Sunday, April 26, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? இது தான் நேரான மார்க்கம்தொடர் 4

மனிதன் திட்டமிட்டுச் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் ஒரு எண்ணம் இருப்பதை இந்த நபிமொழிகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த எண்ணங்கள் பாராட்டிற்குாியவைகள் அல்லது கண்டிக்கப்பட வேண்டியவையாக இருக்கலாம்: அல்லது இந்த இரண்டு வகையையும் சேராதவையாகவும் இருக்கலாம். ஆனால், மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் அல்லது குறிக்கோள் நிச்சயமாக இருக்கும். எதனை எண்ணினானோ அதனை ஒவ்வொரு மனிதனும் அடைந்து கொள்வான் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அதாவது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் கூலி, அவனது எண்ணத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும் நற்செயல் செய்ய வேண்டும் என்ற எண்ணமுள்ள ஒரு மனிதன், தகுந்த காரணத்தினால் அதனைச் செய்ய இயலவில்லை என்றாலும், அந்த நற்செயலுக்குாிய கூலி அம்மனிதனுக்குக் கிடைத்து விடும். ஆனால், தீயச்செயலைச் செய்ய எண்ணும் ஒரு மனிதன், பின்னர் அல்லாஹ்வின் மீதான அச்சத்தின் காரணமாக தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வானேயானால், அல்லாஹ் அவனது தீய எண்ணத்தை மன்னிப்பதுடன், அவனது இறைவுணர்விற்காக நற்கூலியையும் வழங்குவான்.

இதனைப் பின் வரும் நபிமொழி உறுதிப்படுத்துகின்றது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கும்போது (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும், தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதி விட்டான். பிறகு அதனை விவாித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என எண்ணி விட்டாலே அதை செயல்படுத்தா விட்டாலும் - அவருக்காக தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால் அந்த ஒரு நன்மையை தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதை செய்யாமல் விட்டு விட்டால் அதற்காக அவருக்கு தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்கு ஒரேயொரு குற்றத்தையே எழுதுகிறான். நூல்: புகாாி (6491)

இது குறித்து ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தீய செயலைப் புரிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதன், சூழ்நிலைகளின் காரணமாக அச்செயல் செய்யாமல் விட்டு விட்டால், அவனது கணக்கில் ஒரு தீய செயல் தான் பதிவு செய்யப்படும். உதாரணமாக கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லும் திருடன் ஒருவன், வழியில் விபத்து ஒன்றில் சிக்கிக் காலை முறித்துக் கொள்கிறான். இதனால், கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவனது எண்ணம் நிறைவேறவில்லை. இத்தகையவனுக்கு கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவனது எண்ணத்தை மாற்றிக் கொண்டதற்காக நற்கூலி கிடையாது. ஆனால், கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் புறப்படும் ஒரு மனிதன், வழியில் மனம் மாறி வீடு திரும்புவானேயானால், தீமையிலிருந்து தன்னைத் தடுத்துக் கொண்டதற்காக அவனுக்கு நற்கூலி கிடைக்கும். தீயநோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு செயலினால், நன்மை விளைந்தாலும், அதனைச் செய்த மனிதனின் கணக்கில் தீய செயலே பதிவு செய்யப்படும். சரியான தூய்மையான எண்ணங்களைக் கொண்டிருப்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான். வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கே உாித்தாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இது தான் நேரான மார்க்கம். (திருக்குர்ஆன் 98:5)

அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் விரும்பியதை நாம் விரும்பியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவருக்காக நரகத்தைத் தயார்படுத்துவோம். இழிந்தவராகவும் அருளுக்கு அப்பாற்பட்டவராகவும் அதில் அவர் நுழைவார். நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி அதற்காக முயற்சிப்போாின் முயற்சிக்கு, கூலி கொடுக்கப்படும். (திருக்குர்ஆன் 17,18,19)

