Showing posts with label அறிஞர் அண்ணா. Show all posts
Showing posts with label அறிஞர் அண்ணா. Show all posts

Friday, November 7, 2008

இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும்,தேவரும்....

கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக "நான்தான்" கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும். ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், "நான் அனுப்பியதாகச் சொல்லு!" சொன்னால்தான், மக்கள் "கடவுள்தான் அனுப்பினாரா?" என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப்பார்ப்பார்கள் என்று.

தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.
மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர். இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.

மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.

ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.

இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.

ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.

ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான். இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.

இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும். சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும். முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.....!

Saturday, November 1, 2008

வாளால் வளர்ந்த இஸ்லாம்?


பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.


சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள்.


அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.

இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான்.


எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.


இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.


"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.


தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.

அறிஞர் அண்ணா

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!