Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Monday, October 10, 2011

சகோ ஹாலிதின் ஆதங்கம் .....

இறைவனின் திருப்பெயரால் 
அன்புள்ளவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்..

த முமுக நம் சமுதயத்திர்க்காக கிடைத்த பெரும் பொக்கிஷம், இது அரசிடமிருந்து பெறவேண்டிய சலுகைகளை போரடி பெற்றுள்ளனர் இன்னும் பெற போராடிக் கொண்டுள்ளனர். இன்னும் எத்தனையோ சேவைகளை செய்தவண்ணம் இருக்கின்றனர்.  இத்தகைய சமுதாய நலன் அமைப்புகளில் உள்ளவர்கள் சங்கத்தின் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாத ? ஏன் இன்னும் கோணல் பார்வை, குருடன் போக்கு. 

முந்தய சங்கங்களின் செயல் பாடுகள் கல்யாண வரி வசூலிப் பதிலும் மற்றும் மன முறிவு (தலாக்)  ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாக மட்டுமே இருந்துள்ளது. சங்கம் என்பது பலதரப்பட்ட மாற்று கருத்துடையவர்களின் கூட்டமைப்பே, பலதரப்பட்டவர்கள் மாற்று கருத்துள்ளவர்கள்  இதில் அங்கத்தினராக இருக்கலாம். ஆனால் அதன் செயல்பாடுகள்  அனைவருக்கும் சமமாகவும் / நீதனமகவும் ஒளிவு மறைவின்றி   இருக்கவேண்டும். ஒருசில நேரங்களில் சமுதாய நலன் கருதி முடிவுகள் எடுக்க நேரிடும்பொழுது சிலரிடமிருந்து கசப்பான எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதை சமுதயத்திர்க்காக பொருந்திக் கொண்டுதான் ஆகவேண்டும், யாரும் பாதிக்கப்பட்டோம் என்று கருதினால்  மேல்முறையீடு செய்வதுதான் சாலச்சிறந்தது. பொதுவாக அமைப்புகள் /  சங்கங்கள் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. எல்லாவற்றையும்  எதிர் கொண்டுதான் ஆகவேண்டும், உணர்ச்சிவசப்பட்ட  தேவை இல்லை.

சிலசமயம் வின்( மேலும் சில இயக்கங்களின் )  செயல்பாடுகளில் நமக்கு மாற்று கருத்துகள் இருந்த போதிலும் அதை புறம் தள்ளிவிட்டு அல்லாவிற்காகவும்   நம் சமுதாயத்திற்காக   உழைக்க கூடிய அந்த மக்களுக்கு  முடிந்தவரை ஒத்துழைப்பையும் துவாவையும்  செலுத்தி கொண்டுதான் இருக்கின்றோம்

புதிதாக அமைந்த சங்க நிர்வாகிகள் நிர்வாக திறன் பாராட்ட தகுந்தவையாக உள்ளது,  சில விசயங்களில் உடனுக்குடன் சம்மந்த பட்டவர்களை தொடர்பு கொண்டு அதற்காக முயற்சியில் ஈடுபடுகின்றனர் . இவர்களுக்காக முடிந்தவரை ஒத்துழைக்க வேண்டும்.  இதற்க்கு மெருகூட்டும் வண்ணம் அமீரக வாழ் சம்சுல் இஸ்லாம் சங்கம் அமைப்பு நடத்திய ஒருங்கிணைந்த நிகழ்வும்,மேலும் அதிரை அனைத்து முகல்லாக்களின் ஒருங்கிணைந்த பொதுக் கூட்டமும் மனதிற்கு புது தெம்பை தந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.      

சங்கங்கள் தன்னை கல்யானவரி மற்றும் தலாக் போன்ற பஞ்சாயத்தில் மட்டும் நின்று விடாமல்  நம் சமுதாயத்தில் நிலவும் சமுக ஒழுங்கீனங்ககளை சீர்படுத்த முயற்சி செய்யா வேண்டும்.

