Friday, April 3, 2009

ஷிர்க் என்றால் என்ன?இணைவத்தலின் தீய விளைவுகள்:தொடர் 5

அவர்களின் நல்ல அமல்களும் பயனற்றதாகிவிடும் என்று நாமாகக் கூறவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றான். பின்னர் அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்து விடும்! (அல்குர்ஆன் 6:88)

மூமினாக, ஏக இறை நம்பிக்கை உடையவனாக ஷிர்க்கான எந்தச் செயலும் செய்யாமல் உலகில் வாழ்ந்தவன் வேறு ஏதேனும் குற்றங்கள் புரிந்து, அதற்கு உலகிலேயே பாவ மன்னிப்புத் தேடாமல மரணித்துவிட்டால், அல்லாஹ் அவனை மன்னித்தும் விடலாம். தண்டிக்கவும் செய்யலாம். அப்படியே அல்லாஹ் அவனைத் தண்டிக்கும்போது நரகத்தில் நிரந்தரமாக அவனை வைப்பதில்லை.

அல்லாஹ் தனக்கு (எதனையும்) இணையாக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். (இணைவைத்தல் அல்லாத) மற்றவைகளை, தான் நாடியவர்களுக்கு மன்னிக்கின்றான்.(அல்குர்ஆன் 4:116)

ஏக தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்காதவர்கள்.மற்ற தவறுகள் புரிந்திருப்பின் இறுதி கட்டத்திலாவது சுவர்க்கத்தில் நுழைவார்கள்.ஆனால் ஷிர்க்கான நம்பிக்கை உள்ளவர்கள் சுவர்க்கத்தின் வாடையைக்கூட பெற முடியாது. அல்லாஹ் சுவர்க்கத்தை அவர்கள் மீது ஹறாமாக்கிவிட்டான்.

அல்லாஹ்வின் அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ அவரைத் தண்டிக்காமலிருப்பதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டான்.(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

சிறிது சிந்தித்துப் பாருங்கள்! ஷிர்க்கான காரியங்கள் புரிவோரின் முடிவு எவ்வளவு பயங்கரமானது என்று எண்ணிப் பாருங்கள். இறைவன் ஷிர்கை எவ்வளவு வெறுக்கிறான் என்பதையும் உணர்ந்து பாருங்கள்! நாம் ஷிர்க்கான காரியங்களைச் செய்யாமலிருப்பதில் எவ்வளவு எச்சரிக்கையுடனிருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

ஷிர்க்கான செயல்களைச் செய்து வருவோரிடம் ஏன் இவ்வாறு செய்து வருகின்றீர்கள்? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணாயிற்றே? என்று நாம் கேட்கும் போது, நாங்கள் அழைத்து வரும் அவ்லியாக்களை தெய்வமாகவா நாங்கள் கருதுகிறோம்? அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறும், அல்லாஹ்விடம் பெற்று தருமாறும் தானே வேண்டுகிறோம்! இது எப்படி ஷிர்க்காகும் என்று கேட்கின்றனர். அந்தோ பரிதாபம்! இவர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளவில்லை. அல்லாஹ் மிக நேர்மையானவன். அவன் அடியார்கள் மீது மிகவும் இரக்கம் கொண்டவன். தன் அடியார்கள் அனைவரின் அழைப்பையும் ஒரே நேரத்தில் நிவர்த்திக்கவும் செய்கின்றான். இன்னொருவர் மூலம் அடியார்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை. இன்னொருவர் சொல்லிக் கொடுத்துத் தெரிந்து கொள்ள அவன் அறியா தவனுமில்லை. அந்த இன்னொருவர் அவனை விட இரக்கம் கொண்டவருமில்லை.

ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்:
அவ்லியாக்களை அல்லாஹ்விடம் நமக்காக பரிந்து பேசுகின்ற வக்கீல்களாக கருதிக் கொண்டு நாம் எவ்வளவு பெரிய அறிவிலிகள் என்பதையல்லவா வெளிப்படுத்துகின்றோம்! அல்லாஹ் எல்லாம் அறிந்தவன். மையிருட்டில் நடமாடும் கறுப்பு எறும்பின் காலடி ஓசைகளையும் நன்கு அறிந்தவன். எல்லோருடைய உள்ளக் கிளர்ச்சிகளையும் உணர்பவன், அத்தகைய ஆற்றலுள்ளவனை ஒரு சாதாரண நீதிபதியுடன் ஒப்பிட்டு பேசமுடியுமா? உலகிலுள்ள நீதிபதிக்கு ஒரு மனிதனின் உள்ளக் கிடக்கையை உணரும் சக்தி இல்லை. அதற்காக வக்கீல்கள் தேவைப்படுவது இயற்கை. அந்த வக்கீல்கள், தமது கட்சிக்காரனின் வாதங்களை பக்குவமாக நீதிபதியிடம் எடுத்துக் கூறுவார்கள். உலக நீதிபதிகள், வக்கீல்களின் சாதுர்யப் பேச்சினால்பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் நம்பி தீர்ப்புக் கூற சந்தர்ப்பமுண்டு. இது போல நாம் நினைக்கிறபடி இந்த அவ்லியா வக்கீல்கள் அல்லாஹ்விடம் வாதாடி, நமது அயோக்கிய தனங்களையெல்லாம் அப்பழுக்கற்றவை என்று அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டி நமது கட்சியை ஜெயிக்கச் செய்து விடுவார்களா? எந்தக் கணிப்பிலே நாம் அவ்லியாக்களை நமது வக்கீல்களாக மாற்றி அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யத் துணிகிறோம்?

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!