Friday, October 21, 2011

அல்லாஹ்தான் தந்தான்

ஆகவே, அவரை [அந்தக் குழந்தையை] அவருடைய இறைவன் அழகியமுறையில் ஏற்றுக்கொண்டான். அதை நல்ல பயிராக வளரச் செய்தான். அதற்கு ஜக்கரியாவைப் பொறுப்பாக்கினான். மர்யம் இருந்த மாடத்திற்குள் ஜக்கரிய்யா நுழைந்த போதெல்லாம் அவருக்கருகில் ஏதேனும் உணவுப் பொருள்  இருப்பதைக் கண்டு, ''மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். அதற்கு அவர், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினார்'' 


அல்-குர்'ஆன் 3 ;37

மேற்கண்ட வசனத்தில் அன்னை மரியம் அவர்களுக்கு உணவு கிடைத்த விதம் பற்றி நபி ஜக்கரிய்யா[அலை] அவர்கள் விசாரிக்கும் போதெல்லாம், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் வார்த்தையை அன்னை மர்யம்[அலை] பயன்படுத்தினார்கள் என்பதை அல்லாஹ் அருள்மறையில்
சொல்லிக் காட்டுகின்றான். அன்னை மர்யம்[அலை] அவர்களைப் போன்றவர் என்று நபி[ஸல்] அவர்களால் பாராட்டப்பட்டவர் யார் தெரியுமா? அறிந்து கொள்ள கீழே உள்ள பொன்மொழியை படியுங்கள்;

ஜாபிர்[ரலி] அவர்கள் கூறியதாவது;
ஒரு தடவை நபி[ஸல்] அவர்கள் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே, தம்முடைய துணைவியாரின் வீடுகளுக்குச் சென்று பார்த்தஹர்கள். அவர்களிடமும் எதுவும் கிடைக்கவில்லை. உடனே [தம்முடைய மகள்] ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் வந்து, மகளே! நான் பசியோடு இருக்கின்றேன்; சாப்பிடுவதற்கு உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு பாத்திமா[ரலி], ''என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! [என்னிடம்] எதுவுமில்லை'' என்று கூறினார்கள். அதனால் நபி[ஸல்]அவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு ஃபாத்திமா[ரலி] அவர்களுக்கு பக்கத்து வீட்டுப் பெண்மணி இரு ரொட்டிகளையும் சில இறைச்சி துண்டுகளையும் கொடுத்தனுப்பினார்.

அவற்றை வாங்கிக்கொண்ட ஃபாத்திமா[ரலி] அவர்கள் ஒரு பாத்திரத்தில் வைத்து, ''இந்த உணவு விசயத்தில் என்னைவிடவும், என்னைச் சேர்ந்தோரை விடவும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்போகிறேன்'' என்று கூறினார்கள். முன்னதாக அவர்கள் அனைவரும் வயிறார உண்ணவேண்டிய தேவையுடையவர்களாகவே இருந்தனர்.

பின்னர் ஹசன்[ரலி] அல்லது ஹுசைன்[ரலி] அவர்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அனுப்பி அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். நபி[ஸல்] அவர்கள் ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் திரும்ப வந்தார்கள். அப்போது ஃபாத்திமா[ரலி] ''அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ் சிறிதளவு உணவுப் பொருளை கொடுத்துள்ளான். அதைத் தங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். மகளே! அதைக் கொண்டுவா'' என நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து அன்னை பாத்திமா[ரலி] அவர்கள் கூறினார்கள்; அந்த உணவுத்தட்டை எடுத்து வந்து திறந்து பார்த்தேன். அப்போது தட்டு நிரம்ப ரொட்டியும், இறைச்சியும் இருந்தன. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நான், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் அல்லாஹ்வை புகழ்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் மீது ஸலவாத் கூறினேன்.

பின்னர் நபி[ஸல்] அவர்களுக்கு முன்னால் அந்த தட்டை கொண்டு வந்து வைத்தேன். அதைப் பார்த்த நபி[ஸல்] அவர்கள், அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு, ''மகளே!இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?''என்று கேட்டார்கள். அதற்கு நான், ''என் தந்தையே! இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினேன்.''

உடனே அல்லாஹ்வை புகழ்ந்த நபி[ஸல்] அவர்கள், ''மகளே! இஸ்ரவேல பெண்களுக்குத் தலைவி[யான மர்யமைப்]போன்று உன்னை ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவருக்கு [மர்யம்] அல்லாஹ் ஏதேனும் உணவளித்து, அது குறித்து யாரேனும் அவரிடம் வினவினால், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்.'' என்று கூறினார்கள்.



ஹதீஸ் சுருக்கம்; நூல் முஸ்னது அபீயஅலா.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!