Wednesday, October 22, 2008

'த்வம் ஏகம் வரண்யம் த்வம் ஏகம் சரண்யம் த்வம் ஏகம் ஜகத் காரணம் விஸ்வரூபம்'

கேரளாவில் உள்ள 'டயலாக் செண்டர்' நடத்திய 'சிநேக சங்கமம் நிகழ்ச்சியில் ஓர் இந்து சகோதரர் கேட்ட கேள்வியும் அதற்கு டயலாக் செண்டர் இயக்குனர் ஷேக் முஹம்மத் காரகுன்னு அளித்த விளக்கமும்!

முஸ்லிம்கள் நினைப்பது போல் நாங்கள் பல தெய்வ நம்பிக்கையாளர்களோ பல தெய்வங்களை வணங்குபவர்களோ அல்ல...! இறைவன் ஒருவனே என்று நம்பி இறைவனை வழிபடுபவர்கள் தாம்! சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதற்குக் காரணம், இறைவனை நினைவு கூற்வதற்கும், இறைவன் பக்கம் கவனத்தை மையப்படுத்துவதற்கும்தான்! அப்படியிருக்க, நீங்கள் ஏன் உருவ வழிபாட்டை குறை சொல்கிறீர்கள்? ஏன் அதை எதிர்க்கிறீர்கள்?

இஸ்லாம் இறைவனின் ஏகத்துவத்தை அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும்; அவனுக்கு மட்டுமே வழிபடவேண்டும் என்று வலியுறுத்துகிறது. இறைவனுடை சிறப்புகளிலும் பண்புகளிலும் அதிகாரத்திலும் அவனுக்குப் பங்காளிகளை ஏற்படுத்துவது மன்னிக்க முடியாத பாவமாக இஸ்லாம் கருதுகிறது. அதனால்தான் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் உருவ வழிப்பாட்டை மறுக்கிறோம்.

1.இறைவன் உருவ மற்றவனும் பார்வைக்கு புலப்படதவனும் ஆவான் என்றுதான் இந்து மதம் உள்பட உலகின் எல்லா மதங்களும் சொல்கின்றன. கேனோபநிஷத்தில் இவ்வாறு உள்ளது

'யன்மனஸா ந மனுதே யே நாஹுர் மநோ மதம் ததேவ பிரம்ம த்வம் வித்தி நேதம யதிக முபாஸதே (1:6)

(மனத்தால் அறிய முடியாததும், ஆனால் மனதுக்கு அறியக்கூடிய ஆற்றலை அளித்ததும் எதுவோ அதுவே பிரம்மம் என அறிக. 'இதுதான் பிரம்மம்' எனக்கருதி உபாசிக்கப்படுவது எதுவும் பிரம்மம் அல்ல.)

'யச்சக்ஷுஷா ந பஷ்யதி யேன சக்ஷும்ஷி பஷ்யதி ததேவ பிரம்ம த்வம் வித்தி நேதம் யதித முபாஸதே' (1:7)

(கண்களால் காண முடியாததும், கண்களுக்குப் பொருள்களைக் காணும் ஆற்றலை அளித்ததும் எதுவோ அதுவே பிரம்மம் என அறிக. இதுதான் அது என உபாசிக்கப்படும் எதுவும் பிரம்மம் அல்ல.)

'யது ஷ்ரோத்ரேன நஸ்ருனோதி யேன ஷ்ரோத்ரமிதம் ஷுர்தம் ததேவ பிரம்ம த்வம் வித்தி நேதம் யதித முபாஸதே

(செவிகளால் கேட்க முடியாததும், கண்களுக்குப் பொருள்களைக் காணும் ஆற்றலை அளித்ததும் எதுவோ அதுவே பிரம்மம் என அறிக. 'அதுதான் இது' என உபாசிக்கப்படும் எதுவும் பிரம்மம் அல்ல.)