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்குத்தான். அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் (திருக்குர்ஆன் 2:272)

ஆரம்பக்கால முஸ்லிம்கள் தூய்மையான, நல்ல எண்ணங்களின் அவசியத்தை நன்கு உணர்ந்து இருந்தார்கள். எனவே தான், அவர்கள் இது குறித்து ஏராளமானக் கருத்துக்களைத் தொிவித்துள்ளனர். இறைத்தூதாின் தோழரும், இஸ்லாத்தை முதலிலேயே தனது வாழ்வியல் திட்டமாக ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவருமான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்.'பேச்சைத் தொடர்ந்து செயல் இல்லையெனில், அந்தப் பேச்சு பயனற்றதாகும். நல்ல எண்ணம் இல்லாப் பேச்சும், செயலும் பயனற்றதாகும். நபிவழியுடன் ஒத்துப் போகாத பேச்சும், செயலும், நல்லெண்ணமும் பயனற்றதாகும்."

Thursday, April 23, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?நற்கூலி பெற்றுத் தரும் செயல்கள் எவை??தொடர் 3

ரியாவைப் பற்றிய விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்பு 'தூய்மையான எண்ணத்தின்" முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: '"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. ஒருவரது ஹிஜ்ரத் (துறத்தல்) உலகைக் குறிக்கோளாகக் கொண்டிருத்தல் அதையே அவர் அடைவார். அல்லது ஒரு பெண்ணைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவளை மணப்பார். ஒருவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்" இதை உமர் பின் கத்தாப் (ரலி) மேடையில் இருந்து அறிவித்தார்கள். ஆதாரம்: புகாாி (1), முஸ்லிம், அபூதாவூத் .

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றாக இந்த ஹதீஸ் விளங்குகின்றது. இதனால் அநேகமாக எல்லா ஹதீஸ் நூல்களிலும், இந்த ஹதீஸ் இடம் பெற்று அனைவராலும் பரப்பப்பட்டுள்ளது. இமாம் புகாாி (ரஹ்) தமது ஸஹீஹ் புகாாியை இந்த ஹதீஸுடன் தான் தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் அல்லாஹ்விற்கன்றி வேறு எவருக்காகவும், ஏதாவது ஒரு செயல் செய்யப்படுமேயானால், இவ்வுலகிலும், மறுவுலகிலும் அதனால் எவ்வித நற்பயனும் ஏற்படாது என்பதை உணர்த்துகிறார்கள்.

