Thursday, September 24, 2009

நீங்களும் முயற்சிக்கலாமே!

சமச்சீர் கல்விக்கான புதிய பாடத் திட்டம் தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகள் ஆகியவையும், பாடப் புத்தகங்கள் எழுத தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (டி.டி.இ.ஆர்.டி.) கூறியுள்ளது.

இது தொடர்பாக டி.டி.இ.ஆர்.டி. புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவதன் முதல் கட்டமாக 1 முதல் 10-ம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக கல்வி வல்லுநர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட 150 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பாடத் திட்டம் தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகள் கூற விரும்புகிறவர்கள் தங்கள் கருத்துகளை "இயக்குநர், டி.டி.இ.ஆர்.டி. டிபிஐ, வளாகம், கல்லூரி சாலை, சென்னை-06' என்ற முகவரியிலோ அல்லது

dtert@tn.nic.in

என்ற மின்னஞ்சலிலோ தெரிவிக்கலாம்.

இக்கருத்துகள் தேவையின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

பாடப் புத்தகம் எழுத: முதல் கட்டமாக 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கும், 2-ம் கட்டமாக 2, 3, 4, 5, 7, 8, 9, 10-ம் வகுப்புகளுக்கும் பாட நூல்கள் தயாரிக்கப்பட உள்ளன.

பாடப் புத்தகங்களை எழுதுவதற்கு தகுதியும், திறனும் உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் பாட நூல்கள் எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை

www.pallikalvi.in

என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக, சென்னை டி.பி.ஐ.யில் உள்ள டி.டி.இ.ஆர்.டி. இயக்குநருக்கு 5.10.09-க்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப உறையின் மீது பாடப் புத்தகங்கள் எழுதுவதற்கான விண்ணப்பங்கள் என்று குறிப்பிட வேண்டும்.

புத்தகம் எழுத தெரிவு செய்யப்பட்டு, பணியை மேற்கொள்பவர்களுக்கு மதிப்பூதியம், பயணப்படி, சான்றிதழ் போன்றவை வழங்கப்படும். எழுதுவோரின் பெயர்களும் புத்தகத்தில் இடம்பெறும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பி.ஈஸ்வரி -94449 29142; கே.மஞ்சுளா -98412 98425; என்.சத்தி -94445 20311 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!