இறைவன் உருவமற்றவன் என இந்துமதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. உபநிஷத்துகள் இறைவனைக் குறிப்பிடும்போது உருவமற்றவன் என்றே குறிக்கிறது.

'நிர்கத ஆகாராது ஸ நிகாரா' - எவன் ஒருவனுக்கு ஆகிருதி(உடம்பு) ஒன்றும் இல்லையோ அவனே இறைவன் (சுவாமி தயானந்தசரஸ்வதி, சத்யார்த்த பிரகாசம், ஆர்ய பிராதேசிக பிரதிநிதி சபா,பஞ்சாப் பக்கம்38)

சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதுகிறார்:
இறைவன் உருவமற்றவன்; ஏனெனில் உருவமுள்ளவனாக இருந்தால் வியாபகனாய் (எங்கும் நிறைந்து) இருக்க முடியாது. வியாபகனாய் இல்லையெனில் அனைத்தும் அறிபவன் போன்ற குணங்கள் அவனிடம் இருக்க வாய்ப்பில்லை. பரிச்சனாமாய பொருளில் உள்ள குணம், கர்மா, சுபாவம் போன்றவையும் பரிச்சினங்களாகவே இருக்கும். அதுமட்டுமல்ல இறைவன் உருவம் உள்ளவன் எனில், தட்ப வெப்பங்கள், நோய்கள், தோஷங்கள், குறைகள் போன்ற பாதிப்புகளில் இருந்து விலகி இருக்க முடியாது. ஆகவே இறைவன் உருவமற்றவன் என்பதே தீர்மானமான உண்மை. (சத்யார்த்த பிரகாசம் பக்கம் 288)

குர்ஆன் கூறுகிறது:

அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்கமுடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன், அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான். ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமான தெளிவான ஞானமுடையவன். அல்குர்ஆன் 6:101-103

உருவமற்றவனும் பார்வைகளுக்கு எட்டாதவனுமாகிய இறைவனுக்கு உருவம் கற்பிப்பது செயற்கையானதாகும். சத்தியத்தை கற்பனையுடன் கலக்கும் செயல். அது இறைவனைப் பற்றிய கருத்தை நம்பிக்கையாளர்களிடம் உருவாக்குகிறது. அதனாலேயே அது இறைவன் மீது இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகிறது. இது தொடர்பாக பிரமானந்த சுவாமி சிவயோகி எழுதுகிறார்:

நமது தந்தையினுடைய அல்லது குருவினுடைய படங்களை வைத்து அவர்கள் இல்லாதபோது பார்த்து மகிழ்கிறோம்; வணங்குகிறோம்; அதே போல் கோவிலில் இறைவனின் சிலையை வைத்து பூஜித்து மகிழ்கிறோம். அப்படிச் செய்யாவிட்டால் அற்ப அறிவு படைத்தவர்களுக்கு இறைவன் இருக்கிறான் என்பதைப் புரிய வைப்பது எப்படி? என்று சிற்பிகள் வாதாடுகிறார்கள்.

இது அபத்தமான வாதம். தந்தையையும் குருவையும் நேரில் நிற்க வைத்து போட்டோ எடுக்கிறோம். அதில் அவர்களின் ஆகிருதியும்(உடம்பு) உண்டு. ஆனால் இறைவனுக்கு 'உடல்' இல்லை. பிறகு எப்படி படமாக சிலையாக எடுக்கமுடியும்? சிற்பிகளும், ஓவியர்களும் செதுக்குவதும் வரைவதும் எல்லாம் இறைவன் ஆகிவிட முடியுமா? அல்லது இவர்கள் செதுக்குவதும் வரைவதும்தான் இறைவன் என்று இவர்களுக்கு யார் சொன்னது? இப்படி உருவங்கள் சிலைகள் மூலம் இறைவனையும் வழிபாட்டு முறைகளையும் தவறாக புரிய வைப்பது அனர்த்தனமாகும். (நூல்: சிலை வழிபாடு ஒரு விமர்சனம் பக்கம்28-29)