இஸ்லாத்தின் அடித்தளம் மூன்று ஹதீஸ்கைைளச் சார்ந்து இருப்பதாக இமாம் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்) குறிப்பிடுகின்றார்கள். அவற்றில் ஒன்று நாம் மேலே குறிப்பிட்டுள்ள 'எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன...." என்ற உமர் (ரலி) அறிவிக்கின்ற நபிமொழியாகும்.மற்றொன்று நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்ற பின் வரும் நபிமொழியாகும். அல்லாஹ்வின் தூதார் நபி அவர்கள் கூறினார்கள்: 'அனுமதிக்கப்பட்டவையும், மிகத் தெளிவானவை. அனுமதிக்கப் படாதவையும் தெளிவானவை. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கிடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கிடமான வற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்திற்கும், தமது மானம், மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுவதிலிருந்து விலகி விடுகிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறாரோ அவர் வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சாிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லைகள் அவனால் தடை செய்யப்பட்டவைகளாகும். எச்சாிக்கை! உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள் அதுதான் உள்ளம்" இதை நூஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாாி (52), முஸ்லிம்இன்னொரு நபிமொழி ஆயிஷா (ரலி) அறிவிக்கின்ற பின்வரும் நபிமொழியாகும். 'எவரொருவர் நம்முடைய இந்த விவகாரத்தில் (அதாவது இஸ்லாத்தில்), அதனைச் சார்ந்திராத ஏதாவது ஒன்றைப் புகுத்துவாரேயானால், அது நிராகாிக்கப்படும்." ஆதாரம்: புகாாி (2697), முஸ்லிம், அபூதாவூத், இப்னு . மாஜாஅதாவது 'பித்அத்" (நூதனச் செயலை) ஒருவர் கடைப்பிடிப்பாரேயானால், அவருக்கு மறுமையில் எவ்வித நற்பேறும் கிடைக்கப்போவதில்லை.இமாம் அபூதாவூத் அவர்கள் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளார்கள். 'இறைத்தூதாின் 500000 ஹதீஸ்களை நான் தொகுத்தேன். இதில் எனது நூலுக்கு (சுனன் அபூதாவூதிற்கு) 4800 ஹதீஸ்களை மட்டுமே தேர்ந்தெடுத்தேன். இதில் ஒருமனிதர் தனது மார்க்கத்தைப் பேண நான்கு நபிமொழிகளே போதுமானதாகும்."அவற்றில்,முதலாவது:-'எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன...." என்ற இறைத்தூதாின் பொன்மொழி.இரண்டாவது:-'தனக்குத் தொடர்பில்லாத விஷயங்களை விட்டு விடுவது நல்ல முஸ்லிமாக விளங்குவதின் ஒரு பகுதியாகும்" அறிவிப்பவர்கள்: அலி (ரலி) அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத்மூன்றாவது:-'தனக்கென எதனை விரும்புகின்றானோ அதனைத் தனது சகோதரனுக்கு விரும்பாத வரை உங்களில் யாரும் உண்மையில் நம்பிக்கையாளர் இல்லை" அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதாரம்: புஹாாி (13), முஸ்லிம், இப்னு மாஜாநான்காவது:-'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவை..." என்று தொடங்கும் நுஃமான் பின் பஷீர் அறிவக்கும் நபிமொழியாகும். நாம் மேற்கோள் காட்டியுள்ளவற்றிலிருந்து எண்ணங்களைப் பற்றிய நபிமொழிகள் இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்.

Saturday, April 18, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?ரியா என்றால் என்ன?தொடர் 2

'ரியா" என்ற அரபிச் சொல், 'ரஆ" எனற வேர்ச் சொல்லிருந்து வருகின்றது. 'ரஆ" என்றால் 'பார்த்தான்", 'கவனித்தான்" என்று பொருள். 'ரியா" என்பதற்கு பகட்டுத்தனம், பாசாங்கு செய்தல், பாவனை, முகஸ்துதி, நயவஞ்சகம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.மனிதர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் அல்லது மனிதர்களின் பாராட்டுக்களைப் பெறும் நோக்கில் அல்லாஹ்வை வணங்குவது அல்லது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் செயல்களில் ஈடுபடுவது என்பதே ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் 'ரியா" எனப்படுகின்றது.

இத்தகைய செயல்களைத் தூண்டும் எண்ணம் முற்றிலும் தூய்மையற்றதாக இருக்கலாம். அதாவது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற வேண்டுமென்ற எண்ணம் சிறு துளி கூட இல்லாமல், மனிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டும் அச்செயலில் ஒரு மனிதர் ஈடுபட்டிருக்கலாம்: அல்லது அவரது எண்ணத்தின் ஒரு பகுதி மட்டும் தூய்மையானதாக இருக்கலாம். அதாவது அச்செயலில் ஈடுபடும் போது அவரது எண்ணத்தில் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பது ஒரு பகுதியாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் பாராட்டுதல்களைப் பெற வேண்டும் என்பது அவரது எண்ணத்தின் இன்னொரு பகுதியாகவும் இருக்கலாம்.

