Mohamed Anas
பண்டைய
அரபு தேசத்தில் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்தது.
இஸ்லாம் அந்த மண்ணில் வந்தவுடன் அந்த பழக்கத்தை கடுமையாக தடை செய்தது.
நபிகள் நாயகம் அவர்கள் ''யார் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று அழகிய
முறையில் வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, அவர்களுடன் நல்ல முறையில்
நடக்கிறாரோ அவருக்கு இறைவன் சுவர்கத்தை பரிசாக கொடுக்கிறான்'' என்ற
நற்செய்தியை அந்த மக்களுக்கு கூறினார்கள். மேலும் திருக்குரான் வசனமோ
''மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது
எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று'' போன்ற எச்சரிக்கையும் அந்த
மக்களுக்கு விடுக்கப்பட்டது. இது அந்த சமூகத்தை முழுவதுமாக மாற்றியது.
சமூகம் மாற வேண்டும். எண்ணங்கள் மாற வேண்டும். வரதட்சணை ஒழிய வேண்டும்.
அப்பொழுதே இந்த அவலங்கள் முற்று பெரும்.
----------------------------------------------------------------------
உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்களை கள்ளிப்பால் ஊற்றி தளிரிலேயே
பொசுக்கும் பயங்கரம் வெளிச்சத்துக்கு வந்து ஒரு தலைமுறை கடந்துவிட்டது.
இந்த சமூக அவலத்தை தடுக்க அரசு எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் நிலைமை
இன்னும் மாறவில்லை என்ற உண்மை முகத்தில் அறைகிறது. அங்கே, சிசுக்கொலைகள்
குறைந்தாலும் நவீன வடிவத்தில் கருக்கொலைகள் அதிகரித்துவிட்டன என்பதே களம்
நமக்குச் சொல்லும் தகவல்.
தாயே தன் மகளுக்கு கள்ளிப்பால் புகட்டி மண்ணுக்குள் புதைப்பது உசிலம்பட்டி
பகுதிக்கு புதிதல்ல. ‘இதுவும் பொட்டப் புள்ளயா.. கழுதைய போட்டுத் தள்ளிரு..
வச்சிருந்தா வகை பண்ண முடியாது’ - சர்வ சாதாரணமாய் இப்படிச் சொல்லி,
கருப்பையின் ஈரம் காய்வதற்குள் பெண் சிசுக்களை கல்லறைக்கு அனுப்பும்
அவலத்தை 1984-ல் தான் வெளி உலகம் அறிந்தது. இதற்குப் பிறகுதான், சேலம்,
தருமபுரி மாவட்டங்களில் இதைவிட அதிகமாக பெண் சிசுக்கள் கொல்லப்படும் பகீர்
தகவலும் கசிந்தது.
சிசுக்கொலையின் அடிநாதம்
முன்பெல்லாம் மதுரை, தேனி மாவட்டங் களில் ஆண்கள்தான் பரிசப் பணம் கொடுத்து
பெண்களை மணம் முடித்தார்கள். பெண்ணுக்கு சீர்வரிசையாக ஆடு - மாடுகளை
மட்டுமே கொடுத்தனுப்பினார்கள். பசுமைப் புரட்சியின் வரவால் விவசாயம்
செழித்தபோது நகை, பணம் என வரதட்சணை கொடுத்து பெண்களைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கமாக மாறியது.
இது வானம் பார்த்த பூமி. பக்கத்திலேயே வைகை அணை இருந்தாலும், உசிலையின் ஒரு
பகுதியை மட்டும் வளப்படுத்திவிட்டு இன்னொரு பகுதிக்கு வஞ்சகம் செய்கிறது
வைகை நதி. வளமான பகுதியில் இருப்பவர்கள், பெண்களுக்கு அதிக நகைகளை போட்டு
கட்டிக் கொடுத்தார்கள். அவர்களுக்குச் சரிநிகராக வறண்ட பூமிக்காரர்களால்
வரதட்சணை கொடுக்க முடியவில்லை. கடனை வாங்கி சீர் செய்து விட்டு கடனாளி
ஆனார்கள். வாகாக சீர்வரிசை கொண்டு வராத பெண்கள், புகுந்த வீட்டில்
நெருக்கடிகளுக்கு ஆளானார்கள்.
கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து நிற்கும் மகளுக்கு வழி சொல்ல வகை தெரியாத
பெற்றோர், ‘இம்பூட்டுக் கஷ்டப்படுறதுக்கு பொறந்த வீட்டுக்குள்ளயே இந்தப்
புள்ளய கள்ளிப்பால ஊத்திக் கொன்னுருக்கலாம்’ என்று அமில வார்த்தைகளை அள்ளி
வீசுவது வழக்கமானது. பெண் சிசுக் கொலையின் அடிநாதம் இதுதான்.
ஆணுக்கு முக்கியத்துவம் ஏன்?
