Wednesday, November 26, 2008

இஸ்லாமிய சேனல் நடத்திய கத்தோலிக்க கிறிஸ்தவர் இஸ்லாமைத் தழுவினார்!!!

"பின்னாட்களில் நாம் ஒளிபரப்பும் சேனலில் என்னவெல்லாம்
கூறப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் இஸ்லாத்தின் உயர்வான போதனைகளை உணர முடிந்தது. பிறகு குர்ஆனை ஆய்வுக்கு எடுத்தேன். நேர்வழிக்கான வாசலை குர்ஆன் எனக்கு திறந்து விட்டது. "
குமரி மாவட்டம் கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாவட்டமாகும். கொள்கைகளால் வேறுபட்டிருந்தாலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில், பாதிரிகள், சமூக நல ஆர்வலர்கள், இளைஞர்கள் என பல கிறிஸ்தவர்களும் இஸ்லாமைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மோகனன் என்ற கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் இஸ்லாமைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார். இஸ்லாமைத் தழுவுவதற்கு முன்னரே இஸ்லாமியத் தொலைக்காட்சி நடத்தியவர் அதன் காரணமாகவே இஸ்லாத்தின் பால் கவரப்பட்டிருக்கிறார். சகோதரர் மோகனன் தனது பெயரை காலித் என்று மாற்றம் செய்துள்ளார். அவர் அல்ஜன்னத் இதழுக்கு அளித்த பேட்டியை வாசகர்களுக்காக சமர்ப்பிக்கின்றோம்.


நன்றி: அல்ஜன்னத் நவம்பர் 2008
அல்ஜன்னத்: நீங்கள் இஸ்லாத்தை ஏற்க காரணமான நிகழ்வுகள் குறித்து...

சகோதரர்: கேபிள் டி.வி. தொழில் செய்து வரும் நான், இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் இன்றைய மீடியாக்கள் எதை கற்பிக்கின்றனவோ, அதாவது தீவிரவாதிகள், வன்முறையாளர்கள், பிற்போக்கு மதம் இதுதான் எனது கருத்தாகவும் இருந்தது. எனது கேபிள் நெட்வொர்க் மூலம் இஸ்லாமிய சேனல் என்ற பெயரால் நிகழ்ச்சி நடத்தினால் வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கடந்த பிப்.2008-ல் துவங்கினேன். முஸ்லிம்களுக்கென தமிழில் தனிச் சேனல் இல்லையே என்ற ஏக்கம் முஸ்லிம்களிடம் இருப்பதை அறிந்த நான் அதையே எனது வருமான பெருக்கத்திற்கான வழிமுறையாக தேர்வு செய்தேன். பின்னாட்களில் நாம் ஒளிபரப்பும் சேனலில் என்னவெல்லாம் கூறப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் இஸ்லாத்தின் உயர்வான போதனைகளை உணர முடிந்தது. பிறகு குர்ஆனை ஆய்வுக்கு எடுத்தேன். நேர்வழிக்கான வாசலை குர்ஆன் எனக்கு திறந்து விட்டது.

அல்ஜன்னத்: தங்கள் குடும்பம் பற்றி...

சகோதரர்: ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சார்ந்த நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்தவன் நான். இஸ்லாத்தை ஏற்றது குறித்து எனது குடும்பத்தில் ஆரம்பத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டன. அவ்வளவாக பெரிய அளவு எதிர்ப்பு ஏதுமில்லை.

அல்ஜன்னத்: இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பற்றி தங்கள் கருத்து...?

சகோதரர்: தஹஜ்ஜத் எனும் ஒரு நடு நிசித் தொழுகை என்னை மிகவும் கவர்ந்த அம்சம். மன அமைதியும் உள்ள ஒற்றுமையும் இதில் ஏற்படுகிறது. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.

அல்ஜன்னத்: நீங்கள் நடத்தும் இஸ்லாமிக் சேனல் குறித்து...

சகோதரர்: குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான பயான் சி.டிக்கள் ஒளிபரப்புதல், இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்களின் பயான் அல்லது அவரது பேட்டிகள் நேரடி (LIVE) ஒளிபரப்பு, இஸ்லாமிய அறிவை வளர்க்கும் விதமாக கேள்விபதில் நிகழ்ச்சிகள், திறமையானவர்களைக் கண்டறிந்து நேர்காணல்... இவ்வாறு பன்முகத் தன்மையுடன் இஸ்லாமிய போதனைகள் மக்களைச் சென்றடைகிறது.

அல்ஜன்னத்: இஸ்லாமிய போதனைகளுடன் முஸ்லிம்களுக்குள்ள தொடர்பு குறித்து உங்கள் பார்வை என்ன?

சகோதரர்: குர்ஆன், ஹதீஸ் என்ற முழக்கத்துடன் தவ்ஹீத் என்ற அடை மொழியில் வாழும் முஸ்லிம்கள் 80% தொழுகை போன்ற கடமைகளை நிறைவேற்றுநின்றனர். மற்ற முஸ்லிம்களோ இது விஷயத்தில் 25% மட்டுமே. இந்த ரமலானட முழுவதும் குர்ஆன் கேள்வி பதில் போட்டி ஒன்றை நடத்தினேன். தினமும் 30க்கும் அதிகமானவர்கள் தொலைக்காட்சியில் பதில் கூறுவார்கள். இந்நிகழ்ச்சியில் பிறந்தவுடன் பேசிய நபி யார்? என்ற கேள்விக்கு பதிலேதும் இல்லை. அதே போல் பெருநாள் தினத்தில் ஒரு கேள்வி: - ஸதக்கதுல் ஃபித்ர் எதற்காக? என்ற கேள்விக்கே பதில் இல்லை.
பெருநாள் தினத்துக்கு மறுநாள் ஆளூர் எனும் ஊரில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான் ஸதகதுல் ஃபித்ர் எதற்காக என்ற கேள்வியைக் கேட்டேன். கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான மக்கள் கூட்டமிருந்த அந்த நிகழ்ச்சியிலும் யாரிடமும் பதில் இல்லை.

இஸ்லாமியர்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் இஸ்லாத்தை விளங்க வேண்டும் அதுதான் வெற்றிக்கு வழி.

அல்ஜன்னத்: முஸ்லிம் இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

சகோதரர்: முஸ்லிம் உம்மத்திற்கு இன்றைய அவசரத் தேவை இரண்டு விஷயங்கள்: 1. தமிழில் ஒரு இஸ்லாமிய சேனல் துவங்கப்பட வேண்டும். 2. ஒவ்வொரு முஹல்லாவிலும் பைத்துல் மால் எனும் நிதியத்தை துவங்கி தகுதியும், திறமையும் உள்ளவாஸகளுக்கு உதவித் தொகையாகவோ தொழில் கருவியாகவோ அல்லது கடனுதவிகளாகவோ வழங்கப்பட வேண்டும். இன்னபிற நிறுவனங்களையும் சார்ந்து இருப்பதை விட்டுவிட்டு முஸ்லிம் உம்மத் தனது சொந்தக் காலில் நிற்கும் நிலையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

அபூ அப்திர்ரஹ்மான்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!