Wednesday, May 26, 2010

என்னால் முடிந்தது, ஏன் உங்களால் முடியாதா?

இந்த ஆண்டு 10 வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள், இச்சகோதரிக்கு ஊக்கம் அளித்த பெற்றோருக்கும், பள்ளி ஆசிரியர்களும் நம்முடைய பாராட்டுக்கள். சகோதரி ஜாஸ்மினுடைய சாதனை நம்மை மிக ஆழமாக சிந்திக்க வைக்கிறது, நம் பிள்ளைகளாலும் எந்த சாதனையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தந்துள்ளார் சகோதரி ஜாஸ்மின். ஹிஜாபுடன் அச்சகோதரியின் புகைப்படத்தை பார்க்கும் போது உண்மையில் எல்லையற்ற மகிழ்ச்சி. என்னால் நம்ப முடியவில்லை இது நிஜம் தானா என்று. ஹிஜாபையும், பர்தாவை கேவலப்படுத்தி வரும் மேல் நாட்டு கலாச்சாரவதிகளின் முகத்தில் கரி பூசி இருக்கிறார் சகோதரி ஜாஸ்மின். எல்லாம் அல்லாஹ்வின் செயல், அவன் நாடினால் எந்த வெற்றியை நம் சமுதாயத்தால் படைக்க முடியும். அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ….

நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சகோதரி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சகோதரி ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான். மாணவி சகோதரி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். எவ்வளவு எழிமையான குடும்பம்.

சகோதரி ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார். மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த சகோதரி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார். சகோதரி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார்.

பணம் இருந்தால்தான் படிக்க முடியும், தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது. அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி சகோதரி ஜாஸ்மின். படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று சகோதரி ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.

இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் சகோதரி ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு சகோதரி ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனது மகளின் சாதனைப் பற்றி சகோதரி ஜாஸ்மினின் தகப்பனார் ஜனாப் ஷேக்தாவூத் கூறியதாவது: எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.

தனது வெற்றி பற்றி சகோதரி ஜாஸ்மின் கூறியதாவது:- மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை. பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை அல்லாஹ்வின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.

10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.


எங்கே செல்கிறது நம் பாதை? என்று பல வசதி வாய்ப்புகள் உள்ள நம்மூர் மாணவர்களும் பெற்றோர்களும் சுயபரிசோதனை செய்து சிந்திக்க வேண்டாமா?

ஊர் ஊராக ஜவுளி வியாபரம் செய்து வரும் சேக் தாவுத் அவர்கள் தன் பிள்ளைக்கள் சமுதாயத்தில் நல்ல நிலையில் வரவேண்டும் என்று பல கஷ்டங்களையும் தாங்கி படிக்க வைத்து தன் பெண்ணை சாதனை படைக்க வைத்திருக்கிறாறே ஏன் நம்மாலும் நம் பிள்ளைகளை சாதனை படைக்க வைக்க முடியாதா என்ன?

பணம் இருந்தால் தான் நல்ல தனியார் பள்ளியில் படிக்க முடியும், அதிக மதிப்பெண்கள் முதல் மதிப்பெண் எடுக்க முடியும் என்ற எட்டாக்கனியை மாநகராட்சி பள்ளியில் படித்து சகோதரி ஜாஸ்மின் எட்டிப்பிடித்துள்ளார். எல்லாவசதிகளும் இருக்கும் நம் பிள்ளைகளால் அக்கனியை ஏன் எட்டிப்பிடிக்க முடியாதா என்ன?

வசதி வாய்ப்புகளும் தொழில்நுட்பங்களும் குறைவாக உள்ள அரசு மாநகராட்சிப் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை படைக்க வைத்திருக்கிறது, இப்பள்ளியை விட சில வசதி வாய்ப்புகள் உள்ள நம்மூர் பள்ளிகளால் ஏன் நம் மாணவர்களை சாதனை படைக்க வைக்க முடியாதா என்ன?

10 ம் வகுப்பு படிக்க ஆரம்பித்திலுருந்து தொலைகாட்சி பார்பதில்லை, IAS படித்து இச்சமுதாயத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்று லட்சியக் கணவுடன் கூறியிருக்கிறார் சகோதரி ஜாஸ்மின், சிறு வயதிலிருந்து குறிக்கோள் மற்றும் லட்சியத்தையும் மனதில் நிறுத்தி நம் பிள்ளைகளை இவ்வுலகில் பல சாதனைகள் செய்ய வைக்க முடியாதா என்ன?

சகோதரி ஜாஸ்மின் பத்திரிக்கைகளுக்கு அளித்து வரும் செய்திகளை (குறிப்பாக அதிகம் டிவீ பார்ப்பதில்லை என்ற செய்தியை) நம் பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டுங்கள், வீட்டில் உள்ள தாய்மார்களுக்கும் எடுத்துக்காட்டுங்கள், பிள்ளைகளை நல்ல மேல் படிப்பு படிக்க வையுங்கள் குறிப்பாக நம் பெண் மக்களை.

நம் சமுதாயப் பிள்ளைகள் படிப்பில் சாதனைப்படைக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதை இவ்வாண்டு 12 ம் & 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இவ்வுலக்கு எடுத்துக்காட்டுகிறது. சகோதரி ஜாஸ்மினை ஒரு ரோல் மடலாக வைத்து நம் பிள்ளைகளை கடின முயற்சி செய்து சமுதாயத்தில் நல்ல நிலைக்கு அவர்களை வரவைத்து, நம் சமுதாயத்திற்கும், நம் நாட்டிற்கும் சேவை செய்து சாதனைப் படைக்க ஒரு நல்ல பாதை அமைக்க நாம் அனைவரும் சபதம் எடுப்போம்.

10 வகுப்பில் வெற்றி பெற்ற அனைத்து சகோதரி, சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும், துஆக்களும்.

மீண்டும் ஒரு நல்ல தலைப்பில் சந்திக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரை தாஜூதீன்



Monday, May 24, 2010

படி அல்லது மடி

'எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.' (அல் குர்ஆன் : 13:11)
தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் கல்விக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள மார்க்கப் பிடிப்பையும் சமூகப் பற்றையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் ஒரு சில அறக்கட்டளைகள் மட்டுமே இந்த அறப்பணியைச் செய்து வந்தன ஆனால் இன்று தனிப்பட்ட முறையிலும் கூட தங்களால் இயன்ற அளவு படிக்கின்ற மாணவர்களின் நிலையை அறிந்து மனமுவந்து பலர் உதவி வருகின்றனர். இதன்மூலம் படித்து பட்டம் பெறும் முஸ்லிம் மாணவ மாணவியரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பெறுகி வருகிறது என்பதில் மாற்றமில்லை.

'கல்வி கற்றவராக இருங்கள்; கற்றுக் கொடுப்பவராக இருங்கள் கற்பவர்களுக்கும் கற்றுக கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவராக இருங்கள் என்று பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் வசதி வாய்ப்பைப் பெற்றவர்கள் செய்கின்ற இந்த அர்ப்பணிப்பு நிச்சயமாக சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதில் ஐயமில்லை.

இந்த அறப்பணியை மேலும் ஊக்கப்படுத்திடவும் உதவி செய்திடும் நல்ல உள்ளங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் யாரெல்லாம் கல்வி நிதியுதவி அளித்து முஸ்லிம் சமுதாயத்தின் வறுமையை ஒழித்திட சேவை செய்து வருகின்றனரோ அந்த முஃமீன்களோடு சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

பொதுவாக கல்வி நிதியுதவி கோரி வரும் விண்ணப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஓரளவிற்கு தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவை தாங்களே பூர்த்தி செய்திட முடியும் என்ற நிலையில் உள்ளவர்களும் கூட உதவி கோரி அறக்கட்டளைகளுக்கு விண்ணப்பிப்பது சற்று கவலை அளிக்கிறது.

மேலும் அனைத்து நிறுவனங்களுக்கும் விண்ணப்பித்து அதன்மூலம் கிடைக்கின்றவரை லாபம் என்ற எண்ணம் உடையவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

எங்கே முஸ்லிம் சமூகத்தின் ஒரு சிலர் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து வசதியுடையவர்களின் அர்ப்பணிப்பு எண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

முஸ்லிம்கள் சிலரின் அறியாமையால் பெருகி வரும் இதுபோன்ற சிறிய சிறிய இடையூறுகளைத் தவிர்த்து இந்தக் கல்விச சேவை வெற்றியடைந்திடவும் அதன் மூலம் முஸ்லிம் சமூகம் முழுமையான பலனைப் பெறவும் கல்வி உதவி செய்யக்கூடியவர்கள் தயவு கூர்ந்து கீழ்வரும் வழிமுறைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அறப்பணிகளை மேலும் மேலும் தொடர்ந்திடவேண்டுகிறோம்.

1. அறக்கட்டளைகள் மற்றும் தனவந்தர்கள் தாங்கள் அளிக்கின்ற கல்வி நிதியுதவி மூலம் பயன்பெறும் மாணவ, மாணவியர்களும் பிற்காலத்தில் இந்தச் சமூகப் பணியில் இணைத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கான வழிகாட்டுதல் மிகவும் அவசியம். அப்போதுதான் உதவியவர்களின் நோக்கமும் சமுதாயத்தின் தேவையும் தொடர்ந்து பூர்த்தியாகும்.

