Showing posts with label பகுத்தறிவு. Show all posts
Showing posts with label பகுத்தறிவு. Show all posts

Friday, September 16, 2011

பகுத்தறிவாளர்களின் கடவுள்..!


                                    ஓரிறையின் நற்பெயரால்.,
                 தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாக பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வை பிறர் விரும்பினால் உண்மையென ஏற்கவும் அல்லது பொய்யென மறுக்கவும் செய்யலாம்.,


         "கடவுள்" - என்ற நிலையை இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் யாவும் மேற்கண்ட நிலைப்பாட்டிலேயே வைத்து காண்கிறது.,ஆகவேதான் கடவுள் குறித்த விமர்சனங்களுக்கு அங்கு பதில் தருவதில்லை என்பதைவிட பதில் இல்லையென அறிந்து கடவுள் மறுப்புக்கு பலர் ஆளாகின்றனர். ஆக கடவுள் மறுப்புக்கு இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களின் தவறான கடவுள் சார்ந்த கோட்பாடே பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது.ஆக இஸ்லாம் கூறும் கடவுள் குறித்த வரைவிலக்கணம் பகுத்தறிவிற்கு பொருத்தமானதா? என்பதை பார்க்கும் முன் கடவுளை மறுக்கும் நாத்திக சிந்தனை பகுத்தறிவிற்கு உகந்ததா... பார்ப்போம்.


  நாத்திகம் -
        பொதுவாக ஒருவரின் நாத்திக சிந்தனைக்கு அடிப்படைக்காரணம் தேடுதலில் விருப்பங்கொண்ட அவரின் சுய அறிவு. அது பாராட்டத்தக்கதே..! எனினும்., அவ்வறிவால் தம்மை சுற்றி நடைபெறும் கடவுள் பெயரால் அரங்கேறும் போலி வழிபாடுகளும், அனாச்சாரங்களும், அறிவிற்கு பொருந்தாத மூட பழக்க வழக்கங்களும், மிக முக்கியமாக கடவுள் பெயரால் நடைபெறும் சமூக புறக்கணிப்பும் தான் ஒருவரது கடவுள் மறுப்புகொள்கைக்கு மிக முக்கிய காரணியாகிறது.. இன்னும் சற்று ஆழமாக அதன் வெளிபாட்டை இஸ்லாத்திலும் காண்பிக்க குர்-ஆன் மற்றும் ஹதிஸ்களுக்கு தவறான புரிதலோடு தங்களின் சுய விளக்கத்தை அளித்து கடவுள் மறுப்புக்கு மேலும் மெருகேற்றுகிறார்கள் எனினும் அதற்கு நமது (இணைய) சகோதரங்கள் பலரால் தெளிவாக மறுப்பும் விளக்கமும் தரப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!


       இங்கு கவனிக்கத்தக்க ஒரு விசயம் .. கடவுளை மறுக்க கடவுள் பெயரால் ஏற்படும் தவறுகளை முன்னிருத்தி மட்டுமே கடவுள் மறுப்புக்கு சான்று தரப்படுகிறது. மாறாக நேரடியாக கடவுள் இல்லையென மறுக்க தெளிவான காரணம் இல்லை.,


   "பரிணாமம்" அறிவியல் ரீதியாக கடவுள் மறுப்புக்கு மாபெரும் ஆயுதமாக கொண்டாலும் அஃது அதுவும் பயனற்று தான் போகும். ஏனெனில் இதுவரை நிகழ்வுற்ற பரிணாம கோட்பாடுகளை ஒருவேளை உண்மையென நம்பினாலும் (?) கூட "ஏற்பட்ட உயிரின மாற்றத்தை பற்றித்தான் பரிணாமம் பேசுகிறதே தவிர அஃது உயிரினங்கள் ஏன் மாற்றமடைந்தன என்பதற்கு தகுந்த சான்றின்றி இன்னும் கேள்விக்குறியோடு தான் ஆய்வை தொடர்வதாக அறிவியலார் பதில் தருகின்றனர்.


        ஆக அறிவியல் ரீதியான கடவுளை மறுக்க பரிணாமம் துணைக்கு வராது., சுருங்கக்கூறினால் "எதுவுமல்லாத சூன்யத்திலுருந்து ஒரு உயிரை அறிவியலார் உண்டாக்கினால் மட்டுமே விஞ்ஞானத்தால் கடவுள் இல்லை என்பதை ஆணித்தரமாக மறுக்க முடியும். அதுவரை கடவுளை மறுக்க தர்க்கரீதியான வழிகளை தான் தேட வேண்டும். எனினும் பகுத்தறிவு பார்வையில் அதுவும் சாத்தியமா என்றால்... இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..


 எந்த ஒன்றை மறுப்பதும், ஏற்பதும் அவரவர் உரிமை., அதே நேரத்தில் பொதுவில் அறுதியிட்டு கூறும் தம் வாதத்தை மெய்பிப்பதாக இருந்தால் அதற்கான சான்றுகளை தருவது அவரது கடமையாகும்., இதுவே ஒரு செயல், ஒரு தன்மை அல்லது ஒரு நிகழ்வை உண்மைப்படுத்தலின் வரைவிலக்கணம் ஆகும்.


     இதனடிப்படையில் கடவுள் குறித்த நிகழ்வை பொதுவில் நிறுத்தி ஏற்பதாக இருந்தாலும் அல்லது மறுப்பதாக இருந்தாலும் அதற்கான வரைவிலக்கணம் தெளிவாக முன்னிருத்தப்பட வேண்டும். அஃதில்லாமல் கூறும் வாதங்கள் நம்பிக்கை சார்ந்த அளவில் மட்டுமே பார்க்கப்படும். இந்நேரத்தில் கடவுள் குறித்த வரைவிலக்கணம் குறித்துப்பார்க்கும்போது சகோ ஜாகிர் நாயக் அவர்களின் அழகிய எளிய உதாரணத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்.,


    என் கையில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு இது ஒரு புத்தகம் என்று நான் கூறினால் இதனை மறுப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு பேனாவை பற்றி அறிந்திருக்க வேண்டும் அஃது பேனாவை பற்றி தெரியாவிட்டாலும் புத்தகத்தைப்பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.அப்போது தான் நான் கையில் வைத்திருப்பது புத்தகம் இல்லை என கூற இயலும்., என அவர் கூறினார்.,


    மேற்கண்ட கேள்வி எதிர் மறையாக இருப்பதால் விடைக்கான இருப்பொருட்களில் ஒன்றை மட்டும் நாம் அறிந்திருந்தாலே போதுமானது மற்றொரு பொருள் குறித்து அறியாமாலிருந்தாலும் நமது நிலைப்பாட்டை உண்மையாக்கலாம். இப்படிதான் மேற்கண்ட நாத்திக சிந்தனை கடவுளுக்கான கேள்விக்கு எதிர்மறை விளக்கத்தை கையாளுகிறது.


