தச் செயற்பாடுகள் அனைத்தும், எல்லா படைப்பினங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளதாக அனைத்து அறிஞர்களும் ஒருமித்தக் கருத்துக் கொண்டுள்ளார்கள்." (மஜ்மு அல் பத்தாவா பகுதி 10, பக்கம் : 5) என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்.

இப்னு கையூம் அல் ஜவ்ஸீ இவ்வாறு சொல்கிறார்கள்:
'உள்ளத்தின் செயற்பாடுகள் தான் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது. உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் இவற்றைப் பின்பற்றி நம்பிக்கையை நிறைவுபடுத்துகின்றன. நோக்கம் ஆத்மா போன்றும், செயல்கள் உடல் போன்றும் அமைந்துள்ளன. ஆத்மா உடலை விட்டுப் பிாிந்தால், உடல் செத்து விடுகின்றது. எனவே உள்ளத்தின் செயற்பாடு பற்றிய அறிவு, உடல் உறுப்புகளின் செயற்பாடு பற்றிய அறிவை விட முக்கியமானதாகும். இல்லையெனில் உள்ளத்தின் செயற்பாட்டைத் தவிர வேறு எதைக் கொண்டு ஒரு நம்பிக்கையாளரை, நயவஞ்சகாிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலும்? உடல் உறுப்புகளின் வணக்கம் மற்றும் சமர்ப்பணத்தை விட உள்ளத்தின் வணக்கமும், சமர்ப்பணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், உள்ளத்தின் வணக்கம் தொடர்ச்சியானது, ஒவ்வொரு சந்தப்பத்திலும் உள்ளம் வழிபாடு செய்வது அவசியமாகும்."

Friday, April 10, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?இதயத்திலிருந்து இந்த நோயை விரட்ட சரியான வழி எது?தொடர் 1

திருக்குர்ஆன் வாயிலாக எல்லாம் வல்ல அல்லாஹ் மனித குலத்திற்கு பின்வரும் கட்டளையைப் பிறப்பிக்கிறான்.

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே கருதுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
(திருக்குர்ஆன் 35:6)

ஷைத்தான் சொல்வதாக அல்லாஹ் மேலும் கூறுகிறான்,
'நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன். பின்னர் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்" (திருக்குர்ஆன் 7:16,17)

மேலும் ஒரு வசனத்தில் ஷைத்தானால் வழிகெடுக்க முடியாத மனிதர்கள் விஷயத்தில் ஷைத்தானின் பலவீனத்தை அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கி காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அனைவரையும் வழி கெடுப்பேன். (திருக்குர்ஆன் 15:39,40)

நாம் படைக்கப்பட்டத்தின் நோக்கம் அல்லாஹ்வை மட்டுமே வழிபட வேண்டும் என்பதாகும். ஆனால், இந்த நல்லெண்ணத்தை மாற்றி, நமது நற்செயல்களைப் பாழ்படுத்துவது ஷைத்தானின் வழிமுறைகளில் ஒன்றாகும். நமது எண்ணங்களில் தவறான சிந்தனைகளைப் புகுத்தி, நமது வழிபாட்டின் நோக்கங்களை ஷைத்தான் மாற்றி விடுகிறான். இதன் விளைவாக நாம், படைத்த இறைவனின் திருப்தியையும், பாராட்டுதலையும் பெற முயற்சி செய்யாமல், படைக்கப்பட்ட மனிதர்களின் பாராட்டுதல்களைப் பெற முயற்சிக்கின்றோம். இதுதான் 'ரியா' எனப்படும்.

எனது உள்ளத்தில் இந்த நோய் இருப்பதை நான் கவனித்த போது, ஷைத்தானின் ஊசலாட்டங்கள் என்னை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நான் கவனித்த போது என்ன செய்வது என்று அறியாமல் நான் தத்தளித்தேன். ரியாவின் அபாயத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக நற்செயல்களைச் செய்வதை நான் நிறுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது நான் செய்யும் சிறிய நற்செயல்களைத் தொடர்ந்து கொண்டே, அந்தத் தீய செயலில் இருந்து என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டுமா? எனது இதயத்திலிருந்து இந்த நோயை விரட்ட சரியான வழி எது?

திருக்குர்ஆன் மற்றும் திருநபிமொழியின் பால் நான் திரும்பி இந்த நோயைப் பற்றிய தகவல்களைத் தேடினேன். இந்த நோய் எத்தகையது? இது வருவதற்கான காரணம் என்ன? இதன் அறிகுறிகள் யாவை? இதனைக் குணப்படுத்துவது எப்படி? இதனைத் தடுப்பது யாவை? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடினேன்.

அல்ஹம்துல்லில்லாஹ்! நான் தேடிய விடைகளையெல்லாம் கண்டபோது நான் ஆச்சாியப்படவில்லை. ஏனெனில், குர்ஆனும், ஹதீஸும் நமது மார்க்கத்தின் மூலங்களாக விளங்குகின்றன. நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் அவற்றில் தான் இருக்கின்றன.

நான் அறிந்தவற்றைத் தொகுக்க வேண்டும் என்று எண்ணினேன். இதனை எனது சகோதர முஸ்லிம்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், மறுமையில் எனக்கு ஒரு நல்லறமாகவும் அல்லாஹ் ஆக்குவான் என்று எதிர்பார்த்து இதை உங்கள் முன் வைக்கிறேன்.

written by அபூ அம்மார் யாசிர் அல் காழி
translation by MHJ

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!