Showing posts with label முஸ்லிம். Show all posts
Showing posts with label முஸ்லிம். Show all posts

Monday, October 12, 2015

வாழ்த்துக்கள்,சேக்கனா நிஜாம் !

அதிரையின் பிரபல வலைதள எழுத்தாளரும், அதிரை நியூஸ் இணையதள ஊடகத்தின் தலைமை நிர்வாகி சேக்கனா நிஜாம் அவர்களின் திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக பிரபல மாலை தினசரி இதழான 'மாலை முரசு' பத்திரிகை,  அதிரையின் செய்தியாளராக சேக்கனா நிஜாமை நியமனம் செய்துள்ளது.

 இப்பணியின் மூலம் நன்மைகள் அதிரை மக்களுக்கு கிடைத்திடும் வகையில் உழைத்திட வேண்டுகிறோம்.

 பத்திரிக்கை துறைக்கு பொருத்தமானவர்,
இந்தப் பணி மூலம் இஸ்லாம்,முஸ்லிம்கள் பற்றிய தவறான அவதூறுகளை களைய நீங்கள் ஆவன செய்தல் வேண்டும்.செய்வார்  இன்ஷா அல்லாஹ்! வாழ்த்துக்கள்.

Thursday, October 1, 2015

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை!ஐ நா தலை இட வேண்டும் !!

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் வீட்டில் மாட்டின் மாமிசத்தை வைத்திருந்தார்கள் என்று கூறப்பட்டு, இஸ்லாமியர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டது எப்படி? பின்னணித் தகவல்கள்.

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டு மாமிசத்தை சாப்பிடதாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் நீடித்துவருகிறது.

அக்லாக்கின் குடும்பத்தினர் திங்கட்கிழமையன்று இரவு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

அன்று இரவு அதாவது, அக்டோபர் 28ஆம் தேதி முஹம்மது அக்லாக் என்ற அந்த ஐம்பது வயது நபரின் வீட்டில் மாட்டின் மாமிசம் இருந்தது என்று ஒரு கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்துக் கொன்றது.

அன்று இரவு பத்தரை மணியளவில், விவசாயக் கூலியான முஹம்மது அக்லாக்கின் குடும்பம் வழக்கம்போலவே, சாப்பிட்டுவிட்டு படுக்கச் செல்லும்போதுதான் அந்த தாக்குதல் நடந்தது.

முஹம்மது அக்லா தனது மகன் படுத்திருந்த அறைக்கு பக்கத்து அறையில் அப்போது தூங்கிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் பெரும் ஆவேசத்துடன் ஓடிவந்த கும்பல் ஒன்று கம்பு, கத்தி, நாட்டுத் துப்பாக்கிகளுடன் அவர்களுடைய வீட்டில் நுழைந்தது.
அக்லாவின் குடும்பம் ஒரு பசுவைக் கொன்று சாப்பிட்டுவிட்டதாக கும்பலைச் சேர்ந்தவர்கள் கூச்சலிட்டனர்.

"எல்லாப் பக்கமிருந்தும் அவர்கள் வந்தார்கள். சுவரின் மீது ஏறினார்கள். வாசல் வழியாக வந்தார்கள். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து நாங்கள் பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டினார்கள் என்கிறார் அக்லாக்கின் 75 வயதுத் தாயான அஷ்கரி அக்லாக்.

"அந்தப் பகுதியில் இருக்கும் யாரும் பார்க்காமல் நாங்கள் எப்படி வீட்டிற்குள் பசுவைக் கொண்டுவர முடியும். இந்தப் பகுதியில் நாங்கள் மட்டும்தான் இஸ்லாமியக் குடும்பம்" என்கிறார் அவர்.

வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாமிசத்தை காட்டி கேள்வியெழுப்பியது. ஆனால், அது ஆட்டின் மாமிசம் என்று அக்லாக்கின் கூடும்பத்தினர் கூறினர். ஆனால், அந்தக் கும்பல் அதனை ஏற்கவில்லை.

அக்லாக்கின் குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சியும் பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிக்க ஆரம்பித்தது அந்தக் கும்பல்.
சிலர் அக்லாக் தூங்கிக்கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தனர்.
அவருக்கு அருகில் இருந்த தையல் எந்திரத்தைத் தூக்கி அவர் தலையில் போட்டனர். பக்கத்து அறையில் இருந்த அவரது மகனையும் வெளியில் இழுத்துவந்தனர். அதற்குப் பிறகு கொடூரமாக இருவரையும் கும்பல் தாக்கியது.

அந்தக் குடும்பத்திற்கு அருகில் இருந்த இந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதனைத் தடுக்க முயன்று முடியாமல் போகவே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து காவல்துறை அங்கு வந்தபோது, அக்லாக் இறந்துபோயிருந்தார். அக்லாக்கின் மகனான தானிஷ் மிக மோசமாக காயமடைந்திருந்தார்.

அருகில் உள்ள ஒரு கோவிலில் செய்யப்பட்ட அறிவிப்பே இந்தச் சம்பவத்திற்கு மூலகாரணமாக கூறப்படுகிறது. யாரோ ஓருவர் அந்தப் பகுதியில் பசுவைக் கொன்று சாப்பிட்டதாக கோவிலில் இருந்த ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், யார் அந்த அறிவிப்பைச் செய்தார்கள் என்பது தெரியவில்லை.

அப்படி ஒரு அறிவிப்பு செய்யப்பட்டதை, தான் கேட்டதாக அந்தக் கோவிலுக்கு அருகில் கடை வைத்திருக்கும் பங்கஜ் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
"நான் கையைக் கழுவிக்கொண்டுவருவதற்கு முன்பாக பெரிய கும்பல் அந்த வீட்டிற்கு முன்பு குவிந்துவிட்டது. யாரும் எதுவும் செய்யமுடியவில்லை" என்கிறார் பங்கஜ்.

அடையாளம் தெரியாத சிலர் கோவிலுக்குள் குதித்து அங்கிருந்த ஒலிபெருக்கியைப் பயன்படுத்திவிட்டார்கள் என்றும் கோவிலுக்குப் பொறுப்பானவர்களுக்கு அன்று "உடல்நிலை சரியில்லை"யென்றும் சில உள்ளூர்க்காரர்கள் கூறுகின்றனர்.

அந்தக் கோவிலின் அர்ச்சகரையும் அவரது உதவியாளரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது.

"எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சி. நாங்கள் மட்டும்தான் இங்கே ஒரே இஸ்லாமியக் குடும்பம் என்றாலும், நான்கு தலைமுறைகளாக நாங்கள் இங்கு வசிக்கிறோம். இதற்கு முன்பாக இப்படி பிரச்சனை ஏற்பட்டதில்லை" என்கிறார் அக்லாகின் 55 வயது சகோதரரான ஜமீல் அகமது.

அக்லாக்கின் குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் ஆறு பேர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் நான்கு பேர் தேடப்பட்டுவருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு அங்கு பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. காவல்துறைக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.
அந்தப் போராட்டங்களின் போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதோடு. அருகிலிருந்த கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி, காவல்துறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

செவ்வாய்க் கிழமையன்றும் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் அருகிலுள்ள பகுதியிலிருந்து காவல்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

ஊரடங்கு உத்தரவு போடப்படவில்லையென்றாலும் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அரசியல் நோக்கத்துடனேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சப்பீர் குஜ்ஜர் தெரிவித்தார்.

"இரு சமூகங்களைப் பிரிப்பதற்காக வெளியிலிருந்து வந்த சக்திகள் வேண்டுமென்றே செய்த வேலை இது. பல வருடங்களாக இந்தப் பகுதியில் வசித்துவரும் குடும்பத்தினர் குறிவைக்கப்பட்டதற்கு வேறு காரணங்களைச் சொல்ல முடியவில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கலாம்" என்கிறார் அவர்.