   ஆனால் இதே கேள்வி நேர்மறையாக கேட்கப்பட்டால்..!
             என் கையில் ஒரு பொருளை வைத்து கொண்டு. அதை பிறர் முன்னிலையில் காட்டி இது பேனா என்கிறேன். இதை மறுப்பதாக ஒருவர் இருந்தால் மற்ற எல்லா பொருட்களின் வரைவிலக்கணம் குறித்து தெரிந்திருந்தாலும் அஃது இக்கேள்விக்கு பதில் அவரால் சொல்ல முடியாது. மாறாக பேனாவின் வரைவிலக்கணம் தெரிந்திருந்தால் மட்டுமே உண்மையான பதில் தருவது சாத்தியம். 


     ஆக இந்த உதாரணத்தை மேற்கோளாக கொண்டு கடவுள் குறித்த வரைவிலக்கணத்தோடு ஒப்புநோக்கும் போது கடவுளை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருந்தால் அவருக்கு கடவுள் குறித்த வரைவிலக்கணம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் அப்போது மட்டுமே இக்கேள்விக்கு உண்மையான பதில் தர இயலும்.


 மிக தெளிவாக - எளிதாக இஸ்லாம் 
  • (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.  (112:1)
  • அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.  (112:2)
  • அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.  (112:3)
  • அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  (112:4)
         
              இப்படி குர்-ஆனில் கடவுளுக்கு வரைவிலக்கணம் தருகிறது. இவ்வரிகளை நம்பிக்கை என்ற அளவுகோலையும் தாண்டி மனித அறிவு ஏற்றுக்கொள்ளும் வாதமாகவும், அதே நேரத்தில் மனித எண்ணங்களால் வரையறுக்க இயலாத ஓர் உயரிய சக்திக்கு பொருந்தும் படியான முறையான செய்கைகளும் இருப்பதால் மேற்கண்ட வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்வதில் பகுத்தறிவாளர்களுக்கு எந்த வித ஆட்சபனையுமில்லை.,
           
          ஆக கடவுளுக்கான ஓர் உயரிய வரைவிலக்கணத்தை முன்னிருத்த்தி இது உண்மையானது என குர்-ஆன் கூறும் போது அஃது மேற்கண்ட கோட்பாட்டை பொய்யென மறுப்பதாக இருந்தால் அவ்வாறு தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்மையான வரைவிலக்கணம் நாத்திக சிந்தனையாளர்கள் தர வேண்டும். ஆனால் இன்று வரை தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்டான வரைவிலக்கணத்தை நாத்திக சிந்தனை தரவே இல்லை. இது ஆச்சரியமான விஷயமும் கூட...


           ஏனெனில் கடவுள் குறித்த நிலைப்பாட்டை ஏனைய மதங்கள் நம்பிக்கைச்சார்ந்த விசயமாக அணுகி கொண்டிருக்க... இஸ்லாம் மட்டுமே எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் என கடவுள் குறித்து ஒரு தெளிவான வரைவிலக்கணம் ஏற்படுத்தி தந்திருக்கிறது எனும்போது எதையும் நம்பிக்கை கடந்து பகுத்தறிவு கண் கொண்டு ஆராயும் நாத்திகம் கடவுள் இல்லை என்பதை நிருபிக்க எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்கமுடியாது அஃது ஏன் கடவுளாக இருக்க முடியாது என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் நாத்திகம் உண்டான நாள் முதலே இயற்றி இருக்கவேண்டுமல்லவா..? இதுவரைக்கும் அஃது வரைவிலக்கணம் ஏற்படுத்தாதது மிகப்பெரிய கேள்விக்குறியே..! அஃது இனி ஏற்படுத்த முனைந்தாலும் மதங்கள் வணங்கும் போலி கடவுளர்களை தான் இவர்கள் இனங்காட்ட முடியும்


       அஃது அத்தகைய போலி கடவுளர்களை மறுப்பதற்கு பெயர் தான் நாத்திக சிந்தனையென்றால்... நாங்களும் அத்தகைய போலி கடவுளர்களை இல்லை என்று தான் சொல்வோம்.


       பகுத்தறிவு விதையில் மலர்ந்தது நாத்திகப்பூவென்றால் இனிமேலாவது நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு ஒரு வரைவிலக்கணம் தரட்டும். அதுவரை கடவுள் மறுப்பாளர்கள் என தங்களை சொல்ல வேண்டாம் வேண்டுமானால் கடவுள் எதிர்ப்பாளர்கள் என்று- அதுவும் மதங்கள் சமைத்த போலி கடவுள்களின் எதிர்ப்பாளர்கள் என்று தங்களை சமூகங்களில் அடையாளப்படுத்தட்டும்.,. உங்களின் அறிவு சிந்தனைக்கு ஆணவ திரையிட வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம் நாத்திக சகோதரங்களே...


                                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன் 

Sunday, December 5, 2010

விதி! மாற்றமா -ஏமாற்றமா?

                                           ஓரிறையின் நற்பெயரால்
           அனைத்தும் விதிப்படி தான் நடக்கிறது என்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்புதாரி கடவுளே எனவே நாம் செய்யும் தவறும் இறைவனின் விதிப்படி தானே நடக்கிறது பிறகேன் அதற்கான தண்டனையை  கடவுள் நமக்கு வழங்க வேண்டும் .. நியாயமாக தெரியும் இக்கேள்விக்குள் அனேக சுயநலங்கள் அநியாயமாய் பகுத்தறிவு போர்வை போர்த்திருக்கின்றன.,
இப்னு மாஜா ஹதிஸ் நூலிலிருந்து
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் வாயிலாக
"உங்களுக்கு முன்னால் உள்ள சமுகங்கள் அழிந்தது விதியே குறித்து அதிகம் தர்க்கம் செய்த காரணத்தினாலே....!"
  என்ற மாநபி கூற்றுகிணங்க விதி குறித்து மேலதிக தர்க்கம் செய்யாமல் மாமறை வரிகளுக்கு உட்பட்டு இங்கு காண்போம்.
                                                                                    