2. இன்றைய இந்தியச் சமூகத்தில் முஸ்லிம் சமுதாயம் பெரிதும் சிக்கலைச் சந்திக்கும் துறைகளுக்கான படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவ, மாணவியர்கே நிதியுதவியில் முன்னுரிமை கொடுப்பது நல்லது. இது சமூகத்தின் பாதுகாப்பு நிலையை பெரிதும் உயர்த்தும். அந்த வகையில் அரசுப் பணியை நோக்கிய கல்விப் பயணத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். அதிலும் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், உளவுத்துறை, காவல்துறை மற்றும் இதழியல்(ஜர்னலிசம்), சட்டம் ஆகிய துறை சார்ந்த படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி உதவி செய்திட வேண்டும். இவற்றிற்கு முழு முன்னுரிமை கொடுப்பது அடுத்த தலைமுறையின் சமூகப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.

3. உதவி செய்துவரும் பெருமக்கள் மிகக் குறிப்பாகச் செய்ய வேண்டியது ஒரு மாணவனின் அல்லது மாணவியின் கல்வித் தொகை முழுவதற்கும் பொறுப்பேற்று படிப்பு முழுமை பெறும் வரை நிதியுதவி செலுத்திட வேண்டுகிறோம். இருக்கின்ற பணத்தை குறுகிய தொகையாகப் பிரித்துப் பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தேவை முழுமையாக பூரத்தியாகாமல் இன்னும் யாரெல்லாம் உதவி செய்திகிறார்கள் அவர்களிடமும் பெற வேண்டும் என்கிற மோசமான பழக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்திவிடும், ஏற்படுத்தி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

4. பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவ, மாணவியற்க்குத்தான உதவிகள் அதிகம் தேவைப்படுகிறது. இயற்பியலில், வேதியியலில், கணிதத்தில், வேளாண்மையில், மருத்துவம், விண்வெளி போன்ற படிப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு ஆய்வுகள் முடிவுபெறும் வரை உதவிட வேண்டுகிறோம். அத்தகைய ஆய்வுகள் மனிதகுலத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும். பல புதிய விஞ்ஞானிகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.

5. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கல்வியின் அவசியத்தையும் ஆர்வத்தையும் எடுத்துச் சொல்லும் பிரச்சாரத்திற்கு (propogation)நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். துண்டுப்பிரசுரங்கள், கருத்தரங்கஙகள், பொதுக்கூட்டங்கள் என்று கல்விப் பணிகள் முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

ஆக சமுதாயத்தின் தேவையை பூர்த்தி செய்யும் துறைகளுக்கு முழு முன்னுரிமை கொடுப்பது படிக்கின்ற காலம் முழுமைக்கும் கொடுப்பது; ஆய்வுகளை ஊக்கப்படுத்துவது; தொடர் பிரச்சாரம் செய்வது. இதன்படி நமது அறப்பணிகளை அமைத்துக் கொண்டு கைகோர்த்துச் செயல்படுவோம் என்றால இன்ஷா அல்லாஹ் ஒரு மாபெரும் சமூகப்புரட்சி நமது சமூகத்தில் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. அவை முஸ்லிம் சமூகத்தை முன்னேறிய சமூகமாக வெகு விரைவில் மாற்றிவிடும் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம் நன்றி: CMN சலீம்

கல்விதொடர்பான ஆலோசனைகளுக்கு :தொலைபேசி எண் 91 9382155780.

Sunday, May 23, 2010

இலங்கை செல்கிறார் நாயக்

சர்வதேச  இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஸாகீர் நாயிக் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜம் இய்யதுஷ் ஷபாபின் ஏற்பாட்டில் கொழும்பு சுகதாச வெளியரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள மார்க்க சொற்பொழிவில் இவர் உரையாற்றவுள்ளார்.  

மத ஒப்பீட்டுத்துறை ஆய்வுத்துறை நிபுணரான  டாக்டர் ஸாகீர் நாயிக் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

கடந்த வருடம் இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 2009ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 100 இந்தியர்கள் என்ற பட்டியலில் 82ஆவது இடத்தை இவர் பெற்றிருக்கிறார்.


இதேபோன்று, இந்தியாவின் தலைசிறந்த 10 மார்க்க அறிஞர்களின் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்திலுள்ளார்
.


அவருடைய இணைய தள முகவரி 

http://irf.net/




Tuesday, May 18, 2010

"இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்".....

சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் "How the Bible Led me to Islam" என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.            


"நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள் குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).

நான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.

அப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும், என் நெருங்கிய நண்பருக்கு பதினேழு வயதிருக்கும். அவர் பாரம்பரியமிக்க பாப் ஜோன்ஸ் பல்கலைகழகத்தில் (Bob Jones University) புத்தக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அப்படியென்றால், ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது, யார் எழுதினார்கள் என்பது போன்ற விஷயங்களை ஆராய்வது. 

ஒருமுறை அந்த நண்பர் கேட்டார்,

"நீ பைளிளை படித்திருக்கிறாயா"

எனக்கு ஆச்சர்யம், "அதைத் தானே நாம் சர்ச்களில் செய்து கொண்டிருக்கிறோம்"

"இல்லை இல்லை நான் கேட்பது, நீ பைபிளை முழுவதுமாக படித்திருக்கிறாயா, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை"  

நாங்கள் பைபிளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்கள். முழுவதுமாக படித்தவர்கள் என்று எனக்கு தெரிந்து யாரும் கிடையாது.  புரிந்தது, அதைத்தான் அவர் கேட்கிறார்.

அவர் தொடர்ந்தார், "பைபிள் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய நாம் அதை ஏன் முழுமையாக படிக்க முயலவில்லை"

அவருடைய கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. ஆம் அவர் கேட்பது நியாயம்தான்.  


பிறகு அவர் கூறினார், "நாம் ஏன் பைபிளை முழுமையாக படிக்கத் துவங்கக்கூடாது?"
சரி, முழுவதுமாக படித்து விடுவோம் என்று "Genesis" (The first book of Old Testament) இல் இருந்து துவங்கினேன்.

அதிர்ச்சிகள் பல காத்திருந்தன...

ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சிகள். நான் என் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருந்த நபிமார்களா இவர்கள்?

உதாரணத்துக்கு, பைபிள், நூஹ் (அலை) அவர்கள் குடிகாரராக இருந்ததாக குறிப்பிடுகிறது. லூத் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்களையோ............ .....
(மிகவும் சென்சிடிவ் தகவல்கள் என்பதால் தவிர்க்கப்படுகிறது).

இந்த நபிமார்களின் நல்ல தன்மைகளையே பாதிரியார்கள் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போய் படித்துப் பார்த்தால் என்னென்னவோ இருக்கிறது.

  • நபிமார்கள் இறைவனின் நற்செய்தியை கொண்டு வந்தவர்கள் அல்லவா? 
  • அவர்கள் தானே நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்? 
  • அவர்களைத்தானே நாம் வாழ்விற்கு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்? 

ஆனால் இங்கே அவர்களே பெரும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்களே...இதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி இவர்களை பார்த்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்?

புரியவில்லை. மிகுந்த அதிர்ச்சி. Old Testament முழுவதும் இப்படி பல முரண்பாடுகள். என் பாஸ்டரிடம் சென்று கேட்டேன். அதே பதில், program செய்யப்பட்ட பதில். எல்லா பாஸ்டர்களும் சொல்லுவார்களே,

"இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம், கடவுளை உள்ளூர உணர வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது"...

அதையேத்தான் அவரும் கூறினார். "சரி, நீ New Testament படி, அதுதான் ஜீசஸ் (அலை) பற்றி பேசுகிறது".

சரியென்று "New Testament" டை படிக்க ஆரம்பித்தேன்.

இங்கே துவக்கத்திலேயே குழப்பம். ஏனென்றால், Mathew, Mark, Luke and John என்று இவற்றை எழுதியவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. இப்போது மேலும் குழப்பம்.

ஈசா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர், கடவுளின் மகன் என்றெல்லாம் சர்ச்களில் படித்திருக்கிறோமே, இங்கே "New Testament"ல், ஈசா(அலை) அப்படியெல்லாம் கூறவில்லையே? அதுமட்டுமல்லாமல் old Testament முழுவதும் ஒரே கடவுள், ஒரே கடவுள் என்றுதானே இருக்கிறது. இது இன்னும் முரண்பாடாக அல்லவா இருக்கிறது. இப்போது மேலும் மேலும் குழப்பம்...

என்ன செய்வது? மறுபடியும் பாஸ்டரிடம். இந்த முறையும் அதே பதில்.

"இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம், நம்ப வேண்டும்"

பிறகு என் நண்பர் பைபிளை பற்றி நன்கு தெரிந்த தன் பேராசிரியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறினார்,

"இங்கே பாருங்கள், பைபிள் பல காலங்களில் பல பேரால் மாற்றப்பட்டு வந்துள்ளது.  அதனால் இது perfect Book இல்லை. நம்பிக்கையால் தான் இந்த புத்தகம் பூரண படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பிக்கையால் தான் நம்புகிறார்கள். (This is not a textually perfect book. But this is the book perfected through faith)"         

என்ன? இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து, அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லுவானா?


