Monday, March 30, 2009

ஷிர்க் என்றால் என்ன?நிரந்தர நரகத்தையே அடைவார்கள்தொடர் 4

இப்போது நமது சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்து வரும் செயல்களை சிறிது சிந்தித்துப் பாருங்கள்! இறந்தவர்களை அழைத்து உதவி தேடுகிறார்கள்! கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள்! தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள்! இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள்! எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள் என்று கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் வேண்டுகிறார்கள்! யாஸாஹிபன்னாஹூரி குன்லி நாஸிர் - நாகூர் ஸாஹிபே! எனக்கு உதவுங்கள்!என்ற பொருள் கொண்ட பாடல்களைப் படிக்கிறார்கள்!
முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப் பட்டுக் கூறப்பட்டுள்ள என்னை ஆயிரம் தடவை இருட்டறையிலிருந்து அழைக்கக் கூடியவனுக்கு ஹாழிராகி உதவுகிறேன் என்ற பொருள் கொண்ட யாகுத்பா என்றகவிதையைப் பாடுகின்றார்கள். மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களை இருட்டறையிலிருந்து ஆயிரம் தடவை அழைக்கிறார்கள்! இவ்வாறு அழைக்கும் போது அவர் விஜயம் செய்து, இவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நம்புகிறார்கள்! குழைந்தை பெறும்போது, கஷ்ட நேரத்திலும் யாமுஹ்யித்தீனே! என்னைக் காப்பற்றுங்கள்! என்று கூறுகிறார்கள். எனக்கு நோய் குணமானால் இந்த வலியுல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிடுவேன் என்று வேண்டுகிறார்கள். சில நேரங்களில் அதனை செய்தும் விடுகிறார்கள்.

இவைகள் எல்லாம் ஷிர்க்கான செயல்களாகும். இது போன்ற நம்பிக்கை உடையவர்களே நிச்சயமாக இணை வைப்பவர்களாவர்கள். இந்த தவறான நம்பிக்கை கொண்டவர்களின் அமல்கள் அனைத்தையும் அல்லாஹ் பயனற்றதாக ஆக்கிவிடுகிறான். இவர்கள் இந்த தவறான நம்பிக்கையிலிருந்து விலகி, உலகில் வாழும்போதே தவ்பா செய்யவில்லையானால், மறுமையில் அவர்களுக்கு மன்னிப்பே இல்லை. நிரந்தர நரகத்தையே அடைவார்கள்.

Saturday, March 28, 2009

ஷிர்க் என்றால் என்ன?நேர்ச்சை செய்வது வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும்!!!தொடர் 3

இதற்கு நேர் மாறுபட்டதுதான் ஷிர்க் அதாவது வணக்கதிற்கு தகுதியற்ற அல்லாஹ் அல்லாத யாருக்காவது, வணக்க வகைகளில் எதையேனும் செய்வது, அல்லாஹ் அல்லாத மற்ற படைப்பினங்கள் அனைத்தும் வணக்கத்திற்கு தகுதியற்றவைகளாகும். வணக்கங்களில் எதையேனும் ராமனுக்கோ, கிருஷ்ணனுக்கோ செய்தாலும்சரி, அல்லது முஹையத்தீன் அப்துல் காதிருக்கோ, நாகூர் சாஹிபிற்கோ செய்தாலும் சரி, எல்லாம் ஷிர்க்காவே கருதப்படும். ஏனெனில் படைக்கப்பட்டவர்கள் என்ற விஷயத்தில் இவர்கள் எல்லோரும் சமமானவர்களே. மலக்கானாலும்,நபியானலும், வலியானாலும், சாதாரண மனிதர்களானாலும் எல்லோரும் படைக்கப்பட்டவர்கள் தான். எனவே இவர்கள் யாரும் எந்த வணக்கதிற்கும் தகுதியற்றவர்களாவார்கள்.

வணக்கம் என்பது பயபக்தியோடு அல்லாஹ்வை நேசித்து அவனை வணங்குவதாகும். அல்லாஹ்விற்குச் செலுத்தும் ஒவ்வொரு வழிபாட்டுக்கும் வணக்கம் என்று சொல்லப்படும். இவ்வணக்கம், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போன்று செய்யப்பட வேண்டும். அவர்கள் கான்பித்தந்து செய்யுமாறு கட்டளையிட்டுள்ள வணக்கம் பல வகைப்படும். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், கலீமத்துத் தவ்ஹீதை மொழிதல், ஈமானின் கடமைகளை நம்புதல், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல், அறிவு தேடுதல் இவைகள் எல்லாம் வணக்கங்களாகும். இவ்வாறே அழைத்து உதவி தேடுதல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல் இவைகள் வணக்கங்களாகும்.

இது போன்ற வணக்கங்களில் எதையாவது அல்லாஹ் அல்லாதவர்களுக்குச் செய்வதுதான் ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும்பாவமாகும். அழைத்து உதவி தேடுதல் வணக்கத்தின் வகையைச் சேர்ந்ததாகும்.எனவே அல்லாஹ் ஒருவனை மட்டுமே கஷ்ட துன்ப நேரங்களில் அழைக்க வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது ஷிர்க்காகும் என்பதை அறிகிறோம்.

உதாரணமாக இறந்துபோன அதுவும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் புதைக்கப் பட்டுள்ளவர்களை கஷ்ட துன்ப நேரங்களில் அழைப்பது, அதாவது யாமுஹையத்தீனே, யாஷாஹூல்ஹமீதே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறி அழைப்பது ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும்.

நேர்ச்சை செய்வது வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும்.இது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.அல்லாஹ் அல்லாதாருக்கு நேர்ச்சை செய்வது ஷிர்க்காகும். (அல்லாஹ்விற்காக நேர்ந்து அதை கப்ரில் கொண்டு போய் கொடுப்பதும் ஷிர்க்கானதுதான்) அதாவது எனக்கு நோய் குணமானால் முஹையத்தீன் அப்துல் காதிருக்கு ஒரு கடாய் அறுத்துக் குர்பானி(பலி) கொடுப்பேன், என் காலில் உள்ள வாதம் குணமானால் நாகூர் சாஹிபிற்கு வெள்ளியில் கால் செய்து கொடுப்பேன் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது மன்னிக்கப்படாத ஷிர்க் என்னும் பெரும் பாவமாகும்.

