Friday, October 21, 2011

40 ஆண்டுகளுக்குப்பின் முஸ்லிம் லீக் அபாரம்,கூட்டணியின்றி சீட்டுக்களை அள்ளியது


நாற்பது ஆண்டுகளுக்கு பின், 393 இடங்களில் தனித்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பத்து மாநகராட்சிகளில் ஒரு கவுன்சிலர் பதவியை கூட கைப்பற்றவில்லை.

 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. சென்னை உள்ளிட்ட பத்து மாநகராட்சிகளின் கவுன்சிலர் பதவிக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சில மாநகராட்சிகளில் அக்கட்சி இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. மதியம் 4 மணி நிலவரப்படி, 10 மாநகராட்சிகளில் ஒரு கவுன்சிலர் பதவியைக் கூட அக்கட்சி கைப்பற்றவில்லை. 

ஆனால், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் கவுன்சிலர் பதவிகளை அக்கட்சி கணிசமாக கைப்பற்றியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், வழுத்தூர் ஊராட்சியின் தலைவர், கடையநல்லூர் நகராட்சியில் ஆறு கவுன்சிலர்கள், ஆம்பூர் நகராட்சியில் நான்கு கவுன்சிலர்கள், புளியங்குடி நகராட்சியில் இரண்டு கவுன்சிலர்கள், தென்காசி நகராட்சியில் ஒரு கவுன்சிலர், நாகப்பட்டினம் நகராட்சியில் ஒரு கவுன்சிலர், குடியாத்தம் நகராட்சியில் ஒரு கவுன்சிலர், குளச்சல் நகராட்சியில் ஒரு கவுன்சிலர், பேரணாம்பட் நகராட்சியில் இரண்டு கவுன்சிலர்கள் என 19 நகராட்சி கவுன்சிலர்கள், நேற்று மாலை 4 மணி நிலவரத்தின்படி வெற்றி பெற்றனர். திருநெல்வேலி மாவட்டம், வல்லம் ஊராட்சி தலைவராக திவான் ஒளி, கரூர் மாவட்டம், தேவர்மலை ஊராட்சி தலைவர் அப்துல்மஜித் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 30 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

வாணியம்பாடி நகராட்சி தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., வுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளூர் கூட்டணி வைத்ததில், நகராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது. கடையநல்லூர் நகராட்சி தலைவர் தேர்தலில், தி.மு.க., வுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளூர் கூட்டணி வைத்ததில், நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியுள்ளது. 

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் அபுபக்கர் கூறும்போது,""கடந்த 1971ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். இந்த உள்ளாட்சி தேர்தலில் சாய்வு நாற்காலி, தென்னை மரம் ஆகிய சின்னங்களில் தனித்து போட்டியிட்டதில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!