     பொதுவாக அனைத்து செயல்களும் இறைவனின் நாட்டப்படித்தான் நடக்கிறதென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இங்கு விதி குறித்த இக்கருத்து அல்லாஹ்வின் பேராற்றலை பிரதிபலிக்கும் வல்லமையின் வெளிபாடாக சொல்லப்படுகிறது அதாவது இப்பூவியில் இருக்கும் எந்த ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளும் அவன் அறியாமல் நடந்தேறாது.
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்." 3:29
     எனினும் தர்க்கரீதியாக விதிக்கு கடவுளை காரணம் காட்டி தமது தீய செயலுக்கு நியாயம் கற்பிப்பது பொருத்தமான வாதமா?
   அல்லாஹ் மனித இனத்திற்கு ஏனைய படைப்புகளை போலல்லாமல் எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுத்ததும் திறனுடன் படைத்திருக்கிறான். ஆக எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவன் தனது சிந்தனைக்கு உட்பட்டு இது தவறு இது சரி என தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும். இன்று விதியின் மேல் பழிபோடும் ஒரு இறை நிராகரிப்பாளர் இறைவன் நாடியதால் தான் நான் இறை நிராகரிப்பாளான இருக்கிறேன் என்று கூறுவாரேயானால் அது அவர் இறை குறித்து தனது சிந்தனையை ஆராய முற்படாததே தவிர இறைவன் காரணமல்ல ஏனெனில் அஃது அவரது வீட்டில் திருட்டோ அல்லது அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டாலோ இதுவும் இறைவன் நாட்டப்படி (விதிப்படி) தான் நடக்கிறது என்று சும்மா உட்கார மாட்டார் அதை தொடர்ந்த ஆயத்த பணிகளை செய்து தான் தீருவார்,  அஃதில்லாமல் தமது வாழ்வாதார  தேவைக்கும், அதிகப்படியான பொருளாதார தேவைக்கும் நாமே முயன்று தேடித்தேடி நல்லவற்றை பெற முயலும் ஒருவர் இறைக்குறித்தும் அவனது போதனை குறித்தும் அறிய முற்படாமல் அவனது நாட்டத்தால் தானே நான் இறைவன் குறித்து அறியாமல் இருக்கிறேன் என்று கூறுவது அறிவுடைய வாதமா?
   இறுதியாக, அனைத்து நிலைகளிலும் இறைவன் தான் மக்களின் அனைத்து காரியங்களுக்கும் முழு முதற் பொறுப்பு என்று கூறி தீமையான செயல்களுக்கு விதி மூல(லா)ம் பூச முற்பட்டால் அதே இறைவன் தான் மனிதர்கள் எல்லா நிலையிலும் நல்லனவற்றை பின்பற்றி வாழ அந்தந்த கால கட்டத்தில் இறைத்தூதர்களை மக்கள் மத்தியில் அனுப்பியும் வைத்தான். அவர்களை பின்பற்ற வேண்டியதும் இறைவனின் நாட்டம் தானே அவர்களை பின்பற்ற தவறியது ஏனோ...? நாத்திகம் வளர்க்கும் பகுத்தறிவின் பதில் என்ன?
ஏனெனில் வேத வரிகள் மனித மனங்களைப்பற்றி கூறும் போது
எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.9:115


    முடிவுற்ற ஒரு செயல் நமக்கு பாதகமாக அமைந்தாலோ அல்லது நன்கு முயற்சித்து மேற்கொண்ட ஒரு செயலின் விளைவு தோல்வியில் முடிந்தாலோ அங்கே விதி என்னும் அளவுகோலை அல்லாஹ் பயன்படுத்த சொல்கிறான்., ஏனெனில் அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெறவும் நம்மை நாமே தாழ்வு மனப்பான்மையில் ஆளாக்கி கொள்ளமாலும் இருக்க செய்வதற்கே; அதுப்போல நாம் ஒரு திறன் மிக்க செயலை மேற்கொண்டு கிடைக்கும் புகழ், பொருள் மூலம் நாம் (அதிகம்) கர்வமடையாமல் இருக்கமுமே எல்லாம் இறை நாட்டமே எனும் விதி அங்கு அவசியமாகிறது.,
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. -57:23
    ஆக விதி என்பது இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு நாம் மேற்கொள்ளவேண்டியவைகளை தொடர்ந்து செயலாற்றி தான் வரவேண்டுமென்ற நிலையில் அமைந்ததே  தவிர மாறாக விதிப்படித்தான் எல்லாம் நடக்குமென்று எண்ணி வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமாறு எங்கேணும் இறைவன் கூறவில்லை
    ...மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. 53:39
                        
                                       அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Saturday, October 2, 2010

கடவுளில்லா உலகம்...?

                                                           ஓரிறையின் நற்பெயரால்...
கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை...?
 இன்று உலகில் கடவுளை ஏற்போர் \ மறுப்போர் உட்பட யாரும் கடவுளை நேரில் பார்த்ததில்லை.கடவுளை காணமுடியாதற்கு காரணம் குறித்துக்காணும்பொழுது இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று சொல்வதாக இருந்தால் அவர் மிகப்பெரிய ஒரு சக்தியாக தான் இருக்கமுடியும்.அவ்வாறு மிகப்பெரும் சக்தி மிகுந்த ஒன்றை அனைத்து படைப்புகளை விடவும் பலவிதமான பலஹீனங்களை தன்னுள் கொண்ட மனிதன் தனது கண்களால் பார்க்க வேண்டும் என நினைப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்? பார்த்து தான் கடவுளை நம்புவேன் என்பது சிந்திக்கக்கூடியவர் ஏற்றுக்கொள்ளும் சீரிய வாதமா? சர்வ வல்லமை படைத்த கடவுளை நம் சாதாரண கண்களால் பார்க்க முடியாது என எண்ணுவது அறிவுக்கு உகந்ததா..?

