Wednesday, October 29, 2008

காஃபிர்களை கொல்லுங்கள்!!!!!!!!!!!!!????????????

'இஸ்லாம்' - அதாவது குர்ஆன், காஃபிர்களை (அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாதவர்களை அல்லது நிராகரிப்பவர்களை) வெட்டிக் கொல்லச் சொல்கின்றது. கண்ட இடத்தில் அவர்களை கருவறுக்கச் சொல்கின்றது' என்ற பிரச்சாரம் இந்து ராஜ்யம்(?) அமைக்கத் திட்டம் வகுத்திருப்பவர்களாலும் அதேபோல் தங்கள் வேதத்தில் உள்ள தவறான கொள்கைகளை மறைப்பதற்காக சில கிறிஸ்தவ விஷமிகலாலும் பரப்பப்பட்டும் - எழுதப்பட்டும் வருவதுடன் அப்பாவி இந்துக்களைக்களையும் மற்றும் மாற்றுமதத்தவர்களையும் கவர்ந்திழுக்க முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு கிளறி விடப்படுகின்றது.

சமூக அமைதியையே கேள்விக்குறியாக்கி வரும் இப்பிரச்சனைக்கு விளக்கமளிக்கும் கடமை நமக்கு இருக்கின்றது.'இந்தக் கருத்தில் அமைந்த வசனங்கள் யாவும் பொதுவானதன்று. போர்க்களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய போர் தர்மங்கள்' என்று ஒருவரியில் பதில் கூறுவதே போதுமானதாகும்.

ஆயினும், மாற்றார்கள் ஐயத்திற்கிடமின்றி இதைப்புரிந்து கொள்வதற்காக இதை விபரமாக விளக்குவோம்.

கொலை செய்வது பொதுவாக அனைவராலும் கண்டிக்கப்படும் ஒரு கொடுமையாகும். பிறர் பொருளை அபகரிப்பதும், சூரையாடுவதும் கூட கொடியவர்களின் செயலாகும்.பொதுவாக, இந்தக் காரியங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் போர் என்று வந்து விடுமானால் இதையெல்லாம் செய்வதுதான் போர் தர்மம்.பொதுவாக வெறுக்கப்படும் சில செயல்கள் போர்க்களத்தில் விரும்பத்தக்கதாக அமைந்து விடுகின்றன.

இராமன், கண்ணண், அர்ஜுனன், கர்ணன், பஞ்சபாண்டவர்கள், கவுரவர்கள் போன்ற புராணப் பாத்திரங்களாக இடம் பெறுவோர், பல கொலைகளைச் செய்துள்ளனர். சாதாரணசமயத்தில் இவற்றைச் செய்திருந்தால் அவர்கள் வெறுக்கப்பட்டிருப்பார்கள். போர்களத்தில் செய்ததால் அவர்கள் வீரர்கள் எனப் போற்றப்படுகின்றனர்.

தமிழகத்தின் மூவேந்தர்களும் கூட பல கொலைகளைச் செய்தவர்கள் தான். போர்க்களத்தில் கொலைகள் செய்த காரணத்தினால் அவர்கள் வீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.போர்க்களத்தில் மட்டுமின்றி, ஒரு நாட்டிலேயே நடக்கும் விடுதலைப் போராட்டத்திலும் இது போன்ற கொலைகள் நடந்துள்ளன. அதைச் செய்தவர்கள் இன்றளவும் தியாகிகளாக மதிக்கப்படுகின்றனர்.

ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் முதல் தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி வரை அனைவரும் இன்று மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். கொலை காரர்களாகக் கருதப்படுவதில்லை.போருக்கு என தனி தர்மங்கள் உள்ளன என்பதற்கே இந்த விளக்கங்கள்.உலகத்தில் வெற்றி பெற்ற எந்த ஆட்சியாளரும் போரில் எது வேண்டுமாலும் செய்யலாம் என்று நடந்துள்ளனர்.

ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் போரிலும் கூட புது நெறி புகுத்தினார்கள்.மாற்றார்கள் விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளும் குர்ஆன் வசனத்தை விளக்குமுன் அவர்கள் மாற்றாரிடம் நடந்து கொண்ட முறையை மாற்றார்கள் அறிய வேண்டும்

.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவில் தமது பிரச்சாரத்தைத் துவக்கிய போது துன்புறுத்தப்பட்டு மக்காவை விட்டே விரட்டப் பட்டார்கள். மதீனா சென்று அங்கே ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள். பல்வேறு போர்க்களங்களையும் மக்காவாசிகளால் அவர்கள் சந்தித்தார்கள். இறுதியாக மக்காவில் அவர்கள் வெற்றி வீரராகப் பிரவேசித்தார்கள். அவர்களை ஊரை விட்டே விரட்டியவர்கள், அவர்களின் தோழர்கள் பலரை படுகொலை செய்தவர்கள், சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் என்னவாகுமோ என்று பீதியடைந்தார்கள்.காஃபிர்களைக் கொல்வது இஸ்லாத்தில் மரபாக இருந்திருந்தால் மக்கத்துக் காஃபிர்களைக் கொல்வதற்கு ஆயிரம் நியாயங்கள் இருந்த இந்த நேரத்தில் கொன்று குவித்திருக்க முடியும். அவர்களின் கடந்த கால கொடுமைகளுக்குப் பழிவாங்கியிருக்க முடியும்.சக்தி மிக்க ஆட்சியாளராகவும் தனது கட்டளைக்கு காத்திருக்கும் தோழர்களைக் கொண்ட சமுதாயத்தின் தலைவராகவும் மக்காவில் பிரவேசித்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கத்தியை எடுக்கவில்லை. இரத்தமும் சிந்தச் செய்யவில்லை. எவரையும் பழிவாங்கவில்லை. அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.