உலமாக்களின் கட்டுப் பாட்டில் இருக்கின்றோம் என்று கூறும் சங்கங்கள்  பொருளாதரத்தில் நலிவடைந்த உலமாக்களுக்கு / பள்ளிகளை பராமரிக்கும் முஹைதீன் / நம் பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுக்கும்  உஸ்தாதுகளுக்கு   நம் ஊர் வாழ்க்கை தரத்திற்கு  ஏற்றவாறு  ஊதிய உயர்வு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

வேட்பாளர் களிடத்தில் உறுதிமொழி வாங்கியது போல், சங்கத்திற்கு கல்யாண வரி வசூலிக்கும் முன்பு பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டிற்கு கை கூலி கொடுத்து இருக்கிறீர்களா என்று வினவ வேண்டும்  அப்படி கை கூலி வரதச்சனை வாங்கி இருந்தால் அந்த கல்யாணத்திற்கு பதிவு புத்தகத்தை அனுப்ப மாட்டோம் என்று (பெயரளவிலாவது) முதல் கட்ட  நடவடிக்கை எடுக்க வேண்டும்     

ஒவ்வொரு முகல்லாவிலும் படிக்கும் மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அந்தந்த முகல்லாவில் அடிப்படை மார்க்க அறிவு போதிக்கப் படுகிறதா என்று ஆராய வேண்டும்

பாதியில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் (பொருளாதார அல்லது அறிவுரீதியாக கற்க கடினப்படும்) செய்யும் மாணவர்களை  இனம் கண்டு  அதற்க்கு ஏற்றவாறு உதவி செய்ய  ஆலோசனை வழங்க வேண்டும்.
       
துரதிஷ்டவசமாக நம் ஊர் மக்கள் ஏனோ இன்னும் இட ஒதிக்கிட்டை அனுபவிக்காமல் இன்னும் அரசு தரும் சலுகைகளை பெற   முயற்ச்சி செய்யாமல்  கடவுச் சீட்டை  மட்டுமே நம்பி வாழ்க்கையை துலைத்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதும் நம் சமுதாயம் இன்னும் விசா வியாபாரிகளின் கையில் சிக்கி சின்ன பின்னமாகி கொண்டிருக்கின்றது என்பதுதான் கசப்பான உண்மை.

மேலும் சில / பல கொள்கைகளால் பிரிந்து கிடக்கும் நம் சமுதாய இயக்க சகோதர்கள் வீண் விதண்டவாதமும், கொள்கை சண்டைகளை முச்சந்திக்கு முச்சந்தி செய்வதை விட்டுவிட்டு பயனுள்ள வழியில் வருங்கால சந்ததியினருக்கு,  நாம் வரிசெலுத்தும் அரசிடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மை அல்லது  பொது  இட ஓதிக்கிட்டு முறையில்  கல்வி , வேலைவாய்ப்புகள்  பெற முயற்சி செய்தல் வேண்டும்  , முதியோர் ஊக்க தொகை, ஏழை விதவை களுக்கான பணம், உலமாக்கள்  ஊதியம்  போன்ற  என்னென்ன சலுகைகளை பெறமுடியுமே அனைத்தையும் பெற சங்கங்களோடு சேர்ந்து  முயற்சிக்கவேண்டும். இதற்காக ஒவ்வொரு முஹல்லா  சங்கத்தில்  உள்ள கட்டிடத்தில் தனி அலுவலகமே செயல் படவேண்டும்

இதுவரை நம் சமுதாயத்திற்கான பொது  பெண் மருத்துவரை பெற முயற்ச்சி செய்யவில்லை நன்கு படிக்கும் நடுத்தர அல்லது  ஏழை மாணவிகளை இன்று முதல்    தேர்ந்தெடுங்கள்    இன்ஷா அல்லாஹ் அதற்க்கு தேவைப்படும் பொருளாதாரம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள்  செய்ய வெளியில் உள்ள நாங்கள் அதிரை சொந்தங்கள் மேலும் நட்பு வட்டங்கலில் சொல்லி ஆதரவு திரட்டி  உதவி செய்கின்றோம்.  இன்ஷா அல்லாஹ்

மேலும் நமக்காக நம் சமுதாயத்திற்கான சட்ட நிபுணர்கள், வழக்கரிங்கர்கள் (law  studies), ஊடகவியலாளர்கள் (journalist )  இந்தியா மேலாண்மை அதிகாரிகள் (IAS ,IPS )   படிக்க ஆர்வமுடைய மாணவர்கள் தேவை இன்ஷா அல்லாஹ் இதற்காகவும்  அமைப்புகளும், சங்கங்களும் ஒருங்கிணைந்தால் அனைத்துதரப்பிலும் உதவி செய்ய ஒத்த கருத்துடைய நாங்கள்  தயாராக இருக்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ் ஒன்றுகூடி வளம் பெறுவோம்

வல்லோனின் வான் துணையில்
தங்களின்
மு அ ஹாலித், சிட்னி   

குறிப்பு : இத்துடன் அதிரை பேரூர்ஆட்சி  செயலற்று கிடந்த பொழுது அதற்க்கு மாற்றாக council for adirai promotion (CAP)  என்ற அமைப்பை உருவாக்கிய தன்னார்வ  சகோதர்களில்  அஸ்ரப் அலி அவர்கள் காலம் சென்ற மு . இ . ஹசன் அவர்களுக்கு ஆதரவு கேட்டு எழுதிய கடிதத்திற்கு
பதில் கடிதம் மர்ஹூம்  மு . இ . ஹசன்.