Thursday, March 26, 2009

ஷிர்க் என்றால் என்ன?தவ்ஹீத் என்னும் ஏக இறைக்கொள்கைக்கு நேர் முரணானதுதான் ஷிர்க்!!!தொடர் 2
எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ்சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். (அல்குர்ஆன்5:72) ஷிர்க் என்னும் அல்லாஹ்விற்கு இணைவைத்தல் அல்லாஹ்வால் மன்னிக்கப் படாத கொடிய பாவமாகும் என்பது இந்த இறை வசனங்கள் மூலம் தெரிய வருகின்றது.

இவ்வளவு பெரிய கொடும்பாவமான ஷிர்க் என்பதன் பொருள் என்ன? அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதைல்லை? என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவதுகட்டாயக் கடைமையாகும். அவ்வாறு அறியும் போதுதான் ,அதை விட்டு விலகி, உண்மையாகவும் தூய்மையாகவும் அல்லாஹ்வை வணங்க முடியும்.

ஷிர்க் என்பது சிலைகளை வனங்குவதும், கோவில்களுக்குச் சென்று அவைகளுக்கு வழிபடுவதும் மட்டும்தான் என முஸ்லிம்களில் பலர் கருதி வருகின்றனர். இதனால் ஷிர்க்கான பல செயல்களை செய்து விட்டு அவைகள் ஷிர்க் அல்ல என்றும் எண்ணுகின்றனர். இந்த தப்பெண்ணத்தால் பலர் பாதிக்கப்பட்டு ஷிர்க்கான செயல்களை செய்து தங்களை நரகநெருப்பிற்காக சித்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் இஸ்லாமிய பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தில் ஒருவனாக ஆகிவிடுவதால் மட்டும் ஷிர்க்கை விட்டு தூய்மையாகி விடலாம் என்று. எனவே இவர்களிடம் ஷிர்க்கான செயல்களைச் செய்யாதீர்கள் விட்டு விடுங்கள் என்று கூறும்போது, நாங்கள் என்ன ஹிந்துக்களா? நாங்கள் ராமனை வணங்குகிறோமா? கிருஷ்ணணை வணங்குகிறோமா? எங்களைப் பார்த்து ஷிர்க்கான செயல்கள் புரிகிறோம் என்று கூறுகின்றீர்களே? என்று கேட்கின்றனர். ராமன், கிருஷ்ணன் போன்றவர்களை வணங்குவது மட்டும்தான் ஷிர்க் என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இதற்குக் காரணம் ஷிர்க்கைப் பற்றிய அவர்களின் அறியாமையே ஆகும்.

ஷிர்க் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் செய்யவேண்டிய வணக்க வகைகளில் எதையாவது அல்லாஹ் அல்லாதாருக்குச் செய்வது, படப்பினங்களில் எதையாவது, எவரையாவது அல்லாஹ்வுக்கு நிகராக்குவது, இதுதான் ஷிர்க்காகும். அதாவது தவ்ஹீத் என்னும் ஏக இறைக்கொள்கைக்கு நேர் முரணானதுதான் ஷிர்க் முஸ்லிம்கள் அனைவருக்கும் லாயிலாஹா இல்லல்லாஹ் என்னும் கலிமாவை மொழிந்திருக்கிறார்கள். இக்கலிமாவின் பொருள் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். இந்த கலிமத்துத் தவ்ஹீதை நம்பி அதன்படி செயல்படுவதுதான் ஏக இறை நம்பிக்கையாகும்.

Tuesday, March 24, 2009

ஷிர்க் என்றால் என்ன?பெரிய கொடிய பாவம் எது?தொடர் 1அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.

எனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் தான் மன்னித்து விடுவதாக அல்லாஹ் கூறுகின்றான். இப்பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதற்காக பரிகாரம் கோரக் கூடியவர்களுக்கு அதை பொறுத்து மன்னித்து விடுவதாகவும் கூறுகின்றான். ஒருவன் தான் செய்த பாவங்களுக்காக உலகில் பாவமன்னிப்பு கோரி பச்சாதாபப் படுவானாயின், அப்பாவங்கள் அனைத்தயும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். சில பாவங்களுக்காக மன்னிப்புக் கோராமல் இறந்து விடுபவனுடைய பாவங்களை மறுமையில் அல்லாஹ் நாடினால் அவைகளை மன்னித்தருளவும் செய்யலாம்; மன்னிக்காமலும் இருக்கலாம். இது அல்லாஹ்வின் நாட்டத்தை பொருத்தாகும்.

ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் அல்லாஹ் மறுமையில்மன்னிப்பதே இல்லை. எல்லா பாவங்களையும் தான் மன்னித்து விடுவதாக கூறிவிட்டு, ஒரு பாவத்தை மட்டும் மன்னிப்பதில்லை என கூறும்போது அது மகா கொடிய பாவன் என்பது புலனாகிறது. இந்த பாவத்தை செய்யக் கூடியவன் சதா நரகத்திலேயே இருப்பான் எனவும் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறாயின் இவ்வளவு பெரிய கொடிய பாவம் எது? அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதில்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (அல்குர்ஆன் 4:116)

Monday, March 23, 2009

வியாபாரம்! "நஷ்டமடைந்த அவர்கள் யார்?"தொடர் 2'விற்பவரும், வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரம் பரக்கத் செய்யப்படும். அவர்கள் பொய் சொல்லி மறைத்தால், அவர்களுக்கு இலாபம் கிடைக்கலாம். ஆனால், வியாபாரத்தில் பரக்கத் அழிக்கப்பட்டுவிடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஷான் (ரலி) நூல்:புகாரி

இது மட்டுமல்லாமல், இத்தகைய தவறான நடவடிக்கைகளை அல்லாஹ் கடுமையாக கண்டிக்கிறான்.

"மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களைப் பார்க்க மாட்டான். அவர்களுக்குக் கடுமையான தண்டனையும் உண்டு" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "நஷ்டமடைந்த அவர்கள் யார்?" என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்" செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன், (பெருமைக்காக) தனது வேஷ்டியைத் தரையில் படுமாறு அணிபவன், தனது சரக்குகளை பொய்ச் சத்தியம் செய்து விற்பவன்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூதர் (ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ

மேலும், அரபு நாட்டில் செங்கடலுக்கு வடமேற்கு பகுதியில் "மத்யன்" என்ற பகுதி இருந்து வந்தது. இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அளவிலும், எடையிலும் பயங்கர பொருளாதார மோசடிகளைச் செய்து வந்தார்கள். அம்மக்களைத் திருத்துவதற்காக சுஐபு நபியை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர் உபதேசித்தார். அதை அம்மக்கள் கேட்கவில்லை. அவரைப் புறக்கணித்தனர். அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது. இது பற்றி திருமறை குர்ஆனின் வசனங்களை (7: 85-92 வரை)க் காணலாம்.

