Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Thursday, August 20, 2015

இரவில் ஒலித்த அழுகுரல்

வழிப்போக்கர்களைச் சுமந்துகொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று மதீனாவுக்கு வந்தது. அந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள். இதனை ஜனாதிபதி உமர் கண்டார். வழிப்போக்கர்களான அந்தப் பயணிகளுக்கு உதவ விரும்பினார். தமது நண்பரான நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபுடன் சேர்ந்து இரவு முழுவதும் அந்தக் குழுவினருக்குக் காவலராய் நின்றார். 

பின்னிரவு நேரத் தொழுகையான ‘தஹஜ்ஜுத்’-ஐ இருவருமாய் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. 

ஜனாதிபதி உமர் கூட்டத்தினரை நெருங்கி குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது நேரம் கழிந்தது. மீண்டும் அதே இடத்திலிருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. 

ஜனாதிபதி உமர் குழந்தையின் தாயிடம் விரைந்து சென்றார். “அம்மா! இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அழாமல் கவனித்துக் கொள்ளுங்கள்!” என்றார். 

கொஞ்சம் நேரம்கூட ஆகியிராது. மீண்டும் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
ஜனாதிபதி குழந்தையின் தாயிடம் சென்று குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார். இப்படி மூன்று முறை நடந்தது. 

கடைசியாக, குழந்தை அழும் குரல் கேட்டு தாயாரிடம் சென்ற ஜனாதிபதி உமர், “அம்மா! நீங்கள் இரக்கமுள்ள ஒரு தாயாக ஏன் நடந்துகொள்ள மறுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இந்தக் குழந்தை இரவு முழுவதும் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது!” என்றார்.
தன்னிடம் பேசிக்கொண்டிருப்பது ஜனாதிபதி என்று தெரியாமல் அந்தத் தாய் சொன்னாள்: 

“இறைவனின் அருள் உங்கள் மீது பொழிவதாக! இரவு பல முறை நீங்கள் தேவையில்லாமல் எனக்கு அறிவுரை என்ற பெயரில் வந்து தொந்தரவு செய்துவிட்டீர்கள். இந்தக் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை மறக்கடிக்க முயன்றுவருகிறேன். இந்தக் குழந்தையும் தாய்ப்பால் குடிப்பதை விட மாட்டேன் என்கிறது! நான் என்ன செய்ய?” என்று சலித்துக் கொண்டாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஜனாதிபதி உமர், “அம்மா, குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால்குடி மறக்கடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?” என்று கேட்டார். 

“காரணமில்லாமல் செய்ய நான் கல்நெஞ்சம் கொண்டவளா? எங்கள் ஜனாதிபதி உமர் அவர்கள் பால்குடி நிறுத்திய குழந்தைகளுக்குத்தான் பைத்துல்மாலிலிருந்து (அரசு பொது நிதியகம்) நிதி உதவி செய்கிறார்கள்!”
“சரி.. இந்த குழந்தைக்கு வயதென்ன?” 

“குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகின்றன!” 

“குழந்தையைப் பால்குடி மறக்கடிக்க அவசரம் காட்ட வேண்டாமம்மா!” என்று சொல்லிவிட்டு ஜனாதிபதி உமர் அங்கிருந்து சென்றார். 

அதிகாலைத் தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி உமருக்கு இரவில் நடந்த சம்பவம் நினைவில் வர, தொழுகையின் நடுவிலேயே அழ ஆரம்பித்தார். மேற்கொண்டு திருக்குர்ஆன் வசனங்களை ஓத முடியாமல் நா தழுதழுத்தது. ஒருவழியாகத் தொழுகையை நடத்திவிட்டு முடிவில் சொன்னார்: 

“உமர் அழிந்தான்! அவன் பச்சிளம் குழந்தைகளைக் கொன்று விட்டான்!”
அத்தோடு நில்லாமல் தமது ஆட்சிக்குட்பட்ட எல்லா பகுதிகளுக்கும் உடனடி ஆணையைப் பிறப்பித்தார். 

“குழந்தைகளுக்கான நிதி உதவி பெறும் பொருட்டு எந்தத் தாயும் குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால் குடியை நிறுத்தக் கூடாது! இனி, பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் அரசின் நிதி உதவி கட்டாயம் உண்டு!” 


 இஸ்லாம் வாழ்வியல்: இரவில் ஒலித்த அழுகுரல்
இக்வான் அமீர் 

 http://tamil.thehindu.com/society/spirituality/
 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!