Wednesday, April 20, 2011

என்னவொரு மாற்றம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் நான் பார்த்த நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.

இவர் இஸ்லாத்தை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த கால இடைவெளியில் இவர் நம் உம்மத்திற்கு செய்துள்ள பணிகள் அளப்பரியவை. தாவாஹ் பணியில் சிறந்து விளங்கும் இவர், இன்றைய முஸ்லிம் தலைமுறையினருக்கு மிகப்பெரும் ஊக்கமாய் திகழ்கின்றார்.

நான் மேலே கூறியவற்றிற்கு சொந்தக்காரர் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) அவர்கள். கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய இவர், தான் இஸ்லாமை தழுவியது குறித்து கூறிய கருத்துக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது...இன்ஷா அல்லாஹ்....

"ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரியாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத்தினேன்.

ரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டு கத்தோலிக்க பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்ற துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை. நல்ல மனிதர்களோடு பணியாற்றி கொண்டிருந்தேன்.

என்னை பார்த்து சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் 'சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பிவிட்டீர்கள். என்னவொரு மாற்றம்!!!'

நான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின்றேன்.

செயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகியவற்றை பற்றி அன்று ரோமில் படித்து கொண்டிருந்தது, இன்று உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.

பாதிரியாராக வர எனக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுபதற்கு பயிற்சியளிக்கப்பட்டதாகவே எண்ணுகின்றேன்.

சரி, ஏன் பாதிரியார் பணியை துறந்தேன்? சர்ச்சுகளுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோலிக்க கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மதத்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை.

தான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னை பாதிக்கப்பட செய்து நேர்வழி காட்டினான் அவன்.

நீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோலிக்க பாதிரியார் மணம் முடித்து கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஒரு அங்கமாக தொடரும் அதே வேலையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிக கடினமான முடிவு இது.என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எனக்கு புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிக பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர்நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து.

மணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது....

ஆ...இன்னொரு பிரச்சனையும் இருக்கின்றது....முஸ்லிம்கள்.....

நான் இதுவரை ஒரு முஸ்லிமை கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க்கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களை பற்றி அறிந்திருந்தது. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக்கலாம்.

என்னிடம் அப்போது பணமும் இல்லை...வேறு வழியும் இல்லை. எகிப்திற்கு செல்லுவதென முடிவெடுத்தேன்.

எகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமை சந்தித்தேன்.

நான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த அந்த சிறுவனால் தான்.

அன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன்.


'அஸ்-------ஸ--------லாமு அலைக்கும்'


அவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை.

உங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.

என் ஓட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன்.

அவனை கடந்து செல்லும்போது 'எப்படி இருக்கின்றாய்' என்று கேட்பேன்.

அவன் 'அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)' என்று பதிலளிப்பான்.

ஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய "அஸ்ஸலாமு அலைக்கும்' மற்றும் 'அல்ஹம்துல்லில்லாஹ்' என்ற வார்த்தைகளால் தான்.

விடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்கு திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது போன்று இல்லை.


கல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiq has a degree in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். குறும்புக்கார சிறுவர்களை கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள்.

அந்த சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்து பாடம் எடுப்பது. கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். யூத மதத்தை பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்தவன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது.

இஸ்லாம் குறித்து இந்த மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்து படிக்க ஆரம்பித்தேன்.

நிறைய படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன்.

மூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும்.....நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாரித்து கொள்வேன்.




ரமலான் மாதம் வந்தது....

இந்த சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில் தான் தரைவிரிப்பும் (Carpet), வாஷ்பேசினும் (Wash basin) உள்ளது. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா?'


அனுமதித்தேன்.....

சிறுவர்கள் தொழுவதை பின்னால் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ(1) செய்வது என இவை என்னை வசீகரித்தது. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகையில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன்.

