Saturday, October 15, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்க வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும் - ஏன்?


அதிரையின் அதிக முஹல்லாக்களை உள்ளடக்கிய – எழுபது வருட பாரம்பரியமிக்க ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் சங்கம் சார்பில் வேட்பளர்களை நிறுத்தியுள்ளது. இதுவரை வெறும் குடும்பப்பிரச்சினைகள், திருமண வசூல்கள் என்ற நிலையில் மட்டுமே கவனம் செலுத்திவந்த முந்தைய சங்க நிர்வாகிகளுக்கு மாற்றமாக, சிறப்பான பல சேவைகளோடு, அரசியல் ரீதியாக உரிமைகளைப் பெற்றுத்தரும் நன்நோக்கோடு இந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

உறுப்பினர்களாக போட்டியிடக்கூடியவர்களை ஏதோ மணம் போனப் போக்கில் தேர்ந்தெடுக்காமல், அல்லது வேறு ஏதேனும் சுயநல நோக்கங்களுக்கு விலை போகாமல், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு – உள்ளூர் ஆலிம் பெருமக்களின் உதவியோடு வேட்பாளர்களைத் தேர்வு செய்து – அவர்களிடம் உறுதிமொழியும் பெற்று வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றார்கள்.

பொதுவாக எப்பொழுதுமே ஒற்றுமையையும் - சமுதாய நலனையும் முன்வைத்து ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அங்கே ஷைத்தான் புகுந்து ஏதாவது ஒரு விதத்தில் குழப்பத்தை ஏற்படுத்தத்தான் செய்வான். அதற்கு இந்த சங்கத்தின் முடிவும் விதிவிலக்கல்ல. அதனால் தான் இந்த முடிவிற்கு பெரும் ஆதரவுகளோடு சில எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நேரடியாகவும், இணையங்கள் வாயிலாகவும் ஒரு சிலரால் தொடர்நது முன்வைக்கப்படுகின்றது. குறிப்பாக முஸ்லிம் கட்சிகளையும் - இயக்கங்களையும் துண்டுதுண்டாக கூறு போட்டே அரசியல் நடத்தும் ஒரு பெரிய அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் முழு மூச்சாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முடிவை எதிர்த்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த பெரிய அரசியல் கட்சியின் நகரச் செயலாளர் - தான் துணைத் தலைவராக வருவதற்கு தேவையான பலம் கிடைப்பதற்கு இந்த சங்கத்தின் முடிவு எதிராக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதைத் தடுக்கும் விதமாக சங்கத்தின் முடிவுக்கு எதிராக தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதும் - அதற்கு சங்கத்திற்கு உட்பட்ட முஹல்லாவைச் சேர்ந்த சில சுயநலமிகளே துணை போவதுடன் - அந்தப் பெரிய அரசியல் கட்சியின் நகரச் செயலாளரின் சூழ்ச்சித் தெரியாமல் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு எதிராகவே பல குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும்தான் பலருக்க ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மனிதநேயமக்கள் கட்சிக்கு ஆதரவான நிலையை எடுத்துவிட்டது என்றும், சிலர், சங்கம் வேட்பாளரை தேர்வு செய்தமுறை தவறு என்றும், வேறு சிலரோ சங்கம் அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்டது என்றும் அறிந்தோ அறியாமலோ தங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.

இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம், சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளாலும், ஜமாஅத்தார்களாலும் பல முறை பதில் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செவிடன் காதில் ஊதிய சங்காக தொடர்ந்து இவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரியா? அல்லது தவறா? என்று மேலும் மேலும் விவாதங்களை வளர்த்துக் கொண்டு போவதை விடுத்து, இது போன்ற விமர்சனங்களால் சமுதாயத்திற்கும் - ஜமாஅத் என்னும் கூட்டமைப்பிற்கும் ஏற்படும் பாதிப்புகளை மிக முக்கியமான நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். 

ஷம்சுல் இஸ்லாம் சங்கவேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமா? 

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் நமதூர் ஆலிம்களின் மேற்பார்வையோடு, வேட்பாளர்களை தேர்வு செய்து - நிறுத்தி இருக்கின்றார்கள். இந்த நிலையில் அனைவரின் ஏகோபித்த முடிவிற்கு மாற்றமாக நாம், சங்கம் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்தால் - சங்கம் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டால் எதிர்காலத்தில் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் உணரவேண்டும்.

•    70 வருட பாரம்பரியமிக்க ஒரு சங்கத்தின் நன்மதிப்பு கெடும் - அதனால் ஊரில் இருக்கும் மற்ற சங்கங்களுக்கு அந்தந்த முஹல்லாவாசிகளிடத்தில் இருக்கும் ஆதரவு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழும்.

•    ஜமாஅத் என்னும் கூட்டமைப்பின் முடிவுக்கு மிகப்பெரும் பாதகம் ஏற்படும்.

•    இந்த சங்கத்தின் முடிவுகளை சங்கத்திற்கு உட்பட்ட முஹல்லாவாசிகளில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்ற காரணம் சொல்லப்படும்.