அதற்கு நம்மை சிந்திக்கும் திறன் இல்லாமலேயே படைத்திருக்கலாமே?

என் பாட்டி என்னை முட்டாளாக வளர்க்கவில்லை. பல காலங்களில் மாற்றப்பட்ட ஒரு நூலை எப்படி நான் கடவுளின் வார்த்தையாக நம்ப முடியும்? இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும்?  நிச்சயமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

1982 மாடல் காரை ஒருவர் கொண்டுவந்து, "நம்பு இது லேட்டஸ்ட் மெர்சிடிஸ் கார். நீ நம்பிக்கையுடன் பார்த்தால் அது உனக்கு மெர்சிடிசாக தெரியும்" என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு.    

கிருத்துவத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.



சரி பைபிளில் தான் பதிலில்லை, மற்ற மதங்களில் தேடுவோம் என்று Judaism, Hinduism, Buddism, Taoism என்று எல்லா இசத்திலும் (ism) தேடினேன். மற்ற மதத்துக்காரர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர.

அது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்பது மட்டும்தான்.

ஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், "உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்".

பகவத் கீதை முதற்கொண்டு பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.    

நான் பார்த்தவரை எல்லா புத்தகங்களிலும் கடவுளைப் பற்றிய  பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்று கூட முழுமையாக அறிவுக்கு ஒத்துவரவில்லை.

நான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ளவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது.

பலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். பதினேழு வயதிருக்கும், கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன்.

இறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.

பின்னர் திசை மாறியது. பார்ட்டிகள், குடி என்று வாழ்க்கை மாறியது. ஒரு நாள் நானும் என் நண்பரும் குடிபோதையில் கார் ஒட்டிச் சென்றபோது பெரும் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அப்போது ரோந்து வந்த அந்த அதிகாரி சொன்னார், "உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார், அதனால் தான் நீ இப்போது உயிரோடு இருக்கிறாய்"

நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதானவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். நான் கடவுளை தேடினேன், அவன் எனக்கு உதவி புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது? இது என்னுடைய தவறில்லையே...

நாட்கள் சென்றன. அதுபோல மற்றுமொரு சம்பவம். இந்த சமயம் துப்பாக்கி முனையில் இருந்து தப்பினேன். இப்போது என் பாட்டி முன்னர் அந்த அதிகாரி சொன்ன அதே வார்த்தைகளை கூறினார், "உன் மூலமாக  கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார்"

ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,

"முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற "Moon God" டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்" என்று என்னென்னவோ இருந்தது.                                                  

அவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். "நல்ல வேலை தெற்கு கரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை"

பிறகு ஒரு முஸ்லிமை சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு காரணங்கள். ஒன்று, அவர்தான் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆயிற்றே, முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்று தானே அந்த புத்தகத்தில் போட்டிருந்தது.
 

ஒரு வெள்ளிகிழமை, நண்பர்களுடன் மதங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நண்பர் என் அருகில் வந்து,

"இஸ்லாமைப் பற்றி தெரியுமா?" என்று கேட்டார்..

"இஸ்லாமைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்" என்று நான் படித்தவை பற்றி கூறினேன்.

"So, இஸ்லாமைப்பற்றி என்ன நினைக்கிறாய்"

"நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான்"    

"உனக்கு தெரியுமா, நான் ஒரு முஸ்லிம்"  

"நீ ஆப்ரிக்க அமெரிக்கன் அல்லவா?"

"ஆம், அதனால் என்ன?" 

"முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தானே"

"என்ன?" ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.

"இங்கே பார், நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப்படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாக கூறுவார்கள். நான் இப்போது ஜூம்மாஹ்விற்கு போகிறேன். என்னுடன் நீயும் வா" 

"ஜும்மாஹ் என்றால்?"

"ஞாயிற்றுகிழமை சர்ச்களில் நடக்குமே அதுபோன்றுதான். என்ன இங்கே நாற்காலிகள் கிடையாது" (அரங்கத்தில் சிரிப்பு)

"எங்கே இருக்கிறது மசூதி?"

அவர் கூறினார். அவர் சொன்ன அந்த இடம் என் தெருவில் தான் இருந்தது. அதற்கு பக்கத்தில் உள்ளே சர்ச்சில் தான் நான் மிசனரி பணிகளை செய்தேன். இத்தனை நாளாய் எனக்கு தெரியாது அங்கு மசூதி இருக்கிறதென்று.   

அப்போது ஒருவர் வந்தார், அவர் தான் இமாம் என்று பிறகு தெரிந்தது. அருமையான மனிதர். பண்பாக பேசினார். என்னை உள்ளே அழைத்து சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஓரு நாற்காலி கொடுத்து உட்கார சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு பின்னாலோ ஒரு திரை, திரைக்கு அந்த பக்கம் பெண்கள் குரல் கேட்டது.

என்னைச் சுற்றி முஸ்லிம்கள், நடுவில் நான். "என்னை ஜிஹாத் செய்யப் போகிறார்களா  இது அதற்குண்டான செட்அப்பா" ஒருவித பயம்.

பின்னர் குத்பா ஆரம்பித்தது "இன்ன அல்ஹம்துலில்லாஹ் நஹ்மதுஹு" என்று ஆரம்பித்தார் இமாம்.  

அவ்வளவுதான் பயம் அதிகரித்தது...

"அட கடவுளே, சரியாப் போச்சு, என்னைப் பார்த்து தான் பேசுகிறார். நிச்சயம் ஜிஹாத் தான் நடக்கபோகிறது", வெளியேறி விடலாம் என்றாலும் என்னைச் சுற்றி மக்கள்.                                

அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல, அறிவாளியும் கூட. குத்பாவை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். எனக்கு புரிய வேண்டும் என்பதற்காகவா?, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா?, தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றியது.

இன்று வரை நன்கு நினைவிருக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு, "இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணைவைப்பவரை தவிர". அதுமட்டுமல்லாமல், இப்ராஹீம் (அலை), மூசா (அலை) என்று பைபிளில் உள்ளே நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சர்யம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?  

குத்பா முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.

"என்ன செய்யப் போகிறீர்கள்" என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டேன்.

"தொழ போகிறோம்"

"யாரை"

"இறைவனை"

"எந்த இறைவன்?"

"உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை"

என்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா?. எனக்கு புரிய ஆரம்பித்தது.
      
தொழுகை ஆரம்பித்தது. குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது, மனதை ஊடுருவியது.

சஜிதா செய்தார்கள். "ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது". முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை (Prayer) அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு (Worship). இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.

தொழுகை முடிந்தது. எனக்கு, என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது (I am ashamed of myself). மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.    

தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம்,

"இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இருக்கிறதா?"

"ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்"

"அதை நான் படிக்கலாமா"

"நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்"

எடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் சூரா, அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள்.அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்க்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.

ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலை) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். சூரத்துல் அல் இம்ரான் போன்ற சூராக்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலை) அவர்களது வரலாறானது நான் இதுவரை New Testament டில் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலை) இவர்தான்.

குரானை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.

முஸ்லிம்கள் என்றால் யார்,  எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை.

ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு  வழிகாட்டி.

"இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்" என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை.

கடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை.

அந்த இரவு என் மனதை முழுவதுமாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுதுக்  கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.

ஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது.

திங்கட்கிழமை அந்த பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்க போனேன். அதுமட்டுமல்லாமல், இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள்? என்றும் கேட்க வேண்டும். ஆனால் பள்ளியோ பூட்டியிருந்தது. ஜும்மாஹ் மற்றும் இஷா தொழுகைக்கு மட்டும்தான் திறப்பார்களாம். எனக்கு தெரியாது. பின்னர் அடுத்த ஜும்மாஹ்வில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...

இங்கு என் கதையை கூறுவதற்கு முக்கிய காரணம், என்னைப் போல எத்தனை பேர் இந்த உலகில் உண்மையைத் தேடி அலைகின்றனர் என்று பாருங்கள்.

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 1998 ஆம் ஆண்டு மட்டுமே லட்சகணக்கில் இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா முழுவதும், கலிபோர்னியாவில், நியூயார்க்கில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.

என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையை மறைப்பது முஸ்லிம்களாகிய நமக்கு அழகல்ல. அதனால் தயவுகூர்ந்து உங்களுடன் இஸ்லாம் என்ற உண்மையை மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள். என்னைப் போல பலருக்கும் அது தேவைப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு. இதை புரிந்து கொள்ளுங்கள்.

என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்?

அதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பற்றிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்.

இங்கே நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமலேயே இறக்கின்றனர்.

தாவாஹ் பல வழிகளில் செய்யலாம். நம் அனைவராலும் முடிகிற ஒன்றென்றால், அது நாம் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவதுதான். ஆம், அது ஒரு மிகச் சிறந்த தாவாஹ். நீங்கள் முஸ்லிமென்பதை மறைக்காதீர்கள். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் நற்பண்புகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என்று தெளிவாக புரிய வையுங்கள்.              