ரமலான் முடிவில், இந்த சிறுவர்கள் மூலமாக எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன்.

அது போல, ரமலான் மாத ஆரம்பத்திலேயே இந்த சிறுவர்களிடம் கூறியிருந்தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ்விற்காக அல்ல, இந்த சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக...

ஆக, ராமலான் மாத முடிவில், எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன், நோன்பும் நோற்றிருந்தேன்.

மேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள.

சில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்) அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.

'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்'


அவர் கூற ஆரம்பித்தார்...

'இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம்கள்'


'நான் எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்'

'முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர்கள்'

'உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்'

என்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...

'முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்'

'Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்'

என் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், ' சகோதரர், நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்"

பின்னால் 'அல்லாஹு அக்பர்(2) ' என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.

நான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன.

தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது.

மிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்.....

உணர ஆரம்பித்தேன். இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது.

தொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.

'சகோதரர், நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன். என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்'

அவர் சொன்னார், 'நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அவரை பின் தொடர்ந்து கூறினேன், 'வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது.

முழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன்.

நான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான்.
என்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்"

சுபானல்லாஹ்...

இஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது.

முஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம்.

இஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார்.

உலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்கள் பகுதிக்கு/பல்கலைகழகத்திற்கு சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.

சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


அரபி வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:

1. ருக்கூ - குனிந்த நிலையில் இறைவனை தொழுவது.

2. அல்லாஹு அக்பர் - இறைவனே மிகப் பெரியவன் (God is Great)

Brother Idris Towfiq's website:

1. idristawfiq.com. link

My sincere thanks to:

1. Canadian Dawah Association.

This article translated from (not a word to word translation):

1. Irish priest embraces Islam - Canadian Dawah Association website. link

2. IQRAA TV - British Catholic priest converted to Islam. link

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹமத் அ


http://ethirkkural.blogspot.com/2011/04/blog-post_19.html

Wednesday, March 16, 2011

பட்டுக்கோட்டையில் ஒரு அதிர்ச்சி


 பட்டுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில், தபால் துறைக்குச் சொந்தமான சில மூட்டைகள், கேட்பாரற்று கிடந்தன. சிறிது நேரத்துக்குப்பின், தபால் துறை ஊழியர் ஒருவர், சாவகாசமாய் வந்து அந்த மூட்டைகளை தஞ்சை செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டு, முன்பக்கம் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். அதன்பின், விசாரித்த போது, அந்த மூட்டைகள், பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் என தெரிந்தது. பல மணி நேரம் அனாதையாக கிடந்த அந்த மூட்டைகளை வேண்டும் என்றோ, தவறுதலாகவோ யாரும் எடுத்து சென்றிருந்தால் விபரீதமாகி இருக்கும். பட்டுக்கோட்டையில் இருந்து, தஞ்சை வரை உள்ள விவசாய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் காய்கறி மூட்டைகளோடு மூட்டைகளாக பஸ்சில் இருந்து இறங்கும்போது எடுத்துச் சென்றிருந்தால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும்.

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் இந்த பகுதியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் விடைத்தாள்களை தனியாக ஒரு வேன் ஏற்பாடு செய்து சேகரித்து எடுத்துச்செல்வோம். விடைத்தாள்களை இன்ஸ்யூர்டு தபால் மூலம் பதிவு செய்வதாலும், மாணவ, மாணவியரின் எதிர்காலமே இந்த தபாலில் இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால், தற்போது திருச்சியில் உள்ள தமிழ்நாடு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவரின் தவறான உத்தரவின் பேரில், ஒவ்வொரு தபால் நிலையத்தில் இருந்தும், தனித்தனியாக பொதுத்தேர்வு விடைத்தாள்களை பஸ்களில் ஏற்றிச் சென்று, தஞ்சை ரயில்வே மெயில் சர்வீசில் சேர்க்க வேண்டும். அப்படி கொண்டு சேர்க்கும் போது தவறும் விடைத்தாள்களின் கதி என்ன என நினைத்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார். ஒரு சில மார்க்குகளில் எத்தனையோ மாணவர்களின் டாக்டர், இன்ஜினியர் கனவு கானல் நீராக போகிறது. இளைய சமுதாயத்தின் வாழ்க்கையையே மாற்றி போடக்கூடிய இந்த வினாத்தாள் மூட்டைகளை கொண்டு சேர்ப்பதில் கல்வித்துறை மற்றும் தபால்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

