Sunday, April 26, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? இது தான் நேரான மார்க்கம்தொடர் 4

மனிதன் திட்டமிட்டுச் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் ஒரு எண்ணம் இருப்பதை இந்த நபிமொழிகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த எண்ணங்கள் பாராட்டிற்குாியவைகள் அல்லது கண்டிக்கப்பட வேண்டியவையாக இருக்கலாம்: அல்லது இந்த இரண்டு வகையையும் சேராதவையாகவும் இருக்கலாம். ஆனால், மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் அல்லது குறிக்கோள் நிச்சயமாக இருக்கும். எதனை எண்ணினானோ அதனை ஒவ்வொரு மனிதனும் அடைந்து கொள்வான் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அதாவது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் கூலி, அவனது எண்ணத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும் நற்செயல் செய்ய வேண்டும் என்ற எண்ணமுள்ள ஒரு மனிதன், தகுந்த காரணத்தினால் அதனைச் செய்ய இயலவில்லை என்றாலும், அந்த நற்செயலுக்குாிய கூலி அம்மனிதனுக்குக் கிடைத்து விடும். ஆனால், தீயச்செயலைச் செய்ய எண்ணும் ஒரு மனிதன், பின்னர் அல்லாஹ்வின் மீதான அச்சத்தின் காரணமாக தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வானேயானால், அல்லாஹ் அவனது தீய எண்ணத்தை மன்னிப்பதுடன், அவனது இறைவுணர்விற்காக நற்கூலியையும் வழங்குவான்.

இதனைப் பின் வரும் நபிமொழி உறுதிப்படுத்துகின்றது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கும்போது (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும், தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதி விட்டான். பிறகு அதனை விவாித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என எண்ணி விட்டாலே அதை செயல்படுத்தா விட்டாலும் - அவருக்காக தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால் அந்த ஒரு நன்மையை தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதை செய்யாமல் விட்டு விட்டால் அதற்காக அவருக்கு தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்கு ஒரேயொரு குற்றத்தையே எழுதுகிறான். நூல்: புகாாி (6491)

இது குறித்து ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தீய செயலைப் புரிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதன், சூழ்நிலைகளின் காரணமாக அச்செயல் செய்யாமல் விட்டு விட்டால், அவனது கணக்கில் ஒரு தீய செயல் தான் பதிவு செய்யப்படும். உதாரணமாக கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லும் திருடன் ஒருவன், வழியில் விபத்து ஒன்றில் சிக்கிக் காலை முறித்துக் கொள்கிறான். இதனால், கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவனது எண்ணம் நிறைவேறவில்லை. இத்தகையவனுக்கு கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவனது எண்ணத்தை மாற்றிக் கொண்டதற்காக நற்கூலி கிடையாது. ஆனால், கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் புறப்படும் ஒரு மனிதன், வழியில் மனம் மாறி வீடு திரும்புவானேயானால், தீமையிலிருந்து தன்னைத் தடுத்துக் கொண்டதற்காக அவனுக்கு நற்கூலி கிடைக்கும். தீயநோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு செயலினால், நன்மை விளைந்தாலும், அதனைச் செய்த மனிதனின் கணக்கில் தீய செயலே பதிவு செய்யப்படும். சரியான தூய்மையான எண்ணங்களைக் கொண்டிருப்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான். வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கே உாித்தாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இது தான் நேரான மார்க்கம். (திருக்குர்ஆன் 98:5)

அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் விரும்பியதை நாம் விரும்பியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவருக்காக நரகத்தைத் தயார்படுத்துவோம். இழிந்தவராகவும் அருளுக்கு அப்பாற்பட்டவராகவும் அதில் அவர் நுழைவார். நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி அதற்காக முயற்சிப்போாின் முயற்சிக்கு, கூலி கொடுக்கப்படும். (திருக்குர்ஆன் 17,18,19)

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்குத்தான். அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் (திருக்குர்ஆன் 2:272)

ஆரம்பக்கால முஸ்லிம்கள் தூய்மையான, நல்ல எண்ணங்களின் அவசியத்தை நன்கு உணர்ந்து இருந்தார்கள். எனவே தான், அவர்கள் இது குறித்து ஏராளமானக் கருத்துக்களைத் தொிவித்துள்ளனர். இறைத்தூதாின் தோழரும், இஸ்லாத்தை முதலிலேயே தனது வாழ்வியல் திட்டமாக ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவருமான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்.'பேச்சைத் தொடர்ந்து செயல் இல்லையெனில், அந்தப் பேச்சு பயனற்றதாகும். நல்ல எண்ணம் இல்லாப் பேச்சும், செயலும் பயனற்றதாகும். நபிவழியுடன் ஒத்துப் போகாத பேச்சும், செயலும், நல்லெண்ணமும் பயனற்றதாகும்."

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!