Wednesday, May 27, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? " இணைவைப்பின் சிறிய வடிவம்! " தொடர் 9

அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்:
'ஒருமனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தொிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார். இதுவே மறைவான இணை வைப்பாகும்." ஆதாரம்: இப்னு மாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்.

'ரியா"வுடன் செயல்படும் ஒரு மனிதன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்குவதற்கு நாடுவதில்லை. ஆனால், 'எண்ணத்தில் இவைணைப்பை" வைக்கும் மனிதன், அல்லாஹ்வைத் தவிர வேறொன்றை வணங்க உண்மையில் நாட்டம் கொள்கிறான். உதாரணமாக, சிலையை வழிபடும் முஸ்லிமல்லாத ஒருவர், அந்தச் சிலையிடம் பிரார்த்திக்க வேண்டும், அதற்காக நேர்ச்சை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளார். இது எண்ணத்தில் வைக்கப்படும் இணைவைப்பு வகையைச் சார்ந்ததாகும். இதற்குக் காரணம், அந்தச் சிலையினால் தனக்கு நன்மையையோ, தீமையையோ செய்வதற்கு இயலும் என்று அவர் நம்புகிறார்.

ஆனால், மக்களிடம் நற்பெயர் வாங்குவதற்காகத் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்ளும் ஒரு முஸ்லிம், அம்மக்களைத் தொழுகின்றார் என்று சொல்லி விட முடியாது. மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவரது நோக்கம். அவர்களை வணங்குவது அவரது நோக்கம் அல்ல. அவரது செயல் மறைமுகமாக அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றை வணங்கும் செயலாகவே அமைந்துள்ளது. எனவே, 'ரியா"வும், 'எண்ணத்தில் இணைவைப்பும்" சமமானவை அல்ல.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நிச்சயமாக தனக்கு இணைவைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகிறவர்களுக்கு மன்னித்து விடுகிறான்.
(திருக்குர்ஆன் 4:48)

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நஷ்டமடைந்தவராவீர் என்று உமக்கும், உமக்கு முன் சென்றோர்க்கும் அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன் 39:65)

இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இணைவைப்புகள் பெரும் இணைவைப்பு வகையைச் சேர்ந்தவையாகும். ஆனால், இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளவை சிறிய வகை இணைவைப்பிற்கு பொருந்துமா? இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவிய போதும், ரியா இந்த வகையைச் சேர்ந்தது அல்ல. மாறாக, அது பெரும் பாவங்களில் (அல் கபாயிர்) ஒன்றாக விளங்குகின்றது என்று கூறுவது நலமாகும். (அல்லாஹ் நன்கு அறிந்தவன்) வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், (அல்லாஹ் அல்லாத மற்றவர்களை வணங்குவது போன்ற) பெரும் இணைவைப்பு ஒரு மனிதனை இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேற்றி விடுகின்றது: முடிவில்லாத நரகத்தை அவனுக்கு நிச்சயமாக்குகின்றது: அவனது நற்செயல்கள் அனைத்தையும் அழித்து விடுகின்றது. சிறிய வகை இணைவைப்பு, ஒரு மனிதனை இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றுவதில்லை.

ஆனால், ரியாவினால் பாதிக்கப்பட்ட நற்செயற்களுக்கானக் கூலிகளை அது ரத்து செய்து விடுகின்றது. அம் மனிதனின் நற்செயல்கள் அனைத்தும் சிறிய வகை இணைவைப்பினால் அழிவதில்லை. சிறிய வகை இணைவைப்பு செய்தவருக்கு நரகம் நிச்சயம் உண்டு என்று சொல்ல முடியாது. அல்லாஹ் நாடினால் அவரை மன்னித்து விடலாம்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!