Saturday, June 1, 2013

சான்றோன் எனக்கேட்ட தந்தை!

"ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்-தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்."
என்ற குறள் வரியை நடைமுறையில் உணரும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!

நேற்று வெளியான SSLC தேர்வு முடிவுகள் வெளியானபிறகு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதுகிறேன்.

நமதூர் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காகப் பலரும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். Adirai Educational Trust கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தியுள்ளது. அதுபோன்று அதிரை நிருபர் குழுவும் கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தியுள்ளது.

மாநில அளவில் கல்வியில் சாதனை படைக்கும் மாணவர்களை அதிரையிலிருந்து உருவாக்க வேண்டுமெனில், தற்போது அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணாக்கர்களைப் பாராட்டி, விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று அதிரை எக்ஸ்பிரஸில் நானும் பொறுப்பேற்றிருந்தபோது மஷ்வரா செய்து, "அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருதுகள்" என்றொரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தோம்.

இதுபற்றிய அறிவிப்பு வெளிவந்தபோது மகள் சுஹைமாவிடம்,அடுத்த ஆண்டு உங்கள் பெயர் அதிரை எக்ஸ்பிரஸில் வருமா? என்று கேட்டேன். இன்ஷா அல்லாஹ் வரும் என்று பதில் அளித்தாள். அதன்பின்னர், என் வணிகச்சூழல் காரணமாக, மகளின் கல்வியில் அதிக அக்கரை காட்ட முடியவில்லை. மாறாக அவளது தாய்வழிப் பாட்டனார் மிகுந்த அக்கரை காட்டினார்.

இந்த ஆண்டு, தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, மகளுக்குத் தொலைபேசினேன். "உங்க ஆசை நிறைவேறிடுச்சா வாப்பா? என்றாள். என் கண்கள் கலங்கின. அல்ஹம்துலில்லாஹ். முகநூல்,ட்விட்டர் போன்ற தளங்களிலும் இந்தத் தகவலைப் பகிர்ந்தபோது, முன்பின் தெரியாதவர்களும் வாழ்த்தி எனது மகிழ்ச்சியில் பங்கேற்றனர். ஜஸாகல்லாஹ்.

மாணவிகளில் என் மகள் முதலிடம் பெற்றது போன்று மாணவர்களில் என் காக்கா ஹாஃபிள் யஃகூப் ஹசன் அவர்களின் மகன் அப்துஷ் ஷகூர் முதலிடம் பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக அதிக மதிப்பெண் பெறுவது மாணவிகளைவிட மாணவர்களுக்கு சற்றே கடினம்தான். மாணவிகளைவிட குறைவு என்றாலும் அதிரை வரலாற்றில் இல்லாத அளவாக அதிகபட்ச மதிப்பெண்களை மகன் அப்துஷ் ஷகூர் பெற்றுள்ளார்.

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று முதலிடம் பெற்ற மாணவி யாஸ்மீன் என் அன்புச் சகோதரர் முபீன் அவர்களின் மகள் என்றறிந்து மிகவும் மகிழ்ந்தேன். யாஸ்மீனுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் வாழ்த்துகள்.

முதல் மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமின்றி, முதலிடம் பெற வேண்டும் என்று மாணவ - மாணவிகளுக்கிடையே போட்டியை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த என் மகளின் தோழிகளுக்கும் மகனின் தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

என் மக்கள் மட்டுமின்றி நமதூரின் கல்வி நிலையங்களில் பயின்று சாதிக்கும் அளவிலான மதிப்பெண்களைப் பெறுவதற்கு உந்துதலாக இருந்த அதிரை எக்ஸ்பிரஸ் நண்பர்களுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தியபோது உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் பரிசுத் தொகையைப் பகிர்ந்தளிக்க முன்வந்தவர்களுக்கும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்திய அதிரை நிருபர் குழுமத்ததாருக்கும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோருக்கும் நன்றியையும் துஆவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அபூ சுஹைமா (என்ற) அப்துல் கரீம் 
S/o. முஹம்மது அலிய் ஆலிம்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!