பொதுவாகவே ஒருவர் இறை மறுப்பாளாராக இருக்க இரண்டு அடிப்படை காரணங்களே உள்ளது ஏனெனில் நாத்திகனாக யாரும் உருவாவதில்லை., மாறாக உருவாக்க படுகிறார்கள் .,
<>தனக்கோ தன் குடும்ப,சமுக மக்களுக்கோ மதத்தின் பெயரால் நேரடியவோ,மறைமுகமாகவோ ஏற்படும் பாதிப்பின் விளைவே -கடவுள் மறுப்புக்கு அடிப்படை காரணம்.இதுவே நாத்திக உருவாக்கத்திற்கு முதற்காரணம்
<>நமக்கு ஒரு இக்கட்டான நேரத்தில் ஏற்படும் இல்லாமையோ,அல்லது கோபத்தின் அடிப்படையில் ஏற்படும் இயலாமையோ ஏனைய செயல்பாட்டின் மீது வெறுப்பு கொள்ள வழிவகுக்கிறது., அவ்வெறுப்பின் வெளிப்பாடு நமக்கு எது நமக்கு பலன் தரவில்லை என எண்ணுகிறோமோ அதன் மீது நிலைத்து விடுகிறது. அப்படித்தான், நாத்திகர்களுக்கு கடவுள் குறித்த கோட்பாட்டில் ஏற்பட்ட வெறுப்புகள்.,
மூன்றாவதாய் ஒரு காரணமொன்று இருக்குமேயானால் அது அவர்களின் "பிடிவாதமே" ஆக பாதிப்பு,வெறுப்பு மற்றும் பிடிவாதம் ஆகியவையே பிரதான காரணங்களாகும். கடவுள் மறுப்புக்கு இதை தாண்டி ஆயிரம் காரணங்கள் அவர்கள் மனதில் அடியாளாய் அணிவகுத்து நின்றாலும் இஸ்லாம் என்ற ஒற்றை சொல் குறித்து அவர்களை தெளிவாக அறிய செய்தால் போதும் கடவுள் இல்லை என்றுசொல்வோர்கள் சொல்வார்கள் அல்லாஹ்வை தவிர கடவுள் இல்லை என்று.,இன்று இஸ்லாத்தை நோக்கி வரும் ஏனையோர் அதற்கு சான்றாக உள்ளனர். அல்லாஹ் அத்தகையே நல்ல மக்களாக நம்மையும் ஆக்கட்டுமாக!
இன்று கடவுளை நிராகரிப்போர் அல்லது மறுப்போர் அவ்வாறு கடவுள் இல்லை என்று சொல்வதற்கு அறிவியல் ரீதியான காரணமென "பரிணாமவியல் கோட்பாட்டை" தாங்கிப்பிடித்து ஆதாரமாக காட்டுகின்றனர்.ஆனாலும் அதற்கான பதில்கள் மிக நேர்த்தியான முறையில் நம் சகோதர இணையங்களில் அறிவுப்பூர்வமாக தரப்படுகின்றன, மக்களுக்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கில்லாமல் படைப்புவாத கொள்கைக்கு மாற்றமாக நாம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இங்கு பரிணாமவியல் கோட்பாட்டை கையிலேடுத்திருக்கிறார்கள் ஏனெனில்,இதுவரை ஏற்பட்ட உயிரின வளர்ச்சிக்கு உண்டான காரணங்களை (அறிவியல் ரீதியாக (?) பதில் என்று) சொல்கிறார்களே தவிர ஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து தெளிவான பதில் அவர்களிடம் இன்னமும் இல்லை. மேலும் பரிணமாவியல் விஞ்ஞான அடிப்படையில் முழுக்க முழுக்க நிருப்பிக்கப்பட்ட நம்பகத் தன்மை வாய்ந்த ஓர் கோட்பாடல்ல என்பதை அக்கொள்கையே ஆதாரிப்பவர்கள் கூட வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்!
அடுத்து,அவர்கள் கடவுள் இல்லை என்பதை தர்க்க ரீதியாக நிருபிக்கிறோம் என குழம்பி ஸாரி,,, கிளம்பி இரு முக்கிய பதிவுகளை முன் வைக்கின்றனர்
1.கடவுள் பெயரால் மக்கள் மத்தியில் குழப்பங்கள்,கொலைகள் பயங்கரவாதங்கள் ஏற்படுகிறது
2.கடவுள் தன் படைப்பில் மக்களிடையே ஏன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த வேண்டும்
ஒன்று கடவுளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினை மற்றொன்று கடவுள் மக்களுக்கு ஏற்படுத்திய பிரச்சினை- அதுக்குறித்து இனி காண்போம்
கடவுள் பெயரால் மனிதர்களிடையே இனக்கலவரங்கள், சண்டைகள், கலகங்கள், தற்கொலைப்படை தாக்குதல்கள் நடைபெறுவது உண்மைதான்.ஆனால் இதற்கெல்லாம் காரணம் கடவுளா...? அல்லது தன் போக்கில் இச்சைகளை பின்பற்றும் மனித மனங்களா? மனிதன் தனது ஆசை,கோபம்,விரக்தி,பாதிப்பு,அதிகப்படியான தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வாழும் காலசூழலில் தனது எண்ணத்தை ஈடேற்றம் செய்ய நன்மை மற்றும் தீமையான காரியங்களை மேற்கொள்கிறான். அவ்வாறு பேராசை காரணமாக தீமையான காரியங்கள் மேற்கொள்ளப்படும் போது மடமைக்கொண்ட மக்களின் மூலம் மதத்தின் பெயரால் தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்கிறான்.தன் மார்க்கம் குறித்து போதிய அறிவற்ற அறிவிலிகளும் அவனுக்கு தூணை போகின்றனர். ஏனெனில் ஒருவன் மதப்பெயரால் மேற்கொள்ளும் அட்டுழியங்களுக்கு காரணம் தான் சார்ந்த சமுக இன மக்களால் தனக்கு பாதுக்காப்பு கிடைக்க வேண்டும் என்ற சுயநலமே தவிர மாறாக கடவுளோ.கடவுள் கோட்பாடுகளோ சொன்னதாக ஆதாரத்தை முன்னிறுத்தியல்ல.மேலும் சொல்லப்போனால் இஸ்லாம் இத்தகையே மனிதக்குல தாக்குதலை கண்டிப்பதோடு தனியானதொரு மனிதனுக்கு கூட துன்பம் விளைவிக்கக்கூடாது என்கிறது. அல்லாஹ் தன் திருமறையில் சட்டத்திட்டங்கள் குறித்துக்கூறும் பொழுது.,
இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (2:178&179)
மேலும் பார்க்க:17:33, 6:140, 4:92, 2:111&217