"ஆகவே,அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது.அதனால்,அவர்கள் (காலையில்) தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர்." (அல் குர்ஆன் 7:91)

சுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர். சுஐபைப் பொய்ப்பித்தவர்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள். (அல் குர்ஆன் 7:92)

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் கூறும் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும். இந்தியாவில் சமீப காலத்தில் பூகம்பம் நடந்த பகுதி குஜராத் மாநிலமாகும். இந்த மாநிலம் தான் இந்தியாவிலேயே அதிகமாக வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்ற பகுதியாகும். என்ன விதமான மோசமான வர்த்தக, வியாபார முறைகேடுகளில் ஈடுபட்டார்களோ, அவர்களையும் பூகம்பம் பிடித்துக் கொண்டது. எனவே, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இன்ஷா அல்லாஹ் நேர்மையான வியாபாரம் செய்வோமாக!

by S.ஃபாத்திமா தாஹிரா, சென்னை

Saturday, March 21, 2009

வியாபாரம்! தாய் பாலைத்தவிர அனைத்திலும் கலப்படம்??? தொடர் 1உலக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது வியாபாரம் தான். இந்த வியாபாரத்தை செய்யவேண்டிய முறைப்படி செய்கிறார்களா? என்றால் பெரும்பாலும் இல்லை. மற்றவர்களை ஏமாற்றுதல், மோசடி செய்தல், அபகரித்தல் போன்ற சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய காரியங்கள் நிறைய நடைபெறுகின்றன. எவ்வாறு மோசடிகள் நடைபெறுகின்றன என்பதை கீழ்காணும் திருமறை குர்ஆனின் வசனம் மூலமும், நபிமொழி மூலமும் நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

(எடையிலும்,அளவிலும்) குறைவு செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்குவார்கள். (ஆனால்,) அவர்கள் (மற்றவர்களுக்கு) அளந்து கொடுத்தாலோ அல்லது நிறுத்துக் கொடுத்தாலோ குறைவு செய்வார்கள். அல்குர்ஆன் 83:1-3

நபி (ஸல்) அவர்கள் ஒரு தானியக் குவியலுக்கு அருகில் சென்றார்கள். தமது கையை அந்தக் குவியலுக்குள் விட்ட போது, விரல்களில் ஈரம்பட்டது. அப்போது "உணவு வியாபாரியே! இது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கவர்," அல்லாஹ்வின் தூதரே! மழையில் நனைந்து விட்டது." என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியில் அதைப் போட்டிருக்கக் கூடாதா?" என்று கூறிவிட்டு, "யார் மோசடி செய்கிறாரோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்லர்" எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ"ரைரா(ரலி) நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது போலவே, இப்போது நாம் வசிக்கும் பகுதியிலும் மோசடி, கலப்படம் போன்ற வியாபார நேர்மையற்ற தன்மை அதிகமாக காணப்படுகிறது. தாய் பாலைத்தவிர அனைத்திலும் கலப்படம் என்ற நிலை பரவிக் கிடக்கிறது. பருப்பு, எண்ணெய், அரிசி உட்பட எல்லா உணவுப் பொருட்களிலும் கலப்படம் கொடிகட்டிப் பறக்கிறது. மக்களை ஏமாற்றுவது வணிகத்தின் மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. பொருட்களில் உள்ள குறைகளை மறைத்து நல்ல சரக்கு என்று கூறி விற்பனை செய்யப்படுகிறது. அல்லது ஒருவர் கொள்முதல் செய்யும் போது கொடுக்காத பணத்தை கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து வாங்குபவர்களை கவர்ந்து விற்பனை செய்கிறார். இவ்வாறான தவறான வியாபார நடவடிக்கைகளை ஒருவர் செய்வதற்கு முக்கியமான காரணம் மிகவும் அதிகமான லாபம் அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அதிக லாபம் அடைவது போல் தோன்றினாலும் உண்மையில் அவன் செல்வத்தில் அபிவிருத்தி அடையமாட்டான். எனவே, விற்பவரும், வாங்குபவரும் வியாபாரப் பொருளை நன்கு பார்த்து, உண்மையிலேயே குறைகள் இருந்தால், அவற்றை தெளிவுப் படுத்தி வியாபாரம் செய்ய வேண்டும். அதன் மூலம் வியாபாரிக்கும், வாங்குபவருக்கும் அபிவிருத்து உண்டு.

Thursday, March 19, 2009

தண்ணீர் பந்தல்!!!

"யாரு வர்றா, லெக்கு தெரியலையே?"முனுமுனுத்த சலீம் நானாவைப் பார்த்த பஷீர் காக்கா சொன்னார்," அஸ்ஸலாமு அலைக்கும் சலீமு,பாத்து ரொம்ப நாள் ஆனதுல யாருன்னு புரியலையா?.

"வ அலைக்கும் சலாம், ஆமாம்,காக்கா,இம்புட்டு நாளா எங்க போனீங்க?

"அட அதுவா, புள்ள காலேஜுக்கு படிக்க போறான்,அவனுக்கு எந்த காலேஜில சேத்தா
நல்லது,நல்ல ஹாஸ்டல் எது?இப்படி தேடி கண்டு புடிச்சு சேத்து விட்டு இன்னக்கித்தான் மதராஸ்லெந்து வந்தேன்,அதான்"

"நல்ல காரியம்தான் பண்ணி இருக்கீக"சலீம் நானா தலையாட்டிக்கொண்டார்.

"வெயில் காலம் ஆரம்பித்துட்டது,கரண்ட் வேற இல்ல,தேர்தல் வேற நெருங்குது,தி மு க இதுனால தோத்தாலும் ஆச்சரியப்பட ஒன்னும் இல்லை"சலீம் நானா சொல்லிக் கொண்டிருக்கும்போது,பஷீர் காக்கா இடை மறித்தார், "நமக்கு ஏன் அரசியல் சலீம்,எவன் ஜெயிச்சாலும்,தோத்தாலும் நமக்கு ஒண்ணுதான்.ஆனா,நம்ம அல் அமீன் பள்ளிவாசல் விஷயத்துல எந்த பயலும் தலை இடாம,பிரச்னை பண்ணாம,நமக்குள்ள உரிமையை யாரு தர்ரானோ,அவனுக்கு வேணா ஒட்டு போடலாம்.சரி,கோடை கால மேட்டருக்கு வருவோம்,இந்த அனல் வெயிலுக்கு எனக்கு ஒரு யோசனை தோனுது சலீம்"

என்ன காக்கா சொல்லுங்க?

