Saturday, March 21, 2009

வியாபாரம்! தாய் பாலைத்தவிர அனைத்திலும் கலப்படம்??? தொடர் 1



உலக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது வியாபாரம் தான். இந்த வியாபாரத்தை செய்யவேண்டிய முறைப்படி செய்கிறார்களா? என்றால் பெரும்பாலும் இல்லை. மற்றவர்களை ஏமாற்றுதல், மோசடி செய்தல், அபகரித்தல் போன்ற சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய காரியங்கள் நிறைய நடைபெறுகின்றன. எவ்வாறு மோசடிகள் நடைபெறுகின்றன என்பதை கீழ்காணும் திருமறை குர்ஆனின் வசனம் மூலமும், நபிமொழி மூலமும் நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

(எடையிலும்,அளவிலும்) குறைவு செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்குவார்கள். (ஆனால்,) அவர்கள் (மற்றவர்களுக்கு) அளந்து கொடுத்தாலோ அல்லது நிறுத்துக் கொடுத்தாலோ குறைவு செய்வார்கள். அல்குர்ஆன் 83:1-3

நபி (ஸல்) அவர்கள் ஒரு தானியக் குவியலுக்கு அருகில் சென்றார்கள். தமது கையை அந்தக் குவியலுக்குள் விட்ட போது, விரல்களில் ஈரம்பட்டது. அப்போது "உணவு வியாபாரியே! இது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கவர்," அல்லாஹ்வின் தூதரே! மழையில் நனைந்து விட்டது." என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியில் அதைப் போட்டிருக்கக் கூடாதா?" என்று கூறிவிட்டு, "யார் மோசடி செய்கிறாரோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்லர்" எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ"ரைரா(ரலி) நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது போலவே, இப்போது நாம் வசிக்கும் பகுதியிலும் மோசடி, கலப்படம் போன்ற வியாபார நேர்மையற்ற தன்மை அதிகமாக காணப்படுகிறது. தாய் பாலைத்தவிர அனைத்திலும் கலப்படம் என்ற நிலை பரவிக் கிடக்கிறது. பருப்பு, எண்ணெய், அரிசி உட்பட எல்லா உணவுப் பொருட்களிலும் கலப்படம் கொடிகட்டிப் பறக்கிறது. மக்களை ஏமாற்றுவது வணிகத்தின் மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. பொருட்களில் உள்ள குறைகளை மறைத்து நல்ல சரக்கு என்று கூறி விற்பனை செய்யப்படுகிறது. அல்லது ஒருவர் கொள்முதல் செய்யும் போது கொடுக்காத பணத்தை கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து வாங்குபவர்களை கவர்ந்து விற்பனை செய்கிறார். இவ்வாறான தவறான வியாபார நடவடிக்கைகளை ஒருவர் செய்வதற்கு முக்கியமான காரணம் மிகவும் அதிகமான லாபம் அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அதிக லாபம் அடைவது போல் தோன்றினாலும் உண்மையில் அவன் செல்வத்தில் அபிவிருத்தி அடையமாட்டான். எனவே, விற்பவரும், வாங்குபவரும் வியாபாரப் பொருளை நன்கு பார்த்து, உண்மையிலேயே குறைகள் இருந்தால், அவற்றை தெளிவுப் படுத்தி வியாபாரம் செய்ய வேண்டும். அதன் மூலம் வியாபாரிக்கும், வாங்குபவருக்கும் அபிவிருத்து உண்டு.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!