Saturday, April 26, 2014

மெளலானா தானீசரி அவர்களுக்கு தூக்கு தண்டனை,தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவு!

மெளலானா தானீசரி அவர்களுக்கு தூக்கு தண்டனை,தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவு!

ஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்த ஊர் பல வரலாற்றுச் சம்பவங்களுக்கு சொந்தமானது. இவற்றுள் சில வெறுப்புகளும் சில சிறப்புகளும் உள்ளன. அவற்றுள் ஒன்று , இஸ்லாமிய மெளலானாக்களையும் மார்க்க அறிஞர்களையும் அடக்க நினைத்த ஆங்கில அரசு அவர்கள் மேல் புனையப்பட்ட பொய் வழக்குகளைப் போட்டதுமாகும். அத்தகைய வழக்கால் பாதிக்கப் பட்ட ஒரு வீரத் தியாகியின் வரலாற்றின் பக்கங்களைப் பகிரும் முன்பு இந்த அம்பாலாவில் உள்ள சிறையைப் பற்றிய ஒரு சிறப்பை சொல்லிவிட மகிழ்வுடன் மனம் துடிக்கிறது. ஆம்! இந்தியாவில் எந்த சிறைக்கும் கிடைக்காத சிறப்பு இந்த சிறைக்குக் கிடைத்தது. தேசத்தந்தை- மகாத்மா காந்தியை ஒரு முஸ்லிம் போல் வேடமிட்டு தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு கொடூரமாக சுட்டுக் கொன்ற கோட்சேயை தூக்கிலிட்டு அவன் பிணத்தை தொங்கவிட்ட பெரும்பேறு இந்த அம்பாலா சிறைக்குத்தான் கிடைத்தது. 
சதி வழக்குகளும் அவதூறு வழக்குகளும் பொய்வழக்குகளும் புனையப்பட்ட வழக்குகளும் இன்றைய அரசியலில் மட்டும்தான் என்று இல்லை. அன்றைய அரசியலிலும் இருந்தன. அன்று இத்தகைய வழக்குகளை வெள்ளைக்காரன் போட்டான்; இன்று இந்த வழக்குகளை சொந்தக்காரன் போடுகிறான். ஆக, ஆட்சி அதிகாரம் இருந்தால் ஆணவம் பிடித்து அலையும் கூட்டம் அன்று மட்டுமல்ல இன்றும் இருக்கின்றன.
இந்திய சுதந்திர வரலாற்றில் "அம்பாலா சதி வழக்கு" என்ற ஆங்கிலேயரால் சதிவலை பின்னப்பட்ட வழக்கொன்று உண்டு. இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களாவார்கள். இந்த மார்க்க அறிஞர்கள் லக்னோ, அலிகர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இவர்களுள் மெளலானா முகமது ஜாபர் தானீசரி, மெளலானா யஹ்யா அலி, முகமது ஷாபி லாஹூரி ஆகியோர்களாவார்கள். இவர்களுள் மெளலானா முகமது ஜாபர் தானீசரி அவர்கள் எழுதி வைத்த நாட்குறிப்பின் ஏடுகள் நமது நரம்புகளைப் புடைக்கச் செய்யும் சில செய்திகளை நமக்குச் சொல்கின்றன. தம்முடைய சொந்த வார்த்தைகளால் மெளலானா அவர்கள் வடித்துத்தரும் வரலாற்றின் வடுக்களையும் அவர்கள் அனுபவித்த வலிகளையும் இன்று இங்கு பகிர்வோம்.
இதோ மெளலானா தானீசரி அவர்களின் நாட்குறிப்பு நம்மோடு பேசுகிறது :-
“என் கை கால்களில் விலங்கிடப்பட்டேன். கழுத்தில் ஒரு கனத்த இரும்பு வளையம் மாட்டப்பட்டு , அதை ஒரு சங்கிலியால் பிணைத்து அதன் நுனியை ஒரு காக்கி உடை அணிந்த காவலன் தந்து கையால் பிடித்து இருந்தான். கால்நடைகள் போல நாங்கள் கட்டி இழுத்துவரப் பட்டோம். எனக்கு வலப்புறமும் இடப்புறமும் காவல்துறையின் உயர் அதிகாரியான பார்ஸனும் இன்னொருவனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் கரங்களில் கைத்துப்பாக்கிகள்! நான் அசைந்தாலும் என்னைச் சுட்டு எனது உடம்பை சல்லடையாக்கும் சக்திபடைத்த கைத்துப்பாக்கிகள். அலிகாரில் எங்களை