•    அதுமட்டுமல்ல, சங்கம் எந்த முடிவு எடுத்தாலும் அதை பெரும்பாலோர் மீறும் ஒரு அபாயகரமான நிலை ஏற்படும்.

•    எல்லாவற்றுக்கும் மேலாக அதிரையின் இந்த பெரிய சங்கத்தை உடைக்க சதிகாரர்கள் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

•    இதுபோக, அதிரையின் மற்ற சங்கத்தினரின் முடிவிற்கு எதிராக வோட்பாளர்களை நிறுத்தாமல், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு எதிராக மட்டும் போட்டி வேட்பாளர்களை நிறுத்திய கட்சியின் முடிவிற்கு வெற்றி கிடைப்பதோடு, சங்கமா அல்லது போட்டி வேட்பாளர்களா? என்ற ஒரு விஷப்பரீட்சையில் சங்கம் தோற்று எதிராளிகள் வென்றார்கள் என்ற ஒரு அபாயகரமான நிலை ஏற்பட்டுவிடும்.

•    ஊரின் நலனை முன்வைத்து நாளை ஊரில் உள்ள அனைத்து ஜமாஅத்களும் - சங்கங்களும் ஒன்று கூடி ஒரு நல்ல முடிவை எடுத்தால் கூட இதுபோன்ற தேவையற்ற எதிர்ப்புகளும் - போட்டிகளும் - அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டாகும். அதற்குச் சான்றாக ஷம்சல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்களின் தோல்விகள் உதாரணம் காட்டப்படும். 

இது போன்ற இன்னும் எத்தனையோ பாதிப்புகள் நமக்கும் நமது சங்கத்திற்கும் - நமது ஒற்றுமைக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாம் வலியுறுத்தும் மசூராவிற்கும் ஏற்படும். நாம் மதிக்கின்ற – நமக்கு குர்ஆனிலிருந்து நபிமொழிகளிலிருந்தும் வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ள ஜமாஅத்தின் முடிவு தோற்றால், நம் மீது நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டதற்கு சமமானது என்பதை நம்மில் யார்தான் மறுக்கமுடியும்? அதுமட்டமல்ல ஆலிம்களின் மேற்பார்வையோடு நமது சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு எதிராக எவரேனும் செயல்பட்டால் 'அவர் மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்து எச்சில் துப்புவதற்கு சமமானது. அந்த எச்சில் பின்னர் நம்மீது தான் வந்துவிழும்' என்பதை நாம் உணரவேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், மற்ற அரசியல் கட்சிகளிடம் இல்லாத - மற்ற போட்டி வேட்பாளர்கள் அளிக்காத – உறுதிமொழிகளை சங்க நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் மத்தியில், நமது சங்கத்தால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள்; மட்டுமே உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட்டு, உறுதிமொழியும் அளித்துள்ளார்கள். இப்படிப்பட்ட உறுதிமொழியை நமதூரில் உள்ள மற்ற சங்கத்தால் பொது வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட கொடுத்ததாக தெரியவில்லை. அந்த அளவுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தால் ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டள்ளது.

சகோதரர்களே! நாளை நீங்கள் சங்கத்தால் தேர்வுசெய்யப்பட்ட வேட்பாளர்கள் வெற்றிபெற்றால், அவர்களிடம் கேள்விகள் கேட்டகலாம். 'நீங்கள் எழுதிகொடுத்த – நீங்கள் வாக்குறுதியளித்த உங்கள் உறுதிமொழி என்னவாயிற்று? என்று வீடியோ ஆதாரத்தோடு கேட்கலாம். ஆனால், அதுபோல் சங்கத்திற்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள போட்டி வேட்பாளர்களையோ, அல்லது மற்ற அரசியல் கட்சி வேட்பாளர்களையோ கேள்வி கேட்டமுடியமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதரர்களே!

உன்மையில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஒரு நல்ல எண்ணத்தோடு, தூர நோக்கோடு ஒரு முடிவை எடுத்துள்ளது. இதில் தவறுகள் நடந்ததாக சிலர் நினைக்கலாம். ஆனால், அது கண்டிப்பாக தவறாக இருக்காது – இல்லாமல் வல்ல ரஹ்மான ஆக்கவேண்டும். இதை நாம் கண்டிப்பாக தேர்தல் வெற்றிக்கு பிறகு அனுபவரீதியாக உணர்வோம். காரணம் இது ஏதோ தனிநபர் தன் சுய விருப்பு வெறுப்புக்காக எடுத்த முடிவல்ல. அல்லாஹ்வின் உதவியோடு – ஆலிம்களின் மேற்பார்வையோடு – அனைவரின் ஒத்துழைப்போடு எடுத்தமுடிவு. இதில் அல்லாஹ் வெற்றியையே தருவான் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் : 

'போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம் ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.  (அல்குர்ஆன் 2 : 216)

எனவே சகோதரர்களே! நாமும் நமது குடும்பத்தாரும் அல்லாஹ்வுக்காக சமுதாய நலன் கருதி நமது சங்கத்தால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச்செய்வோம். இன்ஷா அல்லாஹ்

-  அப்துல்லாஹ்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!