Thursday, July 2, 2009

எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பது யாருக்குமே தெரியாது!

ஒரு மாணவன். அவனது தந்தை நல்ல வசதி படைத்தவர். அவனை எப்படியாவது நன்றாக படிக்க வைத்து விட வேண்டும் என்பதில் அவருக்கு அளவு கடந்த ஆர்வம். நல்லதொரு கல்லூரியில் சேர்த்து விடுகிறார் மகனை. அவனுக்கு என்னடாவென்றால் படிப்பு ஏறவில்லை. முதலாம் ஆண்டில் பல பாடங்களில் தோல்வி. தந்தையிடம் மறைத்து விட்டான். தந்தையோ மகனிடம் மிக அதிக நம்பிக்கை வைத்திருந்தார். பையன் - பாடங்களை சிரமப்பட்டுப் படித்து தேர்வுகளை மீண்டும் எழுதினான். மீண்டும் தோல்வி. என்ன செய்தான் தெரியுமா? தற்கொலை. "எப்படியும் போங்கடா!" என்று விட்டு விட்டார் மற்ற மகன்களின் கல்வி விஷயத்தில்!

ஆனால் இங்கே ஒரு மாணவன். ஆயிரத்து இருநூறுக்கு தொள்ளாயிரத்துக்கு மேல் எடுத்திருந்தான். கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் இந்த மதிப்பெண் எடுப்பது கூட பாராட்டுதலுக்கு உரியதே! ஜவுளிக் கடையில் வேலை கேட்டு வந்திருந்தான். மாதம் எழுநூற்று ஐம்பது சம்பளத்துக்கு. ஏன் அவன் படிப்பை தொடரவில்லை? தந்தைக்கு உடல் நலம் இல்லை. பாட்டி படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

எனது நண்பர். அவர் ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். அவர் சொன்னார். ஒரு இறுதி ஆண்டு மாணவன். இருபத்தி மூன்று தேர்வுகளில் தோல்வி. Arrears! ஏன் என்று கேட்டாராம். பையன் சொன்னான்: "சார், எனக்கு இந்தப் படிப்பில் எல்லாம் விருப்பம் இல்லை. என் அப்பா வற்புறுத்தி சேர்த்து விட்டார். எனக்கு விருப்பம் எல்லாம் - Fine Arts - ல் தான்.
அப்பாவும் டாக்டர். அம்மாவும் டாக்டர். விடுவார்களா ஒரே பையனை. டாக்டராக்கியே தீர்வேன் என்று நின்றார்கள். ஆனால் பையனுக்குப் பிடிக்கவில்லையே! சேர்த்தார்கள். என்ன நடந்திருக்கும் என்று ஊகியுங்களேன்.

இன்னொரு - மேல் நிலை இரண்டு - மாணவன். இயற்பியல் பாடத்தில் நூற்று ஐம்பதுக்கு வெறும் எட்டு மதிப்பெண்கள் வாங்கியிருந்தான் - பருவத் தேர்வினிலே. பெற்றோர் வரவழைக்கபபட்டனர் பள்ளிக் கூடத்துக்கு. பெற்றோருக்கு முன்னிலையில் மாணவன் சொன்னான்: "நானா எடுக்கச் சொன்னேன் -

இன்னொரு மாணவனைப் பற்றி என் ஆசிரிய நண்பர் ஒருவர் சொன்னார். அவன் என்ன முயற்சி செய்து படித்தாலும் என்பது மதிப்பெண்களுக்கு மேல் தாண்ட இயலவில்லை. அப்பா அதிகாலையில் எழுந்து கொண்டு மகனையும் எழுப்பி படிக்கச் சொல்வாராம். ஒரு நாள் மகன் அசதியில் எழ மறுக்க ஒரு குடம் குளிர் நீரை அவன் தலையில் கொட்டினாராம். பிறகு என்ன நடந்திருக்கும்?



பாடம் கற்றுக் கொள்வோமா?

1. ஏழை மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தாலும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக எங்கெங்கோ சிக்கிக் கொண்டு விடுகிறார்கள். இவர்களுக்குள் என்னென்ன வளங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை யார் அறிவார்? இது தான் பெரும்பாலான ஏழை மாணவர்களின் நிலை!

2. வசதியுள்ள மாணவர்களின் விஷயத்தில் - அவர்களின் மனித வளங்கள் என்ன, அவர்களுக்கு ஆர்வம் எதிலே - என்பனவெல்லாம் கண்டு கொள்ளப் படாமலே - அவர்களை டாக்டர் ஆக்குகிறேன், இஞ்சினியர் ஆக்குகிறேன் என்று பெற்றோர் முடிவெடுப்பது மிகவும் தவறு. ஆனால் இது தான் பெரும்பாலான வசதியுள்ள மாணவர்களின் நிலை.

3. ஆனால் - இரண்டு விதமான மாணவர்களின் விஷயத்திலும் ஒரே ஒரு ஒற்றுமை. அவர்கள் எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பது யாருக்குமே தெரியாது!

S.A.MANSOOR ALI,NEEDUR.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!