என்னுடைய முக்கிய தாவாஹ் பணிகளில் ஒன்று என்றால் அது DVD project. அமெரிக்காவில் உள்ள எவரும் இஸ்லாமைப்பற்றி தெரியாமல் இருக்கக்கூடாது. இஸ்லாமைப் பற்றிய தகவல்களை டிவிடிக்களில் பதிந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். நிச்சயமாக டிவிடிக்களை பலரும் பார்ப்பார்கள். இப்போது florida பகுதியில் என் கவனத்தை செலுத்தி வருகிறேன்.   

நூறு டிவிடிக்கள் தயாரிக்கிறோம் என்றால் அதில் இருபத்தைந்தை முஸ்லிம்கள் வாங்கக் கொடுப்போம். ஏனென்றால் அவர்களும் தங்களை தாவாஹ் பணியில் இணைத்துக் கொண்டது போலாகும்.

அல்ஹம்துலில்லாஹ்...இந்த செயல் திட்டத்தால் மாதம் இருவர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

நான் என் கதையை பொழுதுபோக்குக்காக சொல்லுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் செய்தியைத்தான் இதனால் சொல்ல விரும்புகிறேன்.

இப்போது நான் சொன்ன தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. நான் சொல்லியதில் தவறேதும் இருந்தால் அது என்னுடைய அறியாமையால் ஏற்ப்பட்டது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்"


அல்ஹம்துலில்லாஹ்...
------------------------------------------------------------------------------------------------------------------

இஸ்லாம், அன்றும் சரி இன்றும் சரி, மிக வேகமாய் பலரையும் தன்பால் ஈர்த்து வருகிதென்றால், அதற்கு பின்னால் சகோதரர் எவன்ஸ் போன்ற கோடிக்கணக்கான உண்மையான முஸ்லிம்களும் ஒரு காரணம்.  இறைவன் இவருக்கு மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன உறுதியையும், உடல் வலிமையையும் அளிப்பானாக...ஆமின்.

நீங்கள் அமெரிக்காவில் வாழக்கூடிய மாணவராக இருந்தால், சகோதரர் எவன்ஸ் அவர்கள் உங்கள் கல்லூரிக்கு சொற்ப்பொழிவாற்ற வர வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நான் கீழ கொடுத்துள்ள அவரது வலைதளத்தில் அவரை தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
 
மேலும் விவரங்களுக்கு சகோதரரின் இணையதளம் சென்று பார்வை இடலாமே!

http://yushaevans.com/

by abu mahathi

Saturday, May 15, 2010

தமிழில் இணைய முகவரிகள் : தூரம் அதிகம் இல்லை



இதுவரை லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருந்து வந்த இணைய முகவரிகள் இனி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இருக்கலாம் என்கிற மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இணையதள முகவரிகள் லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருக்க முடியும் என்கிற தற்போதைய நடைமுறையை மாற்றியிருப்பதாக உலக அளவில் இணையத்தை கட்டுப்படுத்தும் Internet Corporation for Assigned Names and Numbers  ICANNஐகேன் என்கிற சர்வதேச இணைய முகவரிகள் மற்றும் எண்களை ஒதுக்கீடு செய்யும் அமைப்பு அறிவித்திருக்கிறது.

இதன் அடுத்த கட்டமாக தமிழ் உள்ளிட்ட 21 மொழி எழுத்துக் களை பயன்படுத்தி இணைய தள முகவரிகளை அமைக்க முடியும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இணையத்தின் வரலாற்றில் இந்த மாற்றம் என்பது முக்கிய மைல்கல்லாக வர்ணிக்கப்படுகிறது.

இந்த மாற்றத்தின் முதற்படியாக லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்கள் இடம்பெறாத இணைய முகவரிகள் கொண்ட கணிப்பொறியை ஐகேன் அமைப்பு துவக்கிவைத்தது.

இதன் விளைவாக எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் தனித்தன்மையை குறிக்கும் இணைய முகவரி அடையாளங்கள் முழுக்க முழுக்க அரபு எழுத்துருக்களால் எழுதப்பட்டு இணைய பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

இதன் அடுத்த கட்டமாக, சீனம், தாய் மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழி எழுத்துக்களில் இணைய முகவரிகள் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக, இருபது நாடுகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்திருப்பதாகவும், இவையெல்லாம் ஐகேன் அமைப்பின் வேகமான பரிசீலனையில் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக பார்க்கையில் இந்த மொழிகளில் இணைய முகவரிகள் உடனடியாக சாத்தியம் என்றாலும், எல்லா கணினிகளிலும் எல்லா நாடுகளிலும் இவை உடனடியாக சரியாக நடைமுறைக்கு வருவதில் சில சிக்கல்கள் இருக்கலாம் என்றும் ஐகேன் அமைப்பு கூறியுள்ளது.

ஆனால், இவையெல்லாம் ஆரம்பகால நடைமுறை சிக்கல்கள் என்று கூறியுள்ள ஐகேன் அமைப்பு, வெகு விரைவில் இந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு உலக மொழிகளில் பலவற்றில் இணைய முகவரிகள் நடைமுறைக்கு வரும் என்று கூறியிருக்கிறது.

இணையத்தில் தமிழ் வளர்வதற்கு ஐகேனின் இன்றைய அறிவிப்பு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறார் தமிழக அரசின் தமிழ் இணைய வளர்ச்சிக்கான குழுவின் தலைவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் அனந்தகிருஷ்ணன் அவர்கள்.

தமிழ் எழுத்துக்களை தரப்படுத்தல் தொடர்பாக தமிழக அரசும் தமிழ் இணைய ஆர்வலர்களும் எடுத்து வரும் முயற்சிகளின் இறுதி முடிவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அறிவிக்கப்பட இருப்பதாகவும், அதன் பிறகு தமிழ் இணைய முகவரிகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.






Thursday, May 13, 2010

என் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள்,அவலங்கள் பற்றி யாரும் பேசாததை,பேச மறுப்பதை நான் பேசுகிறேன். -

பதிவுலகில் பெரிய அளவில் பேசப்படும் தமிழ்மணம் இணையத்தின் சிறந்த படைப்புகளுக்கான விருதுகள் பட்டியல் கண்டேன்.வழக்கம் போல இங்கும் அரசியல்தானா என்று நொந்து கொண்டேன்.ஒரு படைப்பின் தரத்துக்கு அதன் பொருளடக்கத்திற்கு விருதா அல்லது பெரும்பான்மையாக ஒரு படைப்புக்கு வாக்களித்தால் விருதா ஒன்றும் புரியவில்லை.(தமிழக அரசின் சிறந்த திரைப்பட வசனகர்த்தா விருது பெற்ற கலைஞர் நினைவுதான் வருகிறது)தலித் மக்களின் பிரச்சனைகள்,மனித உரிமைகள் என்று ஒரு தலைப்பு அதில் விருது பெற்ற ஒரு பதிவு "ஷாருக் கானுக்கு ஒரு நியாயம்,தமிழனுக்கு ஒரு நியாயமா" .அமெரிக்கா சென்ற ஷாருக் கான் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைகுள்ளக்கபட்டார்.அதற்காக குரல் கொடுத்த ஊடகங்கள் ஈழ தமிழ் ஆதரவாளரான ஒரு மனித உரிமை போராளி இந்தியா வர விசா மறுக்கப்பட்டதற்கு குரல் கொடுக்கவில்லை என்று எழுதி இருந்தார்.விருது கொடுக்கும் அளவுக்கு இந்த பதிவில் என்ன கருத்து இருக்கிறது என்று தெரியவில்லை.ஷாருக் கான் அமெரிக்க விசா பெற்று முறையாக அமெரிக்கா சென்று இருக்கிறார்.கான் என்ற அவரது பூர்விக முஸ்லிம் பெயரை பார்த்து முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அவர் தனிமைபடுதபட்டு விசாரிக்கபடுகிறார்.ஷாருக் கான் போன்றவர்கள் தாங்கள் முஸ்லிம் என்று சொல்லிகொள்வதையே விரும்பாதவர்கள்.இந்தியாவில் பிரபலமான ஒரு நடிகனாக இருந்தாலும் அவன் முஸ்லிம் பெயர் வைத்திருந்தால் என்ன கதி என்று அவர் தெரிந்திருப்பார்.இருந்தாலும் அமெரிக்காவின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து அவர் குரல் கொடுக்க போவதில்லை.இந்தியாவில் தீவிரவாதிகள் என்று தினந்தோறும் கேவலபடுதபடுகிறதே முஸ்லிம் சமூகம் அது பற்றியும் அவர் வருத்தப்பட போவதில்லை.ஆனால் இந்தியாவின் புகழ் பெற்ற ஒரு நடிகன் கேவலபடுதப்பட்டான் என்பதால் ஊடகங்கள் குரல் கொடுக்கின்றனவே தவிர அவன் முஸ்லிம் என்பதால் சந்தேகிக்கப்பட்டான் என்பதை எவரும் கண்டு கொள்ளவில்லை.இது ஒரு முஸ்லிம் எவ்வளவு பெரிய புடுங்கியா (நடிகனா) இருந்தாலும் அவன் மீதும் தீவிரவாத முத்திரை குத்தப்படும் என்பதற்கு எடுத்துகாட்டு.ஒரு சமூகம் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு அதன் ஒவ்வொரு உறுப்பினரும் சந்தேக கண் கொண்டு பார்க்கபடுவது எவ்வளவு வேதனை தரும் விஷயம்.மனித உரிமை ஆர்வலர் இந்தியா வர மறுக்கப்பட்டதற்கு நாமும் கண்டனம் தெரிவிக்கிறோம்.ஆனால் எதை கொண்டு போய் எந்த விசயத்தோடு ஒப்பிடுகிறார் பொன்னு சாமீ.இதற்க்கு ஒரு விருது.


