Showing posts with label நபிகள் நாயகம். Show all posts
Showing posts with label நபிகள் நாயகம். Show all posts

Wednesday, August 26, 2015

அதிரையில் சம்பவம்:புது மாப்பிள்ளை கடத்தி,சிறை வைப்பு!!

நமதூரில் கடந்த சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக, ஒரு வினோதமான, வக்கிரமான, கண்டிக்கத்தக்க பழக்கம் நிலவி வருகின்றது!  அதாவது, இளைஞர் ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்றால், அவரின் ‘ஆப்த நண்பர்கள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் விடலைகள் உஷார் ஆகித் தமக்குள் திட்டம் போட்டுக்கொள்கிறார்கள்.

அது என்ன ?

‘எப்படியாவது புது மாப்பிள்ளையைப் புதுப் பெண்ணுடன் முதலிரவில் சேர விடக் கூடாது’ என்ற வக்கிரமான – நமதூர்ப் பரிபாஷையில், ‘பெரலி பண்ணும்’ – வன்முறைக் கலாச்சாரம்!  இதில் பல முறைகளைக் கடைப்பிடித்துக் காலித்தனம் செய்கின்றனர் நம் இளைஞர்கள்!

- புது மாப்பிள்ளையை அன்றிரவு happy ride என்று சொல்லி ஏற்றிக்கொண்டு, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்களில் அந்தத் ‘தோழப் பிள்ளைகள்’ வெளியூர்களுக்கு எங்காவது கொண்டுபோய் இரவு முழுவதும் மறைத்து வைப்பது.

- புது மாப்பிள்ளைக்கும் தோழப் பிள்ளை(!)களுக்கும்கூட அறிமுகமில்லாத கிராமப்புறங்களுக்குள் சென்று, அன்றிரவு முழுவதும் அரட்டை அடிப்பது. (இன்னொன்றும் அடிப்பார்களோ என்னவோ, தெரியாதப்பா.)

- எல்லோருமாகச் சேர்ந்து Second show சினிமாவுக்குப் போய், சினிமா பார்ப்பது! அந்தப் புது மாப்பிள்ளைக்கு சினிமாவில் கவனம் இருக்குமா என்ன?

- அல்லது, ஊரிலேயே, பெண் வீட்டுப் பந்தலிலேயே, புதுப் பெண்ணின் மனக் குமுறலுக்கு முன்னாலேயே, புது மாப்பிள்ளையைச் சூழ்ந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டு, அவனை வீட்டுக்குள் செல்லவிடாமல் அன்றிரவு முழுவதும் – அதாவது விடியும்வரை - ‘கேரோ’ பண்ணி வைத்துக்கொள்வது.

- அல்லது, புதுப்பெண் – புது மாப்பிள்ளையின் அலங்கார அறையில் கூடி அமர்ந்துகொண்டு, பெண்ணையும் மாப்பிள்ளையையும் முதலிரவில் தனிமையில் சந்திக்க விடாமல் தடுத்து வைப்பது.

- இத்தியாதி, இத்தியாதி.....

இது போன்ற ‘கழிசடைக் கலாச்சாரம்’ எங்கிருந்து கிடைத்தது இவர்களுக்கு?! திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், இரவும் பகலும் இதய வேட்கையால், என்னவெல்லாம் அந்தப் புது மணமக்கள் கனவு கண்டுகொண்டு இருந்திருப்பார்கள்!?  இதைத் தவிடுபொடியாக்கும் இந்தத் தறிகெட்ட பழக்கம் நம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு வரலாமா?  அவர்கள் சிந்திக்கட்டும்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்!

“அப்புடித்தாண்டீ, என்னட மப்ளையையும் கடத்திக்கிட்டு போய்ட்டானுவ. இங்கே, வூட்லே வாப்பா கத்துறாஹ. காக்கா, மாமாமார் அங்கங்கே ஓடித் தேடினா, எங்கேயுமே இல்லெ!  கடைசீலே, அடுத்த நாள் காலைலே மொகத்தெத் தொங்க போட்டுக்குட்டு வந்தாரு என் மாப்ளே” என்று பழைய மணப்பெண் ஒருவர் அங்கலாய்ப்பது நம் காதில் விழுகின்றது!

