Friday, June 11, 2010

தென் ஆப்ரிக்க பிடியில் தப்பியது மெக்சிகோ: முதல் போட்டி "டிரா'

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ அணிகள் மோதிய உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது. அனுபவம் வாய்ந்த மெக்சிகோவுக்கு நிகராக ஆடிய தென் ஆப்ரிக்கா அணி, அசத்தல் துவக்கம் கண்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் "ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ அணிகள் மோதின.
மெக்சிகோ ஏமாற்றம்:
முதல் பாதியில் மெக்சிகோ அணி வசம் தான் பந்து அதிகமாக இருந்தது. ஆனாலும் "பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க இயலவில்லை. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை மெக்சிகோ வீரர் டாஸ் சான்டாஸ் வீணாக்கினார். மறுபக்கம் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு தர தென் ஆப்ரிக்க வீரர்களும் துடிப்பாக ஆடினர். பந்தை நீண்ட தூரம் "பாஸ்' செய்யமால், "ஷார்ட் பாஸ்' மூலம் நேர்த்தியாக கடத்திச் சென்றனர். 16வது நிமிடத்தில் கிடைத்த "பிரீ-கிக்' வாய்ப்பை இந்த அணியின் ஸ்டீவன் பியன்னார் கோல் "போஸ்டுக்கு' மேலே அடித்து கோட்டை விட்டார். முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
முதல் கோ...ல்:
இரண்டாவது பாதியில் தென் ஆப்ரிக்க அணி எழுச்சி கண்டது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான தஷபாலாலா ஒரு சூப்பர் கோல் அடிக்க, அரங்கில் இருந்த ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டியது. இதையடுத்து தொடரின் முதல் கோல் அடித்தவர் என்ற பெருமையை தஷபாலாலா பெற்றார். தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றது.
மெக்சிகோ பதிலடி:
இதற்கு பதிலடி கொடுக்க மெக்சிகோ அணியினர் கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் இந்த அணியின் ராபா மார்கஸ் அசத்தல் கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலையை எட்டியது. ஆட்டத்தின் கடைசி 90வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்காவின் மபேலா அடித்த பந்து, கோல் போஸ்டில் பட்டு விலகிச் செல்ல, உள்ளூர் ரசிகர்கள் நொந்து போயினர். இறுதியில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா'வில் முடிந்தது.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!