2017ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

இனிமேலும் தாங்கள் தாத்ரியில் வசிக்க விரும்பவில்லையென்று கூறியிருக்கிறது அக்லாக்கின் குடும்பம்.

"எங்களோடு நீண்ட காலமாக வசித்தவர்களே இப்படிச் செய்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. என் தாயையும் சகோதரியையும் அழைத்துக்கொண்டு இங்கிருந்து போய்விடவே விரும்புகிறேன்" என தாக்குதல் நடந்தபோது சென்னையில் இருந்த அக்லாக்கின் மூத்த மகன் சர்தாஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"எங்களுக்கு இனி இங்கே இடமில்லை. அவர்கள் ஏற்கனவே என் சகோதரனைக் கொன்றுவிட்டார்கள். அடுத்து என்ன நடக்குமென யாருக்குத் தெரியும்?" என்கிறார் அக்லாக்கின் சகோதரர்.
இந்தியாவின் பல மாநிலங்களில் பசு வதை தடைச் சட்டம் அமலில் இருக்கிறது.

thanks
 http://tamil.thehindu.com/bbc-tamil

இது போன்று பல சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியாவில் நடை பெற்று வருகின்றன.இதை ஐ நா தலை இட்டு,இந்தியாவைக் கண்டிக்க வேண்டும்.நீதியின் முன் ஆட்சியாளர்களும்,இது போன்ற ஈன செயலை செய்யும் காட்டுமிராண்டி கும்பல்களும் தண்டிக்கப்பட வேண்டும்.இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவ ஒற்றுமையை சீர்குலைக்கும் இது போன்ற செயல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

Sunday, August 9, 2015

காக்கா வீட்டு பேரன்

சமீப காலங்களில் அண்ணலெம் பெருமானார் முஹம்மத் நபி ஸல் அவர்களின் தோழர்களின் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்க்கும் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.உண்மையில் இது மிக மெச்சப்பட வேண்டிய ஒரு செய்தியாகும்.

முதலில் சஹாபாக்கள் என்போர் யார்? அவர்களின் தியாகங்கள் என்ன?போன்ற விஷயங்களை ,அவர்களின் உன்னதமான தியாகமான வரலாற்றை நாம் ஒவ்வொருவரும் இன்ஷா அல்லாஹ் படிக்க வேண்டும்,இதன் மூலம் நம் ஈமான் அதிகரிக்க வாய்ப்புண்டு.


நம் குழந்தைகளுக்கு சினிமா நடிகர்,நடிகைகளின் பெயரை வைத்து,அவர்களை,அந்தக் கூத்தாடிகளை நம் குழந்தைகளுக்கும்,நம் சமுதாயத்துக்கும் அறிமுகப்படுத்தி,சேவை செய்யும் சில தாய் தந்தையர் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்கள் திருந்தி,அப்பெயர்களை மாற்றி,தத்தம் குழந்தைகளுக்கு சஹாபாப் பெருமக்கள்,இமாம்கள் போன்றோர்களின் பெயர்களை  வைக்க வேண்டும்,தங்கள் குழந்தைகள் கூத்தாடிகளின் பெயர்களை தாங்கிக் கொண்டு திரியாமல்,அந்த அநாகரிக செயல்களுக்கு விளம்பரம் தேடித் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.இல்லையெனில்,சமுதாயத்தின் ஒழுங்கீனத்துக்கு அவர்கள் மறைமுக வேலை பார்க்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

சஹாபாப் பெருமக்கள்,இமாம்கள் பெயரை வைத்தால்,- அந்தக் குழந்தையின் பெயரை சொன்னாலே,அது அந்த உன்னத சஹாபியின் பெயர் நிழலாடி,அவர்களின் வரலாறு நினைக்க தோன்றும்,அல்லது அன்னவர்களின் வரலாற்றை படிக்கத் தோன்றும்.

என் காக்காஅவர்களுக்கு மகள் வழி பேரன் பிறந்திருக்கிறான்.மு ஆத் என பெயர் வைத்திருக்கிறார்கள்.அந்தப் பேரனை பார்க்கும் போதும்,கொஞ்சும் போதும் ,இயற்கையாகவே ரலி என்று சேர்த்து சொல்லவே மனம் நாடுகிறது,அத்துடன் அந்த சஹாபியின் வரலாறு நெஞ்சம் நனைக்கிறது,இன்னும் அவர்களின் வரலாறு படிக்கத் தோன்றுகிறது.இதன் மூலம்,அந்த உன்னத சஹாபியின் பெயர் மூலம்,அவர்களின் தியாகம் இன்னும் பரவ வழி ஏற்படுகிறது.இது கூட ஒரு சைகாலஜி போன்ற ஒரு விடயமாகவே நான் கருதுகிறேன்.



ஒரு நடிகனை,நடிகையை ,நம் பிள்ளைகளுக்கு பெயர் இட்டு,அவர்களின் கேவலமான வாழ்கையை விளம்பரப்படுதுவதன் மூலம்,அசிங்கமான செயல்கள் எல்லாம்,அங்கீகாரம் அடைந்து விடுகின்றன.இது சமுதாயத்தில் மறைமுக ஆபத்தை விளைவிக்கும்.

ஆனால்,இப்படி சஹாபாப் பெருமக்கள்,இமாம்களின் பெயர்கள் மூலம் ,அவர்களின் தியாகம்,ஒழுக்கம் நினைவு கூறப் பட்டு,சமுதாயம் சீர் படுகிறது.
எனவே,இது விஷயத்தில் நாம் கவனம் செலுத்தி,சஹாபாக்களின் மாண்புதனை இன்னும் உலகம் அறிய செய்வோம்,இன்ஷா அல்லாஹ்.


Wednesday, August 17, 2011

உறவை இணைத்து வாழ்தல்


ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்.

நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம் உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.

நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23) 
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

உறவு என்பது, அர்ஷைப் பிடித்துக்கொண்டு, என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக்கொள்வான். என்னைப் பிரித்துவிடுபவரை அல்லாஹ்வும் பிரித்துவிடுவான் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி), நூல்: புகாரீ

நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகத்திலிருந்து என்னைத் தூரமாக்கிவிடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள் என்று ஒருவர் கேட்டார். நீர் அல்லாஹ்வை வணங்குவீர்; எதையும் அவனுக்கு இணையாக்காதீர்; தொழுகையைப் பேணுவீர்; ஸகாத்தைக் கொடுப்பீர்; உறவினரை இணைத்து வாழ்வீர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: காலித் இப்னு ஸைத் அல்அன்ஸாரீ (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

உங்களுள் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்); அதுவே சுகாதாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஏழைக்குத் தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்குத் தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம்; மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: சல்மான் இப்னு ஆமிர் (ரலி), நூல்: திர்மிதீ

Wednesday, June 29, 2011

குஜராத்:கர்ப்பிணி பெண் கற்பழித்து கொலை:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்-CBI

கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்தும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி கோரத்தாண்டவம் ஆடினர்.

இந்த மிகக்கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் பல்கீஸ் பானு. கர்ப்பிணியான இவரை ஹிந்த்துவ பாசிச பயங்கரவாதிகள் கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து அவரது குடும்பத்தினரை கொடூரமாக கொலையும் செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஜஸ்வந்த் பாயி நாயீ, கோவிந்த பாயி நாயீ, ராதேஷம் ஷா என்ற லாலா வாகீல் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சி.பி.ஐ கோரியுள்ளது. இம்மனுவை மும்பை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த பயங்கரவாதிகளுக்கு 2008 ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

கூட்டுப்படுகொலையையும், பாலியல் வன்புணர்வையும் குற்றவாளிகள் திட்டமிட்டு செய்தார்கள் எனவும், கர்ப்பிணியான தன்னை விட்டுவிடுங்கள் என பல்கீஸ் பானுவின் கெஞ்சலை குற்றவாளிகள் காதுக்கொடுத்து கேட்கவில்லை எனவும் சி.பி.ஐ அம்மனுவில் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு எதிரான ஆதாரங்கள் பொருத்தமில்லாமல் இருப்பதாகவும், பல்கீஸ் பானுவின் வாக்குமூலத்தை மட்டுமே நீதிமன்றம் இவ்வழக்கில் பரிசீலித்துள்ளது என ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதங்களையெல்லாம் கேட்ட உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது
 
 

Thursday, September 16, 2010

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா? - ஆளூர் ஷாநவாஸ்

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, "டை" கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார்.

