Thursday, February 23, 2012

என்னதான் இருக்கிறது நபிமொழியில்..?


                                                                 ஓரிறையின் நற்பெயரால்

"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு இருவர் மட்டும் தனியே ரகசியம் பேசாதீர்கள்..! " (1)

இப்படி தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமின்றி அத்தகைய செயல் அந்த மூன்றாம் நபருக்கு மனரீதியாக உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக அறிந்து இந்த செயலை தவீர்க்க சொன்னது யாரென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா...?

. . . 

  முஸ்லிமல்லாதவர்களுக்கு பெரும்பாலும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்ச முஸ்லிம்களுக்கே அதிலும் மார்க்க சூழலில் வளர்ந்த முஸ்லிம்களுக்கே இவை நபிமொழிகள் என அறிய வாய்ப்புகள் இருக்கிறது.

இதற்கு யார் காரணம்...? எது காரணம்..?

  தாடி வைப்பதும் , தொப்பி அணிவதும், வார நாட்களில் மற்றும் குறிப்பிட்ட தினங்களில் நோன்பு வைப்பதும், உபரியான தொழுகைகள் நிறைவேற்றுவதும் மட்டுமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழிமுறை (சுன்னத்) என பொதுவாக இச்சமூகத்தில் முஸ்லிம்களால் புரிய வைக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்களால் புரிந்துக்கொள்ளப் படுகிறது.

வெறும் ஆன்மிகத்தை மட்டுமே போதிக்க வந்தவர்களாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் இருந்தால் அவர்களை அல்லாஹ் குர்-ஆனில் அகிலத்தாருக்கு அழகிய முன்மாதிரி - என கூற வேண்டிய அவசியமில்லை. ஆக ஆன்மிகம் மட்டுமில்லாது., அரசியல் தொடங்கி அனைத்துத்துறைகளிலும் மக்களுக்கு உரித்தான பாடங்கள் அவர்கள் வாழ்க்கையிலிருந்து கிடைக்கபெற வேண்டும் என்பதைதான் மேற்கண்ட இறைவசனம் பறைச்சாற்றுகிறது.


  பொன்மொழிகள் எனபன மனித வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை அறிவுரீதியாகவும், அனுபவரீதியாகவும் விளக்கிக்கூறுவதே. ஒருவர் கூறும் பொன்மொழிகளை அவரது வாழ் நாள் முழுவதும் பின்பற்றி நடந்திருப்பார் என்பதற்கு எந்த வித ஆதாரமும் தெளிவாக இல்லை!

ஆனால் நபிமொழிகள் எனபன அப்படியல்ல., நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் செயல்படுத்தியது.  பிறரை செயல்படுத்த தூண்டியது மற்றும் செயல்படுத்தியதற்கு அங்கீகாரம் கொடுத்தது. இவை முழுவதும் தொகுக்கப்பட்டவையே நபிமொழிகள் என அழைக்கப்படுகிறது.


சரி அப்படி அவர்கள் எதைத்தான் சொன்னார்கள்...? 

கடை நிலை பாமரன் கூட நம் வாழ் நாளில் ஒன்றை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் அவர்கள் முன்மொழிந்த வார்த்தைகள் இருப்பது தான் கூடுதல் அழகு. ஆன்மிகத்தை அன்றாட வாழ்வியலோடு இணைத்த பெருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்றால் அது மிகையாகாது. மக்களின் அன்றாடச்செயல்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அதை தம் வழிமுறையாக்கினார்கள் - இறைவனிடத்தில் அவை நன்மை பயக்கும் என்றார்கள்.  ஒருவர் இயல்பாக அதை தொடர்ந்து செய்ய ஆர்வமூட்டினார்கள். அவர்களின் கூற்றில் சிலவற்றை பார்ப்போம்.

உனது மனைவிக்கு ஒரு வாய் உணவு கவளத்தை ஆசையோடு ஊட்டுவதற்கும் இறைவனிடத்தில் நன்மை உண்டு (2) என்றார்கள். அதுமட்டுமா...

ஒருமுறை தம் தோழர்கள் மத்தியில் உரையாடியபோது
"உங்கள் மனைவியோடு வீடுக்கூடுவதற்கும் இறைவனிடத்தில் வெகுமதி உண்டென்றார்கள் - (3)
அறிவு மிகுதிபெற்ற அண்ணலாரின் தோழர்களில் ஒருவர்
" நாயகமே! எங்களது இச்சைகளை தவிர்த்துக்கொள்வதற்காக செய்யும் இச்செயல் எப்படி இறைவனிடத்தில் வெகுமதி பெற்றுதரும் என்றார்.

  அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம், மனைவியோடு கூடாமல் மாற்றரோடு கூடினால் "விபச்சாரமென" அதற்கு இறைவனிடத்தில் தண்டனையுண்டல்லவா...? இறைவனுக்காக அதை தவிர்த்து ஆகுமானவற்றோடு வாழ்வதற்கே அந்த வெகுமதியென்றார்கள்.

 சர்வசாதரணமாக இல்லங்களில் நாம் செய்யும் சராசரி செயலுக்குக்கூட இறைவனிடத்தில் அங்கீகாரம் உண்டு என்று இல்லறவியலுக்கு புதுவிலக்கணம் வகுத்தார்கள்.

 சமூகத்தில் எல்லோரிடமும் நம்மால் நற்பெயர் பெற முடியும். அல்லது அஃது பெறுவதற்கு அவர்களுக்கு முன்னால் நம்மால் போலியாய் கூட நடிக்க முடியும். ஏன், நமது தாய்,  தந்தை,  சகோதரங்கள்,  மகன் என எல்லோரிடமும் அஃது நம்மால் நற்பெயர் எடுக்க முடியும்.

  ஆனால் உண்மையற்ற நிலையில் மனைவியிடத்தில் மட்டும் நற்பெயர் பெற முடியாது. ஏனெனில் இந்த உலகத்தார் அனைவரிலும் நம் அந்தரங்கங்களை அதிகம் அறிந்தவள் நம் மனைவி மட்டுமே. ஆக அவளை போலியாக நடித்து ஏமாற்றுவது என்பது எல்லா காலத்திலும் சாத்தியமில்லை. ஆதலால் தான்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
"மனைவியரிடத்தில் சிறந்தவரே மக்களில் சிறந்தவர்..!"-  (4) என்றார்கள்.
 மக்களில் சிறந்தவர் என்ற பெயரோடு நாளை இறைவனிடத்தில் செல்வதற்கு இன்று மனைவியிடத்தில் உண்மையாக நடந்துக்கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகிறது.

"உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பதும் ஓர் நற்செயலாகும்." (5)
பெரும்பாலான குடும்ப பிரச்சனைகளுக்கு மையக்காரணம் சரியான உபசரிப்பிமின்மையே... குறைந்த பட்சம் வாங்க!.. என்று சொல்வதில் கூட ஏற்ற இறக்க உச்சரிப்புதான்!

இவை கூடாதென்று சொல்லி அதை தவிர்க்க சொல்வதோடு உரிய முறையில் அவர்களை நோக்குவதே... இறைவனிடத்தில் நன்மையை பெற்று தரும் செயல்களில் ஒன்றாக மாற்றினார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள்.

இப்படி குடும்பவியல் செயல்களை இறை நேசத்திற்கு உரித்தான செயலாக மாற்றமடைய வழிச்சொன்ன நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் பொருளியலிலும் சமூக மத்தியிலும் அதே நிலையே தான் கையாண்டார்கள்.

வட்டியே தடை செய்து வியாபாரத்தை ஊக்குவித்த நபிகள்
ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது(6) என்று ஒருவர் தம் சொந்த கால்களில் நிற்பதற்கு தன்னார்வத்தை ஏற்படுத்தினார்கள். மேலும் தேவை ஏற்படும் நிமித்தமாக பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்வதையும் சபித்தார்கள்.

அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க நான் மட்டும் வயிறார உண்பவன் உண்மை இறை விசுவாசியல்ல!(7) என்று ஏனையவர்களின் மீதும் நமக்குள்ள கடமையே சுட்டிக்காட்டினார்கள். அதை செயல்படுத்தியும் காட்டினார்கள்.

இறைவழியில் உயிரை தியாகம் செய்தவராக இருந்தாலும் அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால் அவர் பெற்ற கடனை தவிர(8)என கொடுக்கபட்ட கடனும், கொடுத்தவரின் நிலையும் இறைவனிடத்தில் எவ்வளவு மதிப்புடையது என்பதை தெளிவுறுத்தினார்கள்.

மக்கள் நடக்கும் நடைபாதைகளில் குறுக்கே அமர்ந்து அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதையும், நிலக்குறிகள் மற்றும் நீர் நிலைகளுக்கு சேதம் ஏற்படுத்துவதையும் தடை செய்த (9) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவை இறைவனின் கோபத்திற்கு ஆளாக்கும் இழிசெயல் என்றும் எடுத்துரைத்தார்கள்.

அனாதைகளின் பொருட்களை அபகரிப்பது நெருப்பை விழுங்குவதற்கு சமமானது (10) என அநியாய செயலை விளக்கி அஃது செயல்படுவோர் அதே நிலையில் இறைவன் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்கள்.
மேலும் அனாதைகளை பற்றிக்கூறும் போது, "அவர்களை நல்ல முறையில் பராமரிப்பவர்களும் நானும் மறுமையில் இப்படி (நெருக்கமாக) இருப்போம் என தனது ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் ஒன்றிணைத்து காட்டினார்கள். (11)

 பாதிக்கப்பட்டவன் மன்னிக்காதவரை என்ன தான் மிகப்பெரிய வணக்கசாலியாக இருந்தாலும் அவனை இறைவன் மன்னிப்பதில்லை.  (12) என்ற நபிமொழியில் தனிமனித உரிமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை உணரலாம்!

