Tuesday, November 11, 2008

பேண்ட்டும் போடலாம், வேஷ்டியும் கட்டலாம், லுங்கியும் அணியலாம் !!!

கிறிஸ்வர்களானாலும், இஸ்லாமியர்களானாலும் அடிப்படையில் நாம் தமிழர்கள். சிறுபான்மை சமுதாயத்தவர் பொங்கல் கொண்டாடுவதில்லை. அதை ஒரு இந்து மதவிழா போன்று நினைத்துப் புறக்கனிப்பதைப் பார்க்க முடிகிறது. எந்த மதத்தவரும் சொந்தம் கொண்டாட முடியாத, குறிப்பாக கிறிஸ்த்தவர்களும், இஸ்லாமியர்களும் கொண்டாடி தமிழர் விழாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. எனெனில் அதற்குப் பல பெயர்கள் சூட்டி அதை ஒரு மதப்பண்டிகையாக ஆக்க கடுமையான முயற்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குர்ஆனிலோ, இஸ்லாத்திலோ அது வலியுறுத்தப் படாவிட்டாலும் உங்கள் அமைப்பின் சார்பாக பொங்கள் திருவிழாவை அனைவரும் கொண்டாட நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

வேல்முருகன் - மதுரை



சகோதரர் வேல்முருகன் அவர்கள் நல்ல அழகான விஷயங்களை கோரிக்கைகளாக முன் வைத்தார்கள். இது சம்பந்தமாக சில விஷயங்களை இங்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.அவைகளை வைத்து தமிழுக்கோ தமிழர்களுக்கோ நான் எதிரி என நீங்கள் முடிவு கட்டிவிடக் கூடாது. வேஷ்டி அணிவது இந்துக்களின் கலாச்சாரம் எனவும் சாறம்(கைலி) அணிவது இஸ்லாமியர்களின் கலாச்சாரம் எனவும் நினைக்கிறார்கள். உடைகளில் பேதம் காட்டக்கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. உடையைப் பொறுத்த வரையில் அவரவர்களின் உடலமைப்புக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதை அணிவதில் தடை ஏதுமில்லை. முஸ்லிம்களுக்கென்று தனி ஆடை இஸ்லாத்தில் இல்லை.

பேண்ட்டும் (முழு நீளக் காற்சட்டை) போடலாம். வேஷ்டியும் கட்டலாம். லுங்கியும் அணியலாம். ஆனால் மறைக்க வேண்டிய பகுதிகள் மறைக்கப் பட வேண்டும். பட்டு ஆடையை ஆண்கள் அணியக்கூடாது. காவி நிறத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் இம் மூன்று விதிகளைத் தவிர வேறெதுவுமில்லை.

காற்று வீசும்போது வேஷ்டியின் மூலம் தனது அவயங்களை மறைத்துக் கொள்ள முடியாது எனக் கருதும் ஒருவர் லுங்கி அணியலாம். அதுவும் பாதுகாப்பானது அல்ல எனக் கருதுபவர் முழுநீள காற்சட்டை அணிந்து கொள்ளலாம். இங்கு கலாசரம் எனக் கூறிக்கொண்டு நமக்கிருக்கும் வசதி வாய்ப்புகளை சீரழிப்பது சிறப்பல்ல. மாட்டு வண்டியில் செல்வதுதான் நமது கலாசாரம் என எடுத்துக் கொண்டு பிடிவாதம் கொள்வது சரியல்ல. போக்குவரத்தில் வந்து விட்ட நவீனங்களை, முன்னேற்றங்களை பயன் படுத்திக் கொள்கிறோம். உடையிலும் அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதில் தவறு என்ன இருக்கிறது? அதுபோன்று ஒரு கலாச்சார விழா நமது நாட்டில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்ற காரணத்திற்காக அதைச் செய்யும்படி எவரையும் வற்புறுத்த முடியாது. பொங்கல் விழாவை பொறுத்தமட்டில், தானியம் விழைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவ்விழா கொண்டாடப் படுகிறது எனக் கூறப்படுகிறது.

அறுவடை செய்பவர்கள் தங்கள் தானியம் தமது வீட்டிற்கு வந்தடையும் வேளை மகிழ்ச்சியில் மூழ்குவது இயல்பே! இவர்கள் கொண்டாடினால் அதற்கு அர்த்தம் உண்டு. ஆனால் இதற்கு சம்பந்தம் இல்லாதவர்களால் இது கொண்டாடப்படுகிறது.