சாதியின் பெயரால்… மனுநீதியின் பெயரால்… ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத் தந்தார்.

இந்துத்துவத்தின் வேருக்கு வெந்நீர் ஊற்றிய அந்தத்தலைவர், தமது இறுதி மூச்சு உள்ளவரை இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். “இந்துவாகச் சாகமாட்டேன்” என்று சூளுரைத்துச் செயல்படுத்தினார்.

அந்தப்புரட்சியாளரின் தொடர்ச்சியாய், தமிழ்மண்ணில் களமாடுபவர்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

சேரிகளில் அடுப்பு எரியவும், விளக்கு எரியவும் வழிவகுத்தவர் அம்பேத்கர் என்றால், சேரிகள் எரிக்கப்படுவதை தடுத்துக் காத்தவர் திருமாவளவன்.

சட்டங்கள் ஆளவும், பட்டங்கள் அடையவும் திட்டங்களைத் தந்தவர் அம்பேத்கர் என்றால், குண்டர் சட்டங்கள் மூலம் சேரி மக்கள் வதைக்கப்படுவதை எதிர்த்து எழுந்தவர் திருமாவளவன்.

தனித்தொகுதியும், அரசியல் உரிமையும் பெற்றுத் தந்தவர் அம்பேத்கர் என்றால், அரசியலில் பொம்மைகளாய் இருக்காமல் தனித்தன்மையோடு வளர அடித்தளமிட்டவர், திருமாவளவன்.

இவ்வாறு அம்பேத்கரின் வழித்தடத்தில் அரசியல் அதிகாரத்தை நோக்கி திமிறி எழுந்த திருமாவளவன், தலித் பிரச்சினைகளை மட்டுமில்லாமல், தமிழக முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கையில் எடுத்துப் போராடி வருகின்றார்.

இந்தியச் சூழலில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவை "தொப்புள்கொடி உறவு" என்று அழைப்பதுண்டு. நெருக்கமும், இணக்கமும் கொண்ட சிறப்பு மிக்க உறவு அது.

இந்துத்துவத்தின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகும் இரட்டைச் சமூகம் என்ற அடிப்படையில் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கும், வட்டமேசை மாநாட்டிற்கும் அனுப்பி வைத்து ஆதரவளித்த முஸ்லிம் லீக்கின் காலத்திலிருந்தே அந்த உறவு வலுப்பெற்றுத் தொடர்கிறது.

தலித்துகளைக் கருவியாக்கி, முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடும் இந்துத்துவ சூழ்ச்சியை வேரறுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தலித் தலைவர்களோடும், இயக்கங்களோடும் முஸ்லிம்களுக்கு நல்லுறவே நீடித்து வருகிறது.

தொல். திருமாவளவனுடன் ஆளூர் ஷாநவாஸ்தமிழச் சூழலில் தலித்துகளின் தலைவரான இளையபெருமாள் காலத்திலிருந்து டாக்டர் அ.சேப்பன், திருமாவளவன் என இன்றுவரை அனைவருடனும் நட்புறவு நீடித்து வருகிறது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த உறவைச் சீர்குலைத்து, தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இந்துத்துவக் கும்பல் துடியாய்த்துடிக்கிறது. அம்பேத்கரின் பெயரைச் சொல்லி, அரசியல் களத்திற்கு வந்த பலரையும் பார்ப்பனீயம் மென்று விழுங்கிவிட்டது.

தமிழகத்தில் தடா பெரியசாமி முதல் டாக்டர் கிருஷ்ணசாமி வரை எல்லா சாமிகளும், சங்கராச்சாரி சாமியிடம் சரணடைந்தது விட்ட நிலையில், சங்கராச்சாரியாருக்குப் பணிய மறுத்த திருமாவளவன் மீது முஸ்லிம்களுக்கு எப்போதும் நன்மதிப்பு உண்டு.

2009, நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளோடு கூட்டணி உடன்பாடு கண்ட பின்னர், பச்சைத் துரோகம் புரிந்துவிட்டு, பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்த கிருஷ்ணசாமி போல் அல்லாமல் பா.ஜ.க.வின் பக்கமே செல்லாமல் இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரமாக இயங்கி வருபவர், தொல். திருமாவளவன்.

பா.ஜ.க.வின் நேரடிப் போட்டியாளர்களான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களைத் தவிர, ஏனைய அனைவரும் தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கைகோர்த்துவிட்டனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மற்றும் புதிய தமிழகம் மட்டுமன்றி, நேற்று முளைத்த நடிகர் சரத்குமாரின் ச.ம.க.முதல் நடிகர் கார்த்திக்கின் நா.ம.க. வரை எல்லா கட்சிகளும் பா.ஜ.க.வைத் தழுவிய கட்சிகள்தான்.

மாற்றத்தை நிகழ்த்தப் புறப்பட்டிருக்கும் தே.மு.தி.க.வின் விஜயகாந்தும் பா.ஜ.க.வுடன் பெரும் பேரம் நடத்தியவர்தான்.

அரசியலில் பல நெருக்கடியான தருணங்களை எதிர்கொண்டபோதும் தடுமாறிவிடாமல், பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்துவிடாமல் கொள்கை உறுதி காப்பவராக திருமாவளவன் விளங்குகின்றார்.

1999 ஆம் ஆண்டுதான் திருமாவளவன் தேர்தல் பாதைக்கு வந்தார் என்றாலும், 1990 களிலிருந்தே சமூக அமைப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலம் தொட்டே அவர் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பி வருகின்றார்.

1992, டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மதுரை வீதிகளில் களமிறங்கி உடனடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்தவர் அவர்.

“எரிபடும் சேரிகளில், இடிப்படும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி” என்னும் முழக்கத்தை முன்வைத்து முஸ்லிம்களை ஈர்த்தவர். ஈழத்தை ஆதரிப்பதுபோலவே பாலஸ்தீனத்தையும் ஆதரித்து வருபவர். சதாம் ஹுஸைனின் தீரத்தால் ஈர்க்கப்பட்டவர். தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.

தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையைச் சட்டப் பேரவையில் முழங்கியவர். அதை வலியுறுத்தி தனியொரு மாநாட்டை நடத்தியவர். முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காகப் போராடியவர். எல்லா முஸ்லிம் அமைப்புகளோடும் தோழமை போற்றுபவர்.

இப்படியாக… தமது ஒவ்வொரு அசைவுகளாலும் முஸ்லிம்களுடனான உறவை உறுதிப்படுத்தி வந்த திருமாவளவன், கடந்த சில ஆண்டுகளாக அதில் ஒரு தீவிரப் போக்கை கையாண்டு வருகின்றார்.

“மக்களே மசூதியைக் கட்டி எழுப்புவோம்” என்று சொல்லி பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். வேலூர் கோட்டை பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்த உரிமை கோரி மசூதி நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்.

முஸ்லிம்களின் செலவில் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று விருந்துண்டு செல்லும் பிற அரசியல்வாதிகளைப் போலல்லாமல், முஸ்லிம்களை அழைத்து இப்தார் விருந்து கொடுத்து அசத்தினார்.

முஸ்லிம்களைப் போல் தாமும் நோன்பிருந்து ஒரு நோன்பாளியாக இப்தாரை மேற்கொண்டார். மேலும் தம்மைப் போலவே தமது தொன்டர்களையும் நோன்பு நோற்கச் செய்தார்.