இளைஞர்களே!  இஸ்லாமியப் பண்பாட்டின் பக்கம் திரும்பி வாருங்கள்!  வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு, உங்கள் Islamic Identity யைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்!

இது மட்டுமில்லை!  நமது பண்பாட்டிற்கே உலைவைக்கும் ‘வெடி வெடிப்பு’ப் பழக்கம்!  திருமணத்தன்று பின்னிரவில் செவிப்பறைகளைத் தாக்கும், கண் பார்வையைக் கெடுக்கும் வெடிவெடிப்பைச் சர்வ சாதாரணமாகச் செய்கின்றனர், திருமண வீட்டுக்குப் பக்கத்தில்!  பிறந்து சில நாட்களே ஆன சிறு குழந்தைகள், முதியோர்கள், இதய நோயாளிகள் போன்றோருக்குத் தீங்கு விளைக்கும் இந்த வெடிக் கலாச்சாரம் யாருடையது?  மாற்று மதத்தினர், கல்யாணமென்றும் கருமாதி என்றும் பாராமல், வெடி வெடித்துக் மகிழ்வர். அவர்களுடையதை நாம் பின்பற்றலாமா?  சிந்தியுங்கள், வாலிபர்களே!

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் சொன்னதை இங்கு உங்களுக்கு நினைவூட்டுவது பொருத்தம் என்று கருதுகின்றேன்:
من تشبه بقوم فهو منهم

(எவரொருவர் பிற சமுதாயத்தைப் போன்று செய்வாரோ, அவர், அவர்களைச் சார்ந்தவராவார்.)

மேற்கண்ட எண்ணக் குமுறலை எழுத்தில் வடித்து இணையத்தில் பதிக்க நினைத்துக்கொண்டிருந்தபோது என் பேரப்பிள்ளை ஒருவன் சொன்ன செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

அண்மையில் நமதூரில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினான்.  புது மணமக்கள் எப்படியோ, தோழப் பிள்ளைகளின் கண்ணைக் குத்திவிட்டு, மணவறைக்குள் நுழைந்துவிட்டார்களாம்.  இதையறிந்த ‘தோழப் பிள்ளைகள்’, ‘விடக் கூடாது இவனை’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு, பெண் வீட்டாரிடம், “அந்த ரூமைத் திறந்து தாருங்கள்” என்று அடம் பிடித்தார்களாம். ஊம்.....!  பெண் வீட்டார் அசைந்து கொடுக்கவில்லை!

“அப்டினா, நாங்க இந்த அறைக்கு முன்னாலேயே படுத்துக்குவோம்” என்று கூறி, அடுத்தடுத்துப் பரவலாகப் படுத்துக்கொண்டார்களாம் - இரவு முழுதும், விடியும்வரை!

“அடப் பாவமே!” என்று நான் ஆச்சரியத்துடனும் சினந்தும் உணர்ச்சியை வெளிப்படுத்தியபோது, அந்தப் பேரன் சொன்னான்:

“இல்லப்பா!  இந்தப் புது மாப்புளேயும் இதுக்கு முன் பலரின் கல்யாணத்திலும் இதுபோல் செஞ்சிருக்கான், அப்பா!”

என்னத்தச் சொல்ல?

அபூ பிலால்

http://www.adirainews.net/2015/08/blog-post_757.html#comment-form

Saturday, February 22, 2014

சவூதியில் தொலையாத ஆடுகள்

சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டை தமக்கு தரச்சொல்லி கேட்க, 

அவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆடுகள்' என்று கூறி தரமறுக்க, 

அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட கேட்க... 

அவரோ... '200,000 ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை விற்க தரமாட்டேன்' என்று கூற, 

அந்த சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் யாரும் உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் பயம் கொள்கிறீர்?' என்று வறுபுறுத்த, 

அதற்கு அந்த முஸ்லிம் சகோதரன் கூறியவார்த்தை... 'அல்லாஹ் எங்கு சென்றான்... 

அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா... 

அவன் நம்மை பார்க்கிறானே... " என்று பதில் கூறி ஆட்டை தர/விற்க திடமாக மறுத்துவிடுகிறார். 

இது பற்றிய காணொளி யூ ட்யூபில் வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது. 

அல்ஹம்துலில்லாஹ்.



ஆம்..! அந்த சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் 200,000 சவூதி ரியால் பணத்தை அந்த சகோதரனுக்கு பரிசாக கொடுத்துள்ளது. 

மாஷா அல்லாஹ். 

இன்னொரு இடத்தில் 20,000 சவூதி ரியால் வெகுமதி கிடைத்துள்ளது. 

மேலும் 20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் கிடைத்துள்ளது.


அல்லாஹ் தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான்.

"(அல்லாஹுவை அஞ்சினால் )அவர் எண்ணியிராத விதத்தில் வாழ்வாதரங்களை அல்லாஹ் வழங்குவான் எவர் அல்லாஹுவின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன் "(63 - 3 )

இறைவா..! வறுமையிலும் இறையச்சத்துடன் கையூட்டு பெறாமல் பொய் சொல்லாமல் நேர்மையாக வாழ்ந்த இந்த சகோதரனை போல்... உன்மீதான அச்சத்தை எனக்கும் அதிகப்படுத்துவாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
 
 
Thanks to kalam kathir
abu dhabi 

Wednesday, May 5, 2010

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் !!! பாகம் 1

அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.


இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும், அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை, இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.

வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போது, குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாது, மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம், குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையின் படியே இறைவசனம் பொருள் தருகிறது என்று ஒவ்வொரு காலத்து மக்களையும் நம்ப வைப்பதும், எல்லா காலத்து அறிவியல் அறிஞர்கள் கூறும் கருத்துடன் நூற்றுக்கு நூறு பொருந்தி வருகிறது என்று சொல்ல வைப்பதும் அதன் அழியாத அற்புதங்களில் உள்ளதாகும். இந்த அற்புதம் குர்ஆனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்.

வேத நூற்களில் அறிவியல் ஆராய்ச்சி செய்ய தூண்டும் ஒரே வேதம் குர்ஆன் மட்டும் தான் என ஆணித்தரமாக என்னால் சொல்லமுடியும். மற்ற வேதங்கள் அவ்வாறு தூண்டவில்லை என்பதைவிட அறிவியல் உண்மைக்கு எதிராக நிற்கிறது, அறிவியல் பேசுபவர்களை குழப்பவாதிகள், மாபெரும் குற்றவாளிகள் என முத்திரை குத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாறுகளைத்தான் நம்மால் படிக்க முடிகிறது.
மற்ற வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட நிலையிலிருந்து மாறி, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டுவிட்டதால், பல அறிவியல் உண்மைகளுக்கு எதிராக இயற்கையாகவே அவைகள் அமைந்துவிட்டன. மத குருமார்களின் ஆதிக்கம் வலுவாக இருந்த போது, அறிவியல் பேசுவோர்கள் சமூக விரோதிகளாக, இறைக்குற்றம் செய்து விட்டவர்களாக கருதப்பட்டு, சிறையிலடைத்து சித்திரவதை செய்யப்பட்டு வந்தார்கள், தங்களது கருத்துகளிலிருந்து பின் வாங்கியவர்களுக்கு உயிர்பிச்சை அளிக்கப்பட்டது, தான் கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலிருந்து பின்வாங்கதவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள். இந்த கொடுமை மதத்தின் பெயரால், வேதத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதுதான் அதிலும் கொடுமையாக இருந்தது.