மேற்கூறிய திருவசனங்கள் தேவையில்லாமல் ஒருவனை கொலை செய்யக்கூடாது என்று சொல்வதோடு நின்றுவிடாமல்,அவ்வாறு ஒருவனை கொன்றால் அஃது அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் என்ற எச்சரிக்கையும் விடுக்கிறது. இதை விட தனி மனித பாதுக்காப்புக்கு ஓர் உயர் வரையறை அளவுகோலை யாராலும் நிர்ணையிக்க முடியுமா?
ஆக,மனிதன் தனது சுயநலத்தின் மூலம் ஆதாயம் பெற வேண்டும் என்ற அடிப்படையே எந்த ஒரு கொலைக்கும்,கொள்ளைக்கும்,ஏனைய கலவரங்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் காரணமே தவிர கடவுளோ.அவரது கோட்பாடுகளோ அல்ல, தன் மார்க்கம் கூறும் ஒரு செயல்பாடு குறித்த காரணத்தை சரிவர புரிந்துக்கொள்ளாததும் மதத்துவேசத்துக்கு ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.இதையும் தாண்டி தனி மனித உயிர் இழப்புக்கும் ஏனைய சமுக நல பாதிப்புக்களுக்கும் மதம் தான் காரணம் என உச்சாணி கொம்பில் ஒய்யரமாய் அமர்ந்து உச்சஸ்தாயில் உரக்க கத்துவோர் கீழ்காணும் கேள்விக்களுக்கு காரணம் சொல்லட்டும்...
<> ஒரே குடும்பத்தில் பிறந்து ஒன்றாய் வாழும் அண்ணன் தம்பிக்குள் வயல்வெளி,வாய்க்கால்,வரப்பு தகராறில் ஒருவரை ஒருவர் வெட்டிச்சாய்த்து கொள்கிறார்களே அதற்கு எந்த மதம் காரணம்...?
<>பூர்விக சொத்தை அடைவதில் தகப்பன்,மகனுக்கு இடையில் ஏற்படும் போட்டி பொறாமைகளில் ஏற்படும் உயிர் இழப்பிற்கு யாரின் மதம் காரணம்..?
<>அடுத்தவன் மனைவியே அடைவதற்கு அவளின் கணவனையே கொல்வதற்கு மேற்கொள்ளும் மட்டரகமான செயல்களுக்கு எவர்களின் மதம் காரணம்...?
<> உதாரணத்திற்கு தான் மேற்குறிப்பிட்ட செய்திகள் எல்லாம். இன்னும் எத்தனையோ மோசங்கள்,அசிங்கங்கள்,குற்றங்கள் ஆயிரமாயிரம் உள்ளன.இந்நிகழ்வுகள் யாவும் அங்கொன்றும்,இங்கொன்றுமாய் நடக்கவில்லை,மாறாக செய்திதாள்களிலும் ஏனைய ஊடங்கள் வாயிலாகவும் நாம் அன்றாடம் காணும் அவலங்கள் தான்! இதன் மூலம் தனி மனித கொடுமைகளுக்கும்,சமுக நல கெடுதிக்கும் காரணம் சுயநலம் என்பது தெளிவு.,
அடுத்து இரண்டாவது கேள்விக்கு வருவோம்,கடவுள் ஏன் ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களை படைத்தார் என பார்ப்பதற்கு முன்பு, ஒருவேளை உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் சம்மாய்,அதாவது அவர்கள் வாழ தேவையான வாழ்வாதார வசதிகளுடனும் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டதுப்போலவே உயரம்,நிறம்,பருமன், ஏனைய உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் மற்ற மனிதர்கள் யாவருக்கும் அதே அளவில் வழங்கப்பட்டால் தான் உலக மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லா நிலை ஏற்படும்.இப்படி ஒரு நிலையில் உலகம் இயங்குவதாக கொண்டால், உலகில் பொருளாதார விசயங்களில் யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் வராது சரிதான்.,ஆனால் அனைத்து ஆண்களும் ஒரே முகச்சாயலுடனும்.அதேப்போல அனைத்து பெண்களும் ஒரே முகச்சாயலுடனும் தான் இருப்பார்கள்.அப்படி இருந்தால்தான் கடவுள் மனிதர்கள் மத்தியில் அணு அளவிற்கு கூட ஏற்றத்தாழ்வை உண்டாக்கவில்லை என்று சொல்ல முடியும். கற்பனை செய்துப்பாருங்கள்... தாயிக்கும்,தாரத்திற்கும்,மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆண்களும், தந்தைக்கும்,கணவனுக்கும்.பிள்ளைக்கும்,வித்தியாசம் தெரியாமல் பெண்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள், பாதிப்படைவார்கள்.,இப்படிப்பட்ட நிலையில் உலகம் சமச்சீராய் இயங்குமா? ஆக உலகம் சீராய் இயங்குவதற்கு மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு வேண்டும் என்பதை கடவுள் மறுப்போர் கூட உடன்பட்டோ,முரண்பட்டோ ஏற்றுத்தான் ஆக வேண்டும் இல்லை...இல்லை.. உருவத்தில் வேண்டாம் உலகளவில் மட்டும் கடவுள் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க செய்யலாமே என பாதி சமச்சீர் நிலைக்கு பலத்த ஆதரவு தெரிவிப்போர் <a href="http://iraiadimai.blogspot.com/2010/06/blog-post_15.html">இங்கே</a> பார்வையிடவும்.பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்கள் மத்தியில் இருந்தால் தான் உலகில் அனைத்து செயல்களும் தொடர்ந்து இயங்க முடியும்.
சொல்லப்போனால் கடவுள் மறுப்போர் உலகம் இவ்வாறு ஏற்றத்தாழ்வுடன் இருப்பதற்கு காரணம் என்னவென்று சொல்ல முடியுமா...?உருவ மாறுப்பாட்டிற்கு வேண்டுமானால் வாழும் கால சூழல்,தட்ப வெப்ப நிலை காரணம் என்று பதில் சொல்லலாம். பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு என்ன காரணம் கூறுவார்கள்? ஏனெனில் ஒருசெல் உயிரி உட்பட அனைத்து உயிரினங்களும் தனக்கு உடல் மட்டும் ஏனைய செயல்களுக்கு தேவையானவைகளை தானாகவே பிறர் தயவின்றி பெறும் போது அனைத்து உயிரினத்தின் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டு உருவாகும் மனிதன் தனது அடிப்படை தேவைகளுக்கு கூட பிறரை சார்ந்து வாழ்வதேன்?
விடை தருமா கடவுளில்லா உலகம் செய்ய விரும்பும் பகுத்தறிவாளர்களின் (?) பரிணாம்...?

                                           அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Friday, September 24, 2010

நிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்..?

