Showing posts with label மாதுளை. Show all posts
Showing posts with label மாதுளை. Show all posts

Saturday, October 17, 2009

முஸ்லிம் பெண் தொழிலதிபர் அக்தர் நவாஸ்



"தொழிலில் "ரிஸ்க்' எடுத்தால் சாதிக்க முடியும்,'' என பெண் தொழிலதிபர் அக்தர் நவாஸ் கூறினார். மதுரை நாராயணபுரம் பாங்க் காலனியை சேர்ந்தவர் நிஜாம் அலிகான். இவரது மனைவி அக்தர் நவாஸ் (46). பி.காம்.,படித்துள்ளார். "எம்.என்.ஏ.ஹெர்பல் ரெமடீஸ்' நிறுவன உரிமையாளர்.

மடீட்சியா- சக்தி மசாலாவின் "சிறந்த பெண் தொழில் முனைவோர்' விருது பெற்றுள்ளார். அக்தர் நவாஸ் கூறியதாவது: நாங்கள் முதலில் போட்டோ ஸ்டுடியோ மற்றும் பியூட்டி பார்லர் நடத்தினோம். இதில் வருவாய் குறைந்ததால் மாற்றுத் தொழில் பற்றி சிந்தித்தோம். நெல்லிக்காய் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும். இளமையை பாதுகாக்கும். எனவே இதிலிருந்து பொருட்கள் தயாரித்தால் என்ன? என எண்ணினோம். சமூக நலத்துறை சார்பில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நடந்தது. இதில் நான் நெல்லிக்காய் ஜூஸ் பயிற்சி பெற்றேன்.

பின் நெல்லிக்காய் ஜூஸ் தயாரிப்பு சுய தொழில் துவங்கினேன். அதை முதலில் கடைகளில் வாங்க தயங்கினர். மகளிர் திட்டம் மூலம் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உழவர் சந்தைகளில் வரவேற்பு இருந்தது. பின் கடைகளில் ஆர்டர் குவிந்தது.தற்போது எங்களின் நெல்லிக்காய் ஜூஸ், ஸ்வாகுவாஷ், நெல்லி மிட்டாய், ஊறுகாய், லேகியத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கணவர் "மார்க்கெட்டிங்'கை கவனித்துக்கொள்கிறார்.

பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். உசிலம்பட்டி, அழகர்கோவில், பிள்ளையார் பட்டி பகுதிகளிலிருந்து தேவையான நெல்லிக்காய்களை கொள்முதல் செய்கிறோம்.மதுரை விவசாயக் கல்லூரி மற்றும் மனையியல் கல்லூரி மாணவர்களுக்கு "அக்ரோ இண்டஸ்ட்ரியல் டை- அப்' மூலம் மூன்று ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறோம். விரைவில் மாதுளை, வில்வம்பழ ஜூஸ் தயாரிக்க உள்ளோம்.

பெண்கள் சுய தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். யாரையும் எதிர்பார்க்கக்கூடாது. முயற்சி, தன்னம்பிக்கையுடன் "ரிஸ்க்' எடுத்தால் சாதிக்கலாம். பெண்கள் வழக்கம்போல் வத்தல், மிளகாய், வடகம், ஊறுகாய் தயாரிப்பு தொழில் ஈடுபட்டால் வருவாய் குறைவாகத்தான் கிடைக்கும். எந்த தொழில் செய்தால் விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கும் என ஆராய்ந்து ஈடுபட்டால் வெற்றி நிச்சயம், என்றார். இவரை 93603 82611 ல் தொடர்பு கொள்ளலாம்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!