Thursday, February 20, 2014

வேண்டுமென்றே சுட்ட போலீஸ்,முஸ்லிம் சிறுவன் படுகாயம்.

சென்னை நீலாங்கரை அருகே கைதான சிறுவன் தமீம் அன்சாரி மீத் காவல்துறை அதிகாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் பொய்யான தகவல் அளிக்கப்பட்டதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
"சென்னை நீலாங்கரைக்கு அருகேயுள்ள வெட்டுவாங்கேணியில் ஒரு கோவிலின் உண்டியல் திருட்டு போனது சம்மந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்கிற 14 வயது சிறுவனை விசாரணைக்காக கடந்த ஜனவரி 7ம் தேதி அழைத்துச் சென்ற நீலாங்கரை காவல் நிலைய போலீசார், கோவில் உண்டியலை திருடிய குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி கடுமையாக மூன்றாந்தரச் சித்திரவதைகளைச் செய்துள்ளனர்.
இரண்டு போலீஸாக தொடைகளில் ஏறி நின்று கொள்ள, கிரைம் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சிறுவன் அன்சாரியின் வாயில் வெறும் துப்பாக்கியை நுழைத்து மிரட்டி விட்டு, பின்னர் அவன் கண்ணெதிரே துப்பாக்கியில் குண்டொன்றை பொருத்தி வயிறு, நெஞ்சு, வாய் என பல இடங்களில் துப்பாக்கியை வைத்து மிரட்டி விட்டு, கழுத்தில் வைத்து மிரட்டியபோது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு முன் கழுத்தில் நுழைந்து பின் கழுத்து வழியாக வெளியேறியுள்ளது.
இத்தகைய கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது அதற்குரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், பணி இடைநீக்க உத்தரவோடு, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 388வது பிரிவின் கீழ் மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவு, கொடூரமான காயத்தை ஏற்படுத்துதல்; இதற்கு தண்டனையாக சாதாரண சிறைவாசம் அல்லது வெறும் ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையுடன் குற்றவாளியை விடுதலை செய்து விடுதல் என்பதாக உள்ளது.
காவல்நிலைய வன்முறை மற்றும் கொலை வழக்குகளில் ஆர்.டி.ஓ., மாஜிஸ்ட்ரேட் விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளானவர் உயிருடன் இருந்தால் முதலில் அவரும், அவரது குடும்பத்தினரும், சாட்சிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்தும் சிறுவன் தமீம் அன்சாரி வழக்கில் இவையெல்லாம் மிக காலதாமதமாக நிகழ்ந்துள்ளன.
இது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பேரம் பேசவும், மிரட்டி ஒப்புதல் பெறுவதற்குமே வழி வகுக்கும். இந்த வழக்கிலும் இப்படி நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இச்சூழலில் தனது மகனை ஆய்வாளர் புஷ்பராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்; இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுவனின் தாய் சபீனா பேகம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 12ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலாங்கரை ஆய்வாளர் பாஸ்கர் காவல்துறை சார்பில், "சிறுவன் தமீம் அன்சாரி உணவு உண்டு விட்டு தரையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தனது துப்பாக்கியைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு உறையினுள் வைத்தபோது துப்பாக்கி தவறி கீழே விழுந்து விட்டது. அப்போது அதிலிருந்த குண்டு சிறுவனின் கழுத்தில் பாய்ந்து காயம் ஏற்படுத்தியது' என்று பொய்யான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சட்ட நெறிமுறைகளைப் பேணாமல், மனித உரிமை மீறலில் ஈடுபட்டு, வன்முறைத்தனமாக விசாரணை நடத்தி தமீம் அன்சாரி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை காப்பாற்றும் நோக்கில் போலீசாரின் மேற்கண்ட விளக்க அறிக்கை அமைந்துள்ளது.
* காவல்துறையின் இந்தப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
* இந்த சம்பவத்தில் வெறும் 1000 ரூபாய் அபராதத்துடன் குற்றவாளி விடுதலையாகி விடும் வாய்ப்புள்ள 388வது பிரிவில் வழக்குப் பதிவு செய்திருப்பதை நீக்கி விட்டு, கொலை முயற்சி மற்றும் சிறப்பு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கை மாற்றி, இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
* இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஏனைய காவல்துறை அதிகாரிகளுக்கு படிப்பினையாக இருக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜுக்கு அதிகப்பட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
* இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால், "துப்பாக்கி தரையில் விழுந்து வெடித்தது' என்று காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிவுக்கு புறம்பான அறிக்கையை நீதிமன்றம் ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.
* இந்த சம்பவத்தில் ஆர்.டி.ஓ. விசாரணையை மாற்றி நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
* தமீம் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையான ஒரு லட்ச ரூபாய் போதுமானதாகாது என்பதால் இழப்பீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும்.
* ஆய்வாளர் புஷ்பராஜை காப்பாற்றும் முயற்சியை கைவிட்டு சட்டப்படி அவர் மீது கடும் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை முன் வர வேண்டும்.
* தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ச்சியாக காவல்துறை வன்முறைகளை கண்டித்தும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தும் வருகிறார். இந்நிலையில் குற்றவாளியை காவல்துறை காப்பாற்ற முயற்சிப்பது முதல்வரின் விருப்பத்திற்கு மாற்றமானதாகும் என்பதை காவல்துறை தலைமை உணர வேண்டும்.
என்பன போன்ற கோரிக்கைகளையும், கண்டனத்தையும் பதிவு செய்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று (20-02-2014) பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நீதிக்குப் புறம்பான காவல்துறையின் போக்கை கண்டித்தும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேரா. அ. மார்க்ஸ் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தமீம் அன்சாரியின் வழக்கில் ஆஜராகி வருபவருமான சங்கர சுப்பு ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
இந்த நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட சிறுவனான தமீம் அன்சாரியும் தனக்கு நேர்ந்த சித்திரவதைகள், துப்பாக்கிச் சூடு நடந்த விதம் குறித்து செய்தியாளர்களிடம் நேரடியாக வாக்குமூலம் அளித்தான்.
இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளான ஃபிர்தவ்ஸ், அபு ஃபைஸல், முஹம்மது ஷிப்லி, முஹம்மது முஹ்யித்தீன், சிராஜ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 http://inneram.com/news/tamilnadu/5269-fake-report-to-court.html

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!