                                                     ஓரிறையின் நற்பெயரால்  
                   அன்றாட வாழ்வில் மனிதர்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு செயல்களிலும் இறைவனுக்கு பயந்து நன்மைகளை செய்து தீமைகளிலிருந்து தவிர்த்து வாழ்வதே இஸ்லாம் கூறும் இவ்வுலக வாழ்வின் அடிப்படை சாரம்சம்.மேலும் இறைவன் கூறிய இவ்வடிப்படையில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ளும் மனிதர்களுக்கு இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில் அதற்கான வெகுமதியாக அவனுக்கு சொர்க்கம் வழங்கப்படுகிறது.மாறாக மனிதன் தன் மன இச்சையின் படி செயல்பட்டு கடவுள் சொல்லுக்கு மாறுப்பட்டு சக மனிதனுக்கு துன்பம் விளைவிப்பானால் அவன் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வில் அதற்கு பகரமாக நரகமும் கொடுக்கப்படும்
பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். 23:16


எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. 4:14

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். 4:30

    மேற்குறிப்பிட்ட பத்தியே படித்ததும் தம் கடவாய் பல் தெரிய சிரிக்கும் போலி பகுத்தறிவாளர்கள் கீழ்காணும் பத்தியேயும் பார்வையிட்டு பின்பு தங்களது சிரிப்பை அதிகப்படுத்தட்டும்,கடவுள் இல்லாத உலகத்தை உருவாக்க முனைவோர்., மார்க்க போதனைகளை விட அழகிய முறையில் அமைந்த சட்டத்திட்டங்களை மனித சமுதாயம் முழுமைக்கும் வழங்க வேண்டும்.அதற்காக எந்த ஏற்பாடவது செய்தார்களா...?  "ஏற்கனவே நாடுக்கு நாடு பின்பற்றும் சட்ட வரையறைகளே மனித சமுகத்திற்கு போதுமானது புதிதாக யாரும் எதுவும் இயற்ற வேண்டாம்" என ஆறறின் உள் நின்று அறிவுமிக்க ஒரு பதிலை (?) தருவார்களேயானால் பின்னால் அணிவகுக்கும் கேள்விகளுக்கு பதில் தரட்டும் பரிணாமத்தின் வயிறு வளர்க்கும் பகுத்தறிவாளர்கள்
 முதலில் நாடுக்கு நாடு அதன் எல்லைக்குட்பட்டு தனக்கென தனியானதொரு சட்டம் இயற்றும்போதே மொத்த சமுதாயத்திற்கும் ஓரே மாதிரியாக தீர்ப்பு வழங்க முடியாது என்றாகி விடுகிறது., இவ்வாறு நாடுக்கு நாடு ஏற்படுத்தும் சட்ட வரையறைகளை வைத்து மனித குல முழுமைக்கும் பொது விதியே எப்படி இயற்றுவது...?
 சரி., ஒவ்வொரு நாட்டிலும் வாழும் அந்த மக்களின் கால சூழலுக்கேற்ப சட்டங்களை உருவாக்கிருந்தாலும் அதன் மூலமும் சட்டங்களை சம்மாக வழங்க முடியாது எப்படி...

