Thursday, February 3, 2011

எண்ணிய படியே உயர்வோம்


(மறைந்த இஸ்லாமிய அறிஞர் குர்ரம் முராத் அவர்களின் கட்டுரையைத் தழுவியது)
ஆங்கிலத்தில் Self Development என்றழைக்கப்படும் சுய முன்னேற்றம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அவசியமானதாக உள்ளது. அனைவரும் சுய முன்னேற்றம் அடையவே விரும்புகிறார்கள். சுய முன்னேற்றத்தை அடைவது எப்படி என்பது குறித்து இன்றைய உலகில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் ஆயிரக்கணக்கில் பணத்தை வசூல் செய்து நடத்தப்பட்டு வருகின்றது. நாம் இத்தொடரில் ஒரு முஸ்லிம் எத்தகைய சுய முன்னேற்றப் பயிற்சியை பெற வேண்டும் என்பதை இன்ஷாஅல்லாஹ் விரிவாக பார்ப்போம்.
சுய முன்னேற்றத்தின் முக்கியத்துவமும் அவசியமும்
நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒரு குறிக்கோள் உள்ளது. அந்த குறிக்கோளை அடையும் போது நாம் இன்பம் அடைகின்றோம்.
குறிக்கோள் எதுவாகவும் இருக்கலாம்
மிக உயரியது அல்லது மிகச் சிறியது
விரிவானது அல்லது குறுகியது
பொருளை அடைவது அல்லது ஆன்மீகமானது
தனிப்பட்டது அல்லது கூட்டானது
எதுவாக இருந்தாலும் அதனை அடைவதற்கு பிரத்யோகமான தயாரிப்பு மிகவும் அவசியம்.
குறிக்கோளுடன் மனிதன் தன்னை இணைத்துக் கொள்ளும் போது அதனை அடைவதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான். ஒரு குறிக்கோளை அடைவதற்கு வெறும் வாய் சவடால் மட்டும் போதாது. குறிக்கோள் அடைவதற்கு தேவையான வழிகளை வளங்களை உருவாக்க வேண்டும். நமது உடலும், உள்ளமும் எந்த அளவிற்கு அதற்காக உழைக்கிறது என்பதும் முக்கியமானது.
குறிக்கோளை குறித்த நமது எண்ணம் தெளிவானதாக இருக்க வேண்டும். தெளிவான குறிக்கோளை நாம் அமைத்துவிட்டால் நமது நடவடிக்கைகளுக்கு ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்காக குறிக்கோள் அமைந்து விடும். சில நேரங்களில் நாம் வளங்களை நாடி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நமது குறிக்கோளே நமக்கு தேவையான வளங்ளை யாவை அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை வடிவமைத்து விடும்.
உதாரணமாக வீரனாக விரும்பும் ஒருவனுக்கு இலக்கியத்திறன் அவசியமில்லை. இலக்கியவாதியாக ஆக விரும்புவனுக்கு சண்டைப் பயிற்சி தேவை இல்லை.
குறிக்கோளை அடைய உரிய ஆளுமை திறன் அவசியம்
உடல், மனம், எண்ணம், குணம், பண்பாடு, ஒழுக்கம் ஆகிய அனைத்தும் குறிக்கோளை அடையும் வகையில் செதுக்கப்பட வேண்டும் இதற்காக திட்டமிட்ட பயிற்சியை மேற்கொள்ளலாம் அல்லது நம்மிடம் இயற்கையிலேயே அந்த குணங்கள் அமைந்திருக்கலாம். பார்ப்பது கேட்பது புரிவது ஆகிய உடல் ரீதியான திறன்களுக்கும் நமக்கு பயிற்சி அவசியம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிறப்பு முதல் இறப்பு வரை இதற்கான பயிற்சியை இறைவன் தருகிறான்.
எண்ணம், உள்ளம், அறிவு மற்றும் ஆற்றல், ஒழுக்கம், நடத்தை ஆகியவற்றை செப்பனிடவும் நமக்கு பயிற்சி அவசியம்.
இதற்கான தகுதி தானாக வந்தாலும் பெரும்பகுதி சூழல்களின் அடிப்படையில் தான் அமைகின்றன. எனவே இதற்கான பிரத்யேக முயற்சிகளில் நாம் இறங்க வேண்டும்.
இறைவன் நமக்கு அருளிய மாபெரும் அருட்கொடைகளாக மன உடல் அறிவு மற்றும் தனித் திறன்கள் அமைந்துள்ளன. நன்னடத்தை அப்பழுக்கற்ற ஒழுக்கம் மற்றும் சீரிய மாண்புகளை பெறுவதற்கு இந்த திறன்கள் வழிவகுக்கின்றன. உலகில் மிக உன்னதமானதாக உயரிய நடத்தையும் ஒழுக்கமும் அமைந்துள்ளது. தேவையான முயற்சி மற்றும் பயிற்சியின் மூலமாக தான் இந்த நிலையை அடைய முடியும். இந்த நிலை தான் நம்மை இறைவனின் திருப்தியை பெற வைக்கும்.
ஈருலக வெற்றியை உளத்தூய்மையுடனும் சுய முன்னேற்றத்துடனும் தொடர்புப்படுத்துகின்றது திருக்குர்ஆன்
தூய்மையடைந்தவன் திட்டமாக வெற்றி பெறுகிறான் (அல்குர்ஆன் 87:14)
அதை (ஆத்மாவை) பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார் (அல்குர்ஆன் 91:9)
ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறா ர்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.
(அல்குர்ஆன் 20:75)
(அத்தகையவருக்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பார் இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும். (அல்குர்ஆன் 20:76)
சுய முன்னேற்றத்தின் இலக்கு இறைத் திருப்தி
நமது குறிக்கோள் என்னவென்பதை முதலில் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். ஆனால் நமது முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதை வைத்தே குறிக்கோளை நிர்ணயிக்க இயலும்.
ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் இறுதியில் இறைவனது திருப்தியைப் பெற்று நிரந்தரமான சுவனத்தை பெறுவதைத் தான் நாடுவான். ஒரு முஸ்லிம் இந்த உயரிய குறிக்கோளை நிர்ணயித்த பிறகு அதனை நோக்கிய தமது சுய முன்னேற்றத்திற்கான வழித்தடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
எந்தவொரு முஸ்லிமும் தனது இறுதி முடிவு நரகமாக இருக்கக் கூடாது என்றே நினைப்பான். எனவே நமது சுய முன்னேற்றத்தின் வழி தடத்தில் இறைவனின் கோபத்தை பெறும் நடவடிக்கைகள் இருக்க முடியாது. இறைவனின் திருப்தியை பெறும் நடவடிக்கைத் தான் நமது வாழ்வின் குறிக்கோளாக இருக்க இயலும்.
வாழ்வின் முடிவில் வெற்றிப் பெற்றவன் யார் என்பது குறித்து திருக்குர்ஆன்:
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆக வேண்டும். அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்ப டுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)
இறைவனின் திருப்தியை பெறுவது தான் முதன்மையான குறிக்கோள். ஏனெனில் அதில் நாம் வெற்றிப் பெற்றால் சுவனம் நமக்கு நிச்சயம் உண்டு.
முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு. அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)
இறைவனின் திருப்தியை பெறுவதும் சுவனத்தை அடைவதும் இணைப்பிரியாதது.
இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான். அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்2:207)
நமது வாழ்வின் குறிக்கோள் எது என்பதற்கு திருக்குர்ஆனே வழிகாட்டுகின்றது.
அறிந்து கொள்ளுங்கள் “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும். மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும். (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும். (அதாவது) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது. ஆனால் சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர், பின்னர் அது கூளமாகி விடுகிறது. (உலக வாழ்வும் இத்தகையதே, எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் 57:20)
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள். அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும். எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும். அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன். (அல்குர்ஆன் 57:21)
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள். அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133)
சுவனத்தை நோக்கி விரைந்துச் செல்லுங்கள் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான். சுவனத்தை நோக்கிய இந்த ஓட்டப் போட்டியில் வெற்றி பெறும் வகையில் நமது சுய முன்னேற்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும். ஏனெனில் அதன் முத்திரை கஸ்தூரியாகும். எனவே, (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 8326)
இந்த வகையில் சுவனம் தான் தமது இறுதி இலக்கு என்பதை மனதில் கொண்டு தமது வாழ்வை அமைத்துக் கொண்ட சில நபித்தோழர்களின் வாழ்வை நாம்…
இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் பார்ப்போம்…

- பேராசிரியர். முனைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!