Showing posts with label வரதட்சணை. Show all posts
Showing posts with label வரதட்சணை. Show all posts

Friday, March 13, 2009

வரதட்சணை ஒரு வன் கொடுமை!கொடுக்க வேண்டியவர்கள் ,கேட்பது எவ்வளவு கொடுமையானது???தொடர் 5

ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.

யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.

மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.


பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட பார்த்துப் பழகாதவள் புகுந்த வீட்டில் கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். நாள் முழுவதும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது.

இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்தால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் உண்ணமுடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி எடுக்கிறாள்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இயல்பாக நடக்க முடியாது. இயல்பாக படுக்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து சிரமம் அடைகிறாள்.

இவள் அந்த நிலையைக் அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண் தந்தையாவதற்கு கடுகளவு சிரமத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி விட்டு செத்துப் பிழைக்கிறாள். இதற்கு நிகரான ஒரு வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட இயலாது.

ஆண் மகனின் வாரிசைப் பெற்றுத் தருவதற்காக -அவள் படுகிற சிரமத்திற்காக ஆண்கள் கொடுப்பது தான் நியாயமானதாகும்.. இந்த ஒரு சிரமத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம். குழந்தையைப் பெற்றெடுத்தபின் இரண்டாண்டுகள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து இவனது வாரிசை வளர்க்கிறாள்!

கழுவிக்குளிப்பாட்டி சீராட்டி அழகு பார்க்கிறாள்! ஒவ்வொரு பருவத்திலும் குழைந்தைக்காக தன்னையே அர்ப்பணித்து விடுகிறாள்! இதற்காகவும் ஆண்கள் தான் கொடுக்கவேண்டும். இப்படிச் சிந்த்தித்துப் பார்த்தால் இன்னும் பல காரணங்களைக் காணலாம். இதன் காரணமாகத் தான் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணக்கொடையை மனமுவந்து வழங்கிட வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

மணக் கொடை என்பது நூறோ இருநூறோ வழங்கி ஏமாற்றுவது அல்ல! நமது சக்திக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தாராளமாக வழங்குவதே மஹர் என்பதை இதிலிருந்து விளங்கலாம். ஒரு குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20) என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் மணக்கொடைக்கு அளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

பெண்களுக்கு வரதட்சனைக் கொடுத்து மண முடிக்க வேண்டிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களிடமே கேட்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரவேண்டும். கொடுக்காமல் இருந்தது ஒரு குற்றம். வாங்கியது மற்றொரு குற்றம் என்று இரண்டு குற்றங்களைச் சந்திக்கும் நிலை மறுமையில் ஏற்படும் என்பதையும் உணரவேண்டும்.

வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்! வல்ல இறைவன் இதற்கு அருள் புரியட்டும்!

by இப்னு மர்யம்

Thursday, March 12, 2009

வரதட்சணை ஒரு வன் கொடுமை!சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை!!தொடர் 4

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)

ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.

வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.

தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.

பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.

இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.

Wednesday, March 11, 2009

வரதட்சணை ஒரு வன் கொடுமை!குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி!தொடர் 3

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.(4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா? ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். 'மஹர் வழங்கி மண முடியுங்கள்" என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! இந்த அயோக்கியர்கள்.

அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் (59:7)

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)

மேற்கண்ட இறைவசனங்களின் படி நிராகரித்து வழிகேட்டிலும் குஃப்ரிலும் விழுந்து நாசமாவதா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒருத்தியை வாழ வைக்க ஒரு குடும்பத்தையே வறுமையிலும் கடன் தொல்லையிலும் தள்ளிவிடுவது என்ன நீதி? தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு அறிவிலி தொடங்கி வைத்த இந்த தீமை இப்போது காட்டுத்தீயாக பரவி பெரும் நாசம் விளைவித்து வருகின்றது.

"ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி" இது முதுமொழி. இப்போது "ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி" இது புதுமொழி.

இத்தீமையை ஒழிக்க அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே விட்டுச் சென்ற குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது என்ற திடமான உறுதியான முடிவை மணமக்களும், பெற்றோர்களும், ஜாமாஅத்தார்களும் மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவோமேயானால் வரதட்சணை என்ன - மனிதனை வாட்டி வதைக்கும் அத்தனை தீமைகளுக்கும் நாம் சமாதி கட்டிவிடலாம்.

இறைவன் தன் திருமறையில் "விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.

By சமீமா அன்சாரி, குடவாசல்

Tuesday, March 10, 2009

வரதட்சணை ஒரு வன் கொடுமை!ஜமாஅத்துக்கு கமிஷன்?தொடர் 2

ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை 'கரை' ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?

அறியாமைக் கால அரேபியர் பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும் இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்.

இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் "வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, ஜமாஅத்துக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.

"அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 9:18)

இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானே பள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.

Sunday, March 8, 2009

வரதட்சணை ஒரு வன் கொடுமை!யார் காரணம்?தொடர் 1

வரதட்சணை ஒரு வன் கொடுமை என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்.(பணத்திமிர்,பேராசை கொண்டவர்களைத் தவிர).இந்த வரதட்சணை எனும் கொடுமையின் காரணமாக,இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும்,பெண்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டும்,பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சட்டம் புத்தக கட்டுக்களிலும்,ஆள்வோர் மற்றும் பணத்திமிர் கொண்டோரின் சட்டைப்பையில் படுத்து தூங்குகிறது.

இந்த அவலம் எல்லா மத மக்களிடமும்,சாதிகளிலும் புரையோடி,இன்று வரதட்சணை கொடுப்பது ஒரு பேஷன் போன்று ஆகிவிட்டது. இந்த அவலங்களுக்கெல்லாம் யார் காரணம்?இந்த வரதட்சணையால் வரும் கேடு என்ன?அதற்கு இஸ்லாம் என்ன தீர்வு சொல்கிறது? என இன்ஷா அல்லாஹ் அலசுவோம்.
--------------------------------------------------
இனி
இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?
அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!