Showing posts with label பன்முக காரியங்களுக்கு. Show all posts
Showing posts with label பன்முக காரியங்களுக்கு. Show all posts

Friday, August 22, 2014

பள்ளிவாசல்களை பன்முக காரியங்களுக்கு பயன்படுத்த சிந்திப்போமா !?

“அல்லாஹு அக்பர் என்று முழங்கும் 
அழகிய தலமே பள்ளிவாசல் 
எல்லா மாந்தரும் தொழவாருங்கள்
என்றே அழைப்பது பள்ளிவாசல் – மிக 
நன்றாய் அழைப்பது பள்ளிவாசல் “

என்ற பாடல் முழங்காத இடமில்லை. இறைவனின் இல்லம் என்று அழைக்கப்படும் பள்ளிவாசல்கள், இறைவனின் பெரும் கருணையினால் இதுவரை பள்ளிவாசல்கள் இல்லாத  கிராமங்கள் மற்றும் தெருக்கள்  தோறும் கட்டப்பட்டு வருகின்றன. பல பெரிய ஜமாத்கள் இருக்கும் ஊர்களில் ஏற்கனவே இருக்கும் பள்ளிவாசல்கள் விரிவுபடுத்தப்படுவதுடன் குளிர்சாதனங்கள் போன்றவைகள் பொருத்தப்பட்டு நவீன வசதிகள் கொண்டவைகளாகவும் ஆக்கப்படுகின்றன. அரபுநாடுகளுக்கு சென்று நம்மில் பலர் பொருள் ஈட்டத் தொடங்கியதன் விளைவாக அந்த நாடுகளில் அமைந்திருக்கும் பாணிகளிலும் டிசைன்களிலும்  பல ஊர்களிலும் பிரம்மாண்டமான பள்ளிவாசல்கள்    அமையத் தொடங்கிவிட்டன. மேலும், கருத்து மாறுபாடுகளால் தோன்றிய பல்வேறு இயக்கங்களினால் சமுதாயத்துக்கு எவ்விதப் பயனும் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஏறக்குறைய ஒவ்வொரு ஊரிலும் புதிய பள்ளிகள் ஊருக்கு வெளியேயாவது நிர்மாணிக்கப்படுவதையும் நாம் மறுக்க இயலாது.

அதே நேரத்தில் பள்ளிவாசல்கள் என்பவை ஐந்து நேரம் ஒன்று கூடி இறைவனை வணங்க மட்டும்தானா அல்லது சமுதாயத்துக்குப் பயன்படும் வேறு பல காரியங்களுக்கும் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தலாமா என்பது பற்றி நாம் விவாதிக்க வேண்டி இருக்கிறது. இன்றும் கூட,  பள்ளிவாசல்கள் வேறு சில காரியங்களுக்கும் பொதுவாகப் பயன்படத்தான் செய்கின்றன.

எடுத்துகாட்டுக்களாக,
தெரு அல்லது ஊரில் ஏற்படும் தனி நபர்  அல்லது குடும்பப்பிரச்சனைகளை பள்ளிவாசல்களில் கூடி பஞ்சாயத்தாகப் பேசுவதற்கு கூடுமிடமாகப் பள்ளிவாசல்கள் பயன்படுகின்றன.

திருமணம் போன்ற காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்று வருகின்றன.

பல ஊர்களில் விருந்து போன்ற காரியங்களுக்கான சமையல்கூடமாகவும் விருந்து பரிமாறப்படும் இடங்களாகவும்  பள்ளிவாசல்கள் பயன்படுத்தப் படுகின்றன.

இயல்பாகவே பள்ளிவாசல்களில் மதரசாக்கள் இயக்கப்படுகின்றன.
குழந்தைகள் காலை மாலை வேளைகளில் வந்து திருக்குர்-ஆன் பயின்று வருகிறார்கள்.

இவை போக அஸருக்கு பாங்கொலிக்கும் வரை காற்றாடப் படுத்து உறங்கும்/ ஒய்வு எடுக்கும் இடங்களாகவும்  பள்ளிகள் பயன்படுத்தப்படுவதையும் நாம் மறுக்க இயலாது.

இந்தப் பயன்பாடுகள் மட்டும் போதுமா ?
பள்ளிவாசல்களை  இன்னும் அதிகமான நன்மையான காரியங்களுக்குரிய இடமாகவும் பயன்படுத்த வேண்டும்.

