Wednesday, December 17, 2008

ஏகதெய்வ நம்பிக்கை!இஸ்லாம் PART 3

இஸ்லாத்தின் நம்பிக்கைகள் எவை?

ஒரே இறைவனைக் கொண்டும் அவனது மலக்கு (வானவர்) களைக் கொண்டும் வேதங்களைக் கொண்டும், இறை தூதர்களைக் கொண்டும், மறுமையைக் கொண்டும், தெய்வ விதியைக் கொண்டும் நம்பிக்கை கொள்வதே இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் ஆகும்.

ஏகதெய்வ நம்பிக்கையின் பொருள் என்ன?

இந்தப் பிரபஞ்சத்தில் சிறிதும் பெரிதுமான எல்லா வஸ்துக்களுடையவும் படைப்பாளனும் பரிபாலகனும் ஆகிய அல்லாஹ் அவனது உள்ளமை, குணம், செயல்பாடு முதலானவற்றில் எல்லாம் ஏகனும் ஒப்புமையற்றவனும் ஆவான். சர்வ வல்லமையும் எல்லாவற்றையும் மிகைத்தவனும் சர்வ பரிபூரணமானவனும் ஆகிய அவனுக்கு மட்டுமே வணக்க வழிபாடுகளை அர்ப்பணிக்க வேண்டும். எல்லாவற்றையும் படைத்த இறைவன் ஒருவன் உண்டு என்ற நம்பிக்கையுடன் சுருங்கி விடாது அளவற்ற அருளாளனும் எல்லாவற்றையும் அறிபவனுமாகிய அவனிடம் மட்டுமே பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் செய்ய வேண்டும் என்ற கொள்கையே இஸ்லாத்தின் ஏக தெய்வ நம்பிக்கையாகும்.

அல்லாஹ் யார்?

சர்வ வல்லமை மிக்க இறைவனைக் குறிக்கும் அரபிப் பதமே அல்லாஹு. எல்லா விதமான வணக்க வழிபாடுகளுக்கும் உரித்தான இறைவன் என்பதே அல்லாஹு என்ற பதத்தின் மொழி ரீதியான அதன் பொருள் ஆகும். அரபு நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாதவர்களும் இறைவனைக் குறித்து அல்லாஹ் என்றே குறிப்பிடுகின்றனர். அல்லாஹ் என்ற பதத்திற்க ஆண்பாலோ பெண்பாலோ பன்மையோ கிடையாது. இறைவனது மகத்துவத்திற்கு பரிபூரணமாக ஒத்துப் போவதுடன் பிற மொழிகளில் உள்ள பதத்தைக் காட்டிலும் மிகச்சரியான னொருளை வழங்குவதாலும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்று அழைக்கின்றனர். ஏக இறைவனை அவனது பரிசுத்தத் தன்மைக்கும்மகத்துவத்திற்கும் ஏற்ப எந்த நாமத்தில் குறிப்பிடுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை.

மலக்குகள் என்பவர்கள் யார்?

மனிதனின் சாதாரண புலன் அறிவைக் கொண்டு புரிந்து கொள்ளவோ உணர்ந்து கொள்ளவோ இயலாத ஒளியைக் கொண்டு படைக்கப்பட்ட இறையடியார்களே மலக்குகள் ஆவர். இறைவனது கட்டளையை நிராகரிக்க முடியாத இயற்கை அமைப்பில் பல் வேறு காரியங்களை நிர்வகிப்பதற்காக அவர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.

வேதங்கள் என்பது என்ன?

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட இறை தூதர்கள் மூலமாக இறைவனால் வழங்கப்பட்ட புனித நூல்களே வேதங்கள் எனப்படுகின்றன. இகபர வாழ்வின் வெற்றிக்கு வழிகோலும் வழிகாட்டுதல்கள் அடங்கிய தெய்வீக கட்டளைகளை உள்ளடக்கியதே வேத கிரந்தங்கள். இறுதி வேதமாகிய திருக்குர்ஆனில் நான்கு வேதங்களின் பெயர் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட தவ்றாத், தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கய் மூலமாக வழங்கப்பட்ட ஸபூர், ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட இஞ்சீல் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக வழங்கப்பட்ட குர்ஆன் ஆகியவை ஆகும். இவை அல்லாமல் மற்ற இறை தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. எல்லா வேதங்களும் மனிதனை வழிகேட்டிலிருந்து விலக்கி நேர்வழியின்பால் அழைத்துச் செல்ல இறைவன் அருளியவை ஆகும்.