இரண்டாவதாக "இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்" என்ற ஒரு கட்டுரை அதற்க்கு ஒரு விருது.அதுவும் ஆன்மிகம் என்ற தலைப்பில்.தீவிரவாதம் பற்றி ஆன்மிகம் என்ற தலைப்பில்தான் தமிழ்மணத்தார் பேசுவார்கள் போலிருக்கிறது."இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும்".என்று எடுத்தவுடனே சரண்டர் ஆகி ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ஜெய்ஹிந்துபுரத்தார்.எந்த தீவிரவாத விகிதாசாரத்தில் இஸ்லாமியர்கள் (முதலில் இஸ்லாமியர் என்ற சொல்லாடலே தவறு,முஸ்லிம்கள் என்பதுதான் சரி)முதலில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நாட்டில் சங்கபரிவார் அமைப்புகள் நடத்திய மத கலவரங்களில் இதுவரை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லபட்டிருக்கிரர்கள்.ஆனால் இது வரை பத்து சதவிகிதம் பேர் கூட தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் இறந்திருக்கமாட்டர்கள்.அதற்காக தங்களை கொலை செய்து தங்கள் பெண்களை கற்பழித்த பொருளாதாரங்களை நாசம் செய்ததற்கு பதிலடியாக முஸ்லிம்கள்தான் குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்கிறார்கள் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவிர்கள் என்று நான் கூறவில்லை. மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பிரக்யா சிங் தாக்கூர்,ராணுவ மேஜர் ஸ்ரீகாந்த் புரோஹிட் ஆகியோரை கைது செய்த காவல் துறை அதிகாரி மறைந்த ஷஹித் ஹேமந்த் கர்கரே கூறுகிறார்.மாலேகான் சிமி அலுவலக குண்டு வெடிப்பு,மாலேகான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு,அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு,பாகிஸ்தான் இந்தியாவின் நல்லிணக்கத்திற்காக விடப்பட்ட சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு,கோவா குண்டு வெடிப்பு என அனைத்திற்கும் மூல காரணம் R.S.S உள் அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்புதான் என்று கண்டுபிடித்த குற்றத்திற்காக சுட்டு கொல்லபட்டாரே(மேலும் தகவலுக்கு WHO KILLED KARKARE என்ற புத்தகத்தை படிக்கவும்) ஹேமந்த் கர்கரே அவர் உயிரோடிருந்தால் உங்களை சுட்டிருப்பார் விகிதாசாரத்தை தவறாக சொல்லியதற்காக. பொடா எனும் கொடிய சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 90 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் அதில் குற்றம் நிருபிக்கபடதவர்கள் 89 சதவிகிதம் பேர் என்ற விவரத்தையும் இந்திய சிறைகளிலே தனது மக்கள் தொகையை விட அதிகமாக 30 சதவிகிதம் முஸ்லிம்கள் சிறையில் வாடி கொண்டிருப்பவர்கள் என்ற விவரமும் உங்களுக்கு தெரியுமா.தொடர்ந்து தீவிரவாதிகள் என்று ஊடகங்களும் காவல் துறையும் உளவுத்துறையும், சங்பரிவாரும் அமெரிக்காவும் இன்ன பிற அயோக்கியர்களும் செய்து வரும் பிரசாரத்திற்கு நீங்கள் பலியாகி விட்டீர்கள்.அதனால் அமைதி மண்ணாங்கட்டி என்று பஜனை பாடுகிறீர்கள்.இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இந்த அயோக்கியர்கள் எல்லாருக்கும் தெரியும்.தெரிந்துதான் இந்த பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.சர்வதேச தீவிரவாதி யார் என்றால் ஒரு முஸ்லிம் சிறுவன் கூட ஒசாமா என்று சொல்வதில்லையா அப்படித்தான்.நமது சகோதரர்களில் ஒரு பிரிவினரை நாமே தீவிரவாதி என்று காட்டி கொடுத்து நாங்களெல்லாம் நல்லவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இவர்களிடம் பஜனை பாடி கொண்டே இவர்கள் செய்யும் அட்டூழியத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் .அதற்க்கு தமிழ் மணம் விருது மட்டுமல்ல நோபல் பரிசு கூட கொடுப்பார்கள்.எனவே சகோதரா முதலில் இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களின் முழு பரிணாமத்தை புரிந்து கொண்டு அப்புறம் எழுதுங்கள்.


மூன்றாவதாக.தலித்,ஈழ தமிழர்கள் என ஒடுக்கப்படும் மக்களுக்கான பதிவுகளுக்கு தனி தலைப்புகள் ஒதுக்கப்பட்டதை போல் சிறுபான்மையினர் என்று ஒரு தனி தலைப்பை தமிழ்மணத்தார் அடுத்த தடவை ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.




நன்றி
இனியவன்

Tuesday, May 11, 2010

ஹிஜாபின் அவசியம்

ஹிஜாப் அணிவதால் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை மிக அற்புதமான முறையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை பாருங்கள். இது பழைய செய்தியாக இருந்தாலும், கொஞ்சம் ஞபகப்படுத்தாலாமே என்ற எண்ணத்தில் இதை இங்கே மீள் பதிவு செய்கிறேன். உங்கள் கருத்தையும் பதியுங்கள்.


இந்த விளம்பரம் ஹிஜாபின் முக்கியத்துவத்தை மற்றும் நமக்கு எடுத்துரைக்கவில்லை, நம்முடைய ஆடைகள் விசையத்திலும் தான். மேற்கத்திய காலாச்சாரத்தின் தாக்கத்தில் கேவளாப்படுத்தப்படும் பெண் இனத்திற்கு பாதூகப்பான ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதை சூசகமாக சொல்கிறது இந்த விளம்பரம்.


நன்றி: சகோ. யாசிர் ஈ(mail)

Saturday, May 8, 2010

சிறப்புக் கட்டுரை - தமிழ்த் தேனீ யும்,யூத் புல் விகடனும்

மிழ் இணையச் சூழலில் பரிச்சயமான பெயர், உமர் தம்பி. இணையத்தில் தமிழ் இதமாக வலம் வருவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

இணையத்தில் 'தேனீ உமர்', 'யுனிகோட் உமர்' என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் அவரது தமிழ்க் கணினித் தொண்டை கெளரவிக்கும் வகையில், எதிர்வரும் கோவை மாநாட்டில் அவருக்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா என்ற கேள்வியும், உயரிய கெளரவம் அளிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் தான் இன்றைய தீவிர தமிழ் இணையவாசிகளின் உள்ளங்களில் மிகுந்திருக்கிறது.

யார் இந்த உமர்?
கணினித் தமிழுக்கு அப்படி என்னதான் செய்தார் உமர்?
உமருக்கு தமிழ் வரலாற்றில் ஏன் அங்கீகாரம் வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் வலைத்தளங்களில் உலா வருகிறது?
இவைப் பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

உமர் தம்பி (ஜுன் 15, 1953 - ஜூலை 12, 2006)
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர் தம்பி. பெற்றோர் காலம் சென்ற அ.அப்துல் ஹமீது மற்றும் ரொக்கையா அம்மாள், மனைவி - பவுஜியா மற்றும் மூன்று ஆண் பிள்ளைகள் - மொய்னுதீன், முஹ்சீன், அப்துல் ஹமீது. உமருடன் பிறந்தது மூத்த சகோதரர் - அப்துல் காதர் மற்றும் மூன்று மூத்த சகோதரிகள்.
குடும்பத்தின் கடைசி பிள்ளையான உமர் தம்பி செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டுள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், உமரின் குடும்பம் நிறைய படித்த பாட்டதாரிகள் நிறைந்தது.

உமர் தம்பி அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் துறையில் பட்டப் படிப்பு படித்தவர். இளங்கலை மட்டுமல்ல, எலக்ட்ரானிக்ஸ் (Electronics) என்னும் மின்னணுவியலில் பட்டயப் (Diploma) படிப்பையும் முடித்தவர். 1983 ஆம் ஆண்டில் தமது சொந்த ஊரிலேயே வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்தார்.
மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர் உமர். அந்தத் தேடலின் பயனாக, ஒருமுறை தாம் பயின்ற அதிராமபட்டினம் காதர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி ஊரிலிருப்போர் கேட்கும் விதத்தில் உரையாடல்களை ஒலிபரப்பி அன்றைய காலக்கட்டத்தில், அனைத்து அதிரைவாசிகளையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் மின்னணுச் சாதனங்களை பழுது நீக்கும் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். பதினேழு ஆண்டுகள் அமீரகத்தில் பணி செய்த உமர், 2001 செப்டம்பரில் விருப்ப ஓய்வு பெற்றுத் தாயகம் திரும்பினார். அமீரகத்தில் இருந்த காலத்திலேயே தன் செந்த முயற்சியால் கணினி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தி நாளைடைவில் கணினித்துறையில் மிகச் சிறந்த வல்லுனராக தன்னை உயர்த்திக்கொண்டார். இளம் வயதிலிருந்து தம் தாய்மொழி தமிழ் மீது நல்ல பற்றுள்ளவராக இருந்து வந்துள்ளார். உமர் மறைந்தது, 2006 ஆம் ஆண்டு ஜூலை 12. மண்ணில் மறைந்தாலும் தமிழ்க் கணினி உலகம் இருக்கும் வரை பெருங்கொடையினை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார், உமர்.

