Saturday, July 30, 2011

சுப்பிரமணிய சுவாமி கைது?


வேறு எந்த வார்த்தையாலும் சுப்ரமணியன் சுவாமியை வர்ணிக்க முடியவில்லை.   கடந்த ஆகஸ்ட் 16 அன்று மும்பையிலிருந்து வெளி வரும் டிஎன்ஏ என்ற நாளிதழில், டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி, இசுலாமியத் தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையில், இந்துக்கள் அமைதியாக இருப்பதால் தான் இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன என்ற போக்கில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருக்கும் 370 என்ற சிறப்புப் பிரிவை நீக்க வேண்டும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகே அமைந்திருக்கும் மசூதியை நீக்க வேண்டும், அது போல 300க்கும் அதிகமாக இந்தியாவில் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் மசூதிகளை நீக்க வேண்டும், இந்து மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாறுவதை தடை செய்ய வேண்டும், பங்களாதேஷ் நாட்டிலிருந்து ஒரு பகுதியை ஆக்ரமிக்க வேண்டும்,

 இந்துக்கள் போர்க்குணத்தோடு மாற வேண்டும், இந்துக்கள் 83 சதவிகிதம் இருக்கும் இந்தியாவில் இந்துக்கள் ஆட்சி நடைபெற வேண்டும் என்று எழுதியிருந்தார். இது போன்ற கட்டுரையை சுப்ரமணிய சுவாமி எழுதுவதற்கான பின்புலம், மும்மையில் நடந்த குண்டு வெடிப்பு.
swamy

வெடிகுண்டு வைத்து, அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும், பெண்களையும் கொலை செய்யும் பாதக செயலைச் செய்பவர்களை நாம் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில், இதற்கெல்லாம் காரணம் இசுலாமியர்கள் தான் காரணம் என்று கூறுவது விஷமத்தனமானது.

இந்தியாவில் தீவிரவாதம் பரவ, அதன் வேரில் நீர் விட்டு, வளர்த்தது இந்திய ஆட்சியாளர்கள் தான்.   காஷ்மீரில், ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதா, பாக்கிஸ்தானுடன் சேர்வதா அல்லது தனி நாடாக இருப்பதா என்று முடிவெடுக்க, இந்தியா கொடுத்த வாக்குறுதியை அது இன்று வரை நிறைவேற்றவில்லை.   370வது அரசியல் சட்டப் பிரிவு என்பது, காஷ்மீர் மக்களுக்கு அன்றைய பாரதப் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி.  

இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் மிகுந்ததற்கு முக்கிய காரணம், 1992ல் நடந்த பாப்ரி மசூதி இடிப்பு. 1991ம் ஆண்டு சோம்நாத்தில் தொடங்கிய அத்வானியின் ரதயாத்திரை இந்தியாவில் தீவிரவாதம் பரவுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. இது போன்ற குண்டு வெடிப்புகளால், அப்பாவிகள் உயிரிழப்பதோடு, நின்று விடுவதில்லை. அதற்குப் பிறகு நடக்கும் காவல்துறையின் விசாரணைகளால், எண்ணற்ற முஸ்லீம் குடும்பங்கள் தான் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

ஒரு சிறந்த ஜனநாயக நாடாக, வளர்ந்த பக்குவப்பட்ட மக்களாக வளருவதே ஒவ்வொரு மனிதனின் நோக்கமாக இருக்க முடியும். ஆனால் சுப்ரமணியன் சுவாமி செய்யும் பிரச்சாரமானது, ஹிட்லரின் கோயபல்ஸ் செய்யும் பிரச்சாரத்திற்கு நிகரானது.
300க்கும் அதிகமான, கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற கருத்து, மதநல்லிணக்கம் என்ற இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் என்ற அடி நாதத்திற்கே வெடி வைப்பதாகும்.

ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்குப் பிறகும், முஸ்லீம்கள் தான் காரணம் என்று இசுலாமியர்கள் மீதான வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதை, சுப்ரமணியன் சுவாமி போன்ற நபர்கள் செய்து வருகின்றனர். இது போன்ற கருத்துக்கள் நல்லிணக்கத்தை வளர்க்க உதவாது. மாறாக, இரு பிரிவினருக்கிடையே வன்முறையைத் தூண்டுவதாக மட்டுமே அமையும். குண்டு வெடிப்பினால், சாதாரண மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை வன்முறையாக மாற்றுவதற்கு சுவாமி முயன்றிருக்கிறார்.

இசுலாமியத் தீவிரவாதத்தின் நோக்கம், இந்துக்களை கொல்வது என்று சுவாமி கூறுகிறார். ஆனால், நெருக்கடியான மார்க்கெட் போன்ற இடங்களில் வைக்கப் படும் குண்டு, இந்துக்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள் என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. இந்துக்களே இல்லாத, இந்தோனேசியா, நார்வே, அமேரிக்கா போன்ற இடங்களில் கூடத்தானே குண்டுகள் வெடிக்கின்றன ? தீவிரவாதத்துக்கு மதமோ நிறமோ கிடையாது.

சுப்ரமணியன் சுவாமியைப் போன்ற நபர்களே, தீவிரவாதத்துக்கு உரமாக இருக்கிறார்கள். வன்முறைச் சம்பவங்களால், அமைதி குலைந்து, வன்முறை தாண்டவமாட வேண்டும் என்ற எண்ணத்தில் வைக்கப் படும் குண்டுகளை செய்யும் காரியங்களை, சுவாமி போன்றவர்கள் தங்கள் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் செய்கிறார்கள்.   இசுலாமியர்கள், இந்தியா இந்துக்களின் நாடு என்பதை ஒப்புக் கொண்டு வாழ வேண்டும் என்பது எத்தகைய விஷமத்தனமான பிரச்சாரம் ?

இந்தியாவை ஆண்ட இசுலாமிய மன்னர்களான அக்பர் மற்றும் ஷாஜஹானுக்கு மதநல்லிணக்கத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாகவே, 1947ல் இந்தியாவில் 75 சதவிகிதம் பேர் இந்துக்களாக இருந்தனர்.   300 மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற சுவாமியின் கோரிக்கை, சாதாரண இசுலாமியர்களை தீவிரவாதிகளின் பக்கம் கொண்டு சேர்க்காதா ?

கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதைத் தானே சுவாமியின் கட்டுரை நிரூபிக்கிறது ?   படித்த படிப்பு ஒரு மனிதனை பண்படுத்தாமல், மற்ற சமூகத்தின் மேல் விஷத்தை கக்குவதை சொல்லிக் கொடுத்தால், அதை விட கல்லாத பாமரன் எவ்வளவோ மேல் அல்லவா ?

இந்தியாவில் இசுலாமியர்கள் மட்டும் தான் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்து சாமியார்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வார் டாக்டர்.சுவாமி ?

கருத்துச் சுதந்திரத்திற்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதை கவனமாக பயன் படுத்த வேண்டும்.   கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லி விடலாம், எழுதி விடலாம் என்பதும், ஜனநாயத்திற்கு மிகுந்த ஆபத்தில் போய் முடியும்.

சுப்ரமணியன் சுவாமியும், அவரின் விஷம் கக்கும் கட்டுரையை வெளியிட்ட டிஎன்ஏ நாளேட்டின் ஆசிரியர் ஆதித்ய சின்ஹாவும், வன்மையான கண்டனத்திற்கு உரியவர்கள்.   சுவாமியின் கட்டுரையைத் தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநில, சிறுபான்மையினர் கமிஷன், டாக்டர்.சுவாமியை கைது செய்ய வேண்டும் என்று மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

சுவாமி போன்ற நபர்களின் கோயபல்ஸ் வகையிலான பொறுப்பற்ற பேச்சுக்கள், வன்மையான கண்டனத்திற்கு உரியன.



No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!