எப்படியும் ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்து பெண்
குழந்தைகளை பெற்றவர்கள், கள்ளிப்பாலோ எருக்கம் பாலோ, நெல் உமியோ கொடுத்து
ஈவிரக்கமின்றி கொன்று புதைத்தார்கள்.
‘மூணு பொட்டப் புள்ளையல கொன்டோம்னா நாலாவதா ஆம்பளப் புள்ளதான்’ - இப்படிக்
கிளப்பி விடப்பட்ட மூட நம்பிக்கைகளும் பெண் சிசுக்களுக்கு எமவேதமாக அமைந்து
போனது. இப்படித்தான் பெண் சிசுக் காவுகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே
போனது உசிலம்பட்டி. என்னதான் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும்
இருந்தாலும் இன்னும் அங்கே சிசுக்கொலைகள் தொடர்கின்றன. அதைவிட அதிகமாக
கருக்கொலைகள் பெருகிவிட்டன.
“ஆம்பளப் புள்ளை இல்லைன்னா ’அரசத்த வளே’ன்னு வைவாக. எங்க அம்மாச்சிக்கு
மூணு பொட்டப் புள்ள, எங்கம்மாவுக்கு ரெண்டு, எனக்கும் ரெண்டாவது பொட்டப்
புள்ளயா பொறந்துடக்கூடாதுன்னு எங்கம்மா என்னைய திருமங்கலத்துல இருக்குற
ஸ்கேன் சென்டருக்கு கூட்டிப் போச்சு. கோயில் விசேஷத்துல (கடா) குட்டி
பிடிக்க, செத்தாக்க கோடித்துணி கொண்டாந்து போட, வாணம் போட்டு, உருமி கொட்டி
மையக்கரைக்கித் தூக்கிவிட இதுக்கெல்லாம் ஆம்பளப் புள்ளதானே வேணும்கிது
சனம்’’ என்று ஆண் வாரிசுக்கு வக்காலத்து வாங்குகிறார் கொக்குடையான்பட்டி
பிரியா.
தந்திரமாய் சாகடிப்பு
இதே ஊரைச் சேர்ந்த சமூக சேவகி மீனாட்சி, “ஏழு வருசத்துக்கு முந்தி
வடகாட்டுப்பட்டியில சலவை தொழிலாளி ஒருத்தரு மூணாவதும் பொம்பளப் புள் ளயா
பொறந்துருச்சுன்னு சொல்லி அந்தப் புள்ளைய வீட்டுக்குப் பக்கத்துல இருந்த
குழியில உசுரோட தூக்கி அடிச்சு மண்ணைப் போட்டு மூடுனாரு. கதறக் கதற அந்தச்
சிசுவை மண்ணுக்குள்ள போட்டு மூடுன கொடுமையை கண்ணால பாத்தவ நான்.
உசிலம்பட்டி பகுதியில இப்பையும் பொம்பள புள்ளைகள கொன்டுக் கிட்டுத்தான்
இருக்காக. ஆனா, ரொம்ப தந்திரமா பண்றாக. இந்தப் பகுதியில இருக்கவங்க நிறையப்
பேரு ஆந்திரா, கர்நாடகான்னு தொழில் பாக்குறாக.
நெறமாச கர்ப்பஸ்திரிகள அங்க கூட்டிட்டுப் போயிடுறாங்க. ஆணா பொறந்தா
அங்கருந்து உடனே தூக்கிட்டு வந்துருவாங்க. பொட்டப் புள்ளைனா நாலாம்
பேருக்கு தெரியாம கொன்டு பொதைச்சிட்டு ஒரு மாசம் கழிச்சு, எதுவுமே
நடக்காதது மாதிரி ஊருக்கு திரும்பிருவாக. ’என்னடி ஆச்சு?’ன்னு கேட்டா,
’’கொடி சுத்திப் பொறந்துச்சு. பெரிய உசுர காப்பாத்துறதே பெரும்பாடா
போச்சுல்ல, புள்ளைக்கி ‘ஆர்ட்’டுல (ஹார்ட்) ஓட்டையாம், குழந்தைக்கு
வளர்ச்சி இல்லை’ அப்படி இப்படின்னு ஏதாச்சும் காரணத்தச் சொல்லுவாக.
இப்பெல்லாம் காசுக்காக டாக்டருங்களே பொம்பளப் புள்ளைய கொல்லத் தயாரா
இருக்காங்க” என்கிறார்.
பெண் குழந்தைகளால் என்ன பிரச்சினை?
“அப்பெல்லாம் அஞ்சு பொட்டப் புள்ளைகளக் கூட பெத்து வளத்துக் கட்டிக்
குடுத்தாங்க. ஆனா இப்ப, பொம்பளப் புள்ளைய பெத்தாலே புருஷங்காரன் சண்டை
புடிக்கிறான். அந்தக் கொடுமைய தாங்க முடியாம புள்ளைக நாண்டுக்குதுக. சரி..