"நம்ம ஊர்ல இருக்குற ஒவ்வொரு பள்ளி வாசல் பக்கத்துலயும்,அந்தந்த பள்ளிவாசல் மஹல்லா சார்புல ஒரு மோர் பந்தல் அமைச்சி,மோர்,சர்பத் போன்ற பானங்கள் வச்சி, மக்களுக்கு கொடுக்கலாம்.இது ஒரு பெரிய நன்மையா அமையும்,அது மட்டுமில்லாம,நம்ம மக்களுக்கு பள்ளிவாசல் தொடர்பு கிடைக்க வைக்க ஒரு வாய்ப்பாவும் அமையும்.அது மட்டு மில்லாம ,மாற்று மத மக்களிடம் அழகிய முறையில் மார்க்கத்தை எடுத்து வைக்கலாம்."

"ஆஹ்ஹா,அருமையான யோசனை காக்கா, இந்த நல்ல விஷயத்த பள்ளிவாசல் நிர்வாகம் மட்டுமில்ல, அதிரை பைத்துல் மாலும் சேர்ந்து பண்ணலாமே"

"அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர்"
செக்கடி பள்ளியின் பாங்கோசை காற்றில் தவழ,இருவரும் பள்ளிவாசலுக்கு நடையை கட்டினர் லுஹர் தொழுக!!!
--------------------------------------------

விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

Tuesday, March 17, 2009

வட்டி என்ற மிகப்பெரிய தீமை! இறுதிப் பலன் நாசம்தான்!!தொடர் 3

بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் மனிதர்களுக்கு அருளப்பட்டதை (நபியே!) நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (16:44)


மேலே உள்ள இறைவசனத்தின் மூலம் குர்ஆனில் வரும் வட்டிக்கு விளக்கம் தர அங்கீகாரம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் அதைப்பற்றி கூறுவதை கீழே காண்போம். பலவித கொடுக்கல் வாங்கலில் நபி(ஸல்) அவர்கள் இவையெல்லாம் கூடும், இவையெல்லாம் வட்டி (ஹராம்) கூடாது என்று கூறியுள்ளதால் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல் எல்லா ஹதீஸ்களையும் கருத்தில் கொண்டு அதைப்பற்றி அறிய முற்படவேண்டும்.

வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை. (உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம்

தங்கத்தை தங்கத்திற்கு பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்கு பதிலாகவும், மணிக்கோதுமையை மணிக்கோதுமைக்கு பதிலாகவும், தொலிக்கோதுமையை தொலிக்கோதுமைக்கு பதிலாகவும், பேரிச்சம் பழத்தை பேரிச்சம் பழத்திற்கு பதிலாகவும், உப்பை உப்பிற்கு பதிலாகவும் சம எடையில், சம தரத்தில், கரத்திற்கு கரம் விற்றுக்கொள்ளுங்கள். இவ்வினங்கள் பேதப்படுமானால் கரத்திற்கு கரம் நீங்கள் விரும்பிய பிரகாரம் விற்றுக் கொள்ளுங்கள். எவர் கூடுதலாகக் கொடுக்கவோ அல்லது கூடுதலாக வாங்கவோ செய்த போதினும் அது வட்டியாகும். விற்பவரும் வாங்குபவரும் சமமானவரே. (உபாதாத்துப்னிஸ்ஸாமித் நூல்: முஸ்லிம், திர்மிதி)

நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரழி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரிச்சம் பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரிச்சம்பழம் வாங்கினேன் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர், இவ்வாறு நீர் செய்ய நாடினால் முதலில் (உமது) பேரிச்சம் பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை வாங்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள். (அபூ ஸயீது நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதி, நஸயீ)

வட்டித்தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ் (ரழி). இப்னு அபீஹாத்திம் )

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். (அபூஹுரைரா (ரழி) புகாரி)

வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) ஆதாரம்:முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

இத்தகைய பெரும்பாவமான வட்டியிலுருந்து விலகி இன்றைய உலகில் நாம் வாழமுடியாது. அப்படி வாழமுற்பட்டால் நாமும் நமது சமுதாயமும் மிகப்பெரும் பொருளாதர வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வும் அவனது தூதரின் வாக்கும் எக்காலத்திலும் பொய்யாகாது.

يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ அல்லாஹ் வட்டியை (எந்த பரகத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை பெருகச் செய்வான். (2:276)


நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: இறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக! (இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)

எனவே நாம் எவ்வளவு அதிகமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும், இறைவனால் நமக்கு அளித்த ரிஜ்க்கு மேல் அடைய முடியாது. அடையுமுன் யாரும் மரணிக்க முடியாது. ஆகவே வட்டி என்ற ஹராமை தவிர்த்து ஹலாலான வழியிலேயே முயற்சி செய்வோம். நமக்குள்ள ரிஜ்க்கு நம்மை வந்தே அடையும் என்ற நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் உறுதிகொண்டு உழைப்போமாக.

by அப்துல்லாஹ்

Monday, March 16, 2009

வட்டி என்ற மிகப்பெரிய தீமை! பேராசையால் தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்!!! தொடர் 2

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)

فَإِن لَّمْ تَفْعَلُواْ فَأْذَنُواْ بِحَرْبٍ مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா என்பதை வட்டி தொழில் செய்யும் முஸ்லிம்கள் உணர்வார்களா? உணர்ந்து விட்டால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

மேலும் பலர் வட்டியும், வியாபரமும் ஒன்றுதான் என்றும் திருமறையில் வட்டியைப்பற்றி கூறிய வசனம் இக்காலத்திற்கு பொருந்தாது. அது அன்றைய நிலையில் உள்ள கொடும் வட்டியைத்தான் குறிக்கும். அதுவும் இரட்டிப்பு (கூட்டு) வட்டிதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பணத்தின் மீது கொண்ட பேராசையால் தாமாகவே தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலர் வட்டி வாங்குவது தான் பாவம். கொடுப்பது பாவமில்லை என்றும் வட்டியை அடிப்படையாகக் கொண்ட வங்கியில் வேலை செய்வது கூடும் என்றெல்லாம் கருதுகின்றனர்.

வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரே. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்

இறைவன் நான்கு பேர்களை சுவர்க்கத்திற்கோ அல்லது அதனுடைய சுகத்தை அனுபவிப்பதற்கோ விட மாட்டான். அவர்கள்

1. குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்.

2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.

3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.