பெருமானார் ( ஸல் ) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் கல்விக் கூடங்களாகவும், நல்லொழுக்கப்பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கும் இடங்களாகவும், இலக்கியம் முதலிய நிகழ்வுகள் அரங்கேறும் இடமாகவும், உடல்நலம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் இடமாகவும் , பொதுவான பிரச்சனைகள் அல்லது இடர்பாடுகள் நேரிடும்போது ஊரெல்லாம் ஒன்று கூடி தொழுகை நடத்தும் இடமாகவும், மருத்துவமனையாகவும், வெளியூர்களிலிருந்தும் பல சமயங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை தங்க வைக்கும் இடமாகவும் , போர்களுக்குத் தயாராவதற்கான வியூகங்களை விவாதிக்கும் இடமாகவும், நீதிமன்றமாகவும் பயன்படுத்தப்பட்டதாக நாம் அறிகிறோம். அதுமட்டுமல்லாமல் பள்ளிவாசல்கள் சிறைச்சாலைகளாகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் நாம் சரித்திரத்தில் படித்து தெரிந்து கொள்கிறோம்.  

இன்றைக்கு இந்த சமுதாயத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடைகள் மூலம் உயர்ந்த மினாராக்கள்,  அருமையான அலங்காரங்கள்  , வண்ண வண்ண விளக்கு வெளிச்சங்கள், ஆகியவற்றை அமைத்து தேவைக்கும் அதிகமான இடங்களை எல்லாம் வளைத்துப் பெரிய அளவில் பள்ளிகளைக் கட்டி வருகிறோம். பெரும்பாலான நேரங்களில் தொழுகை நேரம் அல்லது மதரசா நேரம் முடிந்ததும் பள்ளிகள் பூட்டுப் போட்டுப் பூட்டி வைக்கப்படுகின்றன.

பள்ளிவாசல்களை  என்னென்ன நன்மையான காரியங்களுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி நமது மனதில் தோன்றும் சில எண்ணங்கள்.

நூலகம்:-
பள்ளிவாசல்களில் நூலகங்கள் அமைக்கலாம். இன்றும் பல பள்ளிகளில் குர் ஆன்,  ஹதீஸ்,  துஆக்கள் அடங்கிய  அரபு மற்றும் தமிழ் மொழியில் உள்ள நூல்கள் சேகரிக்கப்பட்டு அல்லது வக்பு செய்யப்பட்டு அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை எடுத்துப் படிப்போர் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே. காரணம் இந்த நூல்கள் பெரும்பாலும் மார்க்கம் சார்ந்த நூல்கள் மட்டுமே. நாம் கூற வருவது மார்க்கக் கல்வி மற்றும் மார்க்கத்துக்கு முரண் இல்லாத பொதுக் கல்வி தொடர்பான நூல்களும் சேகரிக்கப்பட்டு ஒரு பகுதி நேர நூலகமாவும் பள்ளிவாசலின் ஒரு பகுதி இயங்கலாம்.

உதாரணமாக மார்க்கம் தொடர்பான        சட்டங்கள், வரலாறுகள், பொதுச் சட்டம் ,  பொருளாதாரம் தொடர்பான நூல்கள், வருமானவரி மற்றும் விற்பனை வரி  போன்ற நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நூல்களை சேகரித்து வைத்து நாமும் மற்றும் நமது மாணவர்களும் படித்துக் கொள்ள மற்றும் குறிப்பெடுக்க உதவலாம். அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி நூல்களை இந்த நூலகத்தில் வாங்கி வைக்கலாம்.  எவ்வித இயக்கங்களையும் சாராத பொதுவான நடுநிலையான சஞ்சிகைகள், வார இதழ்களை அந்தந்த முஹல்லாவில் உள்ளவர்களின் ஆதரவுடன் வரவழைத்து வைக்கலாம். அமர்ந்து படிப்பவர்களுக்கு வசதியாக நாற்காலி , மேஜை, காற்றாடி ஆகிய வசதிகள் அங்கு செய்து தரப்பட வேண்டும்.  பல பள்ளிவாசல்களில் நிறைய இடங்கள் பயன்படுத்தப் படாமல் ஒதுக்குப் புறமாக இருப்பதை  நாம் பார்க்கிறோம் . அவைகளை இத்தகைய நூலகத் தேவைக்கு பயன்படுத்தலாம் என்பதை நாம் பரிசீலிக்க  வேண்டும்.