2.நம்மீது கவனம் குவிய வேண்டும் என்பதற்காக நம்மை நினைவு கூறவேண்டும் என்பதற்காக யாரேனும் குரங்கு படத்தையோ, நாய் படத்தையோ வைத்து பூஜை செய்வதை நாம் விரும்புவோமா? நிச்சயம் விரும்ப மாட்டோம். காரணம் குரங்கும் நாயும் நம்மைவிட சாதாரண தாழ்வான படைப்புகள் என நாம் அறிந்திருக்கிறோம். அதே போல், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் இறைவனால் படைக்கப்பட்டவை; அவனுடம் ஒப்பீடு செய்ய முடியாத அளவுக்கு சாதாரணமானவை. அவற்றில் ஏதேனும் ஒன்றை இறைவனை நினைவு கூற்வதற்கும், இறைவன் மீது கவனத்தைக் குவிப்பதற்கும் பிரதிஷ்டை செய்வது மாபெரும் அநீதியும் பாவமும் ஆகும்.

3.இறைவனை எப்படி வழிபடவேண்டும் என்று சொல்கிற உரிமை இறைவனுக்குத்தான் உண்டு. சிலைகளையோ, பொம்மைகளையோ வைத்துத்தான் தன்னை வணங்க வேண்டும் என்று இறைவன் கூறவில்லை. அது மட்டுமல்ல, சிலைகளையோ உருவங்களையோ வைத்துத் தன்னை வணங்கக்கூடாது என்றும் அழுத்தமாக கட்டளை பிறப்பித்துள்ளான்.

4.உண்மையான இறைவனை விடுத்து மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதோ, வழிபடுவதோ அடாத செயல் என்று இஸ்லாத்தைப் போலவே இந்து மதமும் சொல்லியுள்ளது.

சந்தோக்யோபநிஷத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
'ஓமித்யேத தக்ஷா முத்கீத முபாஸதே'

(ஓங்காரம் எவனுடைய பெயராக இருக்கிறதோ, எவனுக்கு எப்பொழுதும் அழிவே இல்லையோ அவனை மட்டுமே உபாசிக்க வேண்டும்; வேறு யாரையும் அல்ல.)

புகழ்பெற்ற இந்துமத சுலோகம் (ஸ்தோத்திரம்)ஒன்று இப்படிக் கூறுகிறது.
'த்வம் ஏகம் வரண்யம் த்வம் ஏகம் சரண்யம் த்வம் ஏகம் ஜகத் காரணம் விஸ்வரூபம்'

(உன்னை மட்டுமே வணங்குகிறோம்; உன்னிடம் மட்டுமே சரணடைகிறோம். உலகைப் படைத்ததன் முழுமுதற்காரணம் நீயே...! நீ மிகப்பெரியவன்)

ஸ்வேதா உபநிஷத் இவ்வாறு கூறுகிறது;
'தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதாநாம் பரமம் சதெய்வம் பதிம் பதீம்நாம் பரமம் பரஸ்தாது விதாம தேவம் புவனேச மீட்யம்'

சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதுகிறார்;
"துதித்தல், போற்றுதல், இறைஞ்சுதல், வனங்குதல்(உபாசனை)
இவையெல்லாம் மிக உயர்வான ஒருவனுக்கு மட்டுமே உரியன! அவனையே 'பரமேஸ்வரன்' (மாபெரும் இறைவன்) என்கிறோம். அன்பு, கருணை, இரக்கம், சத்தியம் போன்ற பண்புகள் அவனிடம் இருப்பது போல் வேறு யாரிடமும் இல்லை. ஆகவே மனிதர்கள் அந்தப் பரமேஸ்வரனை மட்டுமே துதித்துப் போற்றி வணங்கவேண்டும். வேறு யரையும் வணங்கக்கூடாது" (சத்யார்த்த பிரகாசம் பக்கம்12-13)

5.குழந்தைகளுக்கு சிறிய சட்டை வேண்டும், பெரிய சட்டை சரியாக இருக்காது. அதுபோல குறைந்த அறிவு உள்ளவர்களுக்கு உருவ வழிபாடு தேவை; பிரம்ம தியானம் செய்ய அவர்களால் இயலாது என்று வாதிடுகின்றனர்.

