காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.
தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து... இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்... சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?
அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?
அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?
அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?
ஆய்வின் முடிவு
இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:
ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காம்ம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.
இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!
இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?
அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே!அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!
இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் ஈனத்தனமில்லையா இது?
அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.
எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?
கலாசாரச் சீரழிவு
கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?
பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.
திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள்.
(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)
இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களே! கையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களே! உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?
எழுதிவிட்டேன் பலதடவை
முஸ்லிம் இளைஞர்களும் இளம்பெண்களும் தமிழ்நாட்டில் காதலின் பெயரால் அழிந்துகொண்டிருப்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் நானும் பலமுறை எழுதிவிட்டேன். கடந்த 2011 ஜூலை 13ல் வெளியான தமிழக அரசின் கெஜட்டில் உள்ளபடி மதம் மாறிய 106 பேரில் 9 பேர் முஸ்லிம்கள் என்ற உண்மையை வெளியுலகுக்குக் கொண்டுவந்து, சமுதாய ஏடுகள் அனைத்திற்கும் கட்டுரை அனுப்பினேன். பெரும்பாலான இதழ்களில் வெளிவந்தது.
நமது வலைத்தளத்திலும் வெளியிட்டோம். பல அன்பர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவும் செய்தார்கள். தமிழகத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் இக்கொடுமையைத் தடுத்துநிறுத்த ஜமாஅத் நிர்வாகிகளும் உலமாக்களும் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டங்களும் நடந்தன.
ஆனாலும், வேகம் போதாது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய ஒரு ஆபத்துக்கு, நத்தை வேகத்திலான முயற்சிகள் எப்படி ஈடு கொடுக்கும்? மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.
அண்மையில் சில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும்‘அவ்வண்ணமே கோரும்’ இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
மறுமை நாளின் அடையாளம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)
அண்மையில் ஒரு செய்தி படித்தேன்: காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.
அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.
“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)
நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.
கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது;இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243). பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?
தீக்குண்டத்தில் நிர்வாணமாக
நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:
அடுப்பு போன்ற ஒரு பொந்து. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்த்து. அதற்குக் கீழ் தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாகயிருந்ததால் வெளியேற முடியவில்லை.)
தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், “இவர்கள் யார்?” என்று கேட்டேன். வானவர்கள், “இவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ – 1386)
அழகான பெண்கள் வசிக்கும் பகுதியில் வடநாட்டுக் கும்பல் கடைகளைத் திறப்பார்கள். அடகு கடை, நகைக் கடை, துணிக்கடை போன்ற வணிகத் தலங்களைத் திறந்து, மறைமுகமாக விபசாரத் தொழிலையும் மேற்கொள்கிறார்கள். நகை வாங்க வரும் பெண்களுக்கு வலியச்சென்று உதவுவதுபோல் உதவி செய்து வலையில் சிக்கவைத்து, இனி திரும்ப நினைத்தாலும் திரும்ப முடியாத நெருக்கடியில் தள்ளிவிடுவார்கள்.
புதுவகை நகைகள்மீதும் துணிகள்மீதும் பெண்களுக்கு இருக்கிற மோகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள். மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். வெளியே சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு.
இவர்களுக்கு வகைவகையான புரோக்கர்கள்; சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என எல்லாரும் துணை; கூட்டணி. இந்தப் பாவத்திற்குத் துணைபோகின்றவர்களிலும் முன்னின்று ஏற்பாடு செய்கின்றவர்களிலும் கலிமா சொன்ன முக்கியப் புள்ளிகளும் இருப்பதுதான் வன்கொடுமை.
இது ஒரு பெரிய நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. திருமண வீடியோ, பள்ளி நிகழ்ச்சிகள் வீடியோதான் பெண்களுக்கு வலைவீச இவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இவ்வாறு சிக்கும் அழகான இளம்பெண்களை மாநிலம் தாண்டி விபசாரத்திற்கு அனுப்பிவைப்பதுடன், பாலியல் படங்கள் எடுக்கவும் போதைப் பொருள் கடத்தவும் இக்கயவர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆக, பெண்கள் மார்க்கத்திற்கு வெளியே; ஆண்கள் விரக்தியின் விளிம்பில். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எப்படி என்பதுதான் தெரியவில்லை. யோசித்து யோசித்து தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.
இது பரசிக்கொண்டுவரும் பேராபத்து. அங்குதான்; இங்கு இல்லை என்றெல்லாம் பிரித்துப்பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும். தனிமையில் அழுது புலம்புவதில் புண்ணியமில்லை. எப்பாடுபட்டேனும் இந்தச் சமூக்க் கொடுமையை, பெண்ணினத் தீமையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்!
பிப்ரவரி 14ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்றொரு கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ எல்லா நாடுகளும் சட்ட அனுமதி அளிக்கின்றன. இத்தகைய நரகச் சூழலில்தான் பண்பாடு மிக்க முஸ்லிம்களும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம்தான் நம் வீட்டுப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்திட வேண்டும்.
நம் வீட்டு ஆடுகள் வேலியைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்ட இன்றையச் சூழலில் வேலியே இல்லாவிட்டால் என்னவாகும் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.