4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: ஹாக்கிம்)

Sunday, March 15, 2009

வட்டி என்ற மிகப்பெரிய தீமை!தொடர் 1

இன்றைய உலகில் பணம் அதிகமாக சேர்க்கவேண்டும் என்ற பேராசையால் பல தீமைகள் மனித வர்க்கத்தால் தீமை என்றே உணரப்படவில்லை. இவற்றில் சினிமா, வட்டி, வரதட்சனை போன்றவை முதலிடம் வகிக்கின்றன. இன்னும் சில தீமைகள் தீமை என்று தெளிவாக அறிந்தும் பணத்தின் மீதுள்ள பேராசையால் அரசாங்கமே அத்தீமைகளை அங்கீகாரம் செய்துள்ளது. அவற்றுள் முக்கியமானவை லாட்டரி, குதிரைப் பந்தயம், விபச்சாரம், குடி போன்றவையாகும். இத்தகைய அரசாங்கத்திற்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத் தெரிகின்றது.

தனி மனிதன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அது குற்றம், ஆனால் அரசாங்கமே அதை லாட்டரி, குதிரைப் பந்தயம் என்ற பெயரில் செய்தால் அது குற்றமில்லை. இரட்டை வேடம் குளறுபடி ஆகியவற்றின் மொத்த உருவமே இன்றைய அரசாங்கம்.

அரசாங்கமும் தனிமனிதனும் வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப்பெரிய இழப்பாகும்.

இத்தகைய சமுதாயத் தீமையாகிய வட்டியை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் விலகாமல் இருப்பது மிகவும் வேதனைக்குறியதே. இதற்கு முக்கிய காரணம் பலர் இதை ஒரு பெரும் பாவமாகக் கருதவில்லை என்பதேயாகும். ஆனால் இறைமறையும், நபி மொழியும் இதை மிகப்பெரும் பாவமாகக் கருதி மனித குலத்தை எச்சரிப்பதை பாருங்கள்.

ஒட்டுமொத்தமாக எல்லா வட்டியும் ஹராம் என்று கூறும் வசனம்:


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130)

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

யார் வட்டி(வாங்கித்) தின்றார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழமாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைத் போன்றதே" என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275)

Friday, March 13, 2009

வரதட்சணை ஒரு வன் கொடுமை!கொடுக்க வேண்டியவர்கள் ,கேட்பது எவ்வளவு கொடுமையானது???தொடர் 5

ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.

யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.

மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.


பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட பார்த்துப் பழகாதவள் புகுந்த வீட்டில் கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். நாள் முழுவதும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது.

இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்தால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் உண்ணமுடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி எடுக்கிறாள்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இயல்பாக நடக்க முடியாது. இயல்பாக படுக்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து சிரமம் அடைகிறாள்.

இவள் அந்த நிலையைக் அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண் தந்தையாவதற்கு கடுகளவு சிரமத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி விட்டு செத்துப் பிழைக்கிறாள். இதற்கு நிகரான ஒரு வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட இயலாது.

ஆண் மகனின் வாரிசைப் பெற்றுத் தருவதற்காக -அவள் படுகிற சிரமத்திற்காக ஆண்கள் கொடுப்பது தான் நியாயமானதாகும்.. இந்த ஒரு சிரமத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம். குழந்தையைப் பெற்றெடுத்தபின் இரண்டாண்டுகள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து இவனது வாரிசை வளர்க்கிறாள்!

கழுவிக்குளிப்பாட்டி சீராட்டி அழகு பார்க்கிறாள்! ஒவ்வொரு பருவத்திலும் குழைந்தைக்காக தன்னையே அர்ப்பணித்து விடுகிறாள்! இதற்காகவும் ஆண்கள் தான் கொடுக்கவேண்டும். இப்படிச் சிந்த்தித்துப் பார்த்தால் இன்னும் பல காரணங்களைக் காணலாம். இதன் காரணமாகத் தான் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணக்கொடையை மனமுவந்து வழங்கிட வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

மணக் கொடை என்பது நூறோ இருநூறோ வழங்கி ஏமாற்றுவது அல்ல! நமது சக்திக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தாராளமாக வழங்குவதே மஹர் என்பதை இதிலிருந்து விளங்கலாம். ஒரு குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20) என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் மணக்கொடைக்கு அளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

பெண்களுக்கு வரதட்சனைக் கொடுத்து மண முடிக்க வேண்டிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களிடமே கேட்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரவேண்டும். கொடுக்காமல் இருந்தது ஒரு குற்றம். வாங்கியது மற்றொரு குற்றம் என்று இரண்டு குற்றங்களைச் சந்திக்கும் நிலை மறுமையில் ஏற்படும் என்பதையும் உணரவேண்டும்.

வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்! வல்ல இறைவன் இதற்கு அருள் புரியட்டும்!

by இப்னு மர்யம்

Thursday, March 12, 2009

வரதட்சணை ஒரு வன் கொடுமை!சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை!!தொடர் 4

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)

ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.

வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.

தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.

பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை.

இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.

Wednesday, March 11, 2009

வரதட்சணை ஒரு வன் கொடுமை!குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி!தொடர் 3

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.(4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா? ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். 'மஹர் வழங்கி மண முடியுங்கள்" என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! இந்த அயோக்கியர்கள்.

அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் (59:7)

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)

மேற்கண்ட இறைவசனங்களின் படி நிராகரித்து வழிகேட்டிலும் குஃப்ரிலும் விழுந்து நாசமாவதா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒருத்தியை வாழ வைக்க ஒரு குடும்பத்தையே வறுமையிலும் கடன் தொல்லையிலும் தள்ளிவிடுவது என்ன நீதி? தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு அறிவிலி தொடங்கி வைத்த இந்த தீமை இப்போது காட்டுத்தீயாக பரவி பெரும் நாசம் விளைவித்து வருகின்றது.

"ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி" இது முதுமொழி. இப்போது "ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி" இது புதுமொழி.

இத்தீமையை ஒழிக்க அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே விட்டுச் சென்ற குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது என்ற திடமான உறுதியான முடிவை மணமக்களும், பெற்றோர்களும், ஜாமாஅத்தார்களும் மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவோமேயானால் வரதட்சணை என்ன - மனிதனை வாட்டி வதைக்கும் அத்தனை தீமைகளுக்கும் நாம் சமாதி கட்டிவிடலாம்.

இறைவன் தன் திருமறையில் "விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.

By சமீமா அன்சாரி, குடவாசல்

Tuesday, March 10, 2009

வரதட்சணை ஒரு வன் கொடுமை!ஜமாஅத்துக்கு கமிஷன்?தொடர் 2

ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை 'கரை' ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?

அறியாமைக் கால அரேபியர் பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும் இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்.

இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் "வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, ஜமாஅத்துக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.

"அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 9:18)

இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானே பள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.

Sunday, March 8, 2009

வரதட்சணை ஒரு வன் கொடுமை!யார் காரணம்?தொடர் 1

வரதட்சணை ஒரு வன் கொடுமை என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்.(பணத்திமிர்,பேராசை கொண்டவர்களைத் தவிர).இந்த வரதட்சணை எனும் கொடுமையின் காரணமாக,இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும்,பெண்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டும்,பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சட்டம் புத்தக கட்டுக்களிலும்,ஆள்வோர் மற்றும் பணத்திமிர் கொண்டோரின் சட்டைப்பையில் படுத்து தூங்குகிறது.

இந்த அவலம் எல்லா மத மக்களிடமும்,சாதிகளிலும் புரையோடி,இன்று வரதட்சணை கொடுப்பது ஒரு பேஷன் போன்று ஆகிவிட்டது. இந்த அவலங்களுக்கெல்லாம் யார் காரணம்?இந்த வரதட்சணையால் வரும் கேடு என்ன?அதற்கு இஸ்லாம் என்ன தீர்வு சொல்கிறது? என இன்ஷா அல்லாஹ் அலசுவோம்.
--------------------------------------------------
இனி
இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?
அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?

Saturday, March 7, 2009

முஸ்லிம் அடிப்படைவாதி!!!

இஸ்லாத்தைப் பற்றித் தவறான பல கருத்துக்கள் குறிப்பாக செய்தி ஊடகங்களால் பரப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் கருத்துகள் திணிக்கபடுகின்றன. இச்சூழலில் நாம் மதி நுட்பத்துடன் அழைப்புப் பணிச் செய்ய கடமைப்பட்டுள்ளோம். சாதாரணமாக முஸ்லிம்களாகிய நாம் அழைப்புப் பணிச் செய்யும்போது, கருத்துகளை பூசி மெழுகும் பாணியைத்தான் கடைப்பிடிக்கின்றோம். ஆனால் இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துகளை மதி நுட்பத்தைப் பயன்படுத்தி கலைக்கும் பணியை நாம் மேற்கெள்ள வேண்டும்.

உதாரணமாக முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் மக்கள் கூறும்போது, நான் "அடிப்படைவாதி" என்பவன் யார் என்ற கேள்வியை எழுப்புவேன். அடிப்படைவாதி என்பவர் ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது நம்பிக்கையின் அல்லது படிப்பின் அடிப்படைகளை பின்பற்றுபவர் ஆவார். உதாரணமாக ஒரு மருத்துவர் நல்ல மருத்துவராக இருக்கவேண்டும் எனில் மருத்துவத்தின் அடிப்படைகளை அறிந்து புரிந்து அதனை செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். மருத்துவத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதியாக இருக்காவிடில், அவர் ஒரு நல்ல மருத்துவராக இருக்க முடியாது. என்னை பொருத்தவரை ஒரு முஸ்லிம் அடிப்படைவாதி என்று என்னை அழைத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏனெனில் நான் இஸ்லாத்தின் அடிப்படைகளை அறிந்து புரிந்து அவற்றை பின்பற்றுபவனாக இருக்கிறேன். மனித குலத்திற்கு எதிரான ஏதாவது ஒரேயொரு அடிப்படை அம்சத்தை சுட்டிக் காட்டுமாறு இஸ்லாத்தை விமர்சிப்போருக்கு நான் சவால் விடுகிறேன். இஸ்லாத்தைப் பற்றி தெரியாத ஒருவர் இஸ்லாத்தின் சில அடிப்படை அம்சங்களை மனித குலத்திற்கு எதிரானது என்று எண்ணலாம். ஆனால் அவரது சந்தேகங்களுக்கு அறிவுப் பூர்வமாக விளக்கம் அளித்தால், எந்தவொரு மனிதராலும் மனித குலத்திற்கு எதிரான ஒரேயொரு விஷயத்தைக் கூட இஸ்லாத்தில் சுட்டிக்காட்ட முடியாது.

அடிப்படைவாதி என்பதற்கு பொருள், பழங்கால மதங்களில் ஏதாவது ஒன்றின் கோட்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுபவர் என்று ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி கூறுகின்றது. ஆனால் ஆக்ஸ்போர்ட் அகராதியின் புதிய பதிப்பை நீங்கள் படித்தால் இந்த பொருளில் சிறிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். புதிய பதிப்பில் பழங்கால மதங்களில் ஏதாவது ஒன்றில் குறிப்பாக இஸ்லாத்தின் கோட்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுபவரே அடிப்படைவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்லாம் என்ற வார்த்தை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே "அடிப்படைவாதி" என்ற சொல்லை கேள்விப் பட்டவுடனேயே, முஸ்லிமைப் பற்றிய எண்ணம் தான் ஒருவரது எண்ணத்தில் வரும். முஸ்லிம் என்றாலே அடிப்படைவாதி, பயங்கரவாதி என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

பயங்கரவாதி என்பவன் அப்பாவி மக்களை கதிகலங்க வைப்பவன் என்ற பொருளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். இந்த அடிப்படையில் எந்தவொரு முஸ்லிமும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. எந்தவொரு அப்பாவியையும், எந்தவொரு சமயத்திலும் முஸ்லிம் ஒருவர் கதிகலங்க வைக்கக் கூடாது. சமூக விரோதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து முஸ்லிம்கள் கதிகலங்க வைக்கவேண்டும். இப்படியே நாம் விரிவாக விளக்கிக் கொண்டே போகலாம். எனவே மதி நுட்பத்துடன் நாம் கருத்துகளை மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும்.


இளைஞர்களை பொருத்தவரையில், இஸ்லாத்தின் சத்தியச் செய்திகளை எடுத்துரைக்க அவர்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. உதாரணமாக நான் ஒரு மருத்துவராக ஆக வேண்டும் என்று விரும்பியதற்குக் காரணம் மருத்துவப் பணி ஒரு உன்னதமான பணி என்பதால் தான். ஆனால் அதனைவிட சிறந்த பணியை பின்னர் நான் கண்டேன்.

திருக்குர்ஆனில் இறைவன்:

(41:33) وَمَنْ اَحْسنُ قَوْلا ًمِّمَّنْ دَعَآاِلىَاللهِ وَعمِلَ صَاِلحا ًوَّقَالَ اِنَّنِيْ مِنَ الْمُسْلِمِيْنَ

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல)அமல்கள் செய்து: "நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்?)