கணினித் தமிழுக்காக செய்த சேவைகள்... 

கணினித் துறையில் பல்வேறு வேலைகளைத் திறம்படச் செய்து கொண்டிருந்த வேளையில். கணினியில் கன்னித் தமிழுக்கு அணி செய்யும் பணியையும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உமருக்குள் எழுந்தது. அந்தப் பணியில் தாம் ஈடுபட்டது மட்டுமல்ல. நாளைய தலைமுறையும் பயனுற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தம்மை ஒத்தக் கருத்துடையவர்களையும் திரட்டி அவர்களுக்குரிய ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.
யுனிகோட் தமிழ் எனப்படும் ஒருங்குறித் தமிழில் முதன் முறையாக எல்லா தளங்களிலும் இயங்கும் WEFT நுட்பத்தின் அடிப்படையிலான 'தேனீ' இயங்கு எழுத்துருவை உமர் தம்பி அறிமுகம் செய்தார். ஒருங்குறியல்லாத WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்களைச் சில தமிழ் வலைத்தளங்கள் முன்பே பயன்படுத்தி வந்தன. WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்கள் அந்த எழுத்துரு எந்த தளத்துக்கு உருவாக்கப்பட்டதோ அந்த ஒரு தளத்துக்கு மட்டுமே இயங்குமாறு இருந்தது. மேற்கண்ட இரண்டையும் முதன் முதலில் மாற்றிய பெருமை உமரையே சாரும்.

தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றிப் பல்வேறு வலைத்தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் பெரும்பாலானோர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைத்தளம், வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழ் மணம், தமிழ் உலகம் குழுமம், ஈ உதவிக் குழுமம், ஒருங்குறி குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் என இணையத்தின் பெரும்பாலான தமிழ்க் குழுமங்களில் பங்கெடுத்துத் தம்மால் ஆன அத்தனை உதவிகளையும் நல்கி இருக்கிறார். உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன.

உதாரணத்துக்குச் சில... 

AWC Phonetic Unicode Writer மற்றும் இதன் செயலியை இலவசமாக இணைய பயனார்களுக்கு தந்துள்ளார்.
தமிழுக்காக Online RSS creator - can be used in offline as well
எண்களாகத் தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி
எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி
ஒருங்குறி மாற்றி
தேனீ ஒருங்குறி எழுத்துரு
வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு
வைகை இயங்கு எழுத்துரு
தமிழா-இ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.
தமிழ்க் கணினி பயன்பாட்டாளர்களுக்கு பயன் தரும் வகையில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் தமிழில் நிறைய கட்டுரைகள் தந்துள்ளார். உதாரணமாக...
1. எழுத்த பழகுவோம் HTML, (இன்றும் கணினி அறிவு இல்லாதவர்களுக்கும் புரியும்படி மிக எளிய தமிழில் அருமையான கட்டுரை தந்துள்ளார்.
2. யுனிகோடின் பன்முகங்கள்
3. யுனிகோடு - என் பார்வையில்
மற்றும் பல கட்டுரைகள் உமர்தம்பியின் வலைபூவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உமர் தம்பியை பற்றிய கணினித் தமிழ் ஆர்வளர்களின் கருத்துக்களும், பாராட்டுக்களும் தான் இன்றும் அவரது தமிழ் கணிமைக்கான சேவைகளுக்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. உதாரணமாக..

உமர் பற்றி தமிழ் கணினி அறிஞர் சுரதா யாழ்வாணன்...

"உண்மையில் தானியங்கி எழுத்துரு செய்வது சுலபம். ஆனால், உமர் செய்தது அது அல்ல. தானியங்கி எழுத்துரு அமைக்கும்போது அந்த microsoft / weft செயலி ஒவ்வொருமுறையும் அது எந்த வலைத்தளத்திலிருந்து செயல்படவிருக்கிறது என கண்டிப்பாக கேட்கும். உதாரணமாக திசைகள்.கொம் என கொடுத்திருந்தோமேயானால் அது தில்லை.கொம் என்ற தளத்திற்கு இயங்காது. இதை ஆரம்பத்தில் கவனித்த நான் முகவரிக்குப் பதிலாக http:// எனப் போட்டு அந்த ஆரம்பத்தில் வரும் அத்தனை முகவரிகளுக்கும் அந்த தானியங்கி எழுத்துரு இயங்கும் வண்ணம் முயற்சித்தேன். ஆனால் அது சரிவரவில்லை. இதே எண்ணம் உமர் மனதிலும் தோன்றி அதே http:// செயல்பாட்டை நிறுவி தேனீ எழுத்துருவை அனைத்து தளங்களிலும் அதாவது http:// என ஆரம்பிக்கும் அத்தனை முகவரிகளுக்கும் செயல்படுமாறு அந்த செயலியை உடைத்து (hack) நடைமுறைப்படுத்தியிருந்தார்.
அவரது இந்த உத்தியைதான் நான் மிக வெகுவாக மெச்சி பாராட்டியிருந்தேன். அதற்கு அவர் தன்னடக்கமாக எனது தானியங்கி எழுத்துரு e-lesson பற்றி சிலாகித்து மேலதிகமாக பாராட்டியிருந்தார்.

இதே போல் இன்னுமொரு சம்பவம். எல்லோரும் அன்று தமிழுக்கு யூனிகோடுதான் சரியானவழி என முனைப்பாயிருந்தார்கள். ஆனால் அதை பலரும் பயன்படுத்தக்கூடிய வழியில் செயல்படுத்தவைக்க தயாராகவிருக்கவில்லை. கிடைக்கக்ககூடிய எழுத்துருவோ ஒன்றில் வர்த்தக நோக்கில் பணம் கட்டி வாங்கும் எழுத்துருவாகவிருந்தது அல்லது எழுத்து சீர்திருத்தமுறையில் அமைந்திருந்தது.
இந்த நிலமையில்தான் யூனிகோட்டை சரளமாக எல்லோரும் பாவிக்கும் வண்ணம் செய்வதற்காக தமிழில் இதற்கான எழுத்துரு தேவை என மடலாடற்குழுக்களில் வர்த்தக எழுத்துருக்களை தவிர்த்து யூனிகோட் எழுத்து தேவை என நான் தேடும்போது சில வாரங்களில் உடனடியாக தனது தேனீ எழுத்துருவை உருவாக்கி இலவசமாக தமிழ்க்கணனி உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இன்று பல யூனிகோட் எழுத்துருக்கள் அரசு ஆதரவுடனும் தனிப்பட்ட பலரது சேவை நோக்கத்துடனும் வந்துவிட்டன. ஆனால் அன்று உமர் காலமறிந்து ஆபத்பாந்தவனாக வெளியிட்ட தேனீ எழுத்துரு இன்றுவரை நிற்கின்றது.

அதே போல் அன்று அந்த வசதி உமர் தந்திருக்காவிடில், தமிழில் யுனிக்கோடின் பாய்ச்சல் சற்று தாமதப்பட்டிருக்கும் என்று சொன்னாலும் மிகையல்ல.
இன்னொரு எழுத்துருவாக்க அன்பர் தனது எழுத்துருவை யூனிகோட் முறைமைக்கு மாற்ற என்னிடம் தொடர்பு கொண்டபோது உமரைத்தான் நான் சுட்டிவிட்டிருந்தேன். பின்னர், உமரின் உதவியுடன் அது வைகை யூனிகோட் எழுத்துருவாகியது. அதுகூட இலவசமாகத்தான் வெளியாகியது. இதன் பின்னர் உள்ள உழைப்பு ஆர்வம் பயனாளிகளுக்கு ஒருபோதுமே தெரியவராது. ஆனால் இந்த உழைப்பு வீண்போகவில்லை என்பதை உமரின் பிரிவின் பின் அவருக்கு அஞ்சலி செலுத்திய வலைப்பதிவர்கள் நிருபித்திருக்கிறார்கள்.
இனி இந்த கணனி உழைப்பாளி திரும்ப வரப்போவதில்லை. ஆனால் இன்று உமர் உருவாக்கிய அத்தனை செயலிகளும் காலவோட்டத்தில் உபயோகமாகாமல் போகலாம். ஆனால் உமர் என்ற இந்த தமிழ்த் தொண்டனின் அந்த தமிழார்வ, கணனி உழைப்பு, சேவை அடுத்து வரும் தமிழ்க் கணனி ஆர்வலர்களுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்து அவர்களும் இதேபோல் வீச்சுடன் தமிழுக்கு சேவை செய்ய ஒரு உந்துதலாகவிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை." - சுரதா யாழ்வாணன்.
நன்றி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=12890

*
எத்தனையோ தமிழ் ஆர்வலர்கள் உமர் தம்பியின் மறைவுக்குப் பிறகு கருத்துக்களும் பாராட்டுக்களும் வெளியிட்டார்கள். இன்றும் இணையத்தில் ஆயிரக் கணக்கில் கொட்டிக்கிடக்கிறது. இணையத் தேடலில் உமர் தம்பி என்று தேடிப் பார்த்தால் இன்னும் நிறைய அறிந்துக்கொள்ளலாம்.
உமரின் மறைவுக்குப் பிறகு அவரை பற்றி மற்ற கணினித் தமிழ் ஆர்வளர்களின் கருத்துக்களை எழில்நிலா வலைத்தளத்தில் காணலாம். http://ezilnila.com/archives/803
உமருக்கு அங்கீகாரம் ஏன்? 

