Thursday, June 23, 2011

இஸபெல்லா - ஒரு புதினம், ஒரு புரட்சி..!! (1)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே...,

பல்வேறு காரணிகளால், இந்த வலைப்பூவில் எழுதுவதென்பது அரிதாகிக் கொண்டே வந்தது. கிடைத்த இரண்டு வாய்ப்புகளிலும் எழுதிய ஒரு தொடரை தொடரும் எண்ணம் தற்போதைக்கு விடுமுறை எடுத்துள்ளது. :)) இன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால் அந்த தொடரை முடிக்கப் பார்க்கிறேன்.

இந்த தொடர், ஒரு கதை. பாகிஸ்தானிய கதாசிரியர் ஒருவருடையது. கதை மூலமே கிறிஸ்தவ மதத்தையும், இஸ்லாமிய மதத்தையும் ஆய்வு செய்து, ஒப்பிட்டுப் பார்த்து, எது சரி, எங்கே தப்பு என்பதை உளவியல் ரீதியாக அணுகி முடிவு செய்வார். இந்தக் கதையை முதன் முதலில் படிக்கும்போது எவ்வளவு தாக்கத்தை உணர்ந்தேனோ அதே அளவு தாக்கத்தை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் உணருகிறேன். இதனை கதையாக வாசித்தாலும் சரி, தர்க்க ரீதியில் அணுகினாலும் சரி, ஒரு சின்ன சலனத்தையாவது ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ் அப்படி ஒரு மாற்றத்தையோ, சலனத்தையோ ஏற்படுத்துமெனில் அதுவே இந்த தொடரின் வெற்றியாகும். அல்லாஹ் போதுமானவன். சரி வாருங்கள், பழைய, மிகப்பழைய ஸ்பெயினின் கொர்டபா நகரை சுற்றிப்பார்க்க செல்வோம்.

---------------------------- ~~ ----------------------------

அழகிய தோட்டத்தில்...
ஏடென் தோட்டத்தில் அன்றைய மாலைப்பொழுதை கதிரவன் தன் வசமாக்கியிருந்தான். பொன்னிற கதிரை காணுமிடமெல்லாம் பாய்ச்சி கண்களுக்கு விருந்தாக்கியிருந்தான். சுற்றுலாவிற்கு வந்தவர்களும் அங்கேயே வாழும் அதிர்ஷ்டத்தைப் பெற்றவர்களும் என்றைக்கும் போல அன்றைக்கும் ரம்மியமான அந்த மாலைப்பொழுதை மகிழ்வுடன் கழித்துக் கொண்டிருக்கையில் இரண்டு இளைஞர்கள் மட்டும் தோட்டத்தின் ஒரு மூலையில் அமர்ந்து தனியே மதங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அதே தோட்டத்தில் கொஞ்சம் தள்ளி இருந்த பெஞ்சில் அமர்ந்து தோழிகளுடன் அந்த மாலையின் அழகில் மனம் பறிகொடுத்துக் கொண்டிருந்தாள் இஸபெல்லா. இஸபெல்லா, கொர்டபாவின் பணம் படைத்த, வசதியற்ற என எல்லா இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்டிருந்த ஒரே பெயர். சமூகத்தில் உயர்ந்தோரும், மத குருமாரின் வம்சங்களும் தங்கள் வசம் கொள்ளத் துடித்த தேவதை. ஆனால் அவளின் தந்தையோ, இஸபெல்லாவை இன்னொரு (மரியம் அலைஹ்) கன்னிமேரியாக்கி வைக்க வேண்டுமென்றே முடிவுடன் இருந்தார். இஸபெல்லாவிற்கு அதற்கெனவே தனியாக மதம் சார்ந்த கல்வியை கற்க வழி வகை செய்திருந்ததால் இஸபெல்லாவுக்கும் மதம் சார்ந்த விவாதங்கள் மிகுந்த மகிழ்ச்சியை தந்தன எனலாம்.

அங்கே அந்த மூலையில் இருந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர்களும் தங்களுக்குள் ஏதோ ஓர் விவாதத்தில் தீவிரமாய் இறங்கியிருந்தனர்.
முதலாம் இளைஞன்:செயிண்ட் பால், அவரின் கடிதங்களில் [எபிஸ்ட்ல், கேலேஷியன்களுக்கு அனுப்பப்பட்டது 3:10] ஒன்றில் இப்படி எழுதியுள்ளாரே?

இரண்டாம் இளைஞன்:என்னவென்று?

