Sunday, April 18, 2010

ஏப்.30: ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க கடைசிநாள்

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க 30 ந் தேதி கடைசி நாள். அவர்கள் அரசு டாக்டரிடம் பெற்ற மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று இந்திய ஹஜ் குழுவின் துணைத்தலைவர் அபூபக்கர் தெரிவித்தார்.

இந்திய ஹஜ் குழுவின் துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் இருந்து புனித பயணமான ஹஜ் பயணத்திற்கு வருடந்தோறும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் போகிறார்கள். ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஹஜ் பயணத்திற்கு ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எத்தனை பேர் வரவேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த வருடம் முதல் கூடுதலாக 25 ஆயிரம் பேரை இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்ல அனுமதிக்குமாறு முதல் அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் முறைப்படி சவுதி அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதற்காக கடந்த மார்ச் மாதம் ஜித்தாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சவுதி அரசு அதிகாரிகளிடம் வற்புறுத்தி உள்ளேன். 25 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்க உள்ளது. அதற்கான எழுத்துப்பூர்வமான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க 30  ந்தேதி கடைசி நாள். அதாவது அந்தந்த மாநில ஹஜ் கமிட்டிக்கு விண்ணப்பம் வந்து சேர்ந்திட வேண்டும்.

ஹஜ் யாத்திரைசெல்வோரின் ஆரோக்கிய நிலைமை குறித்து மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அப்போது எடுத்த புதிய முடிவு வருமாறு:
ஹஜ் பயணிகள் தங்களது உடல் நலம் குறித்து அரசு மருத்துவர்களிடம் பெற்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டியது கட்டாயம். உடல் நலம் அல்லது மன நலம் குன்றி இருப்போரால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
மத்திய மந்திரி பிரபுல் பட்டேலை சந்தித்து அவர் எடுத்த முடிவின் படி ஹஜ் பயணம் செல்வோர் அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து நேரடியாக ஹஜ் செல்ல அழைத்துச் செல்லப்படுவார்கள்.

ஹஜ் யாத்திரிகர்கள் தங்கும் இடத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹஜ்பயணம் தொடர்பான புத்தறிவு பயிற்சி முகாம் நடத்தப்படும். இதில் குடிநீர் தட்டுப்பாடு, இட சிக்கனம், மக்காவின் பயணவழித்தெளிவு, ஹஜ் சடங்குகள், உடைமை பாதுகாப்பு, பயணிகளின் உடல் நலக்குறைபாடு முதலியவை பற்றி ஹஜ் பயணிகளிடம் விளக்கிக்கூறப்படும்.

ஹஜ் பயணிகள் குறைந்த அளவில் லக்கேஜ்களை கொண்டுசெல்லவேண்டும். நாட்டில் உள்ள டூர் ஆபரேட்டர்கள் ஒருங்கிணைந்து வழிகாட்டுனர் குழுவை ஜித்தா விமான தளத்தில் இருக்கும்படி உரிய ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களை மக்காவில் உள்ள விடுதியில் இலவசமாக தங்க வைக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அபூபக்கர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!