எனவே மருத்துவப்பணியைவிட சிறந்த பணியாக அழைப்புப்பனி தென்பட்டபோது நான் அதனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். எனவே முஸ்லிமாகிய நாம் முஸ்லிம் என்று நம்மை அழைத்துக் கொள்வதில் வெட்கமடையத் தேவையில்லை. முஸ்லில்லாதவர்களின் உள்ளத்தில் உள்ள தவறான எண்ணங்களைப் போக்க நாம் மதி நுட்பத்துடன் முயற்சி செய்ய வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற போர்வையில் கடினப்போக்கை மேற்கொள்ளாமல் அன்புடனும் கணிவுடனும் முஸ்லிம் அல்லாதவர்களிடையே நாம் பணியாற்ற வேண்டும்.

டாக்டர் ஜாகீர் நாய்க் அவர்கள் ஒற்றுமை
இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி

Friday, March 6, 2009

நான் இஸ்லாத்தை தழுவிய விதம்???

நான் இஸ்லாத்தை தழுவிய விதம் பல திட்டங்கள் அமைந்தவை. நான் ஒரு திட்டம் வகுத்தேன். நான் சார்ந்த குழுவினர் ஒரு திட்டம் வகுத்தார்கள். அல்லாஹ் ஒரு திட்டம் போட்டு என்னை இஸ்லாத்தை தழுவச் செய்தான். திட்டம் வகுப்பதில் அல்லாஹ் மிக மேலானவன். என்னுடைய பருவ வயதில் நான் இஸ்லாத்திற்கு எதிரான தீவிர நோக்கம் கொண்ட ஒரு குழுவினரால் ஈர்கப்பட்டேன். இவர்களில் பெரும்பாலோர் அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்கள். இவர்கள் இப்பதவியில் இருந்துக்கொண்டே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி கொண்டிருந்தார்கள். அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லாமல் தங்கள் பதவிகளை தவறாக பயன்படுத்தினார்கள்.

என்னிடம் இயற்கையிலே அமைந்த துணிச்சல், தன்னம்பிக்கை பெண்ணுரிமைக்காக போராடும் தன்மையைக் கண்டு என்னை அவர்கள் அனுகி International Relations என்ற கல்விப் பயிற்சியை முடித்தால் எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றவும் அதனைக் கொண்டு அங்கு பெண்களுக்கு பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து போராட வேண்டும் என்று அவர்கள் கூறியது எனக்கு பொருத்தாமகத் தோன்றியது. எகிப்திய பெண்களை நான் தொலைக்காட்சியில் பார்த்ததில் அவர்கள் பளு, சுமை நிறைந்தவர்களாக கண்டதால் அவர்களை சுதந்திர இருபதாம் நூற்றாண்டிற்கு வழிகாட்ட நினைத்தேன்.

இஸ்லாமிய நாட்டில் இந்தப் பணியை தொடங்க இருப்பதால் நான் குர்ஆனையும், ஹதீதையும் இஸ்லாமிய வரலாறுகளையும் கற்றுக்கொண்டேன். நாங்கள் கொண்ட நோக்கப்படி இஸ்லாத்தை பற்றி பிரச்சாரத்தின் மூலம் திசை திருப்ப ஆரம்பித்தேன். அதனால் எனக்கு மிக பயமாகவும் இருந்தது. இதை முறியடிக்க கிறிஸ்தவத்தை கற்க எண்ணி மதிப்பும் மரியாதையும் உள்ள ஒரு (Ph.D in Theology, Harvard University) பேராசிரியரிடம் அனுப்பப்பட்டேன். நான் ஒரு சிறந்த பேராசிரியரிடம் தான் கிறிஸ்தவத்தை கற்க போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் உண்மை அப்படி அல்ல. காரணம் அவர் ஒரு (Unitarian Christian ) அதாவது மாதா, பிதா, பரிசுத்தஆவி என்ற கிறிஸ்தவ கொள்கையில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. உண்மையில் ஜீஸஸ் (ஈஸா நபி) அவர்களை இறைவனின் தூதர் என்றுதான் நம்புகிறார்.

இதனை நிரூபிக்க அவர் என்னிடம் பழைய பைபிள் மூல நூல்களை (Greek, Hebrew, and Aramaic) எடுத்து பைபிளில் எங்கெங்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று என்னிடம் நிரூபித்தார். இதைக் கண்டதும் நான் என் கிறிஸ்தவ மதத்தின் மீது உள்ள நம்பிக்கையை இழந்தேன். இருந்த போதிலும் எந்த நோக்கத்தோடு இந்தப் பணியில் சேர்ந்தேனோ என் எதிர்கால வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் படித்து வந்தேன். இதற்கிடையில் இஸ்லாத்தை அறியும் பொருட்டு முஸ்லிம் சகோதரர்களிடம் உரையாடி வந்தேன்.

என்னுடைய ஆர்வத்தை கண்ட முஸ்லிம் சகோதரர் (MSA)என்னுடை சந்தேகங்களை களைந்து இஸ்லாத்தை மேலும் கற்றுக்கொடுத்தார். அல்ஹம்துலில்லாஹ். அச்சகோதரருக்கு மென்மேலும் அல்லாஹ் நன்மையை அளித்தருள்வானாக!

ஒரு நாள் இந்த சகோதரர் என்னிடம் இருபது முஸ்லிம் சகோதரர்கள் (ஜமாஅத்) வந்திருப்பதாகவும் இஷா வேளைக்குப் பிறகு அதில் கலந்து கொள்ளும்படியும் கூறினார். நான் அங்கு சென்று கலந்து கொண்டேன். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர். அவர் அதிகம் கிறிஸ்தவத்தை அறிந்தவராயிருந்தார். நானும் அவரும் பைபிளையும், குர்ஆனையும் பல கோணங்களில் காலை பஜ்ர் நேரம் வரை கருத்து பரிமாற்றமும் விவாதமும் செய்தோம்.

மூன்று ஆண்டுகளாக நான் இஸ்லாத்தைப் பற்றி சொல்லி கொடுக்கப்பட்டேன், வாதம் புரிந்தேன், குறை சொல்லப்பட்டேன் ஆனால் யாரும் என்னை இஸ்லாத்தை தழுவ அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இவர் என்னை இஸ்லாத்தை தழுவும்படி அழைப்பு விடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் என் இதயத்தை திறந்தான். நான் முஸ்லிமாக விருப்பம் தெரிவித்து கலிமாவை மொழிந்து நிம்மதி பெருமூச்சு அடைந்தேன். நான் எனது இறுதி நாள் வரை சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன். ஆமீன்!

source: www.islamzine.com
By Shariffa Carlo
தமிழில் ஜகபர் அலி சிங்கப்பூர்

Tuesday, March 3, 2009

இஸ்லாம் பார்வையில் "மறைவான இணைவைப்பு" الرياء

மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள். 'நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித்தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டபோது, அவர்கள் 'ாியா" என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தொிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்காித்துக் கொள்கிறார்." என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா

அல்லாஹ்வே! இந்த ஹஜ்ஜை ாியா இல்லாத அல்லது பகட்டு இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாளாக" என்று பிரார்த்தனை புரிந்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் அல் ஜாமி

அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்:
'ஒருமனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தொிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார். இதுவே மறைவான இணை வைப்பாகும்." ஆதாரம்: இப்னு மாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்.

'இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்" நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்

மனிதர்களிடையே புகழடைவதற்காக நற்செயல்களைப் புரிவது, சுவனத்திற்குள் நுழைவதையும் தடை செய்யும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்...

'அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்." நூல்: அபூதாவூத், இப்னு மாஜா

அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ் சொல்கிறான் 'பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை என்னுடைய அங்கியாகவும் உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுகிறானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்" நூல்கள்: அபுதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

இந்த வகையான ாியாவைப் பற்றி அண்ணல் நபி அவர்கள் குறிப்பிடும் போது, 'மனிதர்களே, மறைவான இணைவைப்பு குறித்து எச்சாிக்கையாக இருங்கள்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள், நாயகம் அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதரே! மறைவான இணைவைப்பு என்றால் என்ன?" என்று வினவினார்கள். அண்ணல் நபி அவர்கள் 'ஒருமனிதர் தொழுகைக்காக எழுந்து நிற்கிறார். மக்கள் அவரை உற்று நோக்குவதைக் கண்டவுடன் தனது தொழுகையை அவர் அலங்காித்துக் கொள்கிறார். இது தான் மறைவான இணைவைப்பு" என்று நபி விளக்கம் அளித்தார்கள். ஆதாரம்: இப்னு குஸைமா மற்றும் சுனன் இப்னு மாஜா

அபூ மூஸா அல் அஷ்அாி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு நாள் எங்கள் மத்தியில் இறைவனின் தூதர் அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, அவர்கள் 'மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைந்துள்ளது" என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (எழுந்து) 'அல்லாஹ்வின் தூதரே, எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்?" என்று வினவினார்கள். அப்போது அண்ணல் நபி அவர்கள்...

'அல்லாஹ்வே! நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்" என்று (பிரார்த்தனை செய் என்று) சொன்னார்கள். நூல்: அஹ்மத்

Sunday, March 1, 2009

விக்கிபீடியாவிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சித்திரத்தை நீக்கக்கோரி விண்ணப்பியுங்கள்!

This is a petition request: Wikipedia has placed a painting of the Prophet Muhammad (P.B.U.H) on http://en.wikipedia.org/wiki/Muhammad. They need about 100,000 signatures to remove it. So far a little over 3,200 have signed; if you agree that it is wrong to depict his picture, please sign the petition.


நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல் அவர்களை விக்கி பீடியா உருவமாக வரைந்து வெளியிட்டுள்ளது.அதனை நீக்குவதற்கு ஒரு லட்சம் கையெழுத்துக்கள் வேண்டும்.இதைக்கானும் சகோதர-சகோதரிகள் கீழ்காணும் லிங்க் மூலம் சென்று,அதை நீக்க கோரி விண்ணப்பிக்கும்படியும், ஏனைய சகோதரர்களுக்கு, ஈ மெயில்,தொலை பேசி,பேக்ஸ்,பிளாக்கர் இப்படி எல்லா வகையிலும் தொடர்புகொண்டு விக்கி பீடிக்கு கண்டனமும்,படத்தை நீக்கக் கோரியும் உடனடியாக வேண்டுகோளும் இடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Here’s the link.
http://www.petitiononline.com/mjk123/petition.html

இஸ்லாம் பார்வையில் "சபை ஒழுங்கு"

ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் 'அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்' என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத்

நபி அவர்களைவிட (அவர்களின்) தோழர்களுக்கு எவரும் மிகவும் உவப்பானவராக இருக்கவில்லை. எனினும் நபி அவர்களை அவர்கள் பார்ப்பின் எழுந்திவிட மாட்டார்கள். காரணம் இதை நபி அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதைத் தோழர்கள் அறிந்திருந்ததால்தான். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) திர்மிதீ

முஆவியா(ரலி) அவர்கள் ஜுபைர் (ரலி) அவர்களின் மகனாரிடமும், ஸஃப்வான் (ரலி) அவர்களின் மகனாரிடமும் வந்தனர். அப்பொழுது அவ்விருவரும் அவர்களுக்காக எழுந்து நின்றனர். அப்பொழுது முஆவியா(ரலி) அவர்கள் அவ்விருவரையும் 'நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எவருக்குத் தமக்காக மக்கள் எழுந்து நிற்பது மகிழ்ச்சியை நல்குகிறதோ அவர் நரகத்தை தம் இடமாக்கிக் கொள்ளவும் என்று நபி அவர்கள் கூற நான் கேட்டேன்' என்று கூறினர். அறிவிப்பவர்: அபூமிஜ்லஸ் நூல்: அபூதாவூத், திர்மிதீ

உங்களில் எவரும் சபையில் வீற்றிருப்பவரை எழுந்திருக்கச் செய்து அங்கு அமரவேண்டாம். எனினும் நீங்கள் நெருங்கி அமர்ந்து இடத்தை விசாலமாக்கி (அவருக்கு இடம்) அளியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விசாலாமாக்கி வைப்பான் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

"ஒருவர் சபையிலுருந்து ஒரு வேலையாக எழுந்து சென்று பின்னர் திரும்பி வருவாரானால் அவரே அவ்விடத்திற்கு மிகவும் உரிமையுடையவராவார்" என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி)வின் மகனார் வஹ்பு நூல்: திர்மிதீ

நபி அவர்களிடம் நாங்கள் சென்றால் எங்களில் ஒவ்வொருவருக்கும் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு நாங்கள் அமர்ந்து விடுவோம். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: அபூதாவூத்

"இருவருக்கிடையில் அவ்விருவரின் அனுமதியின்றிப் பிறர் அமர்வது கூடாது" என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அம்ருப்னு ஷுஐப் நூல்: அபூதாவூத், திர்மிதீ

பள்ளிவாயிலுக்குள் வந்த நபி அவர்கள் தோழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி "உங்களுக்கு என்ன வந்துவிட்டது? நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காணுகிறேன் என்று வினவினர். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!