Showing posts with label நீடூர்-நெய்வாசல். Show all posts
Showing posts with label நீடூர்-நெய்வாசல். Show all posts

Thursday, November 25, 2010

கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்

“தமிழகம் முழுவதும் முக்கால் பகுதி வக்ப் வாரிய சொத்துக்கள் பயன்படுத்தப் படாமலும் ஆக்கிரமிப்பிலும் உள்ளன. இவற்றை சமுதாயத்தின் ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் நிதித்தேவைக்குப் பயன்படுத்தலாம் அல்லது கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று எண்ணியபோது கல்வி வளர்ச்சியே சிறந்ததாகத் தோன்றியது. சரி கல்வி வளர்ச்சிக்கு கல்லூரி துவக்கலாம் என்று எண்ணியபோது அதில் மருத்துவக் கல்லூரியே சிறந்ததாகத் தோன்றியது.
எனவே, சமுதாய மக்கள் கல்லூரி துவங்க எண்ணினால் அதற்கு தமிழ்நாடு வக்ப் வாரியம் 
துணை நிற்கும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு அதற்கு பலரும் முன் வந்துள்ள நிலையில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கான இடங்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேரில் கண்டு ஆய்வு செய்கிற வேளையில் 
நீடூர்-நெய்வாசல் JMH அரபிக் கல்லூரிக்கு வந்திருந்தபோது JMH அரபிக் கல்லூரியின் நிர்வாகத்தினர் தங்களிடம் 30 ஏக்கர் இடம் இருப்பதாக் கூறி அதில் கல்லூரித் துவங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதன் விளைவுதான் இன்றைய வரலாறு போற்றும் ஆலோசனைக்கூட்டமும் அதன் தீர்மானங்களும். ” விளக்கவுரையாற்றிய தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் முயற்சி இறைவனின் பொறுத்தத்திற்குரியது.
தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சி இதுவரை நீடூர்-நெய்வாசல் வரலாற்றில் யாரும் செய்திடாத ஒரு புதுமையான முயற்சியின் தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
J.M.H.அரபிக்கல்லூரியின் தலைவர் T.S.R.நஜிமுத்தீன் ஹாஜியார் அவர்களின் தலைமையில் இன்று(13-11-2010) காலை J.M.H நிக்காஹ் மஹாலில் துவங்கிய நிகழ்ச்சியில் புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் A.M.H.நாஜிம், காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் முஹம்மது இஸ்மாயீல், காரைக்கால் அன்னைக் கல்லூரி தாளாளர் நஜிமுத்தீன், மயிலாடுதுறை நகரமன்றத் தலைவர் லிங்கராஜன், சச்சா முபாரக் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் உரையாற்றினார்கள்.
மருத்துவக் கல்லூரிக்கான அரசு அனுமதியை வாங்குவதற்கு முதலில் கல்லூரிக்கானக் கட்டிடம் கட்டப்பட வேண்டும். அங்கு 2 ஆண்டு காலம் மருத்துவமனையை நடத்த வேண்டும். அதன் பின்னர்தான் முறையான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். கல்லூரித் துவங்க ஆரம்ப கால நிதியாக ரூபாய்.50 கோடி தேவைப் படுகிறது. இந்த 50 கோடியை ஒரு பங்கின் விலை ரூபாய் 10 லட்சம் என்று 500 பங்குகளாக பிரித்து சமுதாய மக்களில் வசதிக்கேற்ப வாங்குவதற்கு வழி செய்யலாம் என்றும், ஜமாத் ரீதியாகவும் தனி நபர்கள் பலர் சேர்ந்தும் பங்குகளை வாங்க வழி செய்யலாம் என்றும் ஆலோசித்து முடிவு செய்யப் பட்டது. பங்குதாரர்கள் நிர்வாகக்குழு அங்கத்தினர்களாக தகுதி பெறுவார்கள். இன்ஷா அல்லாஹ் நமக்கு கிடைக்கும் மருத்துவ சீட்டுகளில் பங்குதாரர்கள் மூலம் சமுதாய மாணவர்கள், குறிப்பாக வசதி வாய்ப்பற்ற மாணவர்கள் பயனடைய செய்ய வேண்டும் என்பதே இத்திட்டதின் குறிக்கோள்.
கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய தினமே வாங்கப் பட்டுவிட்டன. தமிழகத்தை 4 மணடலங்களாகப் பிரித்து அனைத்து தமிழக முஸ்லிம்களின் பங்களிப்பில் நீடூர் J.M.H.A-வக்ப் மருத்துவக் கல்லூரியை வெற்றிகரமாக துவங்கியபின் இதை முன்மாதிரியாக வைத்து இதர பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி சமுதாய மருத்துவர்களை உருவாக்க எடுக்கப் பட்டிருக்கும் இம்முயற்சி சாதாரணமான விஷயமல்ல.
இவை அனைத்தும் தீர்மானங்களாய் நிறைவேற்றப் பட்டபோது சமுதாயமே ஆனந்தத்தில் மகிழ்ந்தது. இந்த லட்சியக் கனவு நனவாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.
நம்மாலான முயற்சியில் கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!