Showing posts with label பந்து. Show all posts
Showing posts with label பந்து. Show all posts

Saturday, June 12, 2010

தென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ்

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் தென் கொரிய அணி, கிரீஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அதிர்ச்சி கொடுத்தது.
தென் ஆப்ரிக்காவில் 19வது <"பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று "பி' பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, கிரீஸ் அணிகள் மோதின.
கொரியா ஆதிக்கம்:
 துவக்கம் முதலே தென் கொரிய அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். இந்த அணிக்கு 7வது நிமிடத்தில் "பிரீ கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதைப்பயன்படுத்திய லீ யங்-பியோ பந்தை வேகமாக அடித்தார். அப்போது கோல் பகுதிக்குள் இருந்த முன்கள வீரர் லீ ஜங் ஜூ, தனது காலால் பந்தை வலைக்குள் அடித்து, தனது அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.
ஆக்ரோஷமாக ஆடிய தென் கொரிய அணியின் முன், கடந்த 2004ல் "யூரோ' சாம்பியன் பட்டம் வென்ற, கிரீஸ் வீரர்களது ஆட்டம் எடுபடவில்லை. முதல் பாதி முடிய சில நிமிடங்களுக்கு முன் கிரீஸ் அணிக்கு, சமன் செய்ய இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தென் கொரிய கோல்கீப்பர் சன்கிரேயாங் அருமையாக தடுக்க, முதல் பாதியில் தென் கொரிய அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது கோல்:
கிரீஸ் அணியின் தற்காப்பு பகுதி மிகவும் பலவீனமாக இருந்தது. இரண்டாவது பாதியின் துவக்கத்தில் (52வது நிமிடம்) தென் கொரிய கேப்டன் ஜி சங், கிரீஸ் வீரர் டி ஜோர்வசை ஏமாற்றி, பீல்டு கோல் அடித்து அசத்தினார்.
அதிரடி தாக்குதல்:
இரண்டு கோல் பின்தங்கிய நிலையில், கிரீஸ் அணியினர் அடுத்தடுத்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், இவர்களது இலக்கு இல்லாத தாக்குதல்கள் பலன் அளிக்கவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி அசத்தல் வெற்றி பெற்றது. கடந்த 2004ல் "யூரோ' சாம்பியன் பட்டம் வென்று, தரவரிசையில் 13வது இடத்திலுள்ள கிரீஸ் அணி, 47வது இடத்திலுள்ள தென் கொரியா அணியிடம், கிரீஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.
முதல் நாளில் மெக்சிகோ-தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ்-உருகுவே இடையிலான போட்டிகள் "டிரா' வில் முடிந்தன. இதையடுத்து இத்தொடரின் முதல் வெற்றியை தென் கொரியா பதிவு செய்தது.
அடுத்த வாய்ப்பு:
 "பி' பிரிவில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள தென் கொரிய அணி, அடுத்து அர்ஜென்டினா (ஜூன் 17), நைஜீரியா (ஜூன் 23) அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இதில் ஒரு போட்டியில் வென்றால், இரண்டாவது முறையாக உலக கோப்பை வரலாற்றில், "ரவுண்ட்-16' சுற்றுக்கு முன்னேறலாம்.

Friday, June 11, 2010

தென் ஆப்ரிக்க பிடியில் தப்பியது மெக்சிகோ: முதல் போட்டி "டிரா'

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ அணிகள் மோதிய உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது. அனுபவம் வாய்ந்த மெக்சிகோவுக்கு நிகராக ஆடிய தென் ஆப்ரிக்கா அணி, அசத்தல் துவக்கம் கண்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் "ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ அணிகள் மோதின.
மெக்சிகோ ஏமாற்றம்:
முதல் பாதியில் மெக்சிகோ அணி வசம் தான் பந்து அதிகமாக இருந்தது. ஆனாலும் "பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க இயலவில்லை. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை மெக்சிகோ வீரர் டாஸ் சான்டாஸ் வீணாக்கினார். மறுபக்கம் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு தர தென் ஆப்ரிக்க வீரர்களும் துடிப்பாக ஆடினர். பந்தை நீண்ட தூரம் "பாஸ்' செய்யமால், "ஷார்ட் பாஸ்' மூலம் நேர்த்தியாக கடத்திச் சென்றனர். 16வது நிமிடத்தில் கிடைத்த "பிரீ-கிக்' வாய்ப்பை இந்த அணியின் ஸ்டீவன் பியன்னார் கோல் "போஸ்டுக்கு' மேலே அடித்து கோட்டை விட்டார். முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
முதல் கோ...ல்:
இரண்டாவது பாதியில் தென் ஆப்ரிக்க அணி எழுச்சி கண்டது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான தஷபாலாலா ஒரு சூப்பர் கோல் அடிக்க, அரங்கில் இருந்த ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டியது. இதையடுத்து தொடரின் முதல் கோல் அடித்தவர் என்ற பெருமையை தஷபாலாலா பெற்றார். தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றது.
மெக்சிகோ பதிலடி:
இதற்கு பதிலடி கொடுக்க மெக்சிகோ அணியினர் கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் இந்த அணியின் ராபா மார்கஸ் அசத்தல் கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலையை எட்டியது. ஆட்டத்தின் கடைசி 90வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்காவின் மபேலா அடித்த பந்து, கோல் போஸ்டில் பட்டு விலகிச் செல்ல, உள்ளூர் ரசிகர்கள் நொந்து போயினர். இறுதியில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா'வில் முடிந்தது.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!