இறை தூதர்கள் யார்?

மனித சமூகத்திற்கு நன்மை தீமை குறித்து எடுத்துக்கூறுவதற்காக இறைவன் மனிதர்களிலிருந்து சிலரை தனது தூதர்களாகத் தேர்ந்தெடுத்து தூதுப் பணியை அவர்களிடம் ஒப்படைத்தான். அவ்வாறு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே நபிமார்கள் அல்லது இறை தூதர்கள் எனப்படுகின்றனர். மனிதர்களை நேர்வழியின்பால் அழைப்பதற்காக எல்லா சமூகங்களிலும் இறைத்தூதர்கள் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் மனித சமூகத்திற்கு முன் மாதிரிகளாக முழு மனிதர்களாக வாழ்க்கை நடத்தினர். அவர்களில் எவருமே தாங்கள் தெய்வங்கள் என்றோ தெய்வத்தின் அவதாரங்கள் என்றோ வாதிட வில்லை. அவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க மனிதர்களே. இறைவனால் நியமிக்கப்பட்ட அனைத்து இறைத்தூதர்களையும் நம்புவது முஸ்லிமின் மீது கடமையாகும்.

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. (திருக்குர்ஆன் 2:213)

மரணத்திற்குப் பிந்தைய வாழ்வு குறித்து இஸ்லாம் என்ன கூறுகின்றது?

மனித வாழ்வின் முடிவல்ல மரணம். மாறாக நிரந்தரமான மற்றொரு வாழ்வின் தொடக்கமே அது என இஸ்லாம் கூறுகின்றது. இவ்வுலகில் செய்யும் கருமங்களுக் கேற்றவாறு தகுந்த கூலி வழங்கப்படுவது மரணத்திற்குப் பிந்தைய வாழ்வில் ஆகும். யுக முடிவு நாளில் எல்லாம் அழிந்த பின்னர் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு இறைவனால் விசாரணை செய்யப்படுவர். சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு முன்னால் நடக்கும் விசாரணையில் நாம் செய்த நன்மை தீமைகள் நமக்கு முன்னால் எடுத்துக்காட்டப்படும். பிறகு முற்றிலும் பரிபூரணமான நீதி வழங்கப்படும். நன்மை செய்து வாழ்வைப் பரிசுத்தமாக்கியவர்களுக்கு நற்கூலியாக நிரந்தர சமாதானத்தின் பவனமாகிய சுவனமும் தீமைகள் செய்து வாழ்க்கையைக் களங்கமாக்கியவர்களுக்குத் தண்டனையாக வேதனைகள் மிக்க நரகமும் வழங்கப்படும்.

"யுக முடிவு நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்". (திருக்குர்ஆன் 75 1-4)

விதியின் மீத நம்பிக்கை கொள்வது என்றால் என்ன?

பிரபஞ்சத்தின் அனைத்து வஸ்துக்களும் இறைவன் வகுத்த விதியின் அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவே விதி எனப்படுகின்றது. அதிலிருந்து மாறுபட்டு நிற்க மனிதன் உட்பட எந்தப் படைப்புகளாலும் இயலாது. மனிதனின் சுற்றுப்புறமும் உடல் அமைப்புகள் கூட இறைவனின் விதியின் அடிப்படையிலேயே நிலை கொண்டுள்ளது. அவனை வந்தடையும் நன்மைகளும் தீங்குகளும் எல்லாம் இந்த விதியின் அடிப்படையிலேயே சம்பவிக்கின்றன. மனித சமூகத்தின் முதலும் முடிவுமான நன்மைகளைக் குறித்தும் தீமைகளைக்குறித்தும் மிகத் தெளிவாக அறிந்த இறைவன் வகுத்த வதிகளின் அடிப்படையிலேயே அவனுக்கு குணமும் தோஷமும் ஏற்படுகின்றது என்பதே இஸ்லாமிய விதி விசுவாசத்தின் உட்கருத்து ஆகும்.

"நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள். மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்". (திருக்குர்ஆன் 82 : 13-16)

"எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்". (திருக்குர்ஆன் 7: 157)

by அபூ அப்திர்ரஹ்மான்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!