ஓரிருவரிகள் கொண்ட மென்பொருள் நிரலிகளை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் யுனிகோட் எழுத்துருக்களும், பல மென்பொருள் நிரலிகளையும் உருவாக்கி எவ்வித பொருளாதார எதிர்ப்பார்ப்புமின்றி பொதுப் பயன்பாட்டுக்கு வைத்தவர் உமர் தம்பி.
எந்த அரசாங்கத்தின் உதவியின்றி இணையத்தில் விரைவாக தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று பல வகையான தமிழ் வலைப்பூ பதிவுகளுக்கும், தமிழ் கணினி தொழில் நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இணையப் பயன்பாட்டாளர்களாலும் தமிழ் இணைய அறிஞர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

தன்னலமில்லாமல் தன் தாய்மொழி இவ்வுலகில் ஜீவிக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டு தனக்கு ஏற்பட்ட புற்றுநோயையும் பொறுத்துக் கொண்டு தன் வாழ் நாள் இறுதி கட்டம் வரை இணையத் தமிழ் வளர்ச்சிக்காக ஒரு மவுனப் புரட்சி செய்து போராடிய உமர் தம்பி இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார்.

கணினியில் தமிழ் மொழி அதிவிரைவில் வளர்ச்சியடைவதற்கு உமர் தம்பி போன்றவர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது. அதுபோல் உமரின் எழுத்துருக்கள், செயலிகள், கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள், அறிவுரைகள் அன்றும் இன்றும் தமிழ் இணையப் பயனார்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என்பதை இணையத் தமிழ் ஆர்வலர்களின் பழைய, புதிய பதிவுகள் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.
உமருக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றால் முதலில் மகிழ்ச்சி அடையப் போவது இணையத் தமிழ் மக்கள் தான். அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால் அது தமிழை இணையத்தின் மூலம் பரப்பி வரும் இணையத் தமிழர்களுக்கு மேலும் உற்சாகமூட்டும், இன்னும் பல முன்னேற்றங்களை காணலாம், ஆங்கில ஆதிக்கத்தை முறியடித்து நம் தாய்மொழி தமிழால் கணினித் துறையில் அரிய பல சாதனைகளை படைக்கலாம்.
உமருக்கு அங்கீகாரம் கிடைக்கப்பட்டால், அது கணித் தமிழில் சாதனைப் படைக்க எந்த அரசாங்கத்தின் உதவியின்றி தமிழுக்காக தன்னலமற்ற சேவைகள் செய்துவரும், செய்ய துடிக்கும் எத்தனையோ உமர் தம்பிகளை இவ்வுலகம் காணும். தமிழ் இணையத்தில் தனக்கேன்று தனித்துவத்துடன் திகழும், மென்மேலும் வளர்ச்சியடையும்.


நம் தாய்மொழி தமிழ்ச் செம்மொழியாக மட்டும் இல்லாமல், அதற்கு மேலும் இவ்வுலகில் பல அங்கீகாரங்களை பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

அரசு உதவியின்றி தம் தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் உமர் தம்பி போன்ற எண்ணற்ற தன்னார்வத் தமிழ் கணினி தொண்டர்களை கண்டறியப்பட வேண்டும், அவர்களுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
உமர் தம்பி பெயரில் விருதோ அல்லது கணினித் தமிழ் ஆராய்ச்சி குழுவுக்கு பெயரோ அல்லது தமிழ்க் கணினி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு துறைக்கு உமரின் பெயரையோ சூட்டினால், அது அவருக்கு செய்யும் கெளரவமாக இருக்கும் என்பதில் தமிழ் கணினியாளர்கள் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்.

இதோ மிக அருகில் இருக்கிறது, ஜூன் 23. இந்தத் தேதியில் கோவையில் தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடைபெறவுள்ளது.

ஆண்டு தொறும் தமிழ் இணைய மாநாட்டை நடத்தும் உத்தமம் அமைப்பு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க செய்ய, தமிழக அரசுக்கு பரிந்துரைச் செய்ய வேண்டும்.
சாதி, மதம், கட்சி, இயக்கங்கள், கொள்கைகள் பாகுபாடின்றி இணையத்தில் தமிழுக்கு புத்துயிர் தந்த உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க, இணையவாசிகள் அனைவரும் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
இணையக்கடலில் தமிழை மிகச் சுலபமாக பயணம் செய்ய உதவியவர்களில் முன்னணியில் இருந்த உமர் தம்பிக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகாரம் தருமா?

அந்த அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்பது இணைத் தமிழ் ஆர்வலர்களின் பலமான நம்பிக்கை!

அப்படி ஓர் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால், பெருமையடையப் போவது உமர் தம்பியல்ல... இணையத் தமிழே!

உமர் தம்பி குறித்த விக்கிப்பீடியா பக்கம்... http://www.ta.wikipedia.org/wiki/உமர்தம்பி
- அதிரை தாஜூதீன்

நன்றி யூத்புல் விகடன் 

Wednesday, May 5, 2010

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் !!! பாகம் 1

அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.


இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும், அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை, இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.

வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போது, குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாது, மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம், குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையின் படியே இறைவசனம் பொருள் தருகிறது என்று ஒவ்வொரு காலத்து மக்களையும் நம்ப வைப்பதும், எல்லா காலத்து அறிவியல் அறிஞர்கள் கூறும் கருத்துடன் நூற்றுக்கு நூறு பொருந்தி வருகிறது என்று சொல்ல வைப்பதும் அதன் அழியாத அற்புதங்களில் உள்ளதாகும். இந்த அற்புதம் குர்ஆனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்.

வேத நூற்களில் அறிவியல் ஆராய்ச்சி செய்ய தூண்டும் ஒரே வேதம் குர்ஆன் மட்டும் தான் என ஆணித்தரமாக என்னால் சொல்லமுடியும். மற்ற வேதங்கள் அவ்வாறு தூண்டவில்லை என்பதைவிட அறிவியல் உண்மைக்கு எதிராக நிற்கிறது, அறிவியல் பேசுபவர்களை குழப்பவாதிகள், மாபெரும் குற்றவாளிகள் என முத்திரை குத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாறுகளைத்தான் நம்மால் படிக்க முடிகிறது.
மற்ற வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட நிலையிலிருந்து மாறி, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டுவிட்டதால், பல அறிவியல் உண்மைகளுக்கு எதிராக இயற்கையாகவே அவைகள் அமைந்துவிட்டன. மத குருமார்களின் ஆதிக்கம் வலுவாக இருந்த போது, அறிவியல் பேசுவோர்கள் சமூக விரோதிகளாக, இறைக்குற்றம் செய்து விட்டவர்களாக கருதப்பட்டு, சிறையிலடைத்து சித்திரவதை செய்யப்பட்டு வந்தார்கள், தங்களது கருத்துகளிலிருந்து பின் வாங்கியவர்களுக்கு உயிர்பிச்சை அளிக்கப்பட்டது, தான் கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலிருந்து பின்வாங்கதவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள். இந்த கொடுமை மதத்தின் பெயரால், வேதத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதுதான் அதிலும் கொடுமையாக இருந்தது.

இந்தக் கொடூரம் வேதங்களின் பெயரால், அரங்கேற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்த காரணத்தால் பல அறிவியல் விஞ்ஞானிகள், “இறைவன் இல்லை”, “வேதம் பிற்போக்கான கருத்துடையது” என்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.
ஆனால் எந்த வேத நூலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த குர்ஆனுக்கு இருப்பதால்தான், மேலும் அறிவியல் உலகைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதமாகவும் இருப்பதால்தான் இன்று அறிவியல் உலகிற்குகூட அதனால் சவால் விட்டு, நிமிர்ந்து நிற்க முடிகிறது. குர்ஆனை போல இலக்கிய சுவையும், கருத்தாழமும், அறிவியல் உண்மைகளை எளிமையாக எடுத்து வைக்கும் அதன் சிறப்பு பொருந்திய ஒரு வசனத்தையாவது இந்த உலக மக்களால் கொண்டு வர முடியுமா? என அது எடுத்து வைக்கும் சவாலை 15 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ள முடியவில்லையே, இனிமேலும் அதனை எதிர்கொள்ள முடியாது என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத உண்மையாகும்.
வானவியல், புவியியல் என எத்தனை இயல்கள் இருக்கின்றனவோ அத்தனை இயல்களையும் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள தூண்டுகிற ஒரே வேதம் குர்ஆன் மட்டுமே.

