Friday, December 19, 2008

ஏழு வயதினிலே!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும் போது அவர்களுக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள். அவர்களுடைய படுக்கைகளைப் பிரித்து விடுங்கள். (ஸுனன் அபூ தாவூத்)

"Teach your children to pray when they are seven years old, and smack them if they do not do so when they are ten, and separate them in their beds." (Narrated by Abu Dawood)

ஏன் ஏழு வயது? நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குப் பழக்கி விட (habit formation) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேர்வு செய்த வயது ஏழு! ஏனெனில் குழந்தைகளுக்குத் தொழுகையை கற்றுக் கொடுப்பதில் என்னென்ன அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். நேரத்தைத் திட்டமிடல், கட்டுப்பாடு, முறையான தூக்கம், குறிப்பிட்ட நேரத்தில் எழுதல், கழிவறை சென்று வருதல், பல் துலக்குதல், உடல் சுத்தம், உடை சுத்தம், இடம் சுத்தம், உளு செய்தல், தொழுகையின் சட்டங்களைக் கற்றல், மனனம் செய்தல், போன்ற இன்ன பிற நல்ல விஷயங்களையும் குழந்தைகள் தொழுகையுடன் சேர்ந்தே கற்றுக் கொள்வார்கள்.
இதில் பெற்றோர் கவனித்திட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

எல்லாப் பழக்கங்களையும் உடனேயே குழந்தைகள் கற்றுக் கொண்டு விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அவசரப் படுவதுz குழந்தைகளைத் திட்டுவது, அதட்டுவது, அடிப்பேன் உதைப்பேன் என்று மிரட்டுவது எல்லாம் கூடாது. ஏன்? நபியவர்களே 3 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளார்கள் என்பதைக் கவனிக்க!
குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதெல்லாம் சரிதான். ஆனால் அது எது வரை? ஏழு வயது வரை மட்டுமே! பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக செல்லம் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பழக்கங்களை அவர்களுக்குள் உருவாக்கிட வேண்டும். எது வரை? பத்து வயது வரை!

குழந்தைகள் பத்து வயதை அடைந்து விட்டால், செல்லம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும.; ~அடியுங்கள்;~ என்கிறார்கள் நபியவர்கள். எனவே நமது குழந்தைகளை - சின்னப் பிள்ளைகள்தானே, பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுதல் ஆபத்து. ஏனெனில் பத்தில் வளையாதது பதினைந்தில் வளையாது. பிறகு இருபதில், இருபத்தைந்தில் எப்படி வளையும்?
இந்த ஏழு வயது இருக்கிறதே அது எப்படிப் பட்டது தெரியுமா? பெரியவர்கள் செய்வதை அப்படியே காப்பி (imitate) அடிக்கும் வயது. அப்படியென்றால் என்ன செய்திட வேண்டும். குழந்தைகளைத் தொழு தொழு என்றால் போதாது. வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் தொழக்கூடியவர்களாக விளங்கிட வேண்டும்.

குழந்தைகள் சில நேரங்களில் அடம் பிடிக்கும். தூங்குவது போல் நடிக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் குறிப்பாக தாய்மார்கள் என்ன செய்திட வேண்டும் தெரியுமா? குழந்தைகளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டு அன்பாக, ஆதரவாக, மென்மையாக, அதே நேரத்தில் உறுதியாகப் பேசிட வேண்டும். பெற்றோர் கோபத்தை வெளிப்படுத்தினால் குழந்தைகள் தொழுகையையே வெறுத்து விடலாம். எனவே மென்மையான வழிமுறையினை மட்டுமே தொடர்ந்து பொறுமையுடன் கையாள வேண்டும். குழந்தைகளிடம் தக்க தருணஙகளில் நாம் - அல்லாஹு தஆலாவைப் பற்றி, அவன் நம் மீது வைத்திருக்கின்ற அளவிட முடியாத அன்பு பற்றி, அவன் நமக்கு வழங்கியிருக்கின்ற எண்ணிலடங்கா அருட்கொடைகளைப் பற்றி, அவன் நமக்கு வழங்க இருக்கின்ற நற்கூலி பற்றி, அவன் நமக்காகத் தயார் செய்து வைத்திருக்கும் சுவர்க்கம் பற்றி - இவ்வாறு நேர்மறையாக (positive approach) எடுத்துச் சொல்லி ஆர்வமூட்டிட வேண்டும.
இவ்வாறு சிறு வயதிலேயே பழக்கப் படுத்தப் படுகின்ற குழந்தைகள் தாம் - வாழ்நாள் முழுவதும் விடாமல் தொழுகின்ற தொழுகையாளிகளாக மிளிர்கின்றார்கள். இப்படிப்பட்ட குழந்தைத் தொழுகையாளிகளின் பெற்றோர் தாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்!

http://counselormansoor.com/

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!