‘அதிரையின் அதிகார குரல்’ என்ற கொள்கையுடன் புதிதாக முளைத்துள்ள “அதிரை குரல்” என்னும் வலைத்தளம் காணொளியொன்றைப் பதிவு செய்திருந்தது. அது பற்றி ‘சம்சுல் இஸ்லாம் சங்கம்’ தன் மறுப்பைப் பதிவு செய்யக் கடமைப் பட்டுள்ளது. முதலில், சகோதரர் செய்யதின் குற்றச்சாட்டுகள் தன்னிச்சையானவை என்றும், சங்கத்தின் நேர்மையைப் புரியாமை என்றும் கூறிக்கொள்ள விழைகிறேன்.
பேரூராட்சித் தேர்தலில் சங்கம் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் தொகுதிகளில் மட்டுமாவது எத்தகைய நிலைபாட்டை எடுப்பது என்பது பற்றிப் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திற்று. நமதூர் மூத்த ஆலிம்களும் இளைஞர்களான ஆலிம்களும் கலந்துகொண்டு தத்தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
முடிவாக, அந்தந்தப் பள்ளி முஹல்லாக்களிடம் அவரவரின் வார்டு உறுப்பினரைப் பரிந்துரை செய்யும் பொறுப்பை ஒப்படைப்பது என்று தீர்மானிக்கப்பட்டு, அது பற்றிய அறிவிப்பும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் ஒட்டப்பட்டது.
ஆனால், பள்ளிவாசல் நிர்வாகிகள் 'நமக்கேன் இந்த வம்பு?' என்ற தோரணையில்,போட்டியிட விண்ணப்பித்த உறுப்பினர்கள் அனைவரின் மனுக்களையும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கே அனுப்பிவிட்டனர். இங்குதான் தவறான புரிந்துணர்வின் ஆரம்பம்.
அதனையடுத்து இன்னும் சில அமர்வுகள் ஆலிம்களுடன் கூட்டப்பட்டன. முடிவாக, விண்ணப்பித்தவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி,அவர்களுக்குள்ளேயே தேர்வின் முறையை, இரகசிய அறிவிப்பு முறையில் முடிவெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதாவது: உதாரணமாக ஒரு வார்டில் ஏழுபேர் போட்டியிடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அவர்களுள் ஒருவரைத்தான் தேர்வு செய்ய முடியும் என்ற அடிப்படையில், போட்டியாளர் ஒவ்வொருவரும், தான் தேர்வு செய்யப்படாவிட்டால் யாரை அவர் பரிந்துரைப்பார் என்பதை ரகசியமாக ஒரு சீட்டில் எழுதிக் கொடுக்க வேண்டும். அதில் யாருக்கு அதிகமாகப பரிந்துரை கிடைக்கிறதோ அவரைத் தேர்ந்தெடுப்பது என்றும், அவ்வாறு வருவோர் ஒரே எண்ணிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுவிட்டால், அவர்களுக்குள் மேலும் சகோதரப் புரிந்துணர்வின் அடிப்படையில் ஒருவரைத் தேர்வு செய்வது என்றும் தீர்மானமாகி ஓட்டெடுப்பும் நடந்தது.
இதற்கிடையில், புதுப்பள்ளி முஹல்லாவாசிகளுள் சிலர் மட்டும் ஓர் அவசரக் கூட்டம் போட்டு, சேர்மனுக்கு இன்னாரென்றும், வார்டு மெம்பராக இன்னாரென்றும்'முந்திரிக் கொட்டைத் தனமாக' முடிவெடுத்துப் பள்ளிவாசலில் நோட்டீஸ் ஒட்டியதாக எமது சங்கத் துணைச் செயலாளர் தெரிவித்தார்.
முஹல்லாவாசிகள் அல்லது அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் அனைவரின் முடிவல்ல அது என்பதால், ஆலிம்களின் பரிந்துரையின் பேரில், மேற்கண்ட தேர்வு முறைதான் சிறந்தது என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவாயிற்று. அதுதான் சங்கத்தின் அதிகாரப் பூர்வமான தேர்வு என்பதால், இதில் தன்னிச்சைக்கோ, அதிகாரத்திற்கோ, ஆனவத்திற்கோ எந்த முகாந்திரமும் இல்லை.
கருத்து மோதல்கள் எழுந்தன என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அவற்றை எதிர்கொண்டபோது சில கெஞ்சல்களும் வேண்டுகோள்களும் – அவை பயன்படாதபோது சத்தம் உயர்ந்து சமாதானப் படுத்துவதும் நடக்கத்தான் செய்தன. அவற்றை, சம்மந்தப்பட்ட நபர் ‘அடக்குமுறை’ என்றும், ‘தன்னிச்சை’ என்றும், ‘ஆணவம்’ என்றும் சங்கத் துணைத் தலைவர் மீது வைத்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதும் கண்டிக்கத் தக்கதுமாகும்.
ஒற்றுமைக்காக வேண்டி சங்கம் ஒரு முடிவெடுத்தது; அதனை மதிக்காமல், அந்த ஆள் போட்டி போடுகின்றார் என்றால், ஜனநாயக நாட்டில் அதனைத் தடை செய்ய முடியாது. ஜெயிக்கட்டும்! இதற்குப் பின்னரும் சங்கத்தின் மீது அவதூறு தொடருமானால், குறிப்பிட்ட நபரைப் பற்றிய ஆட்சேபணைக்குரிய நடவடிக்கைகள் அம்பலமாகும்! எச்சரிக்கை!
– அபூ பிலால்
thanks அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment