Friday, April 10, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?இதயத்திலிருந்து இந்த நோயை விரட்ட சரியான வழி எது?தொடர் 1

திருக்குர்ஆன் வாயிலாக எல்லாம் வல்ல அல்லாஹ் மனித குலத்திற்கு பின்வரும் கட்டளையைப் பிறப்பிக்கிறான்.

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே கருதுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
(திருக்குர்ஆன் 35:6)

ஷைத்தான் சொல்வதாக அல்லாஹ் மேலும் கூறுகிறான்,
'நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன். பின்னர் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்" (திருக்குர்ஆன் 7:16,17)

மேலும் ஒரு வசனத்தில் ஷைத்தானால் வழிகெடுக்க முடியாத மனிதர்கள் விஷயத்தில் ஷைத்தானின் பலவீனத்தை அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கி காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அனைவரையும் வழி கெடுப்பேன். (திருக்குர்ஆன் 15:39,40)

நாம் படைக்கப்பட்டத்தின் நோக்கம் அல்லாஹ்வை மட்டுமே வழிபட வேண்டும் என்பதாகும். ஆனால், இந்த நல்லெண்ணத்தை மாற்றி, நமது நற்செயல்களைப் பாழ்படுத்துவது ஷைத்தானின் வழிமுறைகளில் ஒன்றாகும். நமது எண்ணங்களில் தவறான சிந்தனைகளைப் புகுத்தி, நமது வழிபாட்டின் நோக்கங்களை ஷைத்தான் மாற்றி விடுகிறான். இதன் விளைவாக நாம், படைத்த இறைவனின் திருப்தியையும், பாராட்டுதலையும் பெற முயற்சி செய்யாமல், படைக்கப்பட்ட மனிதர்களின் பாராட்டுதல்களைப் பெற முயற்சிக்கின்றோம். இதுதான் 'ரியா' எனப்படும்.

எனது உள்ளத்தில் இந்த நோய் இருப்பதை நான் கவனித்த போது, ஷைத்தானின் ஊசலாட்டங்கள் என்னை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நான் கவனித்த போது என்ன செய்வது என்று அறியாமல் நான் தத்தளித்தேன். ரியாவின் அபாயத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக நற்செயல்களைச் செய்வதை நான் நிறுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது நான் செய்யும் சிறிய நற்செயல்களைத் தொடர்ந்து கொண்டே, அந்தத் தீய செயலில் இருந்து என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டுமா? எனது இதயத்திலிருந்து இந்த நோயை விரட்ட சரியான வழி எது?

திருக்குர்ஆன் மற்றும் திருநபிமொழியின் பால் நான் திரும்பி இந்த நோயைப் பற்றிய தகவல்களைத் தேடினேன். இந்த நோய் எத்தகையது? இது வருவதற்கான காரணம் என்ன? இதன் அறிகுறிகள் யாவை? இதனைக் குணப்படுத்துவது எப்படி? இதனைத் தடுப்பது யாவை? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடினேன்.

அல்ஹம்துல்லில்லாஹ்! நான் தேடிய விடைகளையெல்லாம் கண்டபோது நான் ஆச்சாியப்படவில்லை. ஏனெனில், குர்ஆனும், ஹதீஸும் நமது மார்க்கத்தின் மூலங்களாக விளங்குகின்றன. நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் அவற்றில் தான் இருக்கின்றன.

நான் அறிந்தவற்றைத் தொகுக்க வேண்டும் என்று எண்ணினேன். இதனை எனது சகோதர முஸ்லிம்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், மறுமையில் எனக்கு ஒரு நல்லறமாகவும் அல்லாஹ் ஆக்குவான் என்று எதிர்பார்த்து இதை உங்கள் முன் வைக்கிறேன்.

written by அபூ அம்மார் யாசிர் அல் காழி
translation by MHJ

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!