Saturday, December 12, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?சுவனம் செல்லத் தடை! தொடர் 15

மனிதர்களிடையே புகழடைவதற்காக நற்செயல்களைப் புரிவது, சுவனத்திற்குள் நுழைவதையும் தடை செய்யும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்...

'அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்." நூல்: அபூதாவூத், இப்னு மாஜா

இங்கு குறிப்பிட்டுள்ள அறிவு இஸ்லாத்தைப் பற்றியது ஆகும். இந்த அறிவை அல்லாஹ்விற்காக மட்டுமே ஒருவர் பெற வேண்டும் நமது மார்க்கத்தைப் பற்றி நாம் கற்க வேண்டுமென்பது அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு விடுத்துள்ள கட்டளையாகும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...

'அறிஞர்களுடன் போட்டி போட வேண்டும் என்பதற்காக அறிவைப் பெறாதீர்கள். இதே போல் சாதாரண பாமரனுடன் விவாதம் செய்வதற்காகவும், கூட்டங்களைக் கவருவதற்காகவும், கவர்ச்சியாக்குவதற்காகவும் அறிவைப் பெறாதீர்கள். எவரொருவர் இதனைச் செய்கிறாரோ அவர் நெருப்பிற்காக காத்திருக்கட்டும்." நூல்: சஹீஹ் சுனன் இப்னு மாஜா

நம் அனைவருக்கும் இது ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். மக்களைக கவர்வதற்காக நாம் மார்க்கத்தைப் பற்றிய அறிவை தேடக் கூடியவர்களாக ஆகிவிடக் கூடாது. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் ஒரே நோக்கத்திற்காக மட்டும் நாம் அறிவைத் தேட வேண்டும்.

ரியாவைக் கடைப்பிடிக்கும் ஒருவர் நிரந்தரமாக நரக நெருப்பில் கிடத்தப்பட மாட்டார் என்பதில் இஸ்லாமிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஏனெனில் ரியா ஒரு மனிதரை இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றுவதில்லை. ஒரு மனிதனின் உள்ளத்தில் சிறிதளவு தவ்ஹீது இருப்பினும், அவர் நரக நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். அல்லாஹ் நாடினால், 'ரியா'"விற்காக ஒருவரை மன்னித்து, எவ்விதத் தண்டனையும் அவருக்கு அளிக்காமல் இருக்கலாம்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!