தினமலர்

Friday, February 4, 2011

நடத்துங்க நல்லபடி,இன்ஷா அல்லாஹ்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள சமூதாய சொந்தங்களே!
 இன்ஷா அல்லாஹ் வருகின்ற மார்ச் 20 அன்று சென்னை இல் மாபெரும் கல்வி கருத்தரகம் மற்றும் கல்வி இயக்கம் தொடக்க விழா நடைபெற உள்ளது . நமது சமுதாயம் கல்வி , வேலைவாய்ப்பு , அதிகாரம், சட்டம், நீதி மற்றும் பொருளாதார  நிலைகளில் தன்னிறை பெற்று விளங்கவேண்டும் அதற்கு  கல்வி விழிப்புணர்வு அவசியம் , இதற்காக தமிழக முழுவதும் சமூகநீதி அறக்கட்டளை சார்பில் சகோ CMN சலீம்  பொதுக்கூட்டம் நடத்திவருவது தாங்கள் அறிந்ததே ,  இம்மாநாட்டிற்கு தங்கள் பகுதியில் உள்ள சமுக சிந்தனை உள்ளவர்களை கலந்து கொண்டு சமுதாய பங்களிப்பு செய்யுமாறு இதன் அவசியத்தை நாம் வலிவுறுத்த வேண்டும். தமிழக முழுவதும் முஸ்லிம் குழந்தைகள்  இஸ்லாமிய அடிப்படை   கல்வி முறையில் கல்வி கற்க வேண்டும் ,மதரசா மாணவர்கள் உலக கல்வி-யும் கற்று  சிறந்து விளங்க வேண்டும்  அதற்கான முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை  நாம் அனைவரும் அல்லாஹ்வின் அருளை பெற்று அனைவரும் சமூதாய வளர்ச்சிக்கு    நம்முடைய பங்களிப்பவும் ஆதரவைவும் நல்க வேண்டுகிறேன்   தொடர்புக்கு : +919382155780
தங்கள் பகுதியில் உள்ளவர்களை சகோ சலீம் அவர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்
 
குறிப்பு : பிப்ரவரி 20  அன்று பல பகுதிகளில் பயிற்சி  முகாம் நடைபெறுகிறது .  
அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட
ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்
!
மேலும் விபரங்களுக்கு www.samooganeethi.org

Monday, July 5, 2010

மேற்கல்விக்காக ஏங்கும் ஏழை சகோதரனுக்கு உதவிடுங்கள்.

    ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


மாணவன் பெயர்:அஹமது
தந்தை பெயர்:        ஷேய்க் அப்துல்லா
தாய் பெயர்:           சகர் பானு
படிப்பு:                     12th standard
வயது                      18
மதிப்பெண்            962
அந்த மாணவனின் தந்தை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.தாய் EPS பள்ளியில் உஸ்தாதாக பணி புரிந்து கொண்டுள்ளார்.

மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில்,எப்படியும் மேற் படிப்பு படித்து முன்னேற வேண்டும் என துடிக்கும் இவருக்கு உதவ யாரும் இல்லாத நிலை.

இவருடைய இச் சூழ்நிலையை எண்ணி,அல்லாஹ்வுக்காக,இவருடைய கல்விக்கு உங்களால் முடிந்த அளவு உதவி,அல்லாஹ்வின் நல் அருளை பெற்றுக் கொள்வோம்.

அந்த மாணவனின் தொடர்பு முகவரி
 S.AHAMAD
29/12 GODOWN STREET,
ADIRAMPATTINAM
CONTACT # 9843535710

தகவல் உதவி :அப்துல் ரஜாக்
கலிபோர்னியா

Monday, May 24, 2010

படி அல்லது மடி

'எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.' (அல் குர்ஆன் : 13:11)
தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் கல்விக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள மார்க்கப் பிடிப்பையும் சமூகப் பற்றையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் ஒரு சில அறக்கட்டளைகள் மட்டுமே இந்த அறப்பணியைச் செய்து வந்தன ஆனால் இன்று தனிப்பட்ட முறையிலும் கூட தங்களால் இயன்ற அளவு படிக்கின்ற மாணவர்களின் நிலையை அறிந்து மனமுவந்து பலர் உதவி வருகின்றனர். இதன்மூலம் படித்து பட்டம் பெறும் முஸ்லிம் மாணவ மாணவியரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பெறுகி வருகிறது என்பதில் மாற்றமில்லை.