முதலாம் இளைஞன்:அதுதான், மார்க்க கட்டளை என்பது ஒரு சாபமென்றும், அந்த சாபத்திலிருந்து விடுவிக்கவே ஏசுநாதர் இந்த மண்ணிற்கு வந்தார் என்றும். அப்படி என்றால் என்ன அர்த்தம்?
இரண்டாம் இளைஞன்: (சிரித்துக் கொண்டே) “நீ என்னிடம் இருந்து இதன் விளக்கத்தை அறிய முயற்சிக்கிறாயா? ஆளானப்பட்ட கிறிஸ்தவ குருமார்களே...

இஸபெல்லாவின் காதுகளுக்கு “கிறிஸ்தவ குருமார்களே..” என்னும் வார்த்தை தெளிவாக விழுந்தது. தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவள் இந்த வார்த்தைகளை கேட்டதும் சட்டென அமைதியானாள். தன் தோழிகளையும் அழைத்து சற்றே அமைதி காக்கும்படி கூறினாள். 

இஸபெல்லா: “இந்த இரு இஸ்லாமிய இளைஞர்களும் நம் மதத்தைப் பற்றி ஏதோ பேசுவது போல கேட்கிறதே. கொஞ்சம் அமைதியாக இருங்கள். என்ன பேசுகிறார்கள் என்று கேட்கலாம்.
தோழிகளில் ஒருத்தி: “இந்த இஸ்லாமியர்கள் இந்நாட்டிற்கு வந்ததிலிருந்து நம் மதம்தான் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது போலுள்ளது. இப்பொழுது மீண்டும் என்னவோ??
இஸபெல்லா: “ஷ்ஷ்ஷ்... சும்மாயிருங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களென்று கேட்கலாம். பின்னர் நாம் விவாதிக்கலாம்.

முதலாம் இளைஞன்:மு’ஆஸ், என்ன நீ அந்த கிறிஸ்தவ குருமார்களே இந்த விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை என்கிறாயா?? அப்படியென்றால் அவர்கள் கிறிஸ்தவத்தை புரிந்து கொள்ளாமலே அதை பின்பற்றுகிறார்கள் என்கிறாயா??

இரண்டாம் இளைஞன்:உமர் லஹ்மி!, உனக்கு என் கூற்றில் சந்தேகமிருந்தால் இதே கேள்வியை இங்கிருக்கும் யாரேனும் ஒரு சிறந்த, மார்க்க அறிவு நிரம்பிய பாதிரியாரை அழைத்து இதைக் கேட்டுப்பார். ஆனால் அதற்கு முன் செயிண்ட் பால் கூறியுள்ள விஷயத்திற்கு உன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்காமல் இருந்து கேள்.”

உமர் லஹ்மி:என்னிடம் இந்த விஷயத்தில் எந்த எதிர்ப்போ, மறுப்போ இல்லை. ஆனால் அதிகமாக கிறிஸ்தவர்களுடன் நீ இந்த விவாதங்களை செய்வதைப் பார்த்தபின்தான் உன்னிடம் இதை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டுமென்று தோணியது. அதுவுமன்றி நீதான் அவர்களின் வேதங்களையும் அதிகம் படித்து வைத்துள்ளாயே. அதனால்தான். என் கேள்வியெல்லாம் ஒன்றுதான், மார்க்க சட்டங்கள் ஒரு சாபமென்றும், இறைத்தூதர் ஈஸா(அலைஹ்) / ஏசுநாதர் கிறிஸ்தவர்களை எல்லாம் இந்த சாபத்திலிருந்தே காப்பாற்ற வந்தார் என்றும் வைத்துக்கொண்டால் திருட்டு / விபச்சாரம் / பெற்றோர்களுக்கு மாறு செய்வது போன்ற எல்லாமே பின் செல்லத்தக்கவையாகி / அனுமதிக்கப்பட்டவையாகி விடுமே??  கிறிஸ்தவர்களே இதை விரும்பாதவர்களாயினும் அவை அனுமதிக்கப்பட்டவையாகிவிடுமே என்றுதான் குழம்புகிறேன்

மு’ஆஸ்:என்ன உளறுகிறாய்? எனக்கு புரியவில்லை. எப்படி மார்க்க சட்டம் ஒரு சாபமென்றால், திருட்டு, விபச்சாரம் போன்ற பாவங்கள் அனுமதிக்கப்பட்டவையாகும் என்கிறாய்? எனக்கு புரியவில்லை??