இந்தக் கொடூரம் வேதங்களின் பெயரால், அரங்கேற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்த காரணத்தால் பல அறிவியல் விஞ்ஞானிகள், “இறைவன் இல்லை”, “வேதம் பிற்போக்கான கருத்துடையது” என்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.
ஆனால் எந்த வேத நூலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த குர்ஆனுக்கு இருப்பதால்தான், மேலும் அறிவியல் உலகைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதமாகவும் இருப்பதால்தான் இன்று அறிவியல் உலகிற்குகூட அதனால் சவால் விட்டு, நிமிர்ந்து நிற்க முடிகிறது. குர்ஆனை போல இலக்கிய சுவையும், கருத்தாழமும், அறிவியல் உண்மைகளை எளிமையாக எடுத்து வைக்கும் அதன் சிறப்பு பொருந்திய ஒரு வசனத்தையாவது இந்த உலக மக்களால் கொண்டு வர முடியுமா? என அது எடுத்து வைக்கும் சவாலை 15 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ள முடியவில்லையே, இனிமேலும் அதனை எதிர்கொள்ள முடியாது என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத உண்மையாகும்.
வானவியல், புவியியல் என எத்தனை இயல்கள் இருக்கின்றனவோ அத்தனை இயல்களையும் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள தூண்டுகிற ஒரே வேதம் குர்ஆன் மட்டுமே.

இந்த தொடரை உங்கள் முன் வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். நான் ஒரு மருத்துவன் என்ற முறையில் இன்றைய நவீன மருத்துவ அறிவியல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இந்த அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மூலம் இந்த உலகிற்கு மிக எளிமையான முறையில் உணர்த்தப்பட்டு விட்டது என்பதை விளக்குவதே எனது நோக்கம்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம், ஒவ்வொரு துறை குறித்தும் தெளிவான, தீர்க்கமான தகவல்களை தந்து கொண்டிருக்கும் அறிவியல் நுட்பம் நிறைந்த காலம். மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது கடினம், எந்த தகவலையும் அறிவியல் தகவலோடு ஒப்பீடு செய்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் காலம் இது. மருத்துவ துறையில் இன்று புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள் குர்ஆனில் எந்தந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது என்று வாசகர்களுக்கு இனம் காட்டுவதே எனது முக்கிய நோக்கம். அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள மிக வசதியாக இருக்கும்
.
அல்லாஹ் எனது நல்ல நோக்கத்திற்கு வெற்றியை தருவானாக. எனக்கு இப்படி ஒரு சேவை செய்வதற்கு வாய்பளித்த இறைவனுக்கு நன்றி கூறி, எனது இந்த சேவையினை அங்கீகரித்து கொள்ள பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.
கருயியல்

கருயியல் என்பது மனிதன் கருவுற்று அவன் எவ்வாறு தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்து, முழு மனித வடிவம் பெற்று பிறக்கிறான் என்ற தகவலை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், அவளது வயிற்றில் குழந்தை எந்தந்த நிலையில் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றிய அறிவு சிறிய அளவுகூட இல்லாத காலகட்டத்தில் குர்ஆனில் மிக தெளிவாக, அதே நேரத்தில் மிக எளிமையாக கருவளர்ச்சியின் எல்லா விவரங்களையும் கூறப்பட்டிருப்பது அறிவியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

இறைபணிக்காக இணைந்து நிற்கும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பதினான்கு நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிகளும், அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது சத்தியம்.
இவ்வரிய திருமறை வருடம் ஒரு முறையும், நமது நபி(ஸல்) அவர்களின் இறுதியாண்டு வாழ்க்கையில் இரு முறையும் ஜிப்பரயீல்(அலை) அவர்களின் மூலம் சரிபார்க்கப்பட்டும், ஆயிரமாயிரம் சத்திய சஹாபாக்களால் மனனம் செய்யப்பட்டும், பிரதிகள் எடுக்கப்பட்டும் இன்றுவரை ஒரு எழுத்துக்கூட மாற்றம் செய்யப்படாமல் இறையருளால் பாதுகாக்கப்பட்டு, இத்திருமறை “இறைவசனமே” என உலகிற்கு தெளிவாக்கி கொண்டிருக்கிறது.
அறிஞர்களும், விஞ்ஞானிகளும், பல்துறை வல்லுனர்களும் நம் திருமறையில் புதைந்துகிடக்கும், காலத்துக்கேற்ப பொருந்தி நிற்கும், உண்மைகளை கண்டு வியந்து நிற்கின்ற வேளையில், ஒரு சில அறிவிலிகள், 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஒரு படிப்பறிவில்லாத நபரின் வாக்குகள் இந்த நூற்றாண்டுக்கு ஏற்றதல்ல என வீராப்பு பேசி எதிர்த்து சேறு பூச விழைகின்றனர்.