இந்த தொடரை உங்கள் முன் வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். நான் ஒரு மருத்துவன் என்ற முறையில் இன்றைய நவீன மருத்துவ அறிவியல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இந்த அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மூலம் இந்த உலகிற்கு மிக எளிமையான முறையில் உணர்த்தப்பட்டு விட்டது என்பதை விளக்குவதே எனது நோக்கம்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம், ஒவ்வொரு துறை குறித்தும் தெளிவான, தீர்க்கமான தகவல்களை தந்து கொண்டிருக்கும் அறிவியல் நுட்பம் நிறைந்த காலம். மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது கடினம், எந்த தகவலையும் அறிவியல் தகவலோடு ஒப்பீடு செய்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் காலம் இது. மருத்துவ துறையில் இன்று புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள் குர்ஆனில் எந்தந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது என்று வாசகர்களுக்கு இனம் காட்டுவதே எனது முக்கிய நோக்கம். அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள மிக வசதியாக இருக்கும்
.
அல்லாஹ் எனது நல்ல நோக்கத்திற்கு வெற்றியை தருவானாக. எனக்கு இப்படி ஒரு சேவை செய்வதற்கு வாய்பளித்த இறைவனுக்கு நன்றி கூறி, எனது இந்த சேவையினை அங்கீகரித்து கொள்ள பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.
கருயியல்

கருயியல் என்பது மனிதன் கருவுற்று அவன் எவ்வாறு தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்து, முழு மனித வடிவம் பெற்று பிறக்கிறான் என்ற தகவலை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், அவளது வயிற்றில் குழந்தை எந்தந்த நிலையில் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றிய அறிவு சிறிய அளவுகூட இல்லாத காலகட்டத்தில் குர்ஆனில் மிக தெளிவாக, அதே நேரத்தில் மிக எளிமையாக கருவளர்ச்சியின் எல்லா விவரங்களையும் கூறப்பட்டிருப்பது அறிவியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

இறைபணிக்காக இணைந்து நிற்கும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பதினான்கு நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிகளும், அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது சத்தியம்.
இவ்வரிய திருமறை வருடம் ஒரு முறையும், நமது நபி(ஸல்) அவர்களின் இறுதியாண்டு வாழ்க்கையில் இரு முறையும் ஜிப்பரயீல்(அலை) அவர்களின் மூலம் சரிபார்க்கப்பட்டும், ஆயிரமாயிரம் சத்திய சஹாபாக்களால் மனனம் செய்யப்பட்டும், பிரதிகள் எடுக்கப்பட்டும் இன்றுவரை ஒரு எழுத்துக்கூட மாற்றம் செய்யப்படாமல் இறையருளால் பாதுகாக்கப்பட்டு, இத்திருமறை “இறைவசனமே” என உலகிற்கு தெளிவாக்கி கொண்டிருக்கிறது.
அறிஞர்களும், விஞ்ஞானிகளும், பல்துறை வல்லுனர்களும் நம் திருமறையில் புதைந்துகிடக்கும், காலத்துக்கேற்ப பொருந்தி நிற்கும், உண்மைகளை கண்டு வியந்து நிற்கின்ற வேளையில், ஒரு சில அறிவிலிகள், 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஒரு படிப்பறிவில்லாத நபரின் வாக்குகள் இந்த நூற்றாண்டுக்கு ஏற்றதல்ல என வீராப்பு பேசி எதிர்த்து சேறு பூச விழைகின்றனர்.

அன்பு சகோதரர்களே!, இவ்வெதிர்ப்புக்கள் நமக்கு புதிதல்ல. இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைநெறி இப்பூலோகத்தில் வேரூன்றி உயர்ந்து நிற்க அது கொடுத்த விலையான தியாகங்களும், உயிர்களும் உலகில் தோன்றிய எந்த ஒரு மதத்திற்கும் ஏற்பட்டதல்ல. இந்த உலகம், நமக்கு உரியதான அடுத்த நிரந்தர உலகத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி களமே, (நபி மொழி) என்ற சிந்தனையுடன் இச்சத்திய நெறிகளை வேரூன்ற தம் இன்னுயிரையும், உடமைகளையும் நீத்த ஆயிரமாயிரம் நபித்தோழர்களையும், இஸ்லாமிய உடன் பிறப்புகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் அவர்கள் நிரந்தர வாழ்க்கைக்கு இறைஞ்சி நமது இறைப்பணியை இனிதே தொடர்வோம்.

இச்சிறிய முன்னுரையோடு, இதழ்கள்தோறும் இறைமறையில் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆலோசனைகளும் கருத்துகளும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்த வரிசையில், மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை, இறைமறை விளக்குவதை பார்ப்போம்.

நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாமே அவனை இந்திரியத்துளியாக ஆக்கினோம். பின்னர் அதை அலக் என்ற நிலைக்கு மாற்றினோம். பின்னர் ‘அலக்’ என்பதை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைதுண்டை எலும்பாக ஆக்கி, எலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். ஆகவே படைப்பாளர்களில் அழகானவனான அல்லாஹ் உயர்ந்தவனாக ஆகிவிட்டான். அல் குர்ஆன் 23:12-14

சகோதரர்களே! மனித கருவளர்ச்சியியலை இவ்வளவு துல்லியமாக வெவ்வேறு நிலைகளில் அதன் உருமாற்றம், கால அளவு, குணாதிசயங்களை படைப்பாளனால் மட்டுமே தெளிவாக்க இயலும்.

நான் கருவளர்ச்சியியலில் ஆழமாக செல்லாமல் இவ்வசனத்தின் சிறப்பை மட்டும் தெளிவாக்குகிறேன். “அந்த இந்திரியத்துளியை கர்பப்பையில் ஒரு பாதுகாப்பான நிலையில் வைத்தோம்” அதாவது, கர்பப்பையின் அமைப்பு, அதன் தசைத்தன்மை, சிறப்பு இரத்த ஓட்ட அமைப்பு அதன் திசுவுடைய குணங்கள் எல்லாம் அதற்கே (குழந்தை வளர்ச்சிக்கே) உரித்தானவை. இச்சிறப்பு அமைப்பு இது போன்ற வேறு எந்த உறுப்புகளுக்கும் இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்தாலும் அதை (கருவை) பின்னர் இக் கருப்பையில்தான் வைத்து வளர்க்க முடியும். மேலும் “பாதுகாப்பான நிலையில்” வைத்தோம் என்கிறான். அதாவது இக்கருவை கர்ப்பபையின் “உடம்பு” என்ற பகுதி அல்லாது வேறு எந்த பகுதியில் வைத்தாலும் (கருவை) கரு முழு வளர்ச்சி அடைவதில்லை. (Abort) அபார்ட் ஆகிவிடும். எனவேதான் இறைவன் “பாதுகாப்பான இடத்தில்” (உடம்பு பகுதியில்) வைத்ததாக கூறுகிறான்.

இந்த வசனங்களை உன்னிப்பாக கவனிக்கும் போது இறைவன் கர்ப்பப்பையை பொதுவாக குறிப்பிடும் போது “ரஹ்ம்” என்று தான் இறைமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
அடுத்து விந்து துளியை “அலக்” என்ற நிலைக்கு மாற்றினோம் என்று வருகிறது.

அலக்” என்ற அரபி வார்த்தைக்கு
1. அட்டை,
2. தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்,
3. இரத்தக்கட்டி என்ற பொருள்கள் உண்டு.
அட்டையையும், “கரு”வையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சில ஒற்றுமைகள் உண்டு.
1. இந்த இரண்டின் ஒருமித்த தோற்றம்.
2. அட்டை மற்றவர்களின் இரத்ததைத் உணவாகக் கொள்கிறது. கருவும் தாயின் இரத்ததைத்தான் உணவாக்குகிறது.
அடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் பொருள் என்பது தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கம் குழந்தை கருக்கு மிக்க பொருத்தமான பொருள்தானே!.
இரத்தக்கட்டி என்ற பொருளும் மிகச்சரியானதே. எவ்வாறு எனில் “கரு” உருவான முதல் மூன்று வாரங்களும் இரத்தக்கட்டி போன்றுதான் இருக்கும். (இரத்த ஓட்டம் இருக்காது. சுப்ஹானல்லாஹ்! இறைவன் அந்த “அலக்” என்ற வார்த்தையில் கருவின் இயல்புகள், குணங்கள், வளர்ச்சிநிலை போன்றவற்றை வியக்கும் படி தெரிவித்துள்ளான்.
by டாக்டர் ஷேக் சையது M.D
thanks
http://www.islamkalvi.com/portal/
இறைவன் நாடினால் தொடரும்

Monday, May 3, 2010

மீண்டும் ஒரு கோரிக்கை அதிரை உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

உமர்தம்பி அவர்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் கிடைக்க மீண்டும் ஒரு வேண்டுகோள்.

இந்த செந்தமிழ் வேண்டுகோள் ஒலியை கேளுங்கள் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

இந்த வேண்டுகோள் ஒலியை உங்களின் வலைப்பூவிலும் பதியாலாம், இதற்கான அனுமதி இங்கே அனைத்துலக தமிழார்வலர்களுக்கு தருகிறேன்.



தொடர்புக்கு tjdn77@gmail.com


ஒலியாக்கம் செய்த என் அருமை நண்பர் K.H.M.ஸதகத்துல்லாஹ்வுக்கு மிக்க நன்றி, மற்றும் தமிழார்வ நண்பர்களுக்கும் நன்றி.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!