Monday, February 28, 2011

நமக்கு நாமே எதிரி திட்டம்


என் அருமை சகோதரர்களே!. நம் இணையத்தில்,முஸ்லிம்களின் நமக்கு நாமே எதிரி திட்டம் (தமிழக தேர்தல்களும் கழகங்களும், ஜமாத்களும் ஓர் பார்வை) என்ற தலைப்பிலும்,இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்(முஸ்லிம்களுக்கு எத்தனை இடம்) என்ற இரு கட்டுரைகள், தமிழக முஸ்லிம் சகோதரர்களின் மத்தியில் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அறிவீர்கள். இந்த கட்டுரைகள் 25 க்கும் மேற்பட்ட நம் சகோதர இணையதளங்களில் வெளிவந்தும், சுமார் 8 க்கும் மேற்பட்ட குழுமங்களில் (Group) இது பதியப்பட்டு சகோதரர்களால் விவாதிக்கப்பட்டும், பெரும்பாலானவர்களுக்கு மின் அஞ்சல்கள் மூலமும் இச்செய்தி அனுப்பப்பட்டும் வருகின்றது. ஏன், எனக்கே இது மின்னஞ்சலில் வந்தது!. அல்ஹம்து லில்லாஹ்!. 

இதன் மூலம் நான் பெற்ற செய்தி, நீ எழுது, மற்றதை நாங்கள் பார்த்து கொள்கின்றோம், என்று என் சகோதரர்கள் உற்சாகம் தரும் அதேவேளை, நான் அறிந்த மற்றொரு செய்தி, இந்த சமுதாய இயக்கங்கள் இன்னும் நம்மை கூறுபோட முயலுவதால், விரக்தியின் விழிம்பில் நம் சமுதாயம் இருப்பதையும் எண்ணி வேதனைதான் மிஞ்சியது. ஏனெனில் பல தரப்பட்ட இயக்கங்களிலும், ஜமாத்களிலும், இன்ன பிற கொள்கையில் இருந்தும் பாடுபட்டு, பின் அதில் இருந்து வெறுத்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் நாம் கண்கூடாக காண்கின்றோம்!. இயக்கங்களை நாம் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள வேண்டும். அதையே நாம் உணவாக உட்கொண்டால் இதுபோன்ற அஜீரனக்கோளாருகள் வருவது தவிர்க்க முடியாதது!.



தற்போது தொகுதி ஒதுக்கீட்டு பங்கீடுகள் நடந்தேறி வருகின்றது. அதில் முதற்கட்டமாக வீரியமிக்க(!) ம.ம.க விற்கு அ.தி.மு.க கூட்டணியில் மூன்று தொகுதிகள் (அடேங்கப்பா! எம்மாம் பெரிய மனசு ஜெயலலிதாவிற்கு!.) வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மூன்று தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு விட்டு, இனி என் இஸ்லாமிய சகோதரர்கள், மீதமுள்ள 231 தொகுதியில் உள்ள மற்ற முஸ்லிம்களின் ஓட்டைபெற்று, இந்த கூட்டணிக்கு தாரைவார்த்து கொடுக்கவேண்டும்!. மற்றவர்களுக்காக நாயாய், பேயாய் இரவு பகல் பாராமல் அலைய வேண்டும்!. பிரச்சாரத்தின் போது அடி உதைகள் வாங்கவேண்டும். வழக்குகளை சந்திக்க வேண்டும். ஏன் சில சமயங்களில் தங்களின் இன்னுயிரையே மாய்க்கவேண்டும்!. இவைகள் அத்தனையும் எதற்கு தெரியுமா?. மூன்றே மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை சட்டமன்றத்திற்குள் எப்படிபட்டாவது அதிகரிக்க வேண்டி!.

ஆனால் அதையும் கூட, தனது பார்ப்பன புத்தியின் வெளிப்பாடாக, பி.ஜே.பி யை இவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நிறுத்தி அவர்களுக்கு மறைமுக ஆதரவை அதிமுக தெரிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!. (இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா...!) ஏனெனில் ஜெயலலிதாவின் பார்ப்பன புத்தி அப்படித்தான் செயல்படும். அதைவிட மிக கொடுமை ம.ம.க.வை பழிதீர்ப்பதாக நினைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க இருக்கும் பலனை கிடைக்கவிடாமல் செய்ய நினைப்பது, த.த.ஜ தமிழக முஸ்லிம்களுக்கு செய்யும் பெரிய துரோக முடிவாகும். ம.ம.க வை எதிர்த்து இவர்கள் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருப்பது இந்த சமுதாயத்திற்கு நல்லதல்ல!. இதை இவர்கள் உடனே மறுபரிசீலனை செய்யவேண்டும். 

