கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான
உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும்
இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை! எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நமக்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.
கல்லூரி மாணவர்களுக்கான உதவித் தொகைகள்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை/அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 10 வகையான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவிகளுக்கு: முதுநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களின் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விவசாயிகள் பிள்ளைகள்: இத்திட்டத்தின் கீழ், இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பிள்ளைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,750 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை ஆவணத்துடன் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு எழுதி அனுப்பவேண்டும். இவர்களின் அலுவலகங்கள் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன.
படை வீரர்களின் பிள்ளைகள்: பாதுகாப்புப் படை வீரர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம். முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், அனைத்து வகையான பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். பணிக் காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு, விடுதிச் செலவுகளும் வழங்கப்படுகின்றன. இவை கல்லூரிக் கல்வி இயக்குநர் மூலம் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர்களின் பிள்ளைகள்: முதுநிலைப் பட்டப் படிப்புகள், எம்.பில்., பி.எச்டி. படிக்கும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம்.
வகுப்பு வாரியாக: இது தவிர, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மூலம், அந்தந்த நலத்துறைகளின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ் உதவித்தொகைப் பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
ஒரே பெண் குழந்தை: தவிர, குடும்பத்தின் முதல் பட்டதாரி/ஒரே ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையைப் பெற சேப்பாக்கத்தில் உள்ள பி.சி./எம்.பி.சி. நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
எனினும், ஒரு மாணவர் ஒரு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் மட்டுமே பெற முடியும். இது தொடர்பாக மேலும் விவரங்களை அறியவும், உதவித் தொகைகளைப் பெறுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அது குறித்து ஆலோசனைப் பெறவும்,
தொலைபேசி எண்கள்: 044 -28271911/6792/28212090 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இலவசக் கல்வி:
குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும்போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை
சென்ற கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்டது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில்,
'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்விப் படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்' என சென்ற வருடம் ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ/மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக்கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் ஏற்கனவே சேர்ந்து படித்துவரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.
தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களைச் சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
'குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை' என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்கவேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெறவேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பு: மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இவை அனைத்தும் பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் உள்ள இந்த தகவல்களைப் பார்க்க முடியாத/அறிய வாய்ப்பில்லாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு, அவரவர்களுக்கு முடிந்தவரை இந்தச் செய்திகளை கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
http://payanikkumpaathai.blogspot.com/2011/05/blog-post_14.html