ஏற்றிக் கொண்டு டில்லி நோக்கிப் புறப்பட்ட அந்த காவல்துறை வேன் வழியில் எங்குமே நிறுத்தப்படவில்லை. எனக்கு உணவோ, குடிக்கத் தண்ணீரோ தரப்படவில்லை. சிறுநீர் கழிப்பதற்கும் அவர்கள் விடவில்லை. ஆனால் தொழுகை நேரம் வரும்போதெல்லாம் உடனிருந்த அதிகாரிகளின் அனுமதி இல்லாமலேயே “ தயம்மம்” செய்து கொண்டு உட்கார்ந்த நிலையிலேயே தொழுது எனது இறைவனை வணங்கிக் கொண்டேன். எனது இந்தச் செயலை யாரும் தடுக்க முற்படவில்லை. 
டில்லியின் உயர் அதிகாரியின் அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். அங்கிருந்த ஒரு இருண்ட சுரங்க அறையில் அடைக்கப்பட்டேன். மறுநாள் டில்லியில் இருந்து முதலில் கர்நாளுக்கும் அதன்பின் அம்பாலாவுக்கும் என்னைக் கொண்டு சென்றனர். அம்பாலாவில் தூக்கு மரம் ஊன்றி நடப்பட்டிருந்த அறையில் உண்ண உணவின்றி அடைக்கப்பட்டேன். பின்னர் , அளவு குறைந்த உணவு தரப்பட்டேன். இதே நிலையில் 1863 டிசம்பர் முதல் 1864 ஏப்ரல் வரை ஐந்து மாதங்கள் அடைக்கப்பட்டுக் கிடந்தேன். அப்போது நான் அடைக்கபப்ட்டதாக அல்ல புதைக்கப்பட்டதாகவே உணர்ந்தேன்.
இடையில் புனித ரமலான் மாதம் வந்தது. நான் நோன்பு பிடிக்கத் தொடங்கினேன். அந்த நிலையில் என்னைத் தனி அறையில் வைத்து நாங்கள் செய்த சதியின் திட்டங்கள் என்ன – அதில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று விசாரித்தார்கள். நான் உண்மைகளைச் சொன்னால் விலங்குகளைக் கழற்றி விடுவித்துவிடுவதாக ஆசை காட்டினார்கள். நான் வாய் திறக்காவிட்டால் தூக்கில் இடுவோமென்று மிரட்டினார்கள். நான் எதற்கும் வாய் திறக்கவில்லை. 
இந்த நிலையில் பார்ஸன் என்கிற உயர் அதிகாரி என்னை அடித்தான். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணிவரை என் மீது விழுந்த அடிகள் உலகில் மற்ற எவர் மீதும் விழுந்து இருக்குமா என்பது கேள்விக்குறி. இந்த மாதிரி சோதனையான நேரங்களில் அவற்றைத் தாங்கும் வல்லமையை வழங்கும்படி எனது இறைவனிடம் துஆச் செய்து கொள்வேன். அவ்வளவு அடிகளையும் நோன்பு பிடித்துக் கொண்டே தாங்கிக் கொள்ளும் வல்லமையை அந்த வல்லவன் வழங்கினான். நோன்பு திறப்பதற்கு மரங்களின் இலைகளைக் கூடப் பறித்துத் தின்னும் நிலமைகளெல்லாம் ஏற்பட்டன. 
நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்ட போது நீதிபதி என்னை நோக்கி, "நீ உனது மார்க்க அறிவை தெளிவாக ஓதிப் படித்து இருக்கிறாய். எனது கண்களுக்கு அறிவாளியாகவும் கல்வியாளராகவும் தென்படுகிறாய். ஆனாலும் உனது அறிவையும் ஆற்றலையும் ஆங்கில அரசுக்கு எதிராக இயங்க பயன்படுத்தினாய். இந்த அரசின் எதிரிகள் என்று கருதப் படுபவர்களுக்கு பணமும் படையும் உணவும் கிடைப்பதற்கு உதவி செய்து அவர்களுக்கு ஊக்கமூட்டினாய். பலமுறை விசாரித்தும் அதன் உண்மை விபரங்களை வெளியிடவும் மறுத்துவிட்டு உண்மைகளை ஒப்புக் கொண்டு ஒத்துழைப்பும் தரவில்லை. ஆகவே,
  • உனக்கு தூக்கு தண்டனை வழங்குகிறேன் ; 
  • உனது அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடுகிறேன் ;
  • உனது உடல் கூட உனது சொந்தக்காரர்களிடம் தரப்படாமல் இறுதிக் காரியங்கள் செய்யவும் உத்தரவிடுகிறேன்"