தலைவர்களின் பெயரால் தமிழக அரசு வழங்கிவரும் விருதுகளில் காயிதே மில்லத் பெயரில் ஏன் ஒரு விருது இல்லை எனக் கேள்வி எழுப்பினார்.

அரசுக்கு உறைக்கும் வண்ணம் தமது கட்சியின் சார்பில் காயிதே மில்லத் பெயரில் விருது அறிவித்து அதை அப்துல் நாசர் மதானிக்கும், குணங்குடி ஹனீபாவுக்கும் கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார்.

தமது கட்சியின் பொருளாளர் பொறுப்பை முகமது யூசுப் என்ற முஸ்லிமுக்கு தந்ததோடு, ஏராளமான முஸ்லிம்களைக் கட்சி நிர்வாகிகளாக்கினார்.

நாடாளுமன்றத்தில் தனது முதல் கன்னிப் பேச்சிலேயே முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார்.

பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவியபோது எல்லா பெரியாரிஸ்டுகளும் அவரை கடுமையாக விமர்சித்த வேளையில், பெரியார்தாசனை ஆரத்தழுவி வாழ்த்தினார், திருமாவளவன். இவ்வாறு, தொடர்ச்சியாக… அதிரடிமேல் அதிரடிகளை அரங்கேற்றி வருகின்றார்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்து, திருமாவளவன் இவ்வளவு தீவிரமாக இயங்கி வருவது தமிழக அரசியல் சமூகக் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்பதே உண்மை.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்துகின்றாரே என்ற வெறுப்பில் இந்துத்துவ சக்திகளும்…

நாம் பேசி வருவதை எல்லாம் இவரும் பேச ஆரம்பித்துவிட்டாரே என்ற பதற்றத்தில் சில இஸ்லாமிய அமைப்புகளும்…

முஸ்லிம்களுக்காகப் பொதுத் தளத்தில் நின்று போராடி நமக்கும் நெருக்கடி தருகின்றாரே என்ற படபடப்பில் அரசியல் கட்சிகளும்…

"தலைவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை" என்ற புறக்கணிப்பில் சில விடுதலைச் சிறுத்தைகளுமாக அந்த அதிர்வுகள் வேறுபடுகின்றன.

இவர்களைத் தாண்டி, பொதுவான இஸ்லாமிய மக்களிடம் திருமாவின் செயல்பாடுகள் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

"பொதுத்தளத்தில் நமக்காக வீரியமாக குரல் எழுப்புகின்றாரே" என்ற நன்றி உணர்வும், "இஸ்லாம் மார்க்கம் குறித்து இவ்வளவு தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றாரே" என்ற வியப்பும் திருமா மீது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனினும், நன்றி உணர்வும், வியப்பும் இருக்கின்ற அளவுக்கு ஒரு வித தயக்கமும் முஸ்லிம்களிடம் இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

“என்னதான் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்பினாலும், இஸ்லாத்தைப் பற்றி மேடை தோறும் முழங்கினாலும், அடிப்படையில் திருமா ஓர் அரசியல்வாதி ஆயிற்றே! அவரை எந்த அளவுக்கு நம்பலாம்? நம்பி எந்த எல்லை வரை செல்லலாம்? என்று மனதுக்குள் எழுகின்ற கேள்விகளே முஸ்லிம்களிடம் தயக்கமாக வெளிப்படுகிறது.

முஸ்லிம்களின் இத்தகைய மனநிலையைச் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில், திருமாவை நம்பலாமா என்பதில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தயக்கம், திருமா மீதான அவ நம்பிக்கையினால் ஏற்பட்டது அல்ல.

அது, காலங்காலமாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வடு. வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டதன் வெளிப்பாடு. எல்லோராலும் ஏமாற்றப்பட்டதனால் ஏற்பட்டிருக்கும் எச்சரிக்கை உணர்வு.

தங்களை நோக்கி வரும் அரசியல்வாதிகளைக் கண்டு முஸ்லிம்கள் இன்று அச்சப்படுகின்றார்கள் என்றால், அதன் பின்னணியில் ஒரு நூற்றாண்டு கால வரலாறு புதைந்திருக்கிறது.

ஒருவரை நம்புவதும், நம்பிய பின் கழற்றி விடப்படுவதும், களமிறங்கிய பின் கவிழ்க்கப்படுவதுமாக முஸ்லிம்கள் சந்தித்துவரும் துரோக வரலாறு காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடங்குகிறது.

ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார நலன்களை இலக்காகக் கொண்டு 1906 ஆம் ஆண்டில் அகில இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது. முஸ்லிம் லீகை தொடங்கிய தலைவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்களே.

காங்கிரசின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப்போனதும் முஸ்லிம்களின் நலன் காக்க தனியொரு அமைப்பை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

காங்கிரஸ் முன்னொடியான முஹம்மது அலி ஜின்னா, முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட போது அதை எதிர்த்தார். காங்கிரஸ் கட்சியின் மூலம்தான் நாம் நினைத்ததைச் சாதிக்கமுடியும் என்று விடாப்பிடியாக நம்பினார். இறுதியில் அவருக்கும் அவநம்பிக்கையே பரிசாகக் கிடைத்தது. தீவிர மதச்சார்பற்றவாதியாக தன்னை முன்னுறுத்திய அவர், காங்கிரசின் வகுப்புவாதத்தினால், முஸ்லிம் லீக்கில் இணைந்து அதன் தலைவராக உயரும் நிலை வந்தது.

1906-ல் அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டபோதும், 1938ல் தான் தமிழகத்தில் அவ்வியக்கம் வேரூன்றியது. அதுவரை இங்குள்ள முஸ்லிம்கள் காங்கிரசே கதி என நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கைக்கும் வேட்டு வைத்தது காங்கிரஸ் கட்சி.

தென்னகத்தில் வணிகப்பெரு வள்ளலாகவும், காங்கிரசில் செல்வாக்கு செலுத்திய தலைவராகவும் விளங்கிய ஜமால் முஹம்மது சாஹிப், 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டார். காங்கிரசில் மேலோங்கி இருந்த வகுப்புவாதமும், பிரித்தாளும் சூழ்ச்சியும் ஜமால் முஹம்மது சாஹிபை தோற்கடிக்கச் செய்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.டி. கிருஷ்ணமாச்சாரியை வெற்றிபெற வைத்தது.

காங்கிரசின் இத்தகைய நயவஞ்சகத்தனத்தால் நிலைகுலைந்தார் ஜமால் முஹம்மது சாஹிப் ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீக்கில் இணைவது குறித்து, அதுவரைச் சிந்தித்துக் கூட பார்த்திடாத அவர், உடனடியாக காங்கிரசில் இருந்து விலகி, முஸ்லிம் லீகில் இணைந்தார்.

ஜமால் முஹம்மது சாஹிபுக்கு இழைக்கப்பட்ட துரோகம், தீவிர காங்கிரஸ்வாதியான அவரது உறவுக்காரர் ஒருவரின் உள்ளத்தை உலுக்கியது. காங்கிரசின் நம்பிக்கைத் துரோகத்தை உணர்ந்து தெளிந்த அவரும் தன்னை முஸ்லிம் லீகில் இணைத்துக்கொண்டார். அவர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

காங்கிரசை நம்பி முஸ்லிம்கள் இழந்தவற்றைப் பட்டியலிட்டால் அது எதற்குள்ளும் அடங்காமல் நீண்டு செல்லும். பாகிஸ்தான் பிரிவினை முதல் பாபர் மஸ்ஜித் பிரச்சினை வரை இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப்பெரும் இழப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியால் நேர்ந்தவையே.