அன்பு சகோதரர்களே!, இவ்வெதிர்ப்புக்கள் நமக்கு புதிதல்ல. இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைநெறி இப்பூலோகத்தில் வேரூன்றி உயர்ந்து நிற்க அது கொடுத்த விலையான தியாகங்களும், உயிர்களும் உலகில் தோன்றிய எந்த ஒரு மதத்திற்கும் ஏற்பட்டதல்ல. இந்த உலகம், நமக்கு உரியதான அடுத்த நிரந்தர உலகத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி களமே, (நபி மொழி) என்ற சிந்தனையுடன் இச்சத்திய நெறிகளை வேரூன்ற தம் இன்னுயிரையும், உடமைகளையும் நீத்த ஆயிரமாயிரம் நபித்தோழர்களையும், இஸ்லாமிய உடன் பிறப்புகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் அவர்கள் நிரந்தர வாழ்க்கைக்கு இறைஞ்சி நமது இறைப்பணியை இனிதே தொடர்வோம்.

இச்சிறிய முன்னுரையோடு, இதழ்கள்தோறும் இறைமறையில் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆலோசனைகளும் கருத்துகளும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்த வரிசையில், மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை, இறைமறை விளக்குவதை பார்ப்போம்.

நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாமே அவனை இந்திரியத்துளியாக ஆக்கினோம். பின்னர் அதை அலக் என்ற நிலைக்கு மாற்றினோம். பின்னர் ‘அலக்’ என்பதை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைதுண்டை எலும்பாக ஆக்கி, எலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். ஆகவே படைப்பாளர்களில் அழகானவனான அல்லாஹ் உயர்ந்தவனாக ஆகிவிட்டான். அல் குர்ஆன் 23:12-14

சகோதரர்களே! மனித கருவளர்ச்சியியலை இவ்வளவு துல்லியமாக வெவ்வேறு நிலைகளில் அதன் உருமாற்றம், கால அளவு, குணாதிசயங்களை படைப்பாளனால் மட்டுமே தெளிவாக்க இயலும்.

நான் கருவளர்ச்சியியலில் ஆழமாக செல்லாமல் இவ்வசனத்தின் சிறப்பை மட்டும் தெளிவாக்குகிறேன். “அந்த இந்திரியத்துளியை கர்பப்பையில் ஒரு பாதுகாப்பான நிலையில் வைத்தோம்” அதாவது, கர்பப்பையின் அமைப்பு, அதன் தசைத்தன்மை, சிறப்பு இரத்த ஓட்ட அமைப்பு அதன் திசுவுடைய குணங்கள் எல்லாம் அதற்கே (குழந்தை வளர்ச்சிக்கே) உரித்தானவை. இச்சிறப்பு அமைப்பு இது போன்ற வேறு எந்த உறுப்புகளுக்கும் இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்தாலும் அதை (கருவை) பின்னர் இக் கருப்பையில்தான் வைத்து வளர்க்க முடியும். மேலும் “பாதுகாப்பான நிலையில்” வைத்தோம் என்கிறான். அதாவது இக்கருவை கர்ப்பபையின் “உடம்பு” என்ற பகுதி அல்லாது வேறு எந்த பகுதியில் வைத்தாலும் (கருவை) கரு முழு வளர்ச்சி அடைவதில்லை. (Abort) அபார்ட் ஆகிவிடும். எனவேதான் இறைவன் “பாதுகாப்பான இடத்தில்” (உடம்பு பகுதியில்) வைத்ததாக கூறுகிறான்.

இந்த வசனங்களை உன்னிப்பாக கவனிக்கும் போது இறைவன் கர்ப்பப்பையை பொதுவாக குறிப்பிடும் போது “ரஹ்ம்” என்று தான் இறைமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
அடுத்து விந்து துளியை “அலக்” என்ற நிலைக்கு மாற்றினோம் என்று வருகிறது.