'கல்வி கற்றவராக இருங்கள்; கற்றுக் கொடுப்பவராக இருங்கள் கற்பவர்களுக்கும் கற்றுக கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவராக இருங்கள் என்று பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் வசதி வாய்ப்பைப் பெற்றவர்கள் செய்கின்ற இந்த அர்ப்பணிப்பு நிச்சயமாக சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதில் ஐயமில்லை.

இந்த அறப்பணியை மேலும் ஊக்கப்படுத்திடவும் உதவி செய்திடும் நல்ல உள்ளங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் யாரெல்லாம் கல்வி நிதியுதவி அளித்து முஸ்லிம் சமுதாயத்தின் வறுமையை ஒழித்திட சேவை செய்து வருகின்றனரோ அந்த முஃமீன்களோடு சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

பொதுவாக கல்வி நிதியுதவி கோரி வரும் விண்ணப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஓரளவிற்கு தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவை தாங்களே பூர்த்தி செய்திட முடியும் என்ற நிலையில் உள்ளவர்களும் கூட உதவி கோரி அறக்கட்டளைகளுக்கு விண்ணப்பிப்பது சற்று கவலை அளிக்கிறது.

மேலும் அனைத்து நிறுவனங்களுக்கும் விண்ணப்பித்து அதன்மூலம் கிடைக்கின்றவரை லாபம் என்ற எண்ணம் உடையவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

எங்கே முஸ்லிம் சமூகத்தின் ஒரு சிலர் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து வசதியுடையவர்களின் அர்ப்பணிப்பு எண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

முஸ்லிம்கள் சிலரின் அறியாமையால் பெருகி வரும் இதுபோன்ற சிறிய சிறிய இடையூறுகளைத் தவிர்த்து இந்தக் கல்விச சேவை வெற்றியடைந்திடவும் அதன் மூலம் முஸ்லிம் சமூகம் முழுமையான பலனைப் பெறவும் கல்வி உதவி செய்யக்கூடியவர்கள் தயவு கூர்ந்து கீழ்வரும் வழிமுறைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அறப்பணிகளை மேலும் மேலும் தொடர்ந்திடவேண்டுகிறோம்.

1. அறக்கட்டளைகள் மற்றும் தனவந்தர்கள் தாங்கள் அளிக்கின்ற கல்வி நிதியுதவி மூலம் பயன்பெறும் மாணவ, மாணவியர்களும் பிற்காலத்தில் இந்தச் சமூகப் பணியில் இணைத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கான வழிகாட்டுதல் மிகவும் அவசியம். அப்போதுதான் உதவியவர்களின் நோக்கமும் சமுதாயத்தின் தேவையும் தொடர்ந்து பூர்த்தியாகும்.

2. இன்றைய இந்தியச் சமூகத்தில் முஸ்லிம் சமுதாயம் பெரிதும் சிக்கலைச் சந்திக்கும் துறைகளுக்கான படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவ, மாணவியர்கே நிதியுதவியில் முன்னுரிமை கொடுப்பது நல்லது. இது சமூகத்தின் பாதுகாப்பு நிலையை பெரிதும் உயர்த்தும். அந்த வகையில் அரசுப் பணியை நோக்கிய கல்விப் பயணத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். அதிலும் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், உளவுத்துறை, காவல்துறை மற்றும் இதழியல்(ஜர்னலிசம்), சட்டம் ஆகிய துறை சார்ந்த படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி உதவி செய்திட வேண்டும். இவற்றிற்கு முழு முன்னுரிமை கொடுப்பது அடுத்த தலைமுறையின் சமூகப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.

3. உதவி செய்துவரும் பெருமக்கள் மிகக் குறிப்பாகச் செய்ய வேண்டியது ஒரு மாணவனின் அல்லது மாணவியின் கல்வித் தொகை முழுவதற்கும் பொறுப்பேற்று படிப்பு முழுமை பெறும் வரை நிதியுதவி செலுத்திட வேண்டுகிறோம். இருக்கின்ற பணத்தை குறுகிய தொகையாகப் பிரித்துப் பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தேவை முழுமையாக பூரத்தியாகாமல் இன்னும் யாரெல்லாம் உதவி செய்திகிறார்கள் அவர்களிடமும் பெற வேண்டும் என்கிற மோசமான பழக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்திவிடும், ஏற்படுத்தி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

4. பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவ, மாணவியற்க்குத்தான உதவிகள் அதிகம் தேவைப்படுகிறது. இயற்பியலில், வேதியியலில், கணிதத்தில், வேளாண்மையில், மருத்துவம், விண்வெளி போன்ற படிப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு ஆய்வுகள் முடிவுபெறும் வரை உதவிட வேண்டுகிறோம். அத்தகைய ஆய்வுகள் மனிதகுலத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும். பல புதிய விஞ்ஞானிகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.

5. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கல்வியின் அவசியத்தையும் ஆர்வத்தையும் எடுத்துச் சொல்லும் பிரச்சாரத்திற்கு (propogation)நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். துண்டுப்பிரசுரங்கள், கருத்தரங்கஙகள், பொதுக்கூட்டங்கள் என்று கல்விப் பணிகள் முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

ஆக சமுதாயத்தின் தேவையை பூர்த்தி செய்யும் துறைகளுக்கு முழு முன்னுரிமை கொடுப்பது படிக்கின்ற காலம் முழுமைக்கும் கொடுப்பது; ஆய்வுகளை ஊக்கப்படுத்துவது; தொடர் பிரச்சாரம் செய்வது. இதன்படி நமது அறப்பணிகளை அமைத்துக் கொண்டு கைகோர்த்துச் செயல்படுவோம் என்றால இன்ஷா அல்லாஹ் ஒரு மாபெரும் சமூகப்புரட்சி நமது சமூகத்தில் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. அவை முஸ்லிம் சமூகத்தை முன்னேறிய சமூகமாக வெகு விரைவில் மாற்றிவிடும் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம் நன்றி: CMN சலீம்

கல்விதொடர்பான ஆலோசனைகளுக்கு :தொலைபேசி எண் 91 9382155780.

Thursday, September 24, 2009

நீங்களும் முயற்சிக்கலாமே!

சமச்சீர் கல்விக்கான புதிய பாடத் திட்டம் தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகள் ஆகியவையும், பாடப் புத்தகங்கள் எழுத தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (டி.டி.இ.ஆர்.டி.) கூறியுள்ளது.

இது தொடர்பாக டி.டி.இ.ஆர்.டி. புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவதன் முதல் கட்டமாக 1 முதல் 10-ம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக கல்வி வல்லுநர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட 150 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பாடத் திட்டம் தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகள் கூற விரும்புகிறவர்கள் தங்கள் கருத்துகளை "இயக்குநர், டி.டி.இ.ஆர்.டி. டிபிஐ, வளாகம், கல்லூரி சாலை, சென்னை-06' என்ற முகவரியிலோ அல்லது

dtert@tn.nic.in

என்ற மின்னஞ்சலிலோ தெரிவிக்கலாம்.

இக்கருத்துகள் தேவையின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

பாடப் புத்தகம் எழுத: முதல் கட்டமாக 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கும், 2-ம் கட்டமாக 2, 3, 4, 5, 7, 8, 9, 10-ம் வகுப்புகளுக்கும் பாட நூல்கள் தயாரிக்கப்பட உள்ளன.

பாடப் புத்தகங்களை எழுதுவதற்கு தகுதியும், திறனும் உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் பாட நூல்கள் எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை

www.pallikalvi.in

என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக, சென்னை டி.பி.ஐ.யில் உள்ள டி.டி.இ.ஆர்.டி. இயக்குநருக்கு 5.10.09-க்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப உறையின் மீது பாடப் புத்தகங்கள் எழுதுவதற்கான விண்ணப்பங்கள் என்று குறிப்பிட வேண்டும்.

புத்தகம் எழுத தெரிவு செய்யப்பட்டு, பணியை மேற்கொள்பவர்களுக்கு மதிப்பூதியம், பயணப்படி, சான்றிதழ் போன்றவை வழங்கப்படும். எழுதுவோரின் பெயர்களும் புத்தகத்தில் இடம்பெறும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பி.ஈஸ்வரி -94449 29142; கே.மஞ்சுளா -98412 98425; என்.சத்தி -94445 20311 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, July 2, 2009

எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பது யாருக்குமே தெரியாது!