முஸ்லிம்களுக்கு எப்போதுமே எதிரியைத் தீர்மானிப்பதில் பிரச்சினை இருந்ததில்லை. பா.ஜ.க.வை நம்பி அவர்கள் மோசம் போனதாக வரலாற்றில் ஒரு வரி கூட இல்லை. அவர்களின் பிரச்சினைகள் எல்லாம் நண்பர்களை நம்பியதில் தான் இருக்கிறது.

காங்கிரசின் வகுப்புவாத அரசியலுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்டோரின் உரிமை அரசியலை முன்னெடுத்து தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட அச்சாணியாய் இருந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

காங்கிரசை வீழ்த்தி தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சியும், கேரளாவில் இடதுசாரி ஆட்சியும் ஏற்பட வழிவகுத்தவர் அவர். அப்படிப்பட்ட காயிதே மில்லத்தும் கடைசியில் ஏமாற்றப்பட்டார்

தமிழகத்தில் நமது அணி வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சி என்று கரம் பற்றிச் சொன்னவர்கள், வென்ற பின்னர் காலை வாரினார்கள். பதவி ஏற்றபின் வந்து கரம் கூப்பினார்கள்.

500 ஆண்டுகள் ஆனாலும் முஸ்லிம் லீகை அழிக்க முடியாது என்று சூளுரைத்தார் காயிதே மில்லத். அந்த மகத்தான தலைவர் உயிர் கொடுத்து வளர்த்த அந்த இயக்கத்தை அவரது மறைவுக்குப் பின் நிர்மூலமாக்கிய பெருமை திராவிடக் கட்சிகளையே சாரும்.

முஸ்லிம் லீகின் இரண்டாம் மட்டத் தலைவர்களிடையே குழு அரசியலை உருவாக்கி, ஈகோவை கூர்தீட்டி, ஒன்றுபட்ட ஓர் இயக்கத்தை உருக்குலைத்தன திராவிடக்கட்சிகள்.

எந்த திராவிடக் கட்சியை காயிதே மில்லத் நண்பன் என்று நம்பினாரோ அந்த திராவிடக் கட்சிதான் அவரது மறைவுக்குப் பின் தனது சுயநலனுக்காக முஸ்லிம் லீகை சூறையாடியது.

இது ஒருபுறமென்றால், தமது கட்சிக்காக காலமெல்லாம் உழைத்த முஸ்லிம்களைத் திராவிடக் கட்சிகள் கைவிடும் அவலம் மறுபுறம் தொடர்கிறது.

தி.மு.க தொடங்கப்பட்டபோது அறிஞர் அண்ணாவுக்குக் களம் தந்தவர்கள் முஸ்லிம்கள். "நபிகள் நாயகம் பிறந்த தின விழா" என்ற பெயரில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தப்பட்ட "மீலாது விழா"க்கள் தான் தி.மு.க.வின் பிரச்சாரக்களம்.

முஸ்லிம்களின் பங்களிப்பைப் பெற்று வளர்ந்த தி.மு.க.வில் முன்னணி தலைவராக இன்று ஒரு முஸ்லிம் கூட இல்லை. தலைவர், செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் என நீளும் தலைமை நிர்வாகிகளில் எவரும் முஸ்லிம் இல்லை. சமூக நீதியை வலியிறுத்தும் தி.மு.க.வின் நிர்வாக அமைப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

ஆயிரம் விளக்கு உசேன், தி.மு.க. முன்னோடிகளில் ஒருவர். மு.க.ஸ்டாலினை அரசியலில் ஒளிரச் செய்வதற்காக தன்னையே உருக்கிக்கொண்ட மெழுகுவர்த்தி அவர். நெருக்கடி நிலை கால சிறைவாசிகளில் ஒருவர். கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த சிறப்புக்குரியவர்.

அப்படிப்பட்ட உசேனுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. அவரது தொகுதியான திருவல்லிக்கேணியில் கலைஞரின் நண்பர் பேராசிரியர் நாகநாதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

உசேனுக்கு நேர்ந்த இந்த அவலம், தி.மு.க.வின் வேறு எந்த தலைவருக்காவது நேர்ந்திருக்குமா?

வன்னியர்கள் நிறைந்து வாழும் தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பதிலாக வேறு ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்த தி.மு.க.வுக்குத் துணிவு வருமா?

காட்பாடியில் துரைமுருகனுக்குப் பதிலாக, துறைமுகம் காஜாவுக்கு சீட் தருமா?

திருவல்லிக்கேணியில் உசேனை மறுத்து, நாகநாதனை நிறுத்துகிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்?

எனினும், முஸ்லிம்கள் முன்புபோல் இல்லாமல் தெளிவாக முடிவு எடுத்து நாகநாதனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வின் முஸ்லிம் வேட்பாளர் பதர் சயீதை வெற்றிபெற வைத்தார்கள். தம்மை வஞ்சிப்பவர்களுக்கு வாக்குகள் மூலம் பதிலடி தந்தார்கள். தாங்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டோம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.

தி.மு.க.வில் இத்தகைய நிலை என்றால், அ.தி.மு.க. பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தமது அமைச்சரவையில் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம்தராமல் புதிய வரலாறு படைத்தார் ஜெயலலிதா. முஸ்லிம்களுக்கு எதிரான அவரது பாசிசப் போக்கை விவரிக்க முடியாத அளவுக்கு அது நீளமானது; ஆழமானது.

தமிழக அரசியல் களத்தில் சமூகப் நீதிப் போராட்டத்தின் மூலம் அரசியல் கட்சியாய் பரிணமித்த பாட்டாளி மக்கள் கட்சியாலும் முஸ்லிம்களுக்குப் படிப்பினைகளே அதிகம். பா.ம.க.வின் வளர்ச்சிக்காக ஊர்தோறும் அலைந்து மேடைகள் தோறும் முழங்கியவர் போராளி பழனிபாபா.

“டாக்டர் இராமதாசை நம்பினால் கைவிடப்பட மாட்டோம்” என்று சொல்லி முஸ்லிம்களிடம் நம்பிக்கை விதைகளைத் தூவியவர் அவர். இறுதியில் அவரே அவநம்பிக்கை அடையும் அளவுக்கு இராமதாசின் சுயமுகம் வெளிப்பட்டது.

தி.மு.க.வின் முன்னணிப் பொறுப்புகளில் முஸ்லிம்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் பார்க்கும் போது தி.மு.க அளவுக்கு இராமதாஸ் மோசமானவரில்லை. கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அவர் சமூக நீதி அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவிடுவார். ஆனால் தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் போது மட்டும் சமூக நீதிக் கொள்கையை மறந்து விடுவார். இதுவரை எந்த தேர்தலிலும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக் கூட அவர் வாய்ப்பளித்ததில்லை.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம் லீகை மதவாதக் கட்சி என்றும் சொல்வார்கள். அதே முஸ்லிம் லீக்கோடு கூட்டணியும் வைத்துக் கொள்வார்கள்.

கேரளாவில் இளம்தலைமுறை தலைவரான அப்துல் நாசர் மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சியோடு 2009 தேர்தலில் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்தனர். தேர்தலில் தோல்வியடைந்த உடன், தமது கூட்டணி சகாவான மதானியைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கும் மலிவான அரசியலை கம்யூனிஸ்டுகள் கையில் எடுத்தனர். பொய் வழக்குப் போட்டு மதானியின் மனைவியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு அரசின் பழிவாங்கும் போக்கை அம்பலப்படுத்தி மதானியின் மனைவியை விடுதலை செய்தது.

கம்யூனிஸ்டுகளை நம்பிய மதானி ரணப்பட்டார்.

பா.ம.க.வை நம்பிய பழனிபாபா மனம் புண்பட்டார்.

தி.மு.க.வை நம்பிய காயிதே மில்லத் ஏமாற்றப்பட்டார்.

காங்கிரஸை நம்பிய ஜமால் முஹம்மது சாஹிப் தோற்கடிக்கப்பட்டார்.