  •   உதாரணத்திற்கு, ஒருவர் ஒரு கொலை செய்கிறார்., அவருக்கு அதிகப்பட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது., மற்றொருவர் ஒரு கொலையும் ஒரு கற்பழிப்பும் செய்கிறார் அவருக்கு அரசாங்கம் என்ன தண்டனை கொடுக்கும்? சரி அவருக்கும் அதே தண்டனையே வழங்குவதாக இருக்கட்டும் ஒருவர் பத்து கொலைகளும் பத்து கற்பழிப்பும் அத்தோடு வங்கி கொள்ளையும் செய்தவராக இருந்தால் ...என்ன பத்து முறை அவருக்கு தூக்கு தண்டனையா...?         
  •   கொலையும் கொள்ளையும் பல நாளாய் செய்து இறுதியில் காவல் துறையிடம் மாட்டும் போது தனது பண பலத்தால் அந்த நபர் வெளியே வருவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம் இதற்கு பெயர் தான் சரியான தண்டனையா..?
  •   அப்படியும் காவல் துறை சிறப்பாக நியாயமாக செயல்பட்டு அந்த குற்றவாளியே நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போது நீதிபதி சரியான மற்றும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்நிலையே குற்றவாளிக்கு சாதமாகி அவரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பெழுதினால் அதற்கு பெயர் நீதமான தீர்ப்பா...?
  •   அதுப்போலவே அப்பாவி ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கு எதிராக பொய் சாட்சியங்கள் புனையப்பட்டு நீதிபதியும் சாட்சியங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளியாக கருதப்பட்டு அவர் தூக்கு மேடைக்கு அனுப்பப்படுகிறாரே அங்கு என்ன செய்யும் மனித நீதி...?
  •  அதுப்போலவே திருடப்பட்ட பொருட்கள் குறித்து காவல் துறையிடம் புகார் செய்தும் அது திரும்ப கிடைக்கவில்லையென்றால்..அல்லது அவரது வாழ் நாள் முடிந்து கிடைக்கப்பெற்றால் அதனால் அவருக்கு என்ன பயன்...?
  • காப்பீடு மூலம் திரும்ப கிடைக்கப்பெறலாம் என யாரெனும் ஓரத்தில் நின்று மௌன குரல் கொடுத்தால் -அவ்வாறு காப்பீடு செய்யாதவர்களின் நிலை..?
  •  வங்கியிலிருந்தோ,யாரிடமோ கடனாக வாங்கிவரும் பணம் தவறுதலாக தொலைந்து போகும் போது அவருக்கு நஷ்ட ஈடு யார் தருவது மனித சட்டமா...?
  •   அனைத்து கெட்ட செயல்களும் தொடர்ந்து செய்யும் மனிதர்கள் அவர்கள் மரணமடைந்தப்பின் அவைக்குறித்து அரசுக்கு தெரிய வரும்போது என்ன செய்ய முடியும் மனித் உருவாக்க சட்டங்கள்...?
  •  பிறரின் உழைப்பை உறிஞ்சி அவர்களின் செல்வத்தையெல்லாம் வட்டியாக மாற்றி வயிறு வளர்க்கும் வணிக பெரு முதலைகளுக்கு நிரந்தர வேலியிட்டு வட்டியின் வாயடைக்க முடியாதது ஏன்...? அதற்கு என்ன காரணம்...?
  •   அனைத்து நிறுவனங்களிலும் கடன் வாங்கி தன் வாழ்க்கையே ஆடம்பரமாக வாழ் நாள் இறுதிவரை கழித்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி கொண்டு யாரும் காணாத இடத்திற்கு ஓடிப்போய் விடுகிறான் என்றால் அப்போது என்ன செய்யும் சமுக நீதி...?
  •  நஷ்ட ஈடு வேண்டுமானால் பாதிப்படைந்தவனுக்கு தரலாம்., ஓடிப்போவனுக்கு என்ன தண்டனை தர முடியும்...?
  •   அதுப்போலவே ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் பயங்கரவாதிகள் ஒரு நாள் அகப்படும்போது எழுதப்பட்ட சட்டத்தால் என்ன தண்டனை அதிகப்பட்சமாக தரமுடியும்...? இறந்தவர்களின் வாழ்வு என்னாகும்..?
  •  மக்கள் திரளாக இருக்கும் இடங்களின் தற்கொலைப்படை தாக்குதல்கள்- தன் உயிர் இழப்புக்கு பகரமாக ஆயிரமாயிர உயிர்கள் எடுத்தவனுக்கு  இலட்சக்கணக்கான நீதிமான்கள் ஒன்றுக்கூடி சட்டம் இயற்றினாலும் அணுவளேவேணும் தண்டனை வழங்க முடியுமா...?
  •  பல்லாயிர முறை மோசடி, வட்டி, கொலை,கொள்ளை,கற்பழிப்பு, விபச்சாரம், போதைப்பொருள் இன்னும் உலகில் எத்தனை உண்டோ அத்தனை தவறுகளும் செய்யும் மனிதர்கள் வாழ் நாள் முழுதும் தன் தவறை நீதியின் கண்களுக்கு மறைத்து வாழ்ந்து மறையும் போது தவறுகளை தண்டிக்கும் சட்டம் என்ன செய்யும்...இவர்களை எப்படி இனங்காணும்?
  •   நூறு வயது வரை அயோக்கியனாய் வாழும் மனிதர்களுக்கிடையே நன்மைகளை மட்டும் செய்து தீமைகளிலிருந்து விலகி வாழும் ஒரு சிறு வயது நற்பிறப்பு தீடிரென்று இயல்பாகவோ,விபத்திலோ மரணமடைய நேரிட்டால் அவர் மேற்கொண்ட தூய வாழ்விற்கு உலக சட்டங்கள் மொத்தமாக கூடினாலும் பகரமாக எதையேனும் வழங்குமா..?
  •  அதுப்போலவே சிசு கருவிலேயே மரணமடைதல்,சிறு வயதில் மரணம்  அடையும் ஒன்றுமரியா குழந்தைகள் மற்றவர்கள்(நாம்) அனுபவித்ததைப்போல வாழ்வை அனுபவிக்க எந்த சமுகம் சட்ட இயற்றும்...?
  •   பிறவியேலே ஊமை.நொண்டி,குருடு,செவிடு மற்றும் குணப்படுத்த முடியா ஏனைய உடல் ஊனங்களுக்கு பிரதிப்பலனாய் அவ்வுயிர்கள் நம்மைப்போல இயல்பாய் வாழ இவ்வுலகச்சட்டம் புது வரையறை தருமா...?
  •    மக்கள் நில நடுக்கம்.பூகம்பம்,புயல் சூறாவளி,வெள்ளப்பெருக்கு,எரிமலை சீற்றம்,சுனாமி போன்ற கடல் மூலம் ஏற்படும் சீரழிவு போன்றவற்றில் உயிரிழக்க நேரிடும் போது அவர்கள் சார்பாக ஏனையோருக்கு நஷ்ட ஈடு தருவது இருக்கட்டும் அரசாங்க பதிவேடுகளில் கூட பெயர் இல்லாத ஆயிரக்கணக்காணோருக்கு மனித உருவாக்க சட்டங்கள் என்ன செய்யும்...?
 *சுருக்கமாக கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டத்தால் வாழ்நாள் முழுவதும் தீமைகள் செய்வதையே மூலதாரமாக கொண்டு வாழும் மனித மூலங்களுக்கு முழுமையான தண்டனையே தர முடியாது.அவ்வாறு நீதியின் முன் நிறுத்தப்பட்டாலும் தனது ,பண,வர்த்தக,அரசியல் செல்வாக்கு பின்புலங்களின் மூலம் மிக எளிதாக நீதியின் கண்களிலிருந்து தப்பி விடுகின்றனர்.அஃதில்லாமல் சட்டமும் தன் கடமையே மிகச் சரியாக செய்து அவர்களுக்கும் மரண தண்டனை விதித்தாலும் அவர்கள் வாழ் நாள் முழுவதும் செய்த குற்றங்களுக்கு,அட்டுழியங்களுக்கு பிரதிபலனாக துடிக்கக்துடிக்க உயிர் போகும் வரை தூக்கு மேடையில் ஏற்றினாலும் அதிகப்பட்சமாக அரை மணி நேரம் மட்டுமே அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்.இந்த தண்டனை அவர்கள் செய்த அனைத்து தீங்குகளுக்கும் போதுமானதா..?
       ஆனால் இவ்வுலக சட்டங்கள் இவ்வாறு நடைமுறை படுத்தப்பட்டாலும் "கடவுள் இருக்கிறார்" எனும்போது அவ்வாறு சமுதாயத்தில் பிறர் நலன் கெடுப்பவனுக்கும் கொலைகள் பல செய்தவனுக்கும் அவன் எந்த அளவிற்கு கொலை,கொள்ளை போன்ற தனி மனித மற்றும் சமுக குற்றங்கள் செய்தானோ அவனுக்கு இறைவன் புறத்திலலிருந்து இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில் தண்டனை வழங்கப்படும்.

..எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே, அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.2:81

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். 4:56

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். 4:10

   இவ்வாறு தாம் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை இந்த உலகத்தில் போதிய அளவு தரப்படாது என்றிந்தாலும் மறுமையில் இறை புறத்தில் அதே அளவிற்கோ அல்லது அதை விட அதிகமாகவோ தண்டனைகள் வழங்கப்படும் என்ற நிலையே ஒருவன் உணரும் போது மனிதர்கள் மேற்கொள்ளும்  சமுக குற்றங்கள் குறைய வாய்பிருக்கிறதா...? இல்லையா...? அதுப்போலவே கருவறை ,இளவயது மரணம், விபத்தில் மரணம், இயற்கை சீற்றங்களில் மரணமானவர்கள் ஆகிய யாவருக்கும் அவர்கள் அதுவரை மேற்கொண்ட செயல்களின் அடிப்படையில் இறை புறத்திலிருந்து மீண்டும் வாழ்வு வழங்கி வெகுமதியோ,தண்டனையோ தொடர்ந்து வழங்கப்படும். மேலும் அதுப்போலவே ஏனைய உடல் ஊனங்கள் கொண்டவர்கள் தம் வாழ்வை பொறுமையாக இவ்வுலகில் மேற்கொண்டதற்காக பின்னுள்ள வாழ்வில் நிரந்தர நல்வாழ்வு அமைத்து தரப்படும்.
    மனித மனங்கள் தங்களது மனசாட்சியின் படி இறைவழிகாட்டுதல் இல்லாமல் வாழ்ந்தாலே போதுமானது எனும் போது ஒருவருக்கு தவறேன படுவது பிறிதொருவனுக்கு சரியேனப்படும் எனவே மனச்சாட்சி என்பது ஒரு தற்காலிக தீர்வை மட்டுமே ஏற்படுத்தும்.அவ்வாறு தனது மன இச்சையின்படி வாழ்வை மேற்கொள்ளும் போது ஏற்படும் தவறுகள் தவிர்க்க இயலாதாக ஆகிவிடுகிறது எனவே நாளுக்கு நாள் இவ்வுலகில் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன அதற்கு கீழுள்ள FBI யின் குற்றவியல் சார்ந்த ஆய்வறிக்கையே சான்றாக இருக்கிறது மேலும் மனித சட்டங்களாலும் பொதுவான நீதியே மனிதக்குல முழுமைக்கும் ஏற்படுத்த முடியாது. இறைவன் உண்டு என்பதை உணர்ந்து அவனது மறுமை தண்டனைக்கு பயந்து வாழ்வை மேற்கொண்டால் மட்டுமே இவ்வுலகம் நேரிய பாதையில் இயங்க முடியும். எனினும் அதைப்பொருட்படுத்தாமல் தீமையே நாடுவோருக்கும் நிலையான தண்டனை இறைவனிடத்தில் உள்ளது.,

கற்பழிப்பு


கள்ளநோட்டு புழக்கம்
வங்கிக் கொள்ளை
போதைப்பொருள் உபயோகம்
தனி மனித கொலைகள்
சொத்துக்கள் தொடர்பான...
வன்முறைகள் தொடர்பான...


நிலுவையிலுள்ள வழக்குகள்


           உண்மையான பகுத்தறிவாளர்கள் இப்போது சொல்லட்டும்
                          நிதியே மிஞ்சும் நீதி எதில் சாத்தியமென்று!

  இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று "ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)" என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்" என்று அல்லாஹ் கூறுவான். 6:30  
                                      
                                                        அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Monday, August 16, 2010

சீர்குலையாத பகுத்தறிவுக் கொள்கை !

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் "முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்" (அஹ்மது : ஹதீஸ் எண்: 12141)

இஸ்லாம் நடுநிலையையும் நீதியையும் பேணும் மார்க்கமாகும். ஆன்மீகத்தின் பெயரால் வரம்பு மீறுதலை ஒருபோதும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இதனால் தெளிவான ஏகத்துவக் கொள்கையில் சிறிதும் பிறழாமல் மேலோங்கி நிற்கிறது. அதன் இறைக் கொள்கைக்குக் களங்கம் விளைவிக்கும் சிறு செயலைக் குறித்தும் அது எச்சரிக்காமல் விட்டதில்லை.

இஸ்லாமிலிருந்து வழிதவறிச் சென்ற மதங்கள் மகான்கள் மற்றும் புண்ணிய புருஷர்கள் மீது கொண்ட வரம்பு மீறிய பக்தியால் அவர்களை இறைவனின் தன்மைக்கு உயர்த்தின. இதனால் இறைவனின் தன்மைக்குக் களங்கம் கற்பித்து இணைவைப்புக் கொள்கையில் சென்றுவிட்டன. மனிதர்களை இறை அவதாரங்களாகவும் இறைவனின் புதல்வர்கள் எனவும் நம்பிக்கை கொண்டு அவர்களை வணக்கத்துக்குரியவர்களாகவும் ஆக்கிக்கொண்டனர். உண்மையில் இத்தகைய நம்பிக்கை இறைவனின் மேன்மைக்கும் மகத்துவத்திற்கும் களங்கம் கற்பிக்கும் நம்பிக்கையாகும்.

சிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலை மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம். கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம்!
தெளிவான ஏகத்துவக் கொள்கையை உலகுக்கு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் தன் சமுதாயம் சிஞ்சிற்றும் வழிதவறாத வண்ணம் சீரிய வழிகாட்டுதலை விட்டுச் சென்றார்கள். ஏகத்துவக் கொள்கைக்கு களங்கம் ஏற்படும் சிறிய காரியங்களைக் கூட அவர்கள் சமூகத்துக்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. மக்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வதால் இறைவனின் தன்மைக்கு தம்மை உயர்த்தி அதனால் இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் படுபாதகச் செயலில் அது அவர்களைக் கொண்டு சேர்த்து விடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் தான் இத்தகைய வரம்பு மீறிய புகழ்ச்சிகளை மக்கள் செய்யும் போது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், சாத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம் என்று கூறி எச்சரித்தார்கள்.

இதனால் தான் இன்றளவும் மதத் தலைவர்களும் ஏன் அரசியல் தலைவர்களுக்குக் கூட சித்திரங்களும் சிலைகளும் செய்யப்பட்டு மாலை மரியாதைகளுடன் வணங்கப்படும் போது ஒரு கற்பனை உருவம் கூட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுக்காமல் அதன் ஏகத்துவக் கொள்கையில் இஸ்லாம் சிறந்து விளங்குகிறது. இதனால் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்பனையாக வரையப்படுவதைக்கூட முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை.

"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதனே! திண்ணமாக உங்கள் இறைவன் ஒரே இறைவன் என எனக்கு (இறைவனிடமிருந்து) வெளிப்பாடு வருகின்றது, யார் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் அறச்செயல்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் எவரையும் இணையாக்காமல் இருக்கட்டும் என்று (நபியே!) நீர் கூறும்!" (திருக்குர்ஆன் 18: 110)

Thursday, November 6, 2008

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால்........

கேள்வி: மறுபிறவி இருப்பது உண்மையா?

மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள். இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும். அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிலிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது.
ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை. அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?

எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

Tuesday, October 28, 2008

கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக.......?

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத - கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை - பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக - பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை.

உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

அபூ பாத்திமா

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!