இந்த ஆண்டு 10 வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள், இச்சகோதரிக்கு ஊக்கம் அளித்த பெற்றோருக்கும், பள்ளி ஆசிரியர்களும் நம்முடைய பாராட்டுக்கள். சகோதரி ஜாஸ்மினுடைய சாதனை நம்மை மிக ஆழமாக சிந்திக்க வைக்கிறது, நம் பிள்ளைகளாலும் எந்த சாதனையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளார் சகோதரி ஜாஸ்மின். ஹிஜாபுடன் அச்சகோதரியின் புகைப்படத்தை பார்க்கும் போது உண்மையில் எல்லையற்ற மகிழ்ச்சி. என்னால் நம்ப முடியவில்லை இது நிஜம் தானா என்று. ஹிஜாபையும், பர்தாவை கேவலப்படுத்தி வரும் மேல் நாட்டு கலாச்சாரவதிகளின் முகத்தில் கரி பூசி இருக்கிறார் சகோதரி ஜாஸ்மின். எல்லாம் அல்லாஹ்வின் செயல், அவன் நாடினால் எந்த வெற்றியை நம் சமுதாயத்தால் படைக்க முடியும். அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ….
நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சகோதரி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சகோதரி ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான். மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். எவ்வளவு எழிமையான குடும்பம்.
சகோதரி ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார். மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த சகோதரி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார். சகோதரி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார்.
பணம் இருந்தால்தான் படிக்க முடியும், தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது. அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி சகோதரி ஜாஸ்மின். படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று சகோதரி ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.
இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் சகோதரி ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு சகோதரி ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தனது மகளின் சாதனைப் பற்றி சகோதரி ஜாஸ்மினின் தகப்பனார் ஜனாப் ஷேக்தாவூத் கூறியதாவது: எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.
தனது வெற்றி பற்றி சகோதரி ஜாஸ்மின் கூறியதாவது:- மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை. பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை அல்லாஹ்வின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.
10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.
எங்கே செல்கிறது நம் பாதை? என்று பல வசதி வாய்ப்புகள் உள்ள நம்மூர் மாணவர்களும் பெற்றோர்களும் சுயபரிசோதனை செய்து சிந்திக்க வேண்டாமா?
ஊர் ஊராக ஜவுளி வியாபரம் செய்து வரும் சேக் தாவுத் அவர்கள் தன் பிள்ளைக்கள் சமுதாயத்தில் நல்ல நிலையில் வரவேண்டும் என்று பல கஷ்டங்களையும் தாங்கி படிக்க வைத்து தன் பெண்ணை சாதனை படைக்க வைத்திருக்கிறாறே ஏன் நம்மாலும் நம் பிள்ளைகளை சாதனை படைக்க வைக்க முடியாதா என்ன?
பணம் இருந்தால் தான் நல்ல தனியார் பள்ளியில் படிக்க முடியும், அதிக மதிப்பெண்கள் முதல் மதிப்பெண் எடுக்க முடியும் என்ற எட்டாக்கனியை மாநகராட்சி பள்ளியில் படித்து சகோதரி ஜாஸ்மின் எட்டிப்பிடித்துள்ளார். எல்லாவசதிகளும் இருக்கும் நம் பிள்ளைகளால் அக்கனியை ஏன் எட்டிப்பிடிக்க முடியாதா என்ன?
வசதி வாய்ப்புகளும் தொழில்நுட்பங்களும் குறைவாக உள்ள அரசு மாநகராட்சிப் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை படைக்க வைத்திருக்கிறது, இப்பள்ளியை விட சில வசதி வாய்ப்புகள் உள்ள நம்மூர் பள்ளிகளால் ஏன் நம் மாணவர்களை சாதனை படைக்க வைக்க முடியாதா என்ன?
10 ம் வகுப்பு படிக்க ஆரம்பித்திலுருந்து தொலைகாட்சி பார்பதில்லை, IAS படித்து இச்சமுதாயத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்று லட்சியக் கணவுடன் கூறியிருக்கிறார் சகோதரி ஜாஸ்மின், சிறு வயதிலிருந்து குறிக்கோள் மற்றும் லட்சியத்தையும் மனதில் நிறுத்தி நம் பிள்ளைகளை இவ்வுலகில் பல சாதனைகள் செய்ய வைக்க முடியாதா என்ன?
சகோதரி ஜாஸ்மின் பத்திரிக்கைகளுக்கு அளித்து வரும் செய்திகளை (குறிப்பாக அதிகம் டிவீ பார்ப்பதில்லை என்ற செய்தியை) நம் பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டுங்கள், வீட்டில் உள்ள தாய்மார்களுக்கும் எடுத்துக்காட்டுங்கள், பிள்ளைகளை நல்ல மேல் படிப்பு படிக்க வையுங்கள் குறிப்பாக நம் பெண் மக்களை.
நம் சமுதாயப் பிள்ளைகள் படிப்பில் சாதனைப்படைக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதை இவ்வாண்டு 12 ம் & 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இவ்வுலக்கு எடுத்துக்காட்டுகிறது. சகோதரி ஜாஸ்மினை ஒரு ரோல் மடலாக வைத்து நம் பிள்ளைகளை கடின முயற்சி செய்து சமுதாயத்தில் நல்ல நிலைக்கு அவர்களை வரவைத்து, நம் சமுதாயத்திற்கும், நம் நாட்டிற்கும் சேவை செய்து சாதனைப் படைக்க ஒரு நல்ல பாதை அமைக்க நாம் அனைவரும் சபதம் எடுப்போம்.
10 வகுப்பில் வெற்றி பெற்ற அனைத்து சகோதரி, சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும், துஆக்களும்.
மீண்டும் ஒரு நல்ல தலைப்பில் சந்திக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை தாஜூதீன்
நடுநிலை செய்திகள் - இணைப்பீர்
ReplyDeletehttp://adiraiekspress.blogspot.com/