ம.ம.க மட்டுமல்ல, இவர்கள் எந்த அரசியல் கட்சி கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட முடிவெடுக்கின்றார்களோ, அக்கூட்டணிக்கு எதிர்தரப்பில் நிறுத்தப்படும் எந்த முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது!. இவர்களுக்குப்பின் ஒரு கூட்டம் இருப்பது உண்மை என்றாலும், இவர்கள் எடுத்த இந்த தவறான முடிவை இம்மக்கள் நிராகரிக்கவேண்டும். வேறு முடிவுகளை நீங்கள் ஆதரித்தாலும் இதுபோன்ற தவறான முடிவிற்கு ஆதரவளிக்காமல் இருப்பதே நலம்.

மேலும் திமுகவின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் லீக்கிற்கு வழக்கம் போல் குடும்ப கட்டுப்பாட்டு கோட்பாட்டின் தாரகமந்திரமான இரண்டுக்கு மேல் வேண்டாம்(!) என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம். அதுவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டால் ( போட்டியிட்டாலா?. பரம்பரை பழக்கத்தை மாற்ற முடியுங்களா?.) மூன்று கிடைக்கலாம். ஆக மொத்தம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மொத்தமாக இந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பே உள்ளது. தவிர ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம். 

இதில் ஜெயித்து வருவது எத்தனைபேர்?. இதில் 50% வெற்றி வாய்ப்பென்றால், முஸ்லிம் இயக்கங்களின் சார்பில், இரண்டு அல்லது மூன்று முஸ்லிம்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் என்ற அவல நிலை ஏற்படும்!. இது இந்த சமுதாயத்திற்கு போதுமா? என்பதே தற்போதைய கேள்வி?

அரசியல் கட்சிகளில், குறிப்பாக திமுக, மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தான் தற்போது அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எனவே இவர்கள் தங்களின் கட்சியை சேர்ந்த தலா பத்து முஸ்லிம்களுக்கு தேர்தலில் நிற்க தொகுதிகளை ஒதுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் ஏழு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். ப.ம.க மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தலா ஐந்து தொகுதிகளை அவர்கள் கட்சியை சார்ந்த முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும். ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தலா இரண்டு தொகுதிகளை அவர்களின் கட்சியை சார்ந்த முஸ்லிம் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட வேண்டும். 

ஏனெனில் இந்த கட்சிகளில் பெரும்பாலான முஸ்லிம்கள் எந்த விதமான அதிகாரமிக்க பதவிகளை பெறுவதே கிடையாது!. குறிப்பாக ப.ம.க, மதிமுக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட்கள் சார்பில் இதுவரை ஓரு முஸ்லிம்கூட சட்டமன்ற உறுப்பினரானது கிடையாது!. ஆனால் நம் ஓட்டுக்கள் மட்டும்தான் தேவை!.

திமுக 10
அதிமுக 10
காங்கிரஸ் 7
ப.ம.க 5
தே.மு.தி.க 5
ம.தி.மு.க 2
இரு கம்யூனிஸ்ட்கள் 4
விடுதலை சிறுத்தைகள் 2

இவ்வாறு இவர்கள் ஒதுக்கீடு செய்தால், ஆக மொத்தம் அரசியல் கட்சிகள் சார்பில் 45 முஸ்லிம் வேட்பாளர்களும், இஸ்லாமிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் 6 வேட்பாளர்களையும் சேர்த்து, இத்தேர்தலில் 51 முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள். இறக்கப்பட்ட வேண்டும்!. இந்த 51 வேட்பாளர்களில் மிகவும் கீழ்த்தரமாக வெறும் 50 % முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றார்களே யானால் வரும் சட்டமன்றத்தில் நீங்கள் 25 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை காணமுடியும். 