'ரியா" என்பது குறித்த இந்த விளக்கத்தை நாம் கவனிக்கும் போது, 'ரியா" உள்ளத்தில் இருந்து தோன்றுகின்றது என்பதைப் பூிந்து கொள்ளலாம். ஈமான் (நம்பிக்கை) என்பது உள்ளத்தின் செயற்பாடுகளும் (அதாவது, அச்சம், அன்பு, நம்பிக்கை, எதிர்பார்ப்பு) நாவின் வெளிப்பாடுகளும் (அதாவது, கலிமாவைச் சொல்வது) கால், கைகளின் செயற்பாடுகளும் (அதாவது தொழுகை, ஹஜ்) உள்ளடங்கியதாக உள்ளது.

'உள்ளத்தின் வெளிப்பாடுகள், அடிப்படை நம்பிக்கையின் ஒரு பகுதியாக விளங்குகின்றது. அல்லாஹ் மற்றும் அவனது தூதர் மீதான நேசம், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை, அல்லாஹ்விற்காக மார்க்க விஷயத்தில் நேர்மையாக இருத்தல், அல்லாஹ்விற்கு நன்றிக் கடன்பட்டிருப்பது, அல்லாஹ்வின் நாட்டம் குறித்து பொறுமையாக இருப்பது, அல்லாஹ்வின் பால் அச்சம்... ஆகிய இந்தச் செயற்பாடுகள் அனைத்தும், எல்லா படைப்பினங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளதாக அனைத்து அறிஞர்களும் ஒருமித்தக் கருத்துக் கொண்டுள்ளார்கள்." (மஜ்மு அல் பத்தாவா பகுதி 10, பக்கம் : 5) என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்.

இப்னு கையூம் அல் ஜவ்ஸீ இவ்வாறு சொல்கிறார்கள்:
'உள்ளத்தின் செயற்பாடுகள் தான் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது. உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் இவற்றைப் பின்பற்றி நம்பிக்கையை நிறைவுபடுத்துகின்றன. நோக்கம் ஆத்மா போன்றும், செயல்கள் உடல் போன்றும் அமைந்துள்ளன. ஆத்மா உடலை விட்டுப் பிாிந்தால், உடல் செத்து விடுகின்றது. எனவே உள்ளத்தின் செயற்பாடு பற்றிய அறிவு, உடல் உறுப்புகளின் செயற்பாடு பற்றிய அறிவை விட முக்கியமானதாகும். இல்லையெனில் உள்ளத்தின் செயற்பாட்டைத் தவிர வேறு எதைக் கொண்டு ஒரு நம்பிக்கையாளரை, நயவஞ்சகாிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலும்? உடல் உறுப்புகளின் வணக்கம் மற்றும் சமர்ப்பணத்தை விட உள்ளத்தின் வணக்கமும், சமர்ப்பணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், உள்ளத்தின் வணக்கம் தொடர்ச்சியானது, ஒவ்வொரு சந்தப்பத்திலும் உள்ளம் வழிபாடு செய்வது அவசியமாகும்."

Friday, April 10, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?இதயத்திலிருந்து இந்த நோயை விரட்ட சரியான வழி எது?தொடர் 1

திருக்குர்ஆன் வாயிலாக எல்லாம் வல்ல அல்லாஹ் மனித குலத்திற்கு பின்வரும் கட்டளையைப் பிறப்பிக்கிறான்.

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே கருதுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
(திருக்குர்ஆன் 35:6)

ஷைத்தான் சொல்வதாக அல்லாஹ் மேலும் கூறுகிறான்,
'நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன். பின்னர் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்" (திருக்குர்ஆன் 7:16,17)

மேலும் ஒரு வசனத்தில் ஷைத்தானால் வழிகெடுக்க முடியாத மனிதர்கள் விஷயத்தில் ஷைத்தானின் பலவீனத்தை அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கி காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அனைவரையும் வழி கெடுப்பேன். (திருக்குர்ஆன் 15:39,40)