நாம் எப்படி திருமாவளவனை நம்புவது?

இதுதான் இன்றைய தமிழக முஸ்லிம்களின் தயக்கத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒற்றைக் கேள்வி.

திருமாவிடம் விடை இருக்கிறதா?


[சமநிலைச் சமுதாயம், ஜூலை-2010 இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை]
ஆளூர் ஷாநவாஸ் எழுப்பியிருந்த கேள்விக்கு திருமாவளவன் பதில்!
திருமாவளவனின் முஸ்லிம் அரசியல் மாற்றமா ஏமாற்றமா என்றத் தலைப்பில், சமநிலைச் சமுதாயம் ஜூலை இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதியிருந்த கட்டுரை அரசியல் சமூக அரங்கில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் உள்ளுணர்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி படம் பிடித்துக் காட்டிய அந்தக் கட்டுரை வெளியான நாள் முதல் இன்று வரை அது குறித்த உரையாடல் கூர்மையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல தரப்பினரும் சமநிலைச் சமுதாயத்தையும், கட்டுரையாளரையும் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வந்தனர்.

திருமாவின் முஸ்லிம் அரசியல் குறித்த அந்தக் கட்டுரையை திருமாவளவன் படித்தாரா? அதற்கு அவர் பதில் சொல்வாரா? அல்லது மற்ற அரசியல் வாதிகளைப் போல சிக்கலான விசயங்களுக்கு பதிலளிக்காமல் மெளனம் காப்பாரா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளும் சமுதாய மக்களிடம் எழுந்தது.

இந்நிலையில்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் 05 -09 -2010 அன்று நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய தோழர் திருமாவளவன், தமது முஸ்லிம் அரசியல் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களையும், கேள்விகளையும் தான் வரவேற்பதாகவும், அதற்கு செயல்பூர்வமாக விடை அளிக்க இருப்பதாகவும் கூறினார். முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்து அரசியல் எழுச்சி அடைவதற்கான தொலை நோக்குத் திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
திருமாவின் இப்தார் உரை முழுவதும்,சமநிலைச் சமுதாயத்தில் வெளியான கட்டுரைக்கான பதிலுரையாக இருந்தது. ஆளூர் ஷாநவாஸ் எழுப்பியிருந்த கேள்விக்கு தமது பதில் இந்த உரைதான் என்று திருமாவும் அறிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு, தலித் - இஸ்லாமியர் அரசியல் கூட்டணி.. திருமா அறிவிப்பு !

இந்த இனிய இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிற இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்த இப்தார் விருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு உன்னதமான சமூக உறவு வலுப்பெறவும், அதன் மூலம் அரசியல் அரங்கில் ஒரு நிரந்தரக் கூட்டணியை இரண்டு சமூகங்களும் இணைந்து உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும்,இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

திருமாவளவன் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்? வழக்கமாக நடைபெறும் இப்தார் நாடகங்களைப் போல இதுவும் ஒரு நாடகமா? என்கிற ஐயம் இஸ்லாமிய சமூக மக்களிடம் உருவாகி இருக்கலாம். அல்லது இனி உருவாகலாம். இது தொடர்பாக ஆளூர் ஷாநவாஸ் கூட ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

'திராவிடக் கட்சிகளிடம் முஸ்லிம்கள் பட்ட காயங்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் இன்னும் ஆறவில்லை; இந்த நிலையில் திருமா வளவனும் இங்கே தொப்பி போட்டுக் கொண்டு வருகின்றாரே என்ற ஐயம் பலருக்கும் இங்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு திருமாவளவன் பதில் சொல்வாரா' என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதை விட, நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் தோழர்களே..

நீங்கள் என்னை நோக்கி என்ன கேள்வி எழுப்பினாலும், எவ்வளவு சந்தேகமடைந்தாலும் அல்லது பழி சுமத்தினாலும் நான் அதைப் பற்றி கவலைப் படாமல் சகிப்புத்தன்மையோடு இருந்து, தலித்துகளும் முஸ்லிம்களும் இணைந்து ஒரு அரசியல் சக்தியாய் எழுச்சி பெற உறுதியாகப் பணியாற்றுவேன் என்பதை இந்த வேளையில், விடையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

திருமாவளவன் இப்படி எல்லாம் தொப்பி போட்டுக் கொண்டு வந்து, விருந்து உண்ணுவது ஏன் என்பது ஒரு இயல்பானக் கேள்வி தான்.அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை,எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

நான் எதற்காக நோன்பு இருக்க வேண்டும்? நீங்கள் முப்பது நாட்கள் நோன்பிருக்கின்றீர்கள், முப்பது நாட்களும் இல்லாவிட்டாலும், ஒரு மூன்று நாளாவது நோன்பிருக்க வேண்டுமே என்ற உள்ளுணர்வின் அடிப்படையில், நானே விரும்பி அறிவித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக அதை கடைபிடித்தும் வருகிறேன் தோழர்களே.

வாழ்விலும் இருக்க வேண்டும், தாழ்விலும் இருக்க வேண்டும் என்பதை.. வார்த்தையில் மட்டும் இருக்காமல் செயலிலும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளவன் நான். இப்தாரிலே மட்டும் இருக்க வேண்டும் சகரிலே இருக்கக் கூடாது என்றில்லாமல், இப்தாரிலும் இருப்பான் திருமாவளவன் சகரிலும் இருப்பான் திருமாவளவன், சகரிலும் இருந்து விட்டு இப்தாரிலும் இருந்து விட்டு இடையில் நோன்பில் மட்டும் இல்லாமல் இருக்கக் கூடாது. நோன்பிலும் இருப்பான் திருமாவளவன் என்பதை உறுதிப் படுத்தக் கூடிய வகையில் தான் நான் செயல் பட்டு வருகிறேன்.

இப்படி நான் செயல் படுவதும்,முஸ்லிம்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து நான் போராடுவதும், அரசியல் ஆதாயத்துக்காக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.அதற்கு விடை சொல்ல விரும்புகிறேன்.. ஆம், அரசியல் ஆதாயத்திற்காகத்தான். எனக்கு மட்டுமல்ல நமக்கு, அந்த அரசியல் ஆதாயம் நமக்கு..

நமக்கு அரசியல் ஆதாயம் வேண்டும். நாம் எந்த ஆதாயமும் கருதாமல் எல்லோரையும் தோளில் தூக்கிச் சுமக்கிறோம். தலித்துகளும் அப்படித்தான் முஸ்லிம்களும் அப்படித்தான். பிற சிறுபான்மை மக்களும் அப்படித்தான். ஆக அரசியல் ஆதாயம் கருதாமல் இவ்வளவு காலம் உழைத்தது போதும். இனி நாம் அரசியல் ஆதாயம் கருத வேண்டும். நமக்கு அதிகாரம் வேண்டும்.

ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கிற இரண்டு வர்க்கம். ஆளப்படுவோர் எப்போதும் அடக்கப்படுவார்கள். ஆளப்படுவோர் எப்போதும் சுரண்டப்படுவார்கள், ஆளப்படுவோர் எப்போதும் பழிசுமத்தப்படுவார்கள்; இழிவுபடுத்தப்படுவார்கள், நசுக்கப்படுவார்கள். ஆள்வோர் எப்போதும் தமது ஆளுமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவிக் கொண்டே இருப்பார்கள்.
சர்வதேச அரங்கில் தான் மட்டுமே 'தாதா' வாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற அமெரிக்கா, அதற்கான வேலைகளைச் செய்வதிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. இந்தியாவுக்கு யார் பிரதமர் என்று நீயும் நானும் கவலைப்படவில்லை, அமெரிக்காகாரன் கவலைப்படுகிறான். இலங்கையிலும் பாகிஸ்தானிலும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் அந்தந்த நாட்டு மக்களை விட அமெரிக்கா காரனுக்குத்தான் அதிக கவலை..ஏன் அவனுக்கு அந்தக் கவலை? அவனது ஆளுமையையும், சர்வதேச 'தாதா' தனத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள அவனுடைய ஆதரவாளர்கள் உலக நாடுகளை ஆள வேண்டும் என்று விரும்புகிறான்.உலகம் முழுவதும் தனக்கு வேண்டியவர்களின் ஆட்சி நடைபெறும் போதுதான் தனது ஆதிக்கம் நிலைபெறும் என்று அவன் சிந்திக்கிறான்.