அதாவது இது நியாயமான மற்றும் அடிமட்ட கோரிக்கையின் கணக்கீடேயாகும். இதை தவிர முஸ்லிம்களின் எண்ணிக்கையை சட்டமன்றத்தில் நாம் அதிகரிக்கச் செய்யவே முடியாது. ஊராட்சி, பஞ்சாயத்து போர்டு, நகராட்சி, மாநகராட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய அத்தனை தேர்தலிலும் இதே போன்று கிடைக்க செய்யவேண்டும்.

இந்த சமுதாயத்திற்கு இதுபோன்ற இடங்களில் சீட் கிடைக்கின்றதோ இல்லையோ!, தவறாமல் கடவுசீட்டை (பாஸ்போர்ட்) மட்டும் எளிமையாக கிடைக்க வழிவகை செய்து வைத்து விடுகின்றார்கள். ஏனெனில் இதை உங்களுக்கு எளிமை படுத்தி வைத்ததற்கு காரணமே, இதை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிடுங்கள் என்பதற்காகவே!. நீங்கள் இதுபோல் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டு இந்த அரசியல் கட்சிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காவே!. அட சனியன் பிடித்த அயோக்கியர்களே!. முதலில் கடவுச்சீட்டை எங்களுக்கு கிடைப்பதை கஷ்டமாக்குங்கள்!. அப்போதுதான் என் சமுதாயம் ஊரிலே இருந்து, இது போன்று தேர்தலை சந்திக்க சிந்திக்கும். ஆட்சி அதிகாரத்தினை அடைய முற்படும்!. அதிகார படிப்பினை படிக்கும்!.

எனவே இனி நாம் என்ன செய்யவேண்டும்?.

அரசியல் கட்சிகளின் சார்பில் அவர்கள் கட்சியை சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்த தேர்தலில் அதிக சீட் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை மிகவும் வலுவாக்கப்பட வேண்டும்!. இந்த கோரிக்கையை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊரில் உள்ள ஜமாத்திலும், தேர்தலில் ஆதரவு என்ற நிலைபாட்டை மட்டுமே எடுக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், கட்சி மற்றும் கட்சி சார்பற்ற முஸ்லிம்கள் அனைவரும் இதை கோரிக்கையாக, இந்த செவிட்டு அரசியல் கட்சிகளின் தலைமைக்கு புரியும் வண்ணம் போஸ்டர்களாகவும், நோட்டீசாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் நம் கோரிக்கையை பிரபலப்படுத்தி வலுசேர்க்க வேண்டும். இந்த தேர்தலிலேயே கிடைக்க பெரும்முயற்சி செய்யவேண்டும். 

வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் ஊரில் உள்ளவர்கள் மூலம் போஸ்டர்கள் அடித்து ஓட்ட ஆவன செய்யுங்கள். இந்த தேர்தலில்  அரசியல் கட்சிகள் தங்களின் நிலைபாட்டை மாற்ற நீங்களும் காரணமாக இருங்கள். இது தொடக்கமாக இருக்கட்டும்!. அடுத்த அடுத்த தேர்தல்களில் இவர்களுக்கு வேறு வழியில்லாமல் போகும்!. தந்தே தீருவார்கள்!. “இத்தனை முஸ்லிம்களை நிறுத்தினால் மட்டுமே ஓட்டு” என்ற கோரிக்கையை, இக்கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை பரிசீலிக்கும் முன்பே, வலுசேர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதையும் நினைவில் வையுங்கள்.

எப்படி என் முந்தைய இரண்டு கட்டுரைகளையும் மக்கள் மத்தியில் நீங்கள் எடுத்து செண்றீர்களோ, அதை விட பல மடங்கு இதை மக்கள் மத்தியில் பெரிதுபடுத்தப்பட வேண்டும். இந்த கட்டுரையில் உங்களின் பெயர்களையோ அல்லது உங்களின் இணைய தளங்களின் முகவரியையோ போட்டுக்கொள்ளுங்கள். நன்றி என்று என் பெயரையோ அல்லது என் இனையத்தின் பெயரையோ போடவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது என் கோரிக்கை அல்ல!. இந்த சமுதாயத்தின் கோரிக்கை!!.

1 comment:

  1. இங்கு இந்தப்பதிவை வெளியிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!