உமர் லஹ்மி:நான் என்ன சொல்கிறேன் என்றால், பழைய ஏற்பாட்டின்படி மார்க்க சட்டங்களில் ஒருவர் திருடுவதோ, விபச்சாரம் செய்வதோ, பக்கத்துவீட்டினருக்கு தொல்லை அளிப்பதோ, பெற்றோருக்கு மாறு செய்வதோ அனுமதிக்கப்படாது. ஆனால், முழுதாக மார்க்க சட்டங்களே ஒரு சாபம் என்றானால், இந்த தடை உத்தரவுகளையெல்லாம் ஏற்க வேண்டியதில்லை. ஏனெனில் இந்த தடை உத்தரவுகளெல்லாம் மார்க்க சட்டங்களின் ஆணிவேர்தானே. செயிண்ட் பால் கூறுவது சரியென்றால் பின் இவர்களெல்லாம் திருடலாம், விபச்சாரம் செய்யலாம், இன்னும் பல பாவங்களையும் செய்யலாம் என்றுதானே பொருள்? அப்படிப் பார்த்தால் இந்த சாபங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு பாவகாரியங்கள் செய்பவர்களே கிறிஸ்தவர்கள் என்றும், இந்த பாவங்களை, பாவங்களே என்று ஒதுக்குகிறவர்கள் மார்க்கத்தை மதிக்கவில்லை என்றுதானே பொருள்படும்???

மு’ஆஸ்:வேடிக்கையாக உள்ளது. நான் இதுவரை எந்த விஷயத்தை எதிர்ப்படுகிற எல்லா கிறிஸ்தவர்களிடமும் பதில் சொல்லுமாறு கேட்கிறேனோ, அதே கேள்வியை நீ என்னிடம் விளக்க சொல்கிறாய்??

உமர் லஹ்மி:என்ன? இதை நீ முன்னமே கிறிஸ்தவர்களிடம் கேட்டுள்ளாயா?? அப்படியெனில் அவர்களின் பதில் என்ன??

மு’ஆஸ்:அவர்கள் அதற்கு பதிலுரைத்திடத்தான் விரும்புகிறார்கள். ஆனால் பின் அவர்களே குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள்.

பேச்சின் சுவாரஸ்யத்தில் நேரம் கழிந்து மஃக்ரிப் (அந்திமாலை தொழுகை) தொழுகையின் பாங்கு சத்தம் கேட்கிறது. உடனே அவ்விருவரும் எழுந்து அருகில் உள்ள நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீரெடுத்து ஒலு (தொழுகைக்கான சுத்தம் செய்யும் வழக்கம்) செய்து தொழ விரைகின்றனர்.

இஸபெல்லாவோ இதையெல்லாம் கேட்டபின் நெருப்பிலிட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள். அவளின் பாடங்களில் இன்னும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல பயிற்றுவிக்கப்படவில்லையே. இல்லையெனில் அங்கேயே அவர்களின் மூக்குடைவது போல் பதிலுரைத்திருக்கலாமே என்று தவித்தாள். அவளுக்கு தெரிந்த ஞானத்தைக் கொண்டு உமர் லஹ்மிக்கும், மு’ஆஸுக்கும் பதில் அளித்திட சிந்தனையில் ஆழ்ந்தாள். ஆனால் எப்படி யோசித்தும் அவளுக்கு விடை கிட்டவில்லை. எனவே தோழிகளுடன் அவ்விடத்தை விட்டகன்று, பின் தந்தையிடம் பேசி இதற்கு தீர்வை தர எண்ணினாள். அவளின் தந்தை, அவ்வூரிலேயே மிகச்சிறந்த மதகுரு. எனவே அவருக்கு தெரியாத விஷயம் இருக்காது என்றே முடிவு செய்தாள்.

தோட்டத்தை ஒட்டி இருந்த ஒரு நாற்சந்திப்பில் தோழிகளை விட்டு பிரிந்து கொர்டோபாவின் கிழக்கு வாசலை நோக்கி நடக்கலானாள்.

(தொடரும்... இன்ஷா அல்லாஹ்)

6 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.அன்னு,
    அருமையான தொடர்.
    தொடர ஆவல்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரி அன்னு.தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.........

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோதரி அன்னு.ALLAH MAY REWARD YOU FOR YOUR EFFORT.

    ReplyDelete
  4. அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹ்,

    முஹம்மது ஆஷிக் Bhai,
    ஒருவனின் அடிமை Bhai,
    ஃபாத்திமா ஜொஹ்றா அக்கா,

    தங்களின் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி. ஜஸாகல்லாஹு க்ஹைர்.

    வஸ் ஸலாம்.

    ReplyDelete
  5. அஸ் ஸலாமு அலைக்கும் !

    வாழ்த்துக்கள் சகோதரி அன்னு.தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.........

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைகும் சகோதரி!
    உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
    ஆவலை தூண்டிவிட்டு தாமதித்துவிடாதீங்க.

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!