எதற்கு இதை நான் சொல்கிறேன் என்று சொன்னால்.., யார் ஒருவர் அல்லது எந்த ஒரு சமூகம் தான் ஆளப்படுவதில் இருந்து மீளப்படுவதை விரும்புகிறார்களோ, ஒடுக்கப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, சுரண்டலில் இருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ளத் துடிக்கிறார்களோ, அவர்கள் அதிகாரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தேடல் வேண்டும்.

இறைவனிடத்திலே நாம் அமைதியைத் தேடுகின்றோம். ஆனால் 'இறை' என்கிற அரசிடம் நமக்கான அதிகாரத்தை இன்னும் நாம் தேடவில்லை. ஆக, அதிகாரத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல், அதிகாரத்தைப் பற்றிய தேடல் இல்லாமல், அதிகாரத்தைப் பற்றிய வேட்கை இல்லாமல், நம்மீதான அடக்குமுறைகளில் இருந்தும் ஒடுக்குமுறைகளில் இருந்தும் நம்மால் மீளவே முடியாது.

அந்த அடிப்படையில் தான் தலித் மக்களிடத்திலே, புரட்சியாளர் அம்பேத்கர், ஆட்சி அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கினார்.அந்த விழிப்புணர்வு இன்றைக்கு தலித் மக்களிடத்தில் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதன் அடையாளமாகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் இங்கே எழுந்து வந்திருக்கிறது. இதை நான் நெஞ்சுயர்த்திச் சொல்கிறேன். அம்பேத்கரின் அந்தக் கொள்கை வழியில் தான் தலித் மக்களை நாங்கள் அமைப்பாக்கி வருகிறோம்..

இன்றைக்கு திருமாவளவன் மீது முஸ்லிம் சமூகத்தினர் சந்தேகப்படுகிறார்கள் என்று சொன்னால், அதை எண்ணி நான் வருத்தப்படவில்லை, மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் சந்தேகப்படுவது என்றைக்குத் தொடங்கி விட்டதோ அப்போதே விழிப்புணர்ச்சியும் தொடங்கி விட்டது என்று பொருள். நம்மைப் பிறர் ஏய்க்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி விழிப்புணர்வே இல்லை என்றால் நமக்கு சந்தேகமே வராது. எங்கே சந்தேகம் வருகிறதோ அங்கே விழிப்புணர்வு வந்துவிட்டது என்று பொருள். ஆக இஸ்லாமியர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தமிழ்நாட்டு இஸ்லாமியச் சமூகம் விழிப்படைந்து விட்டது. கடந்த கால வடுக்களைத் தடவிப் பார்த்து, தம்முடைய இயலாமையையும் தமது தோல்விகளையும் தமது ஏமாற்றங்களையும் எடை போட்டுப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

ஆக இந்தச் சூழ்நிலையில் இப்போது நான் சொல்கிறேன்...
2016 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இப்போதே நான் அறைகூவல் விடுக்கிறேன். அரசியல் கூட்டணிக்கு அழைக்கிறேன்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமே, தவ்ஹீத் ஜமாஅத் இயக்கமே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமே, தேசிய லீக் இயக்கமே, பாப்புலர் பிரன்ட் எனப்படும் மக்கள் முன்னணியே, இன்னும் என்னென்ன இஸ்லாமிய அமைப்புகள் இருக்கின்றனவோ அத்தனை அமைப்புகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அழைப்பு விடுக்கிறேன்.

2016 ஆம் ஆண்டு தலித் - முஸ்லிம் கூட்டணி தமிழகத்தில் மலர வேண்டும். ஆட்சி அதிகாரத்தை நோக்கிய நமது பயணம் வெற்றியடைய வேண்டும். நமக்கான அரசியல் அதிகாரம் தேவை. அதை அடையாமல் நம்மீதான ஒடுக்குமுறைகளை நாம் தடுத்து நிறுத்த முடியாது.

இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை முறை.ஆனால் அது மதம் என்கிற ஒரு மிகப்பெரிய ஆளுமை மிக்க அமைப்பாக மாறி இருக்கிறது. இதற்கு அடிப்படையாக நம்முடைய நபிகளார் விளங்குகின்றார். தமது நாற்பது வயதுக்குப் பின்னர் தான் நபிகளார் பொதுப் போதனைகளைத் தொடங்கி இருக்கிறார். மிகக் குறுகிய வட்டத்தில் தமது நண்பர்களோடு முதலில் கருத்துக்களைப் பரிமாறி இருக்கிறார்.

பொதுப் போதனைகளில் அவர் இறங்கிய உடனேயே அன்றைய ஆட்சியாளர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். நபிகளாரின் உயிருக்கு அவர்கள் உலை வைக்கத் தொடங்கினர். அப்போது அவர் தான் பிறந்த மண்ணை விட்டு மதீனாவை நோக்கிப் போனார். மக்காவிலிருந்து நபிகளார் மதீனாவை நோக்கிப் போனது 'ஹிஜ்ரா' என்றழைக்கப் படுகிறது. அது ஒரு புனிதப் பயணம் என்றழைக்கப்படுகிறது.

ஆனால் அவர் எதற்காக அந்தப் பயணத்தை மேற்கொண்டார்? தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், தன் உயிர் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ளவும் தான் அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டார். அதுவரையில் மதீனாவுக்கு யாத்ரிப் என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. நபிகளார் அங்கு சென்றபிறகு, இவர் மதீனத்து நபி, ஆகவே நபிகளின் பட்டணம் என்று பெயர் மாற்றிக் கொண்டார்கள்.

அங்கு தான் நபிகளாருக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கைப் பெருகியது. அவரது போதனைகளைக் கேட்கும் கூட்டம் அதிகரித்தது. அங்கு தான் நபிகளார் ஒரு அமைப்பாக திரட்சியுற்றார். தனி நபராக இருந்தவர் மக்காவிலே ஒரு சிறு குழுவாக மாறினார். பின்பு மதீனாவிலே ஒரு அமைப்பாக வளர்ந்தார். அந்த அமைப்பு ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போரிடும் படை வலிமை உள்ளதாக மாறியது.அந்தப் படை வலிமையோடு மக்காவிற்குத் திரும்புகிறார். மக்காவில் ஆளும் வர்க்கத்தோடு மிகப்பெரும் யுத்தத்தை நடத்துகிறார்..அதன் பிறகு தான் அது ஒரு இயக்கமாக மாறியது.

ஆக, நபிகளாரிடம் இருந்த அந்த ஆளுமைப் பண்பு, அந்தத் தலைமைப் பண்பு, அந்தப் போர்க்குணம் தான் ஒரு அமைப்பாக மாறி ஒரு இயக்கமாக மாறி இன்று மிகப்பெரிய நிறுவனமாக உலகையே வியாபித்து நிற்கிறது. இன்றைக்கு உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும், இஸ்லாத்தைப் போல, கட்டுப்பாடும் ஒழுங்கும் உள்ள ஒரு மதத்தை எங்கும் அடையாளம் காட்ட முடியாது. நான் இஸ்லாமியர்கள் மத்தியில் பேசுகிறேன் என்பதற்காக உணர்ச்சிவயப்பட்டு இதை சொல்லவில்லை.