6.உருவ வழிபாடு செய்பவர்களில் பெரும்பாலோர் விக்கிரகங்களுக்குத் தனிப்பட்ட சிறப்பும் தகுதியும் புண்ணியமும் கற்பிப்பவர்களாகவே இருக்கிறார்கள். யாருடைய சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ அவருடைய சைதன்யம் இறங்கி வருகிறது என்பதே உருவ வழிபாட்டுக்காரர்களின் நம்பிக்கை. கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக எனில் அதற்குச் சிலைதான் வேண்டும் என்றில்லையே!

நடைமுறை வாழ்வில் தாங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் சிலைகளை மாற்றுவதற்குக்கூட அவர்கள் தயாரில்லை...! ஆகவே விக்கிரகங்கள் இறைவனை நினைவு கூர்வதற்கும், கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும்தான் என்ற வாதத்தில் உண்மை இல்லை. பல தெய்வ வழிபாட்டு முறைதான் அது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
7.இறைவன் இணை துணை இல்லாதவன்; மனிதர்களின் பார்வைக்குப் புலப்படாதவன் என்றே எல்லா மதங்களும் கூறுகின்றன. இறைவனைப் பொறுத்தவரை 'அவன் இன்ன பொருளைப் போன்றவன்' என்று கூட யாராலும் சொல்ல முடியாது. அதுமட்டுமல்ல, மனிதனின் கண்ணும் மனதும் எதன் மீதும் மையம் கொள்கின்றனவோ அதனுடைய பிரதி பிம்மம்தான் மனதில் பதியும். சிலைகளை வழிபடுபவர்களின் இதயங்களில் சிலைகளின் பிரதி பிம்மங்கள்தான் பதியுமே தவிர, இறைவன் இடம்பெற மாட்டான். இவ்வாறு இறைவனின் இடத்தை சிலைகள் கைப்பற்றி விடுகின்றன.

8.படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதனே...! ஆகவே மனிதன் தன்னுடைய கீழ்ப்படிதலையும் பக்தியையும் வழிபாடுகளையும் தன்னைப் போன்ற சக மனிதர்களுக்கோ, தன்னை விடக் கீழான படைப்புகளுக்கோ அர்ப்பணிப்பது அவனுடைய தகுதிக்கும் உயர்வுக்கும் ஏற்ற செயல் அல்ல...! அவ்வாறு செய்வது மனிதன் தன் இறைவனுக்குச் செய்யும் அநீதி மட்டுமல்ல; தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் அக்கிரமும் ஆகும் என்று இஸ்லாம் கூறுகிறது.

யார் இந்தப் பேரண்டத்தைப் படைத்தானோ, அனைத்து ஆற்றலும் அறிவும் யாரிடம் இருக்கிறதோ, யார் அனைத்தையும் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கின்றானோ அவனை மட்டுமே மனிதன் வணங்கவேண்டும். இந்தத் தகுதிகள் எல்லாம் இருப்பது இறைவனிடம் மட்டுமே! இந்தத் தகுதியை மற்றவர்களுக்கு வழங்குவது பாவமாகும். இந்தக் காரணங்களால் தான் உருவ வழிபாடு - விக்கிரக ஆராதனை மாபெரும் பாவம் ஆகி விடுகிறது.

1 comment:

  1. உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்! தங்களின் இஸ்லாமியப்பிரச்சாரக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்...

    அபூஇப்ராஹீம்
    சென்னை

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!