என்று கடுமையானதும் கொடுமையானதுமான தீர்ப்பை வழங்கினார். 
நீதிமன்றத்தில் கூடி இருந்த எனது உறவினர்களும் நண்பர்களும் இந்த தீர்ப்பைக் கேட்டு கதறி அழுதனர். ஆனால் எனக்கோ, எனது இறைவன் எனது நாட்டுக்காக நான் செய்யும் தியாகத்துக்குப் பரிசாக தனது சொர்க்கத்தின் கதவைத் திறந்ததாகவே உணர்ந்தேன். அந்த சொர்க்கம் எனது கண்முன் நிழலாடியது. அதனால் எனது மனம் மகிழ்ந்ததை உணர்ந்தேன். 
எனக்கு மரண தண்டனை வழங்கப் பட்டதற்குப் பிறகு சிறைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், “அழவேண்டிய நீ ஆனந்தப்படுகிறாயே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். அதற்கு நான் ‘ஷஹாதத்’ என்கிற உயிர்த் தியாகம் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிடைக்கிறது என்ற நிலைமை என்னை மகிழ்ச் செய்துவிட்டது என்று பதில் அளித்தேன். 
தூக்கில் இடப்படும் நாளை, நானும் எனது நண்பர்களும் எதிர்பார்த்து இருந்த இடைப்பட்ட நாட்களில் எங்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி மாரடைப்பால் மாண்டு போனான் என்கிற செய்தியையும் என்னை கடுமையாகவும் கொடுமையாகவும் அடித்து சித்ரவதை செய்த பார்ஸன் என்கிற அதிகாரிக்கு பைத்தியம் பிடித்ததாகவும் கேள்விப்பட்டோம். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்த பெரியவன். 
அப்போது அல்லாஹ் இன்னொரு மாற்றத்தை எங்கள் வாழ்வில் ஏற்படுத்தினான். 1844ஆம் வருடம் செப்டம்பர் 16 ஆம் தேதி அம்பாலா சிறைகூடத்தின் தலைவர், நாங்கள் அடைபட்டுக் கிடந்த அறைக்கு வந்து, “நீங்கள் தூக்கு தண்டனையை வரவேற்று மகிழ்கிறீர்கள். அது உங்களின் இறைவனின் பரிசு என்று எண்ணுகிறீர்கள். உங்களை அப்படிப்பட்ட மகிழும் நிலையில் வைக்க இந்த அரசு விரும்பவில்லை ஆகவே உங்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது” என்று சொன்னான். இறைவன் தரும் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் எங்களிடம் இருந்ததால் இதையும் ஏற்றுக் கொண்டோம். பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடினோம். 
அத்தோடு எங்களை அந்தமான் தீவில் இருந்த செல்லுலார் சிறைக்கு இட மாற்றம் செய்தார்கள். அந்த சிறைச்சாலையின் சட்டப்படி எங்களின் தாடி, மீசை மற்றும் தலை முடிகள் மழித்து சிரைக்கப்பட்டன. அப்போதுதான் எங்களுக்கு முதன்முதலில் கண்ணீர் வந்தது. எங்களில் மெளலானா யஹ்யா அலி அவர்கள் துண்டிக்கப்பட்டு தரையில் வீசப்பட்ட தாடியின் முடிகளைக் கைகளில் எடுத்துக் கொண்டு இந்த நாட்டின் சுதந்திரத்துக்கான அல்லாஹ்வின் பாதை என்று நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையின் வழியில் நீயும் பிடிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டாயா? என்று கேட்டு கண்ணீர் வடித்துக் கதறினார். “
இப்படி நம்மிடம் பேசிய மெளலானா தானீசரி அவர்களின் நாட்குறிப்பு அவர்களின் தியாகத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நம்மை நினைக்கச் சொல்லி நம்மை கண்ணீர் வடிக்க வைக்கிறது. 
நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தை அல்லாஹ்வின் பாதையின் போராடும் தூய போராட்டமாகவே மார்க்கம் படித்த அறிஞர்கள் கருதினார்கள் என்பதை மெளலானா தானீசரி அவர்களின் வரலாறு அவரது வார்த்தைகளிலேயே நமக்குச் சொல்கிறது. 
இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடர் விரைவில் நிறைவுறும்.
இபுராஹீம் அன்சாரி
==================================================================
எழுத உதவியவை:- 
வேலூர் அல்-பாகியாத் நூற்றாண்டு விழா மலர். 
பேராசிரியர் மு அப்துல் சமது அவர்களின் “தியாகத்தின் நிறம் பச்சை.”
 
 நன்றி
 
http://adirainirubar.blogspot.com/2014/04/blog-post_26.html

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!