நாம் படைக்கப்பட்டத்தின் நோக்கம் அல்லாஹ்வை மட்டுமே வழிபட வேண்டும் என்பதாகும். ஆனால், இந்த நல்லெண்ணத்தை மாற்றி, நமது நற்செயல்களைப் பாழ்படுத்துவது ஷைத்தானின் வழிமுறைகளில் ஒன்றாகும். நமது எண்ணங்களில் தவறான சிந்தனைகளைப் புகுத்தி, நமது வழிபாட்டின் நோக்கங்களை ஷைத்தான் மாற்றி விடுகிறான். இதன் விளைவாக நாம், படைத்த இறைவனின் திருப்தியையும், பாராட்டுதலையும் பெற முயற்சி செய்யாமல், படைக்கப்பட்ட மனிதர்களின் பாராட்டுதல்களைப் பெற முயற்சிக்கின்றோம். இதுதான் 'ரியா' எனப்படும்.

எனது உள்ளத்தில் இந்த நோய் இருப்பதை நான் கவனித்த போது, ஷைத்தானின் ஊசலாட்டங்கள் என்னை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நான் கவனித்த போது என்ன செய்வது என்று அறியாமல் நான் தத்தளித்தேன். ரியாவின் அபாயத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக நற்செயல்களைச் செய்வதை நான் நிறுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது நான் செய்யும் சிறிய நற்செயல்களைத் தொடர்ந்து கொண்டே, அந்தத் தீய செயலில் இருந்து என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டுமா? எனது இதயத்திலிருந்து இந்த நோயை விரட்ட சரியான வழி எது?

திருக்குர்ஆன் மற்றும் திருநபிமொழியின் பால் நான் திரும்பி இந்த நோயைப் பற்றிய தகவல்களைத் தேடினேன். இந்த நோய் எத்தகையது? இது வருவதற்கான காரணம் என்ன? இதன் அறிகுறிகள் யாவை? இதனைக் குணப்படுத்துவது எப்படி? இதனைத் தடுப்பது யாவை? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடினேன்.

அல்ஹம்துல்லில்லாஹ்! நான் தேடிய விடைகளையெல்லாம் கண்டபோது நான் ஆச்சாியப்படவில்லை. ஏனெனில், குர்ஆனும், ஹதீஸும் நமது மார்க்கத்தின் மூலங்களாக விளங்குகின்றன. நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் அவற்றில் தான் இருக்கின்றன.

நான் அறிந்தவற்றைத் தொகுக்க வேண்டும் என்று எண்ணினேன். இதனை எனது சகோதர முஸ்லிம்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், மறுமையில் எனக்கு ஒரு நல்லறமாகவும் அல்லாஹ் ஆக்குவான் என்று எதிர்பார்த்து இதை உங்கள் முன் வைக்கிறேன்.

written by அபூ அம்மார் யாசிர் அல் காழி
translation by MHJ

Monday, April 6, 2009

ஷிர்க் என்றால் என்ன? சமுதாயம் விழித்துக் கொள்ளத் துவங்கி விட்டது.தொடர் 6

ஒரு மனிதன் தனக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் தரகர்களை ஏற்படுத்திக்கொள்வதை அல்லாஹ் ஒரு போதும் விரும்புவதில்லை. இவ்வாறு தரகர்களை ஏற்படுத்திய ஒரே காரணத்திற்காகத்தான் அக்கால மக்கா முஷ்ரிகீன்களை நபி (ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். இக்காரணத்திற்காகவே அம்மக்களை காபிர்கள் என்று அல்லாஹ் கூறினான். ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நம்பி இருந்தனர். அல்லாஹ்தான் தங்களுக்கு உணவளிப்பவன் என்பதையும் ஏற்றிருந்தனர். அல்குர்ஆனின் 43:9, 43:87, 29:61, 31:25, 23:84, 23:86, 23:88, 10:31 வசனங்கள் இதனை நமக்கு தெளிவாக்குகின்றன. அல்லாஹ்வை நம்பியிருந்த அன்றைய மக்கள் காபிர்கள் என்று அழைக்கப் பட்ட காரணம், அவர்கள் அல்லாஹ்வை நேரடியாக அணுகமுடியாது! இடைத்தரகர்கள் வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததுதான்.