உலக வரலாற்றில் சக்தி மிக்க ஒரு தலைவர் ஒரு உயிரைக் கூடப் பறிக்காது. ஒரு நாட்டை வெற்றி கொண்டது. இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.எதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கி விளைநிலங்களுக்குத் தீ வைத்து தோற்றவன் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்து, தோற்றவனின் மூக்கை அறுத்துக் கோரப்படுத்தி, தோல்வி கண்டவனின் மனைவியின் கூந்தலை வெட்டி அவமதித்து, போரில் பங்கு கொண்டவன், பங்கு கொள்ளாதவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டிக் குவித்து இன்னபிற அக்கிரமங்கள் செய்தவர்களையெல்லாம் மாவீரர்களாகவும், தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் போற்றுகின்ற ஒரு சமுதாயத்தினர் இஸ்லாமியப் போர் முறையைக் குறை கூறுவது வேடிக்கையானதே.

காஃபிர்களைக் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்வது இஸ்லாத்தின் கட்டளையாக இருந்திருந்தால் அதற்கான எல்லா வாய்ப்புக்களையும் பெற்றிருந்த இந்தச் சமயத்தில் அதைச் செய்திருப்பார்களே!

காஃபிர்களுடன் அதாவது மாற்று மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறைக்கு மற்றொரு சான்றைக் கேளுங்கள்.யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இதுபற்றி விசாரித்தார்கள். 'உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்' என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இவளைக் கொன்று விடட்டுமா? என நபித்தோழர்கள் கேட்டதற்கு 'கூடாது' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது)

மாற்றார்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி நடந்துள்ளார்கள் என்பதை மாற்றார்கள் சிந்திக்க வேண்டும்.காஃபிர்களை வெட்டிக் கொல்வது இஸ்லாமிய கட்டளையாக இருந்திருந்தால் காஃபிரான அந்தப் பெண்மனி மதீனாவில் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? வாழ்ந்தது மட்டுமின்றி நபியையே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டும் அளவுக்கு அவள் தரும் உணவை நம்பிக்கையுடன் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக நபிகள் எப்படி பழகி இருக்க முடியும்? இதையும் மாற்று மதத்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

தனி நூலாக எழுதப்படும் அளவுக்கு பல சான்றுகள் உள்ளன. காஃபிர்களைக் காஃபிர்கள் என்பதற்காகக் கொல்வது இஸ்லாம் காட்டும் வழியல்ல என்பதைப் புரிந்துக் கொள்ள இவை போதுமாகும்.'அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்' என்று குர்ஆன் கூறும் கட்டளையின் கருத்தென்ன? அந்த நியாயமான ஐயத்தையும் நீக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

அல்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் 191-வது வசனத்தில் இந்தக் கட்டளை இடம் பெற்றுள்ளது.இந்த வசனத்திற்கு முந்தைய வசனத்தையும் சேர்த்துக் கவனித்தால் அவர்கள் தவறான முடிவுக்கு வரமாட்டார்கள்.உங்களை எதிர்த்துப் போர் புரிந்தவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்2:190)எவர்கள் ஆயுதம் தரித்து உங்களுடன் போருக்கு வருகிறார்களோ அவர்களுடன் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள் என்று கூறிவிட்டுத்தான் அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் எனக் குர்ஆன் கூறுகிறது.

எதிரிகள் போருக்கு வரும் போது நடந்து கொள்ள வேண்டிய முறையைக் கூறும் வசனத்தைத் தான் பொதுவானதாக விஷமிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்த விஷமிகள் கனவு காண்பது போல் இந்து ராஜ்யம் ஏற்பட்டு விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்படி இந்துராஜ்யம் அமைந்த பிறகு அண்டை நாடு ஒன்று போருக்கு வந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? அகிம்சை பேசுவார்களா? அங்கேயும் உண்ணாவிரதம் இருப்பார்களா?உலகில் எந்த நாடாக இருந்தாலும் இந்தக் கட்டத்திலும் கைகட்டி வாய்பொத்தி நிற்குமா?போர் என்று வந்துவிட்டால் கோழைகளாக சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

இன்று நாள்தோரும் அமெரிக்காவும் அதன் செல்லக்குழந்தையான இஸ்ரேலும் செய்யும் அக்கிரமமான - கொடுமையான - அப்பாவி
மக்களை கொண்று குவித்துக்கொண்டிருக்கக்கூடிய போர்களையோ அல்லது ஒருபுறம் வந்தேரி யூதர்களுக்காக அப்பாவி பாலஸ்தீன் மக்களை கருவறுத்துக் கொணடும், மற்றொரு புறம் ஈராக், ஆஃப்கானிஸ்தான் மக்களை குண்டு போட்டு அழித்துக் கொண்டிருக்கும் சில மதவெறி - ஆதிக்க வெறி நாடுகள் செய்யும் போர்கள் போல் இஸ்லாம் கூறும் போர் தர்மங்கள் அமையவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், மதவெறியைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பேற்றி இந்து ராஜ்ஜியத்துக்கு ஆள் பிடிப்பதற்காக வேண்டுமென்றே தப்புப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதே உண்மை.சுமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக் கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக் கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுமாறு இஸ்லாம் கூறவே இல்லை நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.எனவே இவர்களின் இந்தக் குற்றச் சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!