Saturday, February 28, 2009

இஸ்லாம் பார்வையில் "மனைவி"

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915

உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160

பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக் கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும் என நபி அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2913

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56

''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல்: புகாரி 5204

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082

''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபியவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ) நூல்: அபூதாவூத் 1442

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) நூல்: புகாரீ 5200

நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ) நூல்: புகாரீ 2481

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!