Wednesday, February 18, 2009

இஸ்லாம் பார்வையில் "திருமணம்"

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
“இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: “எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
எங்களுக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஓதும் தஷஹ்ஹுதை ஓதிக் காட்டியபின், “இது திருமணத்தின்போது ஓதக்கூடிய தஷஹ்ஹுது” எனச் சொல்லி அதனையும் ஓதிக்காட்டினார்கள். அதன் பொருள்:

நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானவை. நாங்கள் அவனிடமே உதவி தேடுகின்றோம். அவனிடத்திலேயே மன்னிப்புக் கோருகின்றோம். எங்கள் மனத்தின் தீமைகளுக்கெதிராக எங்களை நாங்களே அல்லாஹ்விடம் தஞ்சம்தேடி ஒப்படைத்து விடுகின்றோம். எவருக்கு அல்லாஹ் நேர்வழி அளிக்கின்றானோ அவரை எவரும் வழிகெடுக்க முடியாது. அவன் எவனை வழி தவறச்செய்து விடுகின்றானோ அவனுக்கு யாரும் நேர்வழி அளிக்க முடியாது. மேலும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இலர் என நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடைய திருத்தூதர் என்றும் சான்று பகருகின்றேன்.

பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மூன்று இறைவசனங்களை ஓதிக் காண்பித்தார்கள்.

1. இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3:102)

2. மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)

3. இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் இருங்கள். மேலும் சொல்வதைத் தெளிவாக, நேரடியாகச் சொல்லுங்கள். இப்படிச் செய்தால் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீர்திருத்துவான். பாவங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடிபணிந்து நடப்பவர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள். (33:70-71) (திர்மிதி)

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!