ஆய்வரங்கம் மற்றும் பயிலரங்கம்:-
பெங்களூர் நகரத்தில் இருக்கும் சிடி ஜாமி ஆ பள்ளிவாசலில் சமுதாயத்தில் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக அருமையான ஏற்பாடுகளை அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த நகருக்கு வருகை தரும் அறிஞர்களை அங்கு வரவழைத்து மாணவர்களுக்காக உரையாற்றச் செய்கிறார்கள். செமினார்  என்கிற  கருத்தரங்களை நடத்துகிறார்கள். கேள்வி பதில் நிகழ்வுகளை நடத்துகிறார்கள்.

இன்றைய நவீன யுகத்தில் கணினியின் தேவை மற்றும் பயிற்சின் தேவை ஆகியவை இன்றியமையாதாகி விட்டது. அனைவரும் இவற்றைப் பயின்று கொள்ளும்படி  பள்ளிகளில் ஒரு இடத்தை ஒதுக்கி இந்த வசதிகளை செய்து கொடுக்கலாம். கணினியை பயன்படுத்த வருகை தரக் கூடிய மாணவர்களையும் அவர்கள் கணினியைப் பயன்படுத்தும்போது வருகை தரும் தளங்களையும் கண்காணித்துக் கொள்ள வேண்டும். கரையான் புற்றெடுக்கப் பின் கருநாகம் குடி புகுந்த கதையாக மாறிவிடக் கூடாது.
மாணவர்களுக்காக நமதூரில் இருந்து வெளிநாடுகளை உயர் பதவிகளை வகிப்போர்கள் விடுமுறையில் வரும்போது அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கூடமாக பயன்படுத்தலாம். வேலைவாய்ப்புகள் இருந்தால் அவற்றைப் பற்றிய தகவல் தரும் கூடமாகவும் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு வருடமும் தேர்வுகள் முடிந்ததும் ஊரில் இருக்கும் கல்வியாளர்கள் பள்ளி வாசல்களில் ஒன்று கூடி மாணவர்களுக்கு , அவர்களின் தொடர் கல்விக்கான ஆலோசனைகளை வழங்கும் கலந்துரையாடல்கள் நிகழ்த்தும்  இடங்களாகவும் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தலாம். படித்து முடித்த இளைஞர்களின் ஒத்துழைப்புடன் தேவையான சான்றிதழ்களை பெற்றுத்தரும் கேந்திரமாகவும் பள்ளிவாசல்கள் பயன்படுத்தப்படலாம்.

ஜகாத் விநியோக மையம் :-
பள்ளிவாசல்கள்  நோன்புக் கஞ்சி பரிமாறும்   இடங்களாக மட்டுமல்லாமல் ஜகாத் மற்றும் பித்ரா மற்றும் சதக்காக்களை பங்கீடு செய்யும் கேந்திரமாகவும் செயல்படலாம். அந்தந்த முஹல்லாவில் ஜகாத் தருவதற்கு தகுதிபடைத்தோர்  பற்றிய தகவல்களை திரட்டி பதிவு செய்து வைப்பதுடன் அவர்களிடம் தேவையானால் கவுன்சளிங்க் செய்து ஜகாத்தை வசூலித்து தகுதியான ஏழைகளுக்கு வழங்கிட உதவும் நிலையங்களாக பள்ளிவாசல்கள் செயல்படலாம்.

மருத்துவ முகாம்கள் நடைபெறும் மையம் :-
இலவச கண் சிகிச்சை மற்றும் பொது வியாதிகளுக்கான சோதனைக் கூடங்களின் முகாம்களை அவ்வப்போது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பள்ளிவாசல்களின் வெளிப் பகுதிகளில் ஏற்பாடு செய்யலாமே!

ஷரீஅத்  நீதி மன்றங்கள் :-
குடும்ப வழக்குகள், சொத்துப் பிரச்சனைகள் ஆகியவற்றைத்  தீர்த்துக் கொள்ள காவல்துறை மற்றும் நீதிமன்றங்களை நாடி நமக்குள் விரோதங்களையும் செலவினங்களையும்  வளர்த்துக் கொள்வதைவிட  நமக்குள் பேசி நடுநிலையாகத் தீர்த்துக் கொள்வதற்குரிய இடங்களாகப் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தலாமே!

இத்தகைய ஆக்கபூர்வமான காரியங்களைச்  செய்யாமல் பள்ளிவாசல்களில் வீணாகக் கூடி வீண் பேச்சுக்களை பேசி ஷைத்தானைக் கூட்டளியாக்கிக் கொள்ளாமல் பள்ளிவாசல்களை பன்முகக் காரியங்களுக்கும் பயன்படுத்துவதைப் பற்றி நாம் சிந்திப்போமா ?

THANKS TO  http://www.adirainews.net/2014/08/blog-post_81.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!