ஒரு மாணவன். அவனது தந்தை நல்ல வசதி படைத்தவர். அவனை எப்படியாவது நன்றாக படிக்க வைத்து விட வேண்டும் என்பதில் அவருக்கு அளவு கடந்த ஆர்வம். நல்லதொரு கல்லூரியில் சேர்த்து விடுகிறார் மகனை. அவனுக்கு என்னடாவென்றால் படிப்பு ஏறவில்லை. முதலாம் ஆண்டில் பல பாடங்களில் தோல்வி. தந்தையிடம் மறைத்து விட்டான். தந்தையோ மகனிடம் மிக அதிக நம்பிக்கை வைத்திருந்தார். பையன் - பாடங்களை சிரமப்பட்டுப் படித்து தேர்வுகளை மீண்டும் எழுதினான். மீண்டும் தோல்வி. என்ன செய்தான் தெரியுமா? தற்கொலை. "எப்படியும் போங்கடா!" என்று விட்டு விட்டார் மற்ற மகன்களின் கல்வி விஷயத்தில்!

ஆனால் இங்கே ஒரு மாணவன். ஆயிரத்து இருநூறுக்கு தொள்ளாயிரத்துக்கு மேல் எடுத்திருந்தான். கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் இந்த மதிப்பெண் எடுப்பது கூட பாராட்டுதலுக்கு உரியதே! ஜவுளிக் கடையில் வேலை கேட்டு வந்திருந்தான். மாதம் எழுநூற்று ஐம்பது சம்பளத்துக்கு. ஏன் அவன் படிப்பை தொடரவில்லை? தந்தைக்கு உடல் நலம் இல்லை. பாட்டி படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

எனது நண்பர். அவர் ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். அவர் சொன்னார். ஒரு இறுதி ஆண்டு மாணவன். இருபத்தி மூன்று தேர்வுகளில் தோல்வி. Arrears! ஏன் என்று கேட்டாராம். பையன் சொன்னான்: "சார், எனக்கு இந்தப் படிப்பில் எல்லாம் விருப்பம் இல்லை. என் அப்பா வற்புறுத்தி சேர்த்து விட்டார். எனக்கு விருப்பம் எல்லாம் - Fine Arts - ல் தான்.
அப்பாவும் டாக்டர். அம்மாவும் டாக்டர். விடுவார்களா ஒரே பையனை. டாக்டராக்கியே தீர்வேன் என்று நின்றார்கள். ஆனால் பையனுக்குப் பிடிக்கவில்லையே! சேர்த்தார்கள். என்ன நடந்திருக்கும் என்று ஊகியுங்களேன்.

இன்னொரு - மேல் நிலை இரண்டு - மாணவன். இயற்பியல் பாடத்தில் நூற்று ஐம்பதுக்கு வெறும் எட்டு மதிப்பெண்கள் வாங்கியிருந்தான் - பருவத் தேர்வினிலே. பெற்றோர் வரவழைக்கபபட்டனர் பள்ளிக் கூடத்துக்கு. பெற்றோருக்கு முன்னிலையில் மாணவன் சொன்னான்: "நானா எடுக்கச் சொன்னேன் -

இன்னொரு மாணவனைப் பற்றி என் ஆசிரிய நண்பர் ஒருவர் சொன்னார். அவன் என்ன முயற்சி செய்து படித்தாலும் என்பது மதிப்பெண்களுக்கு மேல் தாண்ட இயலவில்லை. அப்பா அதிகாலையில் எழுந்து கொண்டு மகனையும் எழுப்பி படிக்கச் சொல்வாராம். ஒரு நாள் மகன் அசதியில் எழ மறுக்க ஒரு குடம் குளிர் நீரை அவன் தலையில் கொட்டினாராம். பிறகு என்ன நடந்திருக்கும்?



பாடம் கற்றுக் கொள்வோமா?

1. ஏழை மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தாலும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக எங்கெங்கோ சிக்கிக் கொண்டு விடுகிறார்கள். இவர்களுக்குள் என்னென்ன வளங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை யார் அறிவார்? இது தான் பெரும்பாலான ஏழை மாணவர்களின் நிலை!

2. வசதியுள்ள மாணவர்களின் விஷயத்தில் - அவர்களின் மனித வளங்கள் என்ன, அவர்களுக்கு ஆர்வம் எதிலே - என்பனவெல்லாம் கண்டு கொள்ளப் படாமலே - அவர்களை டாக்டர் ஆக்குகிறேன், இஞ்சினியர் ஆக்குகிறேன் என்று பெற்றோர் முடிவெடுப்பது மிகவும் தவறு. ஆனால் இது தான் பெரும்பாலான வசதியுள்ள மாணவர்களின் நிலை.

3. ஆனால் - இரண்டு விதமான மாணவர்களின் விஷயத்திலும் ஒரே ஒரு ஒற்றுமை. அவர்கள் எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பது யாருக்குமே தெரியாது!

S.A.MANSOOR ALI,NEEDUR.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!