பொட்டப் புள்ளையா இருந்தாலும் பரவால்ல. ஆளாக்கிக் கட்டிக் குடுத்துருவோம்னு
படிக்க வைச்சா, எடப் போக்குல சாதிவிட்டுச் சாதி எவனையாச்சும் இழுத்துட்டு
ஓடிருதுக. இந்தக் கச்சடாவெல்லாம் வேண்டாமுன்டு தான் பொம்பளப் புள்ளைகன்டா
கழிச்சுக் கட்டிடுறாங்க’’ சிசுக்கொலைக்கு இப்படி நியாயம் கற்பிக்கிறார்
ஆனையூர் அங்கம்மாள்.
“ஆம்பளப் பய எப்புடியும் பொழைச்சுக் குவான். அவனுக்கு ஒரு கோவணத்தக்
கட்டிக்கூட வெரட்டிரலாம். பொட்டப் புள்ளைகள அப்படி வெரட்ட முடியுமா சாமி?
அதுகளுக்கு பொறந்ததுலேயிருந்து மையக்கரை வரைக்கும் சீர் செய்யணும். அந்தக்
காலத்துல நாங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவ தான் அரிசிச் சோத்தப் பாப்போம்.
இந்த லட்சணத்துல புருசன் அடிக்கிறான்னு பொட்டப்புள்ள கண்ணக் கசக்கிட்டு
வந்து நிக்கும். மூணுவாட்டி கூட தீத்து விட்டிருக்கோம். இதையெல்லாம்
சகிச்சுக்க முடியாமத்தான் கள்ளிப்பாலை ஊத்துனாங்க’’ என்கிறார் இதே ஊரைச்
சேர்ந்த கருத்தக்கண்ணன்.
“நாங்க தான் நெதானம் தெரியாம செஞ்சோம். இப்ப, காலம் பெரண்டுக்கிச்சுல்ல.
ஊசி, மருந்து, மாத்தரைன்னு வந்துருச்சுப்பு. ஆணு பொண்ணுன்னு பாத்து கலைச்
சுப்புடுறாங்கள்ல.. பொட்டப் புள்ளைகளப் பூரா கொன்னு போட்டுட்டு இப்ப
பொண்ணுக கெடைக்காம வெளி வெளியா பொண்ணு தேடி கெளம்புறாங்கே.” கருக்கலைப்பின்
அபாயகரமான தாக்கத்தை போகிற போக்கில் விதைக்கிறார் பி.முத்துப்பிள்ளை.
“இப்பத்தான் ஏன் கொல்றே?’ன்னு வர்றாங்க. அந்தக் காலத்துல இந்த வெசாரணை
எல்லாம் இல்லப்பு. பொட்டப்புள்ள பொறந்துருச்சா.. (தொடர்ந்து.. பெண்
சிசுவைக் கொல்வதற்கு கையாளும் முறையை அவர் சொன்ன விதத்தை விலாவாரியாகச்
சொல்ல முடி யாது என்பதால் தவிர்க்கிறோம்) மூணே நாழிகையில எல்லாம்
முடிஞ்சிரும். புள்ளைய பெத்தவ ரெண்டு மூணு நாளைக்கு அழுதி சிந்திக்கிட்டுக்
கெடப்பா. அந்தப் புள்ள வளந்து பெருசாகி வாக்கப்பட்டுப் போற எடத்துல
அடிப்பட்டு மிதிபட்டுச் சாகுறதுக்கு இது தேவலைன்னு அப்புறம் அவளே
தேத்திக்குவா’’ இது ஆனையூர் காசம்மாளின் வாதம்.
“அன்னைக்கி கிலோ கணக்குல நகை போட்டு புள் ளைகள கட்டிக் குடுத்தாங்க. இப்ப
வெலவாசி ஏறிப் போச்சு. இப்பப் போயி கனமா பொட்டப் புள்ளைகள பெத்துப் போட்டு
என்ன செய்ய..? இருக்குற வீட்டுப் புள்ளைகள பகுமானமா கட்டிக் குடுக்குறாங்க
இல்லாத வீட்டுப் புள்ளைக நின்டு போகுதே. அதனால தான் பொட்டப் புள்ளையே
வேணாம்னு சொல்லுது சனம்’’
கொக்குடையான்பட்டி காமாயியும் மின்னல் கொடியும்
இப்படிச் சொல்கிறார்கள். அதிர்ச்சி தரும் வார்த்தைகளை அனாசயமாக
கூறுகின்றனர். சிசுக்கொலைக்கான காரணத்தை இன்னும் சிலர் வேறு கோணத்தில்
கூறுகிறார்கள்.
thanks
http://tamil.thehindu.com/opinion/columns/
4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு
அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள்
- அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால்
அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
6:140. எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக்
கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை
அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள்
வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.
17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக்
கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை
வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும்
பிழையாகும்.