மக்காவிலே கோடிக்கணக்கான மக்கள் கூடுகிற அந்த இடத்திலே, எத்தனைக் கோடிப் பேர் திரண்டாலும் ஒருவருக்கொருவர் இடித்துக் கொள்ளாமல், முட்டிக் கொள்ளாமல், அவர்கள் இறைவனை வழிபடுவதில் சரிசமமாக இருந்து மண்டியிட்டுத் தொழுகை நடத்துவதை ஒரு மிகப் பெரிய ஓவியமாக நம்மால் பார்க்க முடிகிறது. வேறு எந்த மார்க்கத்திலும், மதத்திலும் அந்தக் கட்டுப்பாட்டை பார்க்க முடியவில்லை.அப்படிப்பட்ட ஒரு ஒழுக்கத்தையும், நல்ல தலைமைப் பண்பையும் கற்றுத் தருகின்ற ஒரு மிகப்பெரிய மத நிறுவனத்தை ஒரு தலைவரால் கட்டியமைக்க முடிந்தது என்று சொன்னால்., அதற்கு எவ்வளவு பெரிய அர்பணிப்பும் போர்க்குணமும் தியாக உள்ளமும் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட நபிகளாரைப் போல வியூகமும் தொலைநோக்கும் கொண்ட தலைவர்கள் நமக்குத் தேவை. அவரை நான் இறைவனின் தூதர் என்று பார்ப்பதை விட, அரசியல் தளத்தில் நின்று கொண்டு, ஒரு மகத்தான அரசியல் தலைவராகப் பார்க்கிறேன்.அதைப் போல தலைமைப் பண்புள்ளத் தலைவர்கள் இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்திற்குத் தேவை.

தலைமைப் பண்புள்ளத் தலைவர்கள் வருகின்ற போது, எத்தனைக் குழுக்கள் இருந்தாலும் அவை ஒற்றை வடிவமாய், ஒற்றை முகமாய் இருக்கும். தலைமைப் பண்புள்ள தலைவர்கள் உருவாகாத வரையில் குழுக்கள் மேலும் மேலும் பல குழுக்களாகச் சிதறும். ஒற்றுமை பாழ்பட்டு விடும்.

ஆக, இதையெல்லாம் மனதில் கொண்டு நாம் நமது பயணத்தை திட்டமிட வேண்டும். இன்றைக்கு விதைத்து நாளைக்கே அறுவடை செய்கிற அவசரம் நமக்கு வேண்டாம். 2016 வரை நாம் உழைப்போம், நமக்காகத் திட்டமிட்டு உழைப்போம், அரசியல் சக்தியாய் எழுச்சி பெறுவோம். அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வோம்.

இதைத் தவிர வேறு எந்த உள்நோக்கத்த்தோடும் திருமாவளவன் உங்களோடு அமரவில்லை; எந்த எதிர்பார்ப்போடும் திருமாவளவன் உங்களோடு உரையாடவில்லை. 2016 தலித் - இஸ்லாமியர் ஆண்டு என்கிற முடிவை நான் எடுக்கிற போது, எந்த அரசியல் கட்சித் தலைவர்களோடும் சேர்ந்து எடுக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கக் கூடிய இஸ்லாமியத் தோழர்களோடு சேர்ந்துதான் இந்த முடிவை நான் எடுத்தேன்.

முஸ்லிம்களை நோக்கிய எனது பயணத்திற்கும், அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் ஒரு சமூகத்தின் விடுதலை அரசியல் களத்தோடு தொடர்புடையது. அதை நாம் மறந்து விடக் கூடாது. மதமும் அரசும் இரட்டை விழிகள் மாதிரி.இரண்டு விழிகளால் ஒற்றை உருவத்தைப் பார்ப்பது போல மதமும், அரசும் சேர்ந்து தான் மக்களை வழிநடத்துகிறது. அரசு என்பது அதிகாரத்தோடு தொடர்புடையது. அதிகாரம் என்பது யாருக்கோ சில நபர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. குறிப்பிட்ட சில இனத்துக்குச் சொந்தமானதும் அல்ல. உன்னாலும் என்னாலும் உருவானது தான் அதிகாரம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஆகவே, மண் ஒரு சொத்து என்பதைப் போல,கட்டிடம் ஒரு சொத்து என்பதைப் போல, வண்டி வாகனம் ஒரு சொத்து என்பதைப் போல, செல்வம் ஒரு சொத்து என்பதைப் போல, பிள்ளைகள் ஒரு சொத்து என்பதைப் போல அதிகாரம் ஒரு சொத்து. இந்த மண்ணில் எனக்கு ஒரு பங்கு உண்டு என்பதைப் போல, இந்த நீரில் எனக்கு ஒரு பங்கு உண்டு என்பதைப் போல அதிகாரத்திலும் எனக்குப் பங்கு உண்டு.

ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு மட்டுமே இந்திய அதிகாரம் சொந்தமானதில்லை. இதில் திருமாவளவனுக்கும் பங்குண்டு, இந்த அதிகாரத்தில் யூசுபுக்கும் பங்கு உண்டு.

நான் இந்த மண்ணில் குடிமகனாக இருக்கிற காரணத்தினால், நான் ஓட்டுப் போடுகிற உரிமை பெற்றிருக்கிற காரணத்தினால், நாம் சேர்ந்து இந்த நாட்டையும், அதன் சட்ட திட்டங்களையும் உருவாக்கி இருக்கிற காரணத்தினால், நாம் இந்தச் சட்டங்களை மதிக்கிற காரணத்தினால் உருவானது தான் அரசு, உருவானது தான் அதிகாரம். ஆகவே அந்த அதிகாரத்தில் எனக்கும் பங்குண்டு, உனக்கும் பங்குண்டு.

இந்த எனக்கும் உனக்கும் என்கிற சொல்லுக்கு இடையில் உள்ள சுவரை உடைத்து விட்டு, நமக்கு என்ற 
ஒற்றை சொல்லால் அழைப்போம். நன்றி

Thursday, September 2, 2010

"மாற்ற நினைத்தேன், மாறி விட்டேன்"

யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.

மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...  

இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ் 

யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).

இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.       

1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.

அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...

"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது"

"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப்  போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.    

இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது... 

நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.    

முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

ஆம்...

ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.                 

முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு  தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன். 

  
இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.

இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.

இதுதான் நான் எதிர்பார்த்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான். 

ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம். 

பல கேள்விகள்...

நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்"

கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.   

"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல்கள். 

பிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திரித்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...

என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...

எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....

இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..

ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்... 

பாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா? 

இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...

என்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்? 

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?

என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா? 

இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன். 

இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...

சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.                

கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?...

உற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன். 



பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார், 

நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...   

நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அது. 

மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.

கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.

எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...

ஹேய்... இரு..................இரு..................நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...

அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...

என்ன? 

ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...                           

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...

இரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்.. 

என் மனைவி என்னை நம்பவில்லை. 

ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...

நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார். 

சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன். 

இறைவா எனக்கு நல்வழி காட்டு....

இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுபானல்லாஹ்...

என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன். 

நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான். 

dad,..... அப்போ நீங்கள்? 

இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.

பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...

எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்? 

நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம், 

நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது? 

அவர்கள் அவரிடம் சென்று கேட்டனர்... 

அவர் கூறினார் "கடந்த ஒரு வருடமாக...."

சுபானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்..."

யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர். 

இப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில்பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.

இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்

இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது "ATHEIST KILLER" என்பது...ஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:
1. Sheikh Yusuf Estes talk on "priests and Preachers Coming to Islam" - for Islam today.
2. Sheikh Yusuf Estes interview on "How he came to Islam" with eddie - for thedeenshow.  
3. Sheikh Yusuf Estes "How Yusuf estes came to Islam" - Islamtomorrowdotcom/yusuf_story.htm


ஆஷிக் அஹ்மத் அ


T

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!