இன்னும் பார்த்தால்....  தெருக்களில் கிடக்கும் சிறு முள்ளை அகற்றுவதையும் ஈமான் எனும் உயர் இறையச்சத்தோடு உள்ளடக்கிய ஒரு பகுதியாக (13) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் கூறுவதிலிருந்தே தனி மனித மற்றும் சமூகத்திற்கு பயன்படும் அனைத்துமே அவர்களது கூற்றில் அடங்கிருப்பதை சிந்தனை ரீதியாக உணரும் எவருக்கும் நிரூபணம்!

  சில உதாரணங்கள் தான் இவை. இன்னும் அனேக நபிமொழிகள் இருக்கின்றன, ஆனால் அவை இந்த மனித மத்தியில் தெளிவாக வழிமொழியப்படாமல், பொன்மொழிகள் என்ற அளவிலே வைத்து பார்க்கப்படுவதால் நாம் நடைமுறைப்படுத்தும் அண்ணலாரின் வழிமுறைகள் இன்று சமூகத்தின் கவனத்திற்கு வருவதில்லை.

மேற்சொன்ன செயல்கள் மட்டுமல்ல. நாம் புது ஆடை அணிவதிலிருந்து, மரணித்தப்பின் நமக்கு வெள்ளாடை தரிக்கும் வரையிலான நிகழ்வுகளின் வழிக்காட்டுதல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வாழ்வியலிருந்தே பெறப்படுதல் சாத்தியம் என்பதை இச்சமூகத்திற்கு உணர்த்த வேண்டும். அது எல்லோராலும் எளிதாகவும் பேணப்படவும் முடியும் என்பதையும் தெளிவுறுத்த வேண்டும்.

 நபிகளாரின் செய்கைகளை நினைவூட்டுவதற்காக வருடத்திற்கு ஒரு முறை அவர்கள் மீது புகழ்பாக்களாக படிப்பதால் அதை உணர்த்த முடியாது! அதற்கு அவர்களின் வழிமுறைகளில் ஒவ்வொன்றையும் முடிந்த அளவிற்கு பின்பற்றி வாழ்வதே பொருத்தமானது! 

ஏனெனில் நாம் இச் சமூகத்தில் செய்யும் ஒவ்வொரு நற்கருமங்களும் அவர்களின் வாழ்வியல் வழிமுறை என்பதை விளக்க வேண்டும் அப்போது அவர்கள் மீது நாம் கொண்ட நேசத்தை உண்மைப்படுத்துவதாக பொருள். மாறாக அவர்களை மிகைப்படுத்தி புகழ்வதில் இல்லை.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்:
 முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான தலைவர் என்ற மாயை எண்ணத்தை அகற்றுங்கள். ஏனெனில் அதற்காக மட்டும் தான் அவர்களின் வருகை இருந்திருந்தால் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற மார்க்க கடமைகளை விவரிப்பதோடு அவர்களின் பணி முடிவுற்று இருக்கும்.

ஆனால் அவர்களின் இறுதி பேரூரையில்
"பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.....

இப்படி -வர்த்தக ரீதியாக பிரிக்கப்பட்டிருக்கும் மக்களின் எதார்த்த வாழ்வை மையப்படுத்தி கூறினார்கள். அரேபியர்களுக்கோ ஒரு இனத்திற்கோ தனிப்பட்ட முறையில் அவர்களின் வரவு அமைந்திருந்தால் இப்படி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. யாராக இருப்பினும் இறைவன் முன் அனைவரும் சமம் என்றே பிரகடனம் படுத்தினார்கள். ஆக குர்-ஆன் எப்படி மானிட சமூகத்திற்கு பொதுவான நூலோ அதுப்போலவே நபிகளும் இந்த மனித சமுதாய முழுமைக்குமான தலைவர்!

                                                        அல்லாஹ் நன்கு அறிந்தவன் .


நீல நிறத்தில் இருப்பவைகள் அனைத்தும் சஹீஹான ஹதிஸ்களே. எளிதாக புரிந்துக்கொள்வதற்காக இயல்பு தமிழில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


ஹதிஸ் விபரம்:
01.அறிவிப்பவர் :  இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி
02. அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56
03.
04. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : திர்மிதி எண்: 1082
05. அறிவிப்பாளர்கள்: அபூதர் (ரலி)  நூல் : திர்மிதி 2022, 2037)
06.  நூல் :  புஹாரி,எண் 2072 
07. அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : மிஷ்காத் 
08. அறிவிப்பாளர்: சலமா பின் அக்வஃ (ரலி) நூல் புகாரி: 2289
09. அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).  நூல் :   புஹாரி.
10.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (2766) முஸ்லிம்.
11. அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம், திர்மிதி (1983)
12. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 2448
13.






No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!