தானியத்தைப் பற்றி எதுவுமறியாத, விவசாயத்தைப் பற்றி எந்தக் கவலையுமற்ற சென்னைவாசிகள் ஆந்திர விவசாயிகளின் அரிசியை வாங்கி உண்ணுகின்றனர். உண்ணும் இவர்களைக் கொண்டாடுமாறு கேட்டு இவர்கள் கொண்டாடினால் அது இயல்பான கொண்டாட்டமாக இருக்காது. அவர்களின் மனோ நிலை சந்தோசமானதாய் இருப்பதற்குப் பதிலாக பண்டிகை வந்துவிட்டதே! செலவாகி விடுமே என்ற கவலை நிறைந்ததாகவே காணப்படும். இது ஒன்று.

இரண்டவது, எந்த நேரத்திலும் மனிதன் பகுத்தறிவை இழந்து விடக்கூடாது என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய விதிகளில் ஒன்று. எந்த நிலையிலும் மனிதனை விட மேம்பட்டதாக எப்பொருளையும் நினைக்கக் கூடாது. ஆடு, மாடு போன்ற மிருகங்களை விட எல்லா வகையிலும் மனிதன் உயர்ந்தவன் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இந்த அடிப்படை விதிகளுடன் பொங்கல் விழாவை நோக்கும்போது அதிக முரண்பாடுகளை அங்கே காண முடியும்.

மாடுதான் எல்லாவற்றையும் தந்தது என நம்மிக் கொண்டு அதற்கு நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் மாட்டுப் பொங்கல் என்ற ஒரு வழிபாட்டைச் செய்கிறார்கள். அப்படி ஒரு கலாச்சாரத்தில் கேள்வி கேட்ட சகோதரர் வேல்முருகன் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட உண்மை நிலை அதுதான். மாட்டைக் கூம்பிடுகிறார்கள். அதற்கு வழிபாடு செய்கிறார்கள்.

மனிதனுக்கு ஏற்ற வகையில் தானாக இயங்கும் சிந்தனை மாட்டுக்கு கிடையாது. அதை எதற்கு நாம் பயன்படுத்துகிறோமோ அதை அது செய்யும் உழுதல், குத்துதல், சண்டையிடுதல் போன்ற வேலைகளுக்கு பழக்கப்படுத்தி நாமே அதைப் பயன்படுத்துகிறோம். நாம் அதைப் பயன்படுத்தி விவசாயம் செய்திருக்க அதற்கு பூஜை வழிபாடு எதற்கு? இதைச் செய்ய முற்படுகின்ற போது கடவுள் வழிபாடு போன்ற ஒரு தோற்றம் உண்டாகி விடுகிறது.

தம் கரங்களால் செய்த ஒரு பொருளான பானைக்கும் பூஜை செய்கிறார்கள். அதற்கு சில கோலங்கள் இட்டதும் புனிதத் தன்மை வந்துவிட்டதாக மக்கள் நினக்கிறார்கள். மாட்டுக்கும் கோலம் போட்டு கடவுளாக ஆக்கியது போல் இதுவும் அமைந்து விடுகிறது. இப்போது இஸ்லாத்திற்கு நேர் எதிர் மாறான கொள்கை செயற்பாடுகள் வந்து நுழைந்து விட்டன.ஒரு காலத்தில் தானியங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்ற மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கின்ற விழாவாக இந்தப் பொங்கல் விழா இருந்திருக்கலாம். அந்த நிலமைக்கு அதை நீங்கள் கொண்டு வாருங்கள் ஆட்சேபனை இன்றி எல்லோரும் கொண்டாடுவோம்.

கும்பிடக்கூடிய. பலதெய்வ வணக்கங்களை உண்டாக்கக்கூடிய விதத்தில் அவ்விழாக்கள் செல்லும்போது அதிலிருந்து ஒதுங்கி விடுமாறு இஸ்லாம் எம்மைப் பணிக்கிறது. நாம் தவிர்த்துக் கொள்ள காரணம் இதுவே தவிர காழ்ப்புணர்ச்சியல்ல.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!