அவர்களிடம் இவ்வாறு நம்பும் நீங்கள் ஏன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கக் கூடாது என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள்: இவர்கள் அல்லாஹ்விடத்தில் எஙளுக்காகப் பரிந்து பேசுகின்றனர் எனக் கூறினார்கள் (அல்குர்ஆன்10:18)

இதே போன்றுதான் இன்றைய முஸ்லிம்கள் பலரின் பதிலும் இருக்கின்றது. அன்று வணங்கப்பட்டு வந்த சிலைகள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு வந்த நல்லோர்களின் உருவமேயாகும். நல்லோர்கள் இறந்துவிடுவார்களானால் அவர்களுக்கு சிலை செய்து வணங்கி வந்தார்கள் அன்றைய மக்கள். (அறிவிப்பவர்: ஆயிஸா(ரழி) நூல்: புகாரீ, முஸ்லிம்)

இன்று முஸ்லிம்களில் பலர் நல்லோர்கள் இறந்த பின் அவர்களுக்கு கப்ரு, தர்ஹா கட்டி அங்கே வழிபாடு நடத்தி வருகின்றனர். சிலை-கப்ரு என்று சொற்களில் தான் வேறுபாட்டைக் காண முடிகிறதேயன்றி மற்ற செயல்கள் எல்லாம் ஒன்றாகவே உள்ளன. கொள்கைகளும் ஒன்றாகத்தான் உள்ளன.

அவர்களிடம் கோவில்கள், இவர்களிடம் தர்ஹாக்கள். அங்கே சிலைகள் இங்கே கப்ருகள். அங்கே பூசாரிகள். இங்கே லெப்பை, சாப்புமார்கள். அங்கே தேர், இங்கே கூடு. அவர்களிடம் திருவிழாக்கள் இவர்களிடம் கந்தூரிகள்.அங்கேயும் உண்டியல்கள், இங்கேயும் உண்டியல்கள், இதற்கெல்லாம் மூல காரணமாக உண்டி வளர்ப்பதற்காக வைக்கப்பட்ட உண்டியல்கள்.

இப்போது சிறிது சிந்தித்து பாருங்கள். இந்நோக்குடன் கப்ருக்குச் செல்லும் முஸ்லிமிற்கும் இதே நோக்கத்தில் சிலைகளை வணங்கியவர்களுக்குமிடையில் ஏதாவது வேறுபாடு இருக்கின்றதா? அல்லாஹ் நம்மை அழைத்து, என்னை அழையுங்கள்! நான்தான் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவன். என்னைத் தவிர உங்கள் கஷ்டங்களை துன்பங்களைப் போக்கப் கூடியவன் யாருமில்லை என்று தன் திறுமறையில் பல இடங்களில் கூறி இருக்கும்போது, இவர்கள் செய்து வரும் ஷிர்க்கான செயல்களை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்?

உங்கள் இறைவன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழையுங்கள்! (நான் உங்களின் பிரார்த்தனைகளை) அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைபட்டவர்களாக நரகில் நுழைவார்கள் (அல்குர்ஆன்40:60)

இஸ்லாத்தின் பெயரிலே வயிறு வளர்க்கின்ற சில வேஷதாரி மெªலவிகளின் பித்தலாட்டத்தின் காரணத்தாலும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி ஷேக்மார்களின் சதிமோசத்தாலும் சமுதாயத்திற்குள் ஏராளமான ஷிர்க்கான செயல்கள் ஊடுருவி உருமாறி காட்சியளிக்கின்றன.