அலக்” என்ற அரபி வார்த்தைக்கு
1. அட்டை,
2. தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்,
3. இரத்தக்கட்டி என்ற பொருள்கள் உண்டு.
அட்டையையும், “கரு”வையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சில ஒற்றுமைகள் உண்டு.
1. இந்த இரண்டின் ஒருமித்த தோற்றம்.
2. அட்டை மற்றவர்களின் இரத்ததைத் உணவாகக் கொள்கிறது. கருவும் தாயின் இரத்ததைத்தான் உணவாக்குகிறது.
அடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் பொருள் என்பது தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கம் குழந்தை கருக்கு மிக்க பொருத்தமான பொருள்தானே!.
இரத்தக்கட்டி என்ற பொருளும் மிகச்சரியானதே. எவ்வாறு எனில் “கரு” உருவான முதல் மூன்று வாரங்களும் இரத்தக்கட்டி போன்றுதான் இருக்கும். (இரத்த ஓட்டம் இருக்காது. சுப்ஹானல்லாஹ்! இறைவன் அந்த “அலக்” என்ற வார்த்தையில் கருவின் இயல்புகள், குணங்கள், வளர்ச்சிநிலை போன்றவற்றை வியக்கும் படி தெரிவித்துள்ளான்.
by டாக்டர் ஷேக் சையது M.D
thanks
http://www.islamkalvi.com/portal/
இறைவன் நாடினால் தொடரும்

Wednesday, April 21, 2010

இறுதி எச்சரிக்கை.

அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு.

கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு ."ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். 

து நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி))

"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு ( முன்கீர் - நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான்.

பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும் 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள் ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி))

இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ? ஹதீஸில்தானே சொல்லப்பட்டு இருக்கிறது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே. 

மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும். வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம்.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.

Sunday, April 11, 2010

இஸ்லாமிய வங்கி துவங்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி.


கேரள மாநிலத்தில் இஸ்லாமிய வங்கியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.அதேவேளையில் அரசு அல்லது அரசு நிறுவனங்கள் இவ்வங்கியில் முதலீடுச் செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வங்கிக்கெதிரான இறுதித் தீர்ப்புவரும் வரை இந்நிலைத் தொடரும். கேரள மாநிலத்தில் இஸ்லாமிய வங்கியல் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வரும் அல்பராக்கா நிதியியல் நிறுவனம் சட்டப்படி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைகளுக்கான தடையை நீக்கவேண்டுமென்று கோரி அல்பராக்கா நிதியியல் நிறுவனமும், இந்நிறுவனத்தின் ப்ரொமோட்டர் டைரக்டர் சி.கே.மேனனும் அளித்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெஸ்தி செலமேஷ்வர், நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின்(K.S.I.D.C) பங்குகளுடன் மாநிலத்தில் இஸ்லாமிய வங்கி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஜனதா கட்சியின் தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அளித்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய வங்கியியல் நடவடிக்கைக்கு தடைவிதித்தது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காததால் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கவியலாது என நீதிமன்றம் அறிவித்தது. அல்பராக்கா நிதியியல் நிறுவனத்திற்கு இதுவரை முதலீடுச் செய்யவில்லை என K.S.I.D.C உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்தது. இஸ்லாமிய வங்கியல் நடவடிக்கைகள் மதசார்பற்றது என்றும், இதில் எவர் வேண்டுமானாலும் முதலீடுச்செய்யலாம் எனவும் K.S.D.I.C யும் கேரள அரசும் நீதிமன்றத்திடம் விளக்கின.இவ்வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜுன் மாதம் 3 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

நன்றி
http://sinthikkavum.blogspot.com/

இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகத்தின் அரபா உரை

1417 ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை விட்டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள். முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன்! இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள். ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற்குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீர்கள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்? 'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!' அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.

இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!! இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறைவா!நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.

ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன்,முஹம்மது ரஸூலுல்லாஹ்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!