Monday, November 22, 2010

பட்டதாரிகளே

தமிழக சட்ட மேலவைத் தேர்தலில் வாக்காளராகப் பதிவு செய்துகொள்வதில் பட்டதாரிகளிடையே போதிய ஆர்வமில்லை. இதனால், தங்களுக்குச் சாதகமான வேட்பாளர்களை நிறுத்துவதில் அரசியல் கட்சிகளுக்கு எவ்விதத் தடையும் இருக்கப்போவதில்லை என்ற கருத்து வலுத்துள்ளது.
தமிழக சட்ட மேலவைத் தொகுதிகளுக்கான வாக்காளர்கள் சேர்க்கை பணி கடந்த இரு மாதங்களாக நடந்து வருகிறது. இதில், பட்டதாரிகளும், ஆசிரியர்களும் வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக வடக்கு தொகுதியான வேலூரில் 12,585, திருவண்ணாமலையில் 13,893, கிருஷ்ணகிரியில் 7,181, தருமபுரியில் 9,807 என 43,466 பேர் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல, 4 மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் மொத்தம் 14,238 பேர் பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 5,441, திருவண்ணாமலையில் 2,834, கிருஷ்ணகிரியில் 3,106, தருமபுரியில் 2,857 பேர் பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். பட்டதாரிகள் வேலை கேட்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அதேபோல, பிற பட்டதாரிகள் சுமார் 60 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இதவிர, மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யாத பட்டதாரிகள் எண்ணிக்கை பல ஆயிரம். மேலும், அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஆனாலும், வாக்காளர் பட்டியலில் இதுவரை பதிவு செய்திருக்கும் பட்டதாரிகள் எண்ணிக்கை 10 சதவீதம் தான்.
பட்டதாரிகள் இடையே ஆர்வமில்லாததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒவ்வொரு வட்டத்திலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் பதிவு செய்ய வேண்டும் என்பதால், வேலையைவிட்டு வர முடியாத நிலை இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும், 1986-ம் ஆண்டோடு சட்ட மேலவை கலைக்கப்பட்ட பிறகு, அதைப் பற்றிய தெளிவு தற்போதைய தலைமுறையினருக்குக் கிடையாது. சட்ட மேலவையின் பணி என்ன? என்பதும் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை.
இதனால், வாக்காளராகப் பதிவு செய்வதில், பட்டதாரிகளிடையே போதிய ஆர்வமில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், தற்போது வாக்காளராகப் பதிவு செய்து கொண்டிருக்கும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அவர்களது ஆதரவாளர்கள், பழைய மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது. காரணம், தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்க வேண்டிய கட்டணங்கள் மற்றும் கல்வி நிலையப் பாதுகாப்பு போன்ற பல விவகாரங்களில் இவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க பிரதிநிதிகள் தேவை என்ற நோக்கிலேயே, கல்வி நிறுவனங்கள் இதில் முனைப்பு காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, பட்டதாரி தொகுதிகளில் வாக்காளர்கள் அதிகமாவதில் அரசியல் கட்சியினருக்கு ஆர்வமில்லை. காரணம், 10 பட்டதாரிகள் பரிந்துரைத்தால் எழுதப் படிக்கத் தெரியாதவர் கூட பட்டதாரி தொகுதியில் போட்டியிடலாம். இதே நிலைதான் ஆசிரியர் தொகுதிக்கும் இருக்கிறது.
அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவாளரை இறுதி நேரத்தில் களமிறக்கத் தயாராக இருக்கின்றன. இதில் பட்டதாரி வாக்காளர்கள் அதிகம் இருந்தால், அவர்களது ஆதரவைப் பெறுவதில் பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்ற அச்சமும் இதற்குக் காரணம் என்றே கூறப்படுகிறது. இதனாலேயே, பட்டதாரி வாக்காளர்கள் சேர்க்கையில், அரசியல் கட்சிகள் ஒதுங்கியிருக்கின்றன.
இறுதி நேரத்தில் இதிலும் கூட்டணி அமைத்துக்கொண்டு, அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகளுக்கு வாக்களிக்க கல்வி நிறுவனங்கள் இறங்கி வரலாம்; அல்லது கல்வி நிறுவன பிரதிநிதிகளை ஆதரிக்க அரசியல் கட்சியினர் முன்வரலாம் எனும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனவே, எவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் வருகிறார்களோ அவ்வளவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் லாபம். இதைத் தவிடுபொடியாக்கும் பொறுப்பு இன்றைய பட்டதாரிகள் கையில் இருக்கிறது. பட்டதாரிகள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒருவர் மேலவை உறுப்பினராக வர வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், பட்டதாரிகள் பெரும்பாலானோர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்வருவார்கள் என்ற கருத்தும் வலுத்துள்ளது.  
நன்றி - தினமணி

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!