தங்களை காதிரி என்றும், ஷாதுலி என்றும் கூறிக்கொள்ளும் எத்தனையோ நய வஞ்சக ஷேக்மார்கள் சமுதாயத்தில் மலிந்து விட்டனர். இந்த வேடதாரிகளின் வேஷம் கலையக் கூடிய நாள் நெருங்கி விட்டது. சமுதாயம் விழித்துக் கொள்ளத் துவங்கி விட்டது.

உங்களைக் கடலிலும், கரையிலும் காப்பாற்றக் கூடியவன் நான்தான்.என்னை அணுகுவதற்கும், நான் உங்கள் துஆக்களை அங்கீகரிப்பதற்கும் யாருடைய உதவியும் சிபாரிசும் தேவையில்லை என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான். ஆனால் இன்று முஸ்லிம்களில் சிலர் யாகுத்பா போன்ற தவறான பாடல்களை வணக்கமெனக் கருதி பயபக்தியோடு பாடி வருகின்றனர். இறந்து போனவர்களை அழைத்து என்னுடைய தலைவரே! எனக்கு அபயம் அளித்து உதவக்கூடியவரே! என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவரே! எதிரிகள் என்னைத் தாக்காமலிருக்க எனக்குப் பாதுகாப்பு அளியுங்கள். என்ற பொருள் கொண்ட கவிதைகளை மவ்லிது என்ற பெயரில் ஓதி வருகின்றனர். புதிய புதிய சினிமா மெட்டுகளில் நடத்தப்படும் இந்தக் கச்சேரிக்கு தலைமை தாங்குகின்ற போலி அறிஞர்கள் எத்தனை?

அந்தோ பரிதாபம்! அல்லாஹ்விடம் கேட்க வேண்டியவற்றை அல்லாஹ் அல்லாதவர்களிடம், அதுவும் இறந்தவர்களிடம் கேட்பது ஷிர்க்கா? இல்லையா? என்று சிந்தித்துபாருங்கள்! அல்லாஹ் ஏன் இணைவைத்தலை மன்னிப்பதில்லை என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இத்தகைய கொடிய பாவத்திலிருந்தும் விடுபட்டு, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நில்லுங்கள்! பிறருக்கும் சொல்லுங்கள்! அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் நடத்திடப் போதுமானவன்.

S.கமாலுத்தீன் மதனி

THE END

Friday, April 3, 2009

ஷிர்க் என்றால் என்ன?இணைவத்தலின் தீய விளைவுகள்:தொடர் 5

அவர்களின் நல்ல அமல்களும் பயனற்றதாகிவிடும் என்று நாமாகக் கூறவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றான். பின்னர் அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்து விடும்! (அல்குர்ஆன் 6:88)

மூமினாக, ஏக இறை நம்பிக்கை உடையவனாக ஷிர்க்கான எந்தச் செயலும் செய்யாமல் உலகில் வாழ்ந்தவன் வேறு ஏதேனும் குற்றங்கள் புரிந்து, அதற்கு உலகிலேயே பாவ மன்னிப்புத் தேடாமல மரணித்துவிட்டால், அல்லாஹ் அவனை மன்னித்தும் விடலாம். தண்டிக்கவும் செய்யலாம். அப்படியே அல்லாஹ் அவனைத் தண்டிக்கும்போது நரகத்தில் நிரந்தரமாக அவனை வைப்பதில்லை.

அல்லாஹ் தனக்கு (எதனையும்) இணையாக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். (இணைவைத்தல் அல்லாத) மற்றவைகளை, தான் நாடியவர்களுக்கு மன்னிக்கின்றான்.(அல்குர்ஆன் 4:116)

ஏக தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்காதவர்கள்.மற்ற தவறுகள் புரிந்திருப்பின் இறுதி கட்டத்திலாவது சுவர்க்கத்தில் நுழைவார்கள்.ஆனால் ஷிர்க்கான நம்பிக்கை உள்ளவர்கள் சுவர்க்கத்தின் வாடையைக்கூட பெற முடியாது. அல்லாஹ் சுவர்க்கத்தை அவர்கள் மீது ஹறாமாக்கிவிட்டான்.

அல்லாஹ்வின் அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ அவரைத் தண்டிக்காமலிருப்பதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டான்.(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

சிறிது சிந்தித்துப் பாருங்கள்! ஷிர்க்கான காரியங்கள் புரிவோரின் முடிவு எவ்வளவு பயங்கரமானது என்று எண்ணிப் பாருங்கள். இறைவன் ஷிர்கை எவ்வளவு வெறுக்கிறான் என்பதையும் உணர்ந்து பாருங்கள்! நாம் ஷிர்க்கான காரியங்களைச் செய்யாமலிருப்பதில் எவ்வளவு எச்சரிக்கையுடனிருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

ஷிர்க்கான செயல்களைச் செய்து வருவோரிடம் ஏன் இவ்வாறு செய்து வருகின்றீர்கள்? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணாயிற்றே? என்று நாம் கேட்கும் போது, நாங்கள் அழைத்து வரும் அவ்லியாக்களை தெய்வமாகவா நாங்கள் கருதுகிறோம்? அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறும், அல்லாஹ்விடம் பெற்று தருமாறும் தானே வேண்டுகிறோம்! இது எப்படி ஷிர்க்காகும் என்று கேட்கின்றனர். அந்தோ பரிதாபம்! இவர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளவில்லை. அல்லாஹ் மிக நேர்மையானவன். அவன் அடியார்கள் மீது மிகவும் இரக்கம் கொண்டவன். தன் அடியார்கள் அனைவரின் அழைப்பையும் ஒரே நேரத்தில் நிவர்த்திக்கவும் செய்கின்றான். இன்னொருவர் மூலம் அடியார்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை. இன்னொருவர் சொல்லிக் கொடுத்துத் தெரிந்து கொள்ள அவன் அறியா தவனுமில்லை. அந்த இன்னொருவர் அவனை விட இரக்கம் கொண்டவருமில்லை.

ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்:
அவ்லியாக்களை அல்லாஹ்விடம் நமக்காக பரிந்து பேசுகின்ற வக்கீல்களாக கருதிக் கொண்டு நாம் எவ்வளவு பெரிய அறிவிலிகள் என்பதையல்லவா வெளிப்படுத்துகின்றோம்! அல்லாஹ் எல்லாம் அறிந்தவன். மையிருட்டில் நடமாடும் கறுப்பு எறும்பின் காலடி ஓசைகளையும் நன்கு அறிந்தவன். எல்லோருடைய உள்ளக் கிளர்ச்சிகளையும் உணர்பவன், அத்தகைய ஆற்றலுள்ளவனை ஒரு சாதாரண நீதிபதியுடன் ஒப்பிட்டு பேசமுடியுமா? உலகிலுள்ள நீதிபதிக்கு ஒரு மனிதனின் உள்ளக் கிடக்கையை உணரும் சக்தி இல்லை. அதற்காக வக்கீல்கள் தேவைப்படுவது இயற்கை. அந்த வக்கீல்கள், தமது கட்சிக்காரனின் வாதங்களை பக்குவமாக நீதிபதியிடம் எடுத்துக் கூறுவார்கள். உலக நீதிபதிகள், வக்கீல்களின் சாதுர்யப் பேச்சினால்பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் நம்பி தீர்ப்புக் கூற சந்தர்ப்பமுண்டு. இது போல நாம் நினைக்கிறபடி இந்த அவ்லியா வக்கீல்கள் அல்லாஹ்விடம் வாதாடி, நமது அயோக்கிய தனங்களையெல்லாம் அப்பழுக்கற்றவை என்று அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டி நமது கட்சியை ஜெயிக்கச் செய்து விடுவார்களா? எந்தக் கணிப்பிலே நாம் அவ்லியாக்களை நமது வக்கீல